இசை புயலும் அவர் குடும்பமும் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே மதம் சார்ந்த வன்மத்துடன் இருந்ததை கவிஞர் பிறை சூடன் வெளிச்சம் போட்டு காட்டினார்.
அப்படியிருந்தும் அவரை மாற்று மதத்தவர்கள் வேற்றாளாக பார்க்கவில்லை . இசைக்கு மதமில்லை என்பதோடு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும் செய்தனர் .
எல்லா புகழும் இறைவனுக்கே என தன் ஆஸ்கார் விருதை அர்பணித்ததை எந்த மத்தவரும் தவறாக கருத்தவில்லை . வெளி நாடுகளில் புர்கா போடாமல் மார்டன் உடைகளில் நடமாடும் அவர் பெண்கள் இந்தியாவில் முகத்தை மூடி புர்கா அணிந்து மேடையேறி என் உடை என் உரிமை என பேசிய போதும் பெரிதாக கொள்ளவில்லை.
ஆனால் காலம் காலமாக தமிழ் தாய் என போற்றி கொண்டாடிய ஒரு பிம்பத்தை கட்டுடைக்க தலை விரித்தாடும் பேய் போன்ற ஒன்றை முன்னிறுத்தும் போது தான் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இப்போதும் வாய்ப்பின்றி போக காரணம் சரக்கு தீர்ந்து போனதும் திராவிட சார்பும் மட்டுமே. ஆனால் பழியை நேக்காக மதத்தின் தலையில் தூக்கி போடுகிறார் .
பிராமணர்களிடம் படித்தாராம் . அடேங்கப்பா .. இனி எந்த கொரளி வித்தை காட்டினாலும் இங்கே பப்பு வேகாது
ரஹ்மான் மத அடிப்படைவாதியா? இருக்கலாம். ஆனால் அதே அளவுகோலின் படி நம்மில் பெரும்பான்மையோர் கூட அடிப்படைவாதிகள் தானே. இந்த மதத்தில் இந்த சாதியில் பிறந்ததால் இந்த உணவு பழக்கத்தை தான் பின்பற்றுவோம் என்று உறுதியுடன் திரிகிறோம். தினம் மூன்று வேளை வருடத்தில் 365 நாட்களும் அது மனதின் ஓரத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதில் நாம் புண்பட்டு விட்டால் சக மனிதனை தாக்கவும் தயங்குவதில்லை. சிலர் பிறப்பை கொண்டே தீண்டாமை கடைப்பிடிக்கின்றனர். அகமண முறையை தான் பின்பற்றுகிறோம். நம்மவர் அல்லாத பிறரின் பழக்க வழக்கங்களை மனதிலாவது கிண்டலுடன் அணுகுகிறோம். ரஹ்மானும் அப்படி ஒரு மத அடிப்படைவாதியாக இருந்தாலும் அவர் நம்மை போல 'நார்மலானவர்' தானே. ரஹ்மானின் மீது என்னுடைய முந்தைய பதிவில் வந்த குற்றசாட்டுகள். இவை நீண்டகாலமாக அவர் மேல் வைக்கப்படுவது.
1. ரஹ்மான் வீட்டுக்கு சென்ற பிறைசூடனிடம் அவரின் தாய் அவர் வைத்திருக்கும் விபூதி குங்குமத்தை சுட்டிக்காட்டி எதோ பேசியது. நான் அந்த பேட்டி பார்த்திருக்கிறேன். எனக்கு அது ரஹ்மானை மத அடிப்படைவாதி என்பதை விட ஒரு multi faceted personality ஆக தான் காட்டியது. அவரின் தாய் விபூதி குங்குமத்தை ஆட்சேபிக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் ரஹ்மானுக்கு அதில் பிரச்சனையில்லை. வாலி நெற்றியில் விபூதி குங்குமத்துடன் தானே ரஹ்மானுக்கு பாட்டெழுதிக்கொண்டிருந்தார். அந்த பேட்டியில் பிறைசூடன் சொல்லும் இன்னொரு விஷயம் ரஹ்மானின் தாய் அவரை தான் சினிமாவில் செல்ல அறிவுறுத்த சொன்னது. ரஹ்மான் அப்போது திலீப் குமாராக இருந்தார். அப்போதே விளம்பர துறையில் ஐந்து லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போதே விளம்பரத்திற்கு அவரின் இசையில் பிறைசூடன் பாட்டெழுதிக்கொண்டிருந்தார். பிறைசூடன் அந்த பேட்டியில் சொல்ல வந்த விபூதி குங்குமம் விஷயம் உண்மையில் தெளிவாக வெளிப்படவில்லை. அதற்கு பின் பல வருடங்களுக்கு இருவருக்கும் நட்பு இருந்திருக்கிறது.
2. காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா என்ற நியூ படத்தின் பாடல் வரிகளை காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா என்று ரஹ்மான் மாற்ற சொன்னார் என்று வாலி சொல்லியிருப்பது. பொதுவாகவே சினிமாவில் அமர்ந்து பாடல் உருவாக்கையில் விவாதங்கள் நடந்து வரிகளை மாற்றுவது சகஜம். இங்கு முஸ்லிம்கள் தெய்வம் என்று அல்லாஹ்வை தவிர யாரையும் சொல்வதில்லை எனவே மாற்றலாம் என்று ரஹ்மான் சொல்லியிருக்கிறார் என்கிறார் வாலி. எனக்கு அதில் பெரிய தவறொன்றும் தெரியவில்லை. ஹிந்துக்களில் நித்ய கால பூஜைக்கு கோவிலுக்கு செல்பவர்களை விட பூஜை செய்ப்பவர்களை விட அதிகாலை தொழுபவர்கள் இஸ்லாமில் அதிகம். அனைத்து மசூதிகளிலும் அஸான் ஒலிக்கிறது. ஃபஜ்ர் தொழுகை நடக்கிறது. முஸ்லிமான ரஹ்மானுக்கு காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா என்பது உறுத்தியிருக்கும். காலை எழுவது, தொழுவது என்று அதில் அவரின் மத பழக்கமும் இருக்கிறது. அந்த வரிகள் கொஞ்சம் மாற்றியது ரஹ்மானுக்கு சங்கடத்தை தவிர்த்திருக்கும். வாலிக்கு பெரிய மனது. மறந்தும் புறம் தொழா வைணவர்கள் பொங்கலுக்கு சூரியனை வணங்காவிட்டால் நான் அதை எப்படி புரிந்து ஏற்றுக்கொள்கிறேனோ அப்படித் தான் ரஹ்மான் இந்த பாடல் வரிகளை மாற்ற சொன்னதையும் நான் புரிந்து ஏற்றுக்கொள்கிறேன்.
3. பாய்ஸ் படத்தில் ஐயப்பன் பாடலை அவர் இசையமைக்காமல் பிரவீன் மணி அதற்கு இசையமைத்தது. ரஹ்மானுக்கு கொஞ்சம் மேட்டிமை குணம் உண்டு. அது மதம் மாறுவதற்கு முன்பே அவருக்கு இருந்திருக்கலாம். தன்னை பெரிய பாய் என்று அடையாளப்படுத்துவதை விரும்பாமல் இதென்ன கறிக்கடை பாய் மாதிரி என்று சமீபத்திய பேட்டியில் சொன்னது கூட அதன் வெளிப்பாடே. படம் வந்தபோதும் சரி, இப்போதும் சரி, தமிழ் சமூக எலைட்டுகளிடம் இந்த மாலை போட்டு வழிபாடு செய்வது கொஞ்சம் உவப்பில்லாததாகவே இருக்கிறது. சினிமா பாஷையில் சொன்னால் அது பி சி சென்டர் கலாச்சாரம் என்று நினைக்கிறார்கள். நானும் கண்டிருக்கிறேன். மேலும் அந்த பாடல் இசையில் முதிர்ச்சி அடையா ஒரு இசைக்குழு கம்போஸ் செய்வது போல் தான் அமைக்கப்பட்டிருக்கும். ஒன்று இதற்கு ரஹ்மான் சுமாராக அல்லது மோசமாக இசையமைக்க வேண்டும். அது அவருக்கு பிடித்திருக்காது. இன்னொன்று நல்ல இசையாக கொடுப்பது. அது படத்திற்கு முரணாக இருக்கும். மேலும் அது ரஹ்மான் இசையமைத்த ஐயப்ப சாமி பாடலாக பிரபலமாகியிருக்கும். அது அவருக்கு மனம் ஒவ்வாது இருந்திருக்கும். ஆனால் இது அவருடைய creative choice தானே.
