சோழர்கள் தங்களை இராமபிரான் பிறந்த இஷ்வாகு (சூரிய) வம்சம் என்கின்றனர். அம்மூன்னோர்களில் ஒருவரான சிபி சக்கரவர்த்தி கதை புறநானூறில்
புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டிருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. (சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.) புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.
'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்,
தன் அகம் புக்க குறுநடைப் புறவின்,
தபுதி அஞ்சிச் சீரை புக்க,
வரையா ஈகை உரவோன்'
என்று சிபிச் சக்கரவர்த்திச் சோழனின் வரலாற்றை புலவர் தாமப்பல்கண்ணனார் குறிப்பிடுகிறார். புறநானூறு 43
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கொடைத்திறம் மிக்கவன். என்றாலும் இவனது முன்னோன் புறாவைக் காப்பாற்ற வழங்கிய கொடையை எண்ணுகையில் அது பரம்பரைக் குணம் என்றே கொள்ளத்தக்கது என்று புலவர் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிட்டுள்ளார்.அவர் யானைத் தந்தத்தின் இருபுறமும் தொங்கும்படி உருவாக்கப் பட்டிருந்த அக்காலத் தராசு பற்றிய குறிப்பினையும் தந்துள்ளார்.
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல் நின் புகழும் அன்றே -புறநானூறு 39
இந்தப் புலவர் நப்பசலையார் தமது மற்றொரு பாடலிலும் அந்த அரசனைக் குறிப்பிடும்போது இவன் புறவின் இன்னலைப் போக்கிய செய்தியைக் குறிப்பிடுள்ளார்.
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,
சினம் கெழு தானை, செம்பியன் மருக! -புறநானூறு 37
கோவூர் கிழார் என்னும் புலவரும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் குறிப்பிடும்போது புறாவின் துன்பம் போக்கியவனின் வழிவந்தவன் எனக் குறிப்பிடுகிறார்.
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, - புறநானூறு 46

No comments:
Post a Comment