தேர்வில் கேள்வி ஒன்று குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி, அந்தக் கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர் டி.ஜே.ஜோசப்பின் கையை 2010-ம் ஆண்டு ஒரு கும்பல் வெட்டியது.
கேரள மாநிலம், தொடுபுழாவிலுள்ள நியூமேன் கல்லூரியில் பி.காம் மலையாளம் இன்ட்டர்னல் தேர்வில், மதம் குறித்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்தக் கேள்வி குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி, அந்தக் கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர் டி.ஜே.ஜோசப்பின் கையை 2010-ம் ஆண்டு ஒரு கும்பல் வெட்டியது. அந்த வழக்கு கொச்சி என்.ஐ.ஏ கோர்ட்டில் நடந்துவந்தது. அந்த வழக்கில் மொத்தம் 37 பேர் கைதுசெய்யப்பட்டனர். இறுதியாக 11 பேர் குற்றம்செய்தது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கொச்சி என்.ஐ.ஏ தனி நீதிமன்றம் நேற்று, ஸஜன், நாஸர், நஜீப், நெளஷாத், மொய்தீன் குஞ்சு, அயூப் ஆகிய ஆறு பேரைக் குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை இன்று மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி ஸஜன், நாசர், நஜீப் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நெளஷாத், மொய்தீன் குஞ்சு, அயூப் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து என்.ஐ.ஏ கோர்ட் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பு திட்டமிட்டு பேராசிரியரின் கையை வெட்டியதாக என்.ஐ.ஏ கோர்ட் தெரிவித்திருக்கிறது. அவர்கள்மீது ஒன்றாகச் சேர்ந்து திட்டமிடுதல், கைவசம் ஆயுதம் வைத்திருத்தல், ஆயுதத்தால் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு 2010-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பேராசிரியர் டி.ஜே.ஜோசப் ஊடகங்களிடம் பேசுகையில், "குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் தண்டனை என்பது பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் நீதி என நான் நம்பவில்லை. நாட்டில் நீதியை நிலைநாட்டுவது எனக் கூறலாம். குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும், தண்டிக்காமல் இருப்பதிலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் விருப்பமோ, விருப்பமில்லாத நிலையோ இல்லை. வழக்கில் உட்பட்ட குற்றவாளிகளும் என்னைப் போன்று பாதிப்புக்குள்ளானவர்கள்தான்.

கண்மூடித்தனமான நம்பிக்கையின்பேரில் என்னைத் தாக்கினார்கள். என்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வெறும் ஆயுதங்கள்தான். தாக்குதலை முடிவுசெய்தவர்கள் வெளியில் வராமல் இருக்கின்றனர். உண்மையான குற்றவாளிகள் வழக்குக்கு வெளியே இருக்கின்றனர். இப்போது தண்டிக்கப்படவிருக்கும், விசாரணை செய்யப்பட்டவர்கள் சரியான குற்றவாளிகள் அல்ல. என்னைத் தாக்குவது குறித்து முடிவெடுத்தவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள். பிடிக்கப்பட்டவர்களும், தண்டிக்கப்படுபவர்களும் ஆயுதங்களாக்கப்பட்ட அப்பாவிகள். கண்மூடித்தனமான நம்பிக்கையின்பேரில் மனிதத்தன்மையற்ற நடவடிக்கைக்குத் தூண்டியவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள்" என்றார்.

No comments:
Post a Comment