4. மேலே சொன்ன இரண்டாம் மூன்றாம் பாயிண்டுகளை மறுப்பது போல் அவருடைய சில பாடல்களும் இருக்கின்றன. நியூ பாய்ஸ் படம் எல்லாம் வந்தபின் தான் காவிய தலைவன் வந்தது. அதில் அருணகிரி நாதரின் திருப்புகழ் இருக்கும். அச்சம் என்பது மடமையடா படத்தில் இருக்கும் ராசாளி பாடலில் கூட திருப்புகழ் பாதிப்பு இருக்கும். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் தேவராளன் ஆட்டம் ஆன்மீக பாடல் தானே. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஆண்டாளின் ஆழிமழை கண்ணா மற்றும் ஆதி சங்கரரின் நிர்வாண ஷடகம் பாடல்கள் இருக்கும். அவர் மத அடிப்படைவாதி ஹிந்து பாடல்களுக்கு இசையமைக்க மாட்டார் என்று சொல்வதற்கு அடிப்படையே இல்லை எனலாம்.
இவை எல்லாவற்றையும் மீறி ரஹ்மானின் சமீப கால பேச்சுக்கள் அவரின் தனிப்பட்ட வாழ்வின் பிரச்சனைகளின் வெளிப்பாடாக தான் பார்க்கிறேன். அவரின் பல வருட மனைவி பிரிந்தது முதல் தான் அவரின் நிலைத்தன்மை தடுமாறி என்னவோ பேசுகிறார். இது இன்னொரு இசையமைப்பாளரான ராஜாவிடம் கூட இருந்தது எனலாம். அவரின் மனைவியின் மறைவுக்கு பின் தான் அவரின் சில சர்ச்சை பேட்டிகள் வந்தன. நீண்டகால பெண் துணையை இழப்பது ஆண்களுக்கு பெரும் தடுமாற்றத்தை கொடுப்பதாகவே நான் தனிவாழ்விலும் கண்டிருக்கிறேன். கமல்ஹாசனை கூட இதில் உதாரணமாக சொல்லலாம் என நினைக்கிறேன். கௌதமி பிரிவுக்கு பின் தான் அவரின் பெரிய வீழ்ச்சி நடந்தது. சமூகத்தில் திருமணமாகாத பெண்கள் பற்றி ஒரு எதிர்மறை கருத்து இருக்கிறது. spinsters பெரும்பாலும் எளிதாக எரிச்சல் அடைபவர்களாக கோபப்படுபவர்களாக நினைக்கப்படுகிறார்கள். அரசியலில் இரண்டு உதாரணங்கள் இருக்கின்றன. பேச்சிலர்ஸ் பெரும்பாலும் வயதை கடந்தாலும் சாதுவாக இருப்பவர்களாக இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் உடையவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் நீண்ட கால பெண் துணையை இழந்தவர்கள் ஏனோ வாழ்வில் அமைதி கொண்டவர்களாக நம் கண் முன் தெரிவதில்லை. அந்த சைக்காலஜி இன்னமும் கொஞ்சம் ஆராயப்பட வேண்டும்.
