Friday, December 19, 2025

நகர்வாலா ஊழல்

 நகர்வாலா ஊழல் என்பது என்ன? Paranji Sankar


1955ஆம் ஆண்டு இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா என்ற தனியார் வங்கி தேசியமயமாக்கப்பட்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற புதுப்பெயர் பெற்றது. 1969ஆம் வருடம் பதிநான்கு தனியார் வங்கிகள் அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களால் தேசியமயமாக்கப்பட்டன. நாட்டை சோஷலிச பாதையில் இட்டுச் செல்வதற்காகவும், வங்கிகள் ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேசியமயமாக்கப்பட்டன என்றும் இந்திரா காந்தி அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சியினரும், மக்களில் பெரும்பாலோரும் தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதில் வேறுசில உள்நோக்கங்கள் உள்ளன என்று கருதினர். வங்கிகள்மீது அரசாங்கமும், அரசாