Sunday, December 14, 2025

M.K.ஸ்டாலின் கொளத்தூர் 2011 தேர்தல் வெற்றி எதிர்த்து வழக்கு - உச்ச நீதிமன்ற அதிரடி உத்தரவு

2,734 ஓட்டில் பறிபோன வெற்றி.. முக ஸ்டாலினுக்கு எதிரான சைதை துரைசாமி வழக்கு ஜன.,21க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்



சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் 2011 சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் 2,734 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை வீழ்த்தினார். இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறியும், ஸ்டாலின் வெற்றிக்கு எதிராகவும் சைதை துரைசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய விசாரணையின்போது முக ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூடுதல் காலஅவகாசம் கோரியதால் விசாரணை 2026 ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வராகவும், திமுகவின் தலைவராகவும் முக ஸ்டாலின் உள்ளார். இவர் சென்னையில் உள்ள கொளத்தூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2011, 2016 சட்டசபை தேர்தலை தொடர்ந்து 2021 சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதில் கடந்த 2011ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தல் அதிக கவனம் பெற்றது. முக ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி களமிறக்கப்பட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஸ்டாலின் மொத்தம் 68,677 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி 65,943 ஓட்டுகள் பெற்றார். இருவருக்கும் இடையேயான ஓட்டுகளின் வித்தியாசம் வெறும் 2,734 தான். சைதை துரைசாமியை, ஸ்டாலின் 2,734 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, ஸ்டாலின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதை துரைசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 6 ஆண்டுகளாக நடந்தது. அதன்பிறகு ஸ்டாலின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து சைதை துரைசாமி டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஸ்டாலின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூடுதல் காலஅவகாசம் கேட்டார்.

அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் 2026 ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.



No comments:

Post a Comment