சார்லஸ் மார்ட்டின் (லாட்டரி) பாண்டிச்சேரியில் புது கட்சி,
“டிசம்பரில் அரசியல் கட்சி... தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி!” - மனம் திறக்கும் மார்ட்டின் மகன் நேர்காணல் சி.கண்ணன் Published on: 28 Nov 2025
லாட்டரி அதிபர் சந்தியாகு மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். புதுச்சேரி பாஜக-வில் பத்தாண்டுகள் பயணித்த இவர், இப்போது அதிலிருந்து விலகி, ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி மக்களுக்கான நல உதவிகளை வழங்கி வருகிறார். இந்த அமைப்பையே டிசம்பரில் அரசியல் கட்சியாகவும் மாற்ற முடிவெடுத்திருக்கும் சார்லஸ், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கப் போவதாகச் சொல்லப்படும் நிலையில், ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசினோம்.
பாஜக-விலிருந்து ஏன் விலகினீர்கள்?
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள், செயல்பாடுகள் பிடித்திருந்ததால் பாஜக-வில் இணைந்தேன். ஆனால், கட்சியில் எனக்கு பொறுப்புத் தரவில்லை என்பதுடன் புதுச்சேரியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கேட்டும் தரவில்லை. அதனால், பாஜக-வில் இருந்து வெளியேறிவிட்டேன்.
உங்கள் சகோதரியின் கணவர் ஆதவ் அர்ஜூனா விஜய் கட்சியில் முக்கிய இடத்தில் இருப்பதால் உங்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதோ?
ஆதவ் அர்ஜூனாவுக்கு முன்பிருந்தே நான் அரசியலில் இருக்கிறேன். பதவிக்காக அரசியலில் இருக்கும் அவரை நான் அரசியல்வாதியாகவே நினைக்கவில்லை.
காங்கிரஸ் பின்னணி உள்ளவர்களே பெரும்பாலும் வெற்றிபெறும் புதுச்சேரியில் புதியவரான உங்களால் சாதிக்க முடியுமா?
பிஹார் முடிவுகளைப் பார்த்தாலே காங்கிரஸ் நிலைமை புரிந்துவிடும். இன்னொருவரை நம்பியே காங்கிரஸ் உள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சியை பற்றி என்.ஆர்.காங்கிரஸ் சிந்திப்பதில்லை. இங்கு ரவுடிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. புதுச்சேரியை கல்வி, மருத்துவம், சுற்றுலா, திரைப்படத் துறை உள்ளிட்டவற்றில் சிறந்த மாநிலமாக மாற்றலாம். அப்படிச் செய்யாமல் மாநிலத்தை வீணடிக்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் புதுச்சேரியை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வோம்.
தவெக-வுக்கு இப்போது ஆதவ் அர்ஜூனா தான் ‘கஜானா’ என்கிறார்களே... உண்மையா?
ஆதவ் அர்ஜுனாவுக்கு கொடுக்க வேண்டியதை நாங்கள் கொடுத்துவிட்டோம். அவர் செலவு செய்கிறாரா இல்லையா என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது. அப்படி செலவு செய்தால் அதை நாங்கள் கொடுத்த பணத்தை வைத்துத்தான் செய்யவேண்டும்.
உங்களுக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் என்ன தான் பிரச்சினை? ஆதவ் அர்ஜுனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைப்பது ஏன்?
திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை விமர்சித்து வரும் ஆதவ் அர்ஜூனா, இன்னொருபக்கம் அந்தக் கட்சிகளிடம் நெருக்கமாகவும் இருக்கிறார். “நான் பேசுவதற்கும் மார்ட்டின் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தாததால் அவரின் செயல்களுக்குப் பின்னணியில் எனது தந்தை மார்ட்டினும், நாங்களும் இருப்பதாக நினைக்கின்றனர். அதனால் எங்கள் குடும்பமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. அதனை தெளிவுபடுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனால் சில விளக்கங்களை சொல்ல வேண்டி இருந்தது.
புதுச்சேரி அரசியலில் நீங்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறீர்கள்?
ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்து நாங்கள் செய்கிறோம்; அதை இன்னும் தீவிரப்படுத்துவோம்.
புதுச்சேரியில் விஜய்க்கும் செல்வாக்கு இருப்பதால் அவருடன் கைகோக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா..?
ஆம். இதுகுறித்து கட்சி தொடங்கிய பிறகு அதிகாரபூர்வமாக விஜய் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
உங்களை பாஜக தனது ‘பி டீம்’ லெவலுக்கு தயார்படுத்து வதாகவும் ரங்கசாமிக்கு பதிலாக முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் திட்டத்தில் அக்கட்சி இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறதே..?
இது முழுக்க முழுக்க புரளி. நாங்கள் பாஜக-வையும் எதிர்த்துத் தான் அரசியல் செய்கிறோம்.
புதுச்சேரி அரசியலில் ரங்கசாமி, நாராயணசாமி, வைத்தியலிங்கம் போன்ற ஜாம்பவான்களை தாண்டி நினைத்ததைச் சாதிக்க முடியும் என நம்புகிறீர்களா?
அவர்களின் அரசியல் அனுபவம் எல்லாமே ஆட்சியை பிடிக்க மற்றவர்களை எப்படிக் கவிழ்ப்பது என்பது தான். புதுச்சேரியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதில் இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வரவேண்டிய தேவையே இருந்திருக்காது.
நீங்கள் தேர்தலில் லாட்டரி பணத்தை கோடி கோடியாய் கொட்டி எப்படியும் வெற்றியை தன்வசமாக்க திட்டமிடுவதாகக் கூறப்படுகிறதே..?
அரசியல்வாதிகள் எல்லோருமே இதுவரைக்கும் பணத்தை வைத்துத் தான் வெற்றிபெற்றார்களா... அவர்களுக்கெல்லாம் கொள்கை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லையா? எங்களுக்கு எதிராக இப்படிச் சொல்வது அவர்களின் பயத்தைக் காட்டுகிறது. குறிப்பாக, திமுக ஊழலுக்கு பேர் போன கட்சி. அந்தக் கட்சியில் அதிகமாக ரவுடிகள் தான் உள்ளனர்.
தப்பான பல தொழில்களைச் செய்வோர் தான் அங்கு இருக்கிறார்கள். திமுக-வால் நாடு வளர்ச்சி அடையாது. எனவே, எங்களை விமர்சனம் செய்ய அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியல் களத்தில் இறங்கிவிட்டோம். எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
உங்கள் கைக்கு அதிகாரம் வந்தால் புதுச்சேரிக்காக என்ன செய்வீர்கள்?
புதுச்சேரியில் சரியான பாதுகாப்பு இல்லை. அதனால், முதலில் சட்டம் - ஒழுங்கு சரிசெய்யப்படும். பாதுகாப்பு கொடுத்துவிட்டால், இங்குள்ள மக்களும், சுற்றுலா வருபவர்களும் சந்தோஷப்படுவார்கள். முதலீடுகளும் அதிகரிக்கும். மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டமும் எங்களின் எண்ணத்தில் இருக்கிறது.

No comments:
Post a Comment