இசை ரசனை என்பது பெரும்பாலும் நோஸ்டால்ஜியா சார்ந்தது. செக்குலர் சமூகத்தில் இசைக்கு functional மதிப்பு எதுவும் கிடையாது. எனக்கு இசை சார்ந்த போலி கட்டமைப்புகள் என்றுமே க்ரிஞ்சாகவே தெரிகின்றன. beatles, eagles எல்லாம் எத்தனையோ பாடல்களை போட்டார்கள். அந்த தலைமுறையை தாண்டி அதில் சில பாடல்கள் தான் ரசிக்கப்படுகிறது. அதை இளம் வயதில் கேட்டு வளர்ந்தவர்கள் தான் இந்த ரசிக பட்டாளத்தில் 95% இருப்பார்கள். வேறொரு காலத்தில் வேறொரு வகை இசை ஆதிக்கம் கொண்ட சூழலில் இருந்து இவற்றை தேடி வருபவர்கள் எப்போதுமே 5% தான். எம்எஸ்வி, ராஜா, ரஹ்மான் ஆகியோருக்கும் இது பொருந்தும். ஆனால் தங்கள் மார்க்கெட் போனதை ஏனோ ராஜா, ரஹ்மான் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களிடம் அந்த ட்ரைவ் அந்த ஆல்பா குணம் அப்படியே அடியாழத்தில் இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகளும் புகழ் வெளிச்சமும் குறைவதை விரும்பவில்லை. ஆச்சர்யமாக அவர்கள் ஆன்மீக வாதிகளும் கூட.
அனிருத்துக்கு தன் இசை பூர்ணத்துவமானது அனைத்து காலகட்டத்திலும் ரசிக்கப்பட வேண்டியது போன்ற எதிர்பார்ப்புகள் இல்லை என்று நினைக்கிறேன். அதனை கொடுக்கும் இடம் ஆன்மிகம் என்றால் அவர் அந்த நம்பிக்கை இல்லாமல் போக வேண்டும். ரஹ்மானின் ஒரு பெண் முழு புர்காவுடன் இருக்கிறார் இன்னொரு பெண் 'ஹிந்து பெண்களை' போல சுதந்திரமாக இருக்கிறார். அவர் தனிவாழ்வில் அப்படி மதத்தை திணித்து வாழ்பவராகவோ தீவிர மத பற்றாளர் என்னும் மறைக்கப்பட்ட முகம் இருப்பதாகவோ தோன்றவில்லை. ரஹ்மானை மத அடிப்படைவாதி என்பதெல்லாம் ஓவர்.
“விபூதி – ராமாயணம் – ஹிஜாப் -பிராமணர்!”: ரஹ்மானின் யாசக முகம்!
..........................................
ராமாயண புராணம் பல முறை பல மொழிகளில் திரைப்படமாக வந்திருக்கிறது. தற்போது இந்தியில் நான்காயிரம் கோடி ரூபாய் (!) செலவில் புதிதாக, ராமாயணம் படம் உருவாகிறது. இதற்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர்.
இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான், "“நான் ஒரு இஸ்லாமியர். ஹான்ஸ் ஜிம்மர் ஒரு யூதர். ‘ராமாயணம்’ இந்து மதம் சார்ந்தது. இதுகுறித்து பலர் கேள்வியெழுப்பலாம். நான் பிராமண பள்ளியில் படித்தவன். எனக்கு ‘ராமாயணம்’ கதை பரிச்சயமானதுதான்.
லட்சியம், ஒழுக்கம் பற்றிய கதை அது. நல்லவர்கள், கெட்டவர்கள், அரசர், யாசகர் என யாரிடம் இருந்து அறிவை பெற்றாலும், அது விலைமதிப்பற்றதுதான் என தீர்க்கத்தரிசி ஒருவர் கூறியுள்ளார். அதற்கு வெட்வெட்கப்பட வேண்டியதில்லை. குறுகிய மனப்பான்மையில் இருந்து நாம் விடுபட வேண்டும். அப்போதுதான் பிரகாசிக்க முடியும்’’ என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
"அட... என்னவொரு பரந்த மனப்பான்மை" என்று தோன்றலாம்.
இதே போல இன்னொரு சம்பவத்தின் போதும் புல்லரிக்கவைத்தார்.
2019ம் ஆண்டு 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் 10ம் ஆண்டு விழா நடந்தது. அப்போது அவரது மகள் கதீஜா ரஹ்மான், ஹிஜாப் அணிந்து மேடையில் தோன்றினார்.
எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் உள்ளிட்ட சிலர், "ஒரு முற்போக்கான கலைஞரின் மகள் இப்படி ஹிஜாப் அணிவது ஒடுக்குமுறையாகத் தெரிகிறது" என்று விமர்சனம் செய்தனர்.
