நாயக்கனேரி பஞ்சாயத்து தலைவராக பட்டியலின பெண் தேர்வு செய்யப்பட்டது செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை: நாயக்கனேரி பஞ்சாயத்து தலைவராக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்ணை தேர்ந்தெடுத்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட நாயக்கனேரி பஞ்சாயத்து தலைவராக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இந்துமதி என்பவர் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி நாயக்கனேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சிவகுமார், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. செல்வராஜ் தனது வாதத்தில், “மலைக்கிராமமான நாயக்கனேரி பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 440 வாக்காளர்களில் 66 சதவீதம் பேர் பழங்குடியினர். எஞ்சிய 34 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இந்த பஞ்சாயத்தில் ஒருவர்கூட பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் கிடையாது.மொத்தம் உள்ள 9 வார்டுகளில் 8 வார்டுகள் பழங்குடியினத்தவர்களுக்கும், 1 வார்டு பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பஞ்சாயத்து தலைவர் பதவியை பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது சட்டவிரோதமானது. இந்துமதி நாயக்கனேரி பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் அல்ல. வேறு ஊரைச் சேர்ந்த அவரை நாயக்கனேரி பஞ்சாயத்து தலைவராக கொண்டு வருவதற்காக வேட்புமனு தாக்கல் முடிந்தபிறகு சட்டத்துக்கு புறம்பாக பிடிஓ வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து உத்தரவிட்டுள்ளார்.
இது பஞ்சாயத்து சட்ட விதிகளுக்கு புறம்பானது. கடந்த 2016-ம் ஆண்டு இந்த பஞ்சாயத்து தலைவருக்கான பதவி பொதுப்பிரிவைச் சேர்ந்த மகளிருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு, அனைத்து விதிகளையும் மீறி இந்த பதவியை பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கியது மற்றும் இந்துமதியை பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்தது செல்லாது, சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், இந்துமதி தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்தும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த தீர்ப்பில், “பட்டியலின வாக்காளர்களே இல்லாத இந்த பஞ்சாயத்து தலைவர் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கியது செல்லாது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை சட்டவிரோதமானது. இந்துமதியை நாயக்கனேரி பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்தது செல்லாது. எனவே, தமிழக அரசு 4 வார காலத்துக்குள் இந்த பதவியை பழங்குடியினர் அல்லது பொதுப் பிரிவுக்கு ஒதுக்கி புதிய பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment