Wednesday, September 25, 2024

லிப்ஸ்டிக் மேயர் ப்ரியா ராஜன் - பெண் டபேதார் லிப்ஸ்டிக் அணிய கூடாது

 Rajesh Kumar   பத்தாம் வகுப்பு படிக்கும் சமயம் எதற்கோ கலெக்டர் அலுவலகம் பக்கம் போயிருந்த போதுதான் அந்த பணியாளரை பார்த்தேன். வித்தியாசமான ஒரு உடையை அணிந்து கலெக்டருக்கு முன் போய் அவருக்கு கார் கதவைத் திறந்து விட்டார். அந்த கூட்டத்தில் அவர் ஒருவர் மட்டும்தான் காலில் செருப்பு அணிந்திருக்கவில்லை. டபேதார்!


அவ்வளவாக உலக ஞானம் இல்லாத அந்த வயதிலேயே அந்த காட்சி இம்சித்ததற்கு காரணம் கலெக்டரும் டபேதாரும் காட்டிய உடல் மொழி. கலெக்டர் அந்த காலத்து மன்னர் போலவும் டபேதார் ஒரு கீழான அடிமை போலவும் நடந்து கொண்டார்கள். 

அத்தனை பொதுமக்கள் மத்தியில் சம்பளத்துக்காக சுயமரியாதையை சுத்தமாக இழந்தால் மட்டுமே அந்த பணியை செய்ய இயலும் அந்த டபேதாருக்கு என் வயதில் ஒரு மகன் இருந்து அவன் இதை பார்க்க நேர்ந்தால் அந்த டபேதருக்கு எப்படி வலிக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

+++ 

டபேதார் என்பது நவீன உலகில் தேவையே இல்லாத ஒரு அலங்காரப் பணி. இதைப் போலவே கோர்ட்களில் டவாலி, போலீஸ் ஸ்டேஷனில் ஆர்டர்லி எல்லாமே தேவையில்லாத பணிகள்தான்.

அந்த காலத்தில் இங்கிலாந்து அரச முறை சார்ந்த அதிகார வர்க்கம் மக்களாட்சி தத்துவத்தை ஏற்பதற்கு முன் மூன்றாம் படிநிலை அடிமைகளுக்கு கொடுத்த பணி. இன்று அவர்கள் இதை கைவிட்டு தன் கார் கதவை தானே திறக்க கற்றுக் கொண்டார்கள். ஆனால் இந்தியாவிலோ தன்னை இன்னும் மன்னர்களாக உருவகம் செய்யும் அதிகார வர்க்கம் தனது ஈகோவுக்கு தீனி போட இந்த அடிமைப் பணிகளை கட்டி காத்து காப்பாற்றி வருகின்றன.

சமூக நீதி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வடை சுடும் அரசுகள் இதை ஒரே கையெழுத்தில் ஒழித்து விட முடியும். ஆனால் செய்யவே மாட்டார்கள். ஏனெனில் எந்த உருப்படியான மாற்றத்துக்கும் துப்பில்லாதவர்கள்.

+++

இந்த அலங்காரப் பணியில் கூட தனக்கு விருப்பமான படி ஒப்பனை செய்ய அடிமைகளுக்கு அனுமதி இல்லை. மேயர் ப்ரியா ராஜன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு கொடுத்த பேட்டியில் “சமீபத்தில் ரிப்பன் பில்டிங்ஸில் மகளிர் தின கொண்டாட்டத்தின் போது இந்த பெண் டபேதார் ஒரு பேஷன் ஷோவில் நடித்தபோது, ​​​​அவரது தோற்றத்தையும் நடிப்பையும் மக்கள் விமர்சித்தார்கள். இது அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவதாக, அவர் காடியாக லிப்ஸ்டிக் அணிந்திருந்தார். மேயரின் அலுவலகத்திற்கு அமைச்சர்களும் தூதரக அதிகாரிகளும் அடிக்கடி வருவதால் அந்த வண்ணத்தில் லிப்ஸ்டிக் அணிய வேண்டாம் என்று எனது உதவியாளர் அவளிடம் தெரிவித்தார். ஆனால் டபேதார் இடமாற்றத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்கிறார்.

முதலில் ரிப்பன் பில்டிங் பணியாளர்கள் ட்ரெஸ் கோட் என்று எதாவது இருக்கிறதா? அதில் எந்த வகை லிப்ஸ்டிக் அணியலாம் கூடாது என்று எதாவது உள்ளதா? அப்படி இல்லையெனில் இவர் எந்த வகை லிப்ஸ்டிக் அணியலாம் என்று அந்த உதவியாளர் சொல்லியிருக்கவே கூடாது. இரண்டாவது மேயரோ அல்லது வேறு அதிகாரம் பெற்ற ஆட்களோ இது போன்ற லிப்ஸ்டிக் அணிந்தால் அந்த உதவியாளர் மூடிக்கொண்டு தான் இருப்பார் என்பது எல்லாருக்குமே தெரியும். ஆக இங்கு ப்ரச்னை என்பது லிப்ஸ்டிக் இல்லை.

+++

பட்டியலின மக்கள் தண்ணீர் தொட்டியில் மலம் கலப்பது, இரட்டைக் குவளை முறை இவற்றையெல்லாம்தான் ஒழிக்க முடியாது, வாக்கு வங்கி பாதிப்பு வரும் என்று நாமாக கற்பனை செய்து பிழைப்பை ஓட்டுகிறோம். யாருக்கும் எவ்வகையிலும் பாதிப்பு வராத இந்த அடிமை பதவிகளை ஒழித்து கூடவா சரித்திரத்தில் இடம் பெறக் கூடாது.

No comments:

Post a Comment

தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய 26 தீர்மானங்கள்

  தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய 26 தீர்மானங்கள்..,  Vijay Thamizhaga Vetri Kazhagam   2 days ago Yashini in   இந்தியா 26 தீர்மானங்க...