உடனே ரஹ்மான், தனது ட்விட்டர் பக்கத்தில், தனது மனைவி மற்றும் இரு மகள்கள் ஒரு நிகழ்ச்சியில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில் ஒரு மகள் ஹிஜாப் அணிந்திருக்க, மற்றொரு மகள் அணியாமல் இருந்தார்.
இதன் மூலம், ஆடை அணிவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதையும், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதோடு , '#FreedomToChoose' என்ற ஹேஷ்டேக்கையும் பதிந்தார்.
"அட.. மகளாக இருந்தாலும் அவரது தனிப்பட்ட விருப்பத்தை மதிக்கிறாரே" என்று பலர் நெகிழ்ந்தனர். (ரஹ்மான் தனது மனைவியை பிரிந்துவிட்டதால், அவரது படத்தை தவிர்த்து இருக்கிறேன்.)
ஆனால் அதற்கு பல காலம் முன்பே அவரது, "பரந்த மனதை" கவிஞர் பிறைசூடன் அம்பலப்படுத்தி இருந்தார்.
பிறைசூடன் எப்போதும் நெற்றியில் விபூதி மற்றும் குங்குமம் அணிந்திருப்பார். அவர் ரஹ்மானின் வீட்டிற்குச் சென்றபோது, அவரது தாயார் கரீமா பேகம், "எங்கள் வீட்டிற்கு வரும்போது மட்டும் நெற்றியில் உள்ள விபூதி, குங்குமத்தை நீக்கிவிட்டு வாருங்கள்" என்று சொல்லி இருக்கிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பிறைசூடன், "இது எனது அடையாளம், என்னால் இதை மாற்றிக்கொள்ள முடியாது" என்று கூறி அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.
இதற்கும், "ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் தானே அப்படி கூறினார்" என முட்டு கொடுக்கலாம்.
ஆனால் அதன் பிறகு பிறைசூடனை பாடல் எழுத அழைக்கவில்லை ரஹ்மான். இத்தனைக்கும் ரஹ்மான் திரைத்துறைக்கு வர தயங்கியபோது உற்சாகப்படுத்தி வரவைத்தவர் பிறைசூடன்.
இதை பிறைசூடன் வெளிப்படையாக பேசிய பிறகும் ரஹ்மான் பதில் ஏதும் சொல்லவே இல்லை.
இன்னொரு விசயத்துக்கு வருவோம்..
ராமாயணம் படம் குறித்த பேட்டியில் ரஹ்மான், "எனக்கு ‘ராமாயணம்’ கதை பரிச்சயமானதுதான்" என்று சொல்லி, அதற்குக் காரணமாக, "நான் பிராமண பள்ளியில் படித்தவன். " என்று பெருமையாகக் கூறி இருக்கிறார்.
அந்த பள்ளி, சென்னை பத்மா சேசாத்ரி பள்ளி. இங்கு அவர் படிக்கும்போது, கட்டணம் செலுத்தவில்லை என்று வெளியேற்றப்பட்டதையும், "பிச்சை எடு" என பள்ளி நிர்வாகத்தினர் கூறியதையும் இவரே பேட்டிகளில் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார்.
அந்தப் பள்ளியைத்தான் இப்போது புகழ்கிறார்!
அதைவிட இன்னொரு முக்கிய விசயம்..
"ராமாயணம் என்பது லட்சியம், ஒழுக்கம் பற்றிய கதை. யாரிடம் இருந்து அறிவை பெற்றாலும், அது விலைமதிப்பற்றதுதான். குறுகிய மனப்பான்மையில் இருந்து நாம் விடுபட வேண்டும்" என்றும் பேசி இருக்கிறார்.
வால்மீகி ராமாயணம்தான் மூலம். அதை கவனித்துப் படித்தால், அது சொல்லும் லட்சியம், ஒழுக்கம் எல்லாம் சமூகத்துக்கு எவ்வளவு ஆபத்தானது - அபத்தமானது என்பது விளங்கும்.
"பிராமண" பள்ளியில் படித்ததை பெருமையாக ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பேசி இருப்பதால், அது குறித்து ராமாயணத்தில் சொல்லப்பட்டிருப்பதை மட்டும் பார்ப்போம்..
பார்ப்பனர் ஒருவரின் மகன் - சிறுவன் - இறந்துவிட்டான். நாரதர், "நாட்டில் ஏதோ தவறாக நடக்கிறது... அதன் விளைவே இது" என பதைபதைக்கிறார். பிறகு ஆராய்ந்து(!) "சம்பூகன் என்கிற சூத்திரன் தர்மத்தை (!) மீறி தவம் இருக்கிறான். அது மிகக் கெடுதலான விசயம். உடனே அவனை கொல்ல வேண்டும்" என ராமரிடம் சொல்கிறார்.
ராமரும் சம்பூகனை கொல்கிறார்.
சம்பூகன் செய்த ஒரே தவறு (!)... பிராமணர் - பார்ப்பனர் - மட்டும் செய்ய வேண்டிய தவத்தை சூத்திரனான அவன் செய்ததுதான்!
இப்படி வர்ண - சாதிக் கொடுமைகளைத்தான் ராமாயணம் சொல்லித் தருகிறது. இதைத்தான், "லட்சியம், ஒழுக்கம்" என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இதற்கு பதிலாக, "திரைப்படங்களுக்கு இசை அமைப்பது எனது தொழில். அதைச் செய்கிறேன்" என சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.
ஆனால் எத்தனை மாய்மாலங்கள்!
"திருநீறு பூசாதே" என தாயார் சொல்வது, அதை ஏற்று குறிப்பிட்ட கவிஞருக்கு வாய்ப்பு மறுப்பது... திரைப்பட பூஜைகள் பெரும்பாலும் இந்து முறைப்படி நடக்கும் என்பதால் தவிர்ப்பது..தனது ஸ்டுடியோவில் முழுக்க முழுக்க இஸ்லாமிய சடங்குகளை மட்டும் செய்வது... இதுதான் ஏ.ஆர்.ரஹ்மான்!
"இவை எல்லாம் அவரது உரிமை" என்றும் சிலர் சொல்லக்கூடும்.
அப்படியே இருக்கட்டும்.
ஆனால் ராமாயண ஆபத்து பற்றி அறியாமலேயே புகழ்ந்து, மக்களிடம் அதை உயர்த்தி தவறான எண்ணத்தை விதைக்க முயற்சிப்பது ஏன்..?
அடுத்தவர் விபூதி பூசுவதை ஏற்காதவர், ராமாயணத்தை புகழ்வது ஏன்... இரண்டுமே தவறுதானே!
பலவருடங்களுக்கு முன், பிச்சைக்காரர்களைப் பற்றி - அவர்களுடனே பல நாட்கள் சுற்றி, பேசி, பழகி - ஒரு கட்டுரை எழுதினேன். குமுதம் வார இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
அந்த கட்டுரைக்காக பிச்சைக்காரர்களுடன் அலைந்து பழகியோது பல ஆச்சரியமான விசயங்களை தெரிந்துகொண்டேன்.
அதில் ஒன்று...
வியாழக் கிழமை காவி உடுத்தி ராகவேந்திரர் கோயிலில் பிச்சை எடுக்கும் அதே நேபர், வெள்ளிக்கிழமை குல்லா போட்டு மசூதி வாயிலில் பிச்சை எடுப்பார். அவரே ஞாயிற்றுக் கிழமை மஞ்சள் ஆடை உடுத்தி அம்மன் கோயிலில் பிச்சை எடுப்பார்.
நோக்கம் பிச்சை எடுப்பது மட்டுமே... மதம் அல்ல!
இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.. பணம், புகழ் படைத்தவர்கள் உட்பட!
ஆம்.. மனிதர்களின் நோக்கம்.. பிழைப்பு மட்டுமே!
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் விதிவிலக்கல்ல!
இதை அனைவரும் உணர்ந்து, மத வெறுப்பில் இருந்து மீண்டால் சரி!
No comments:
Post a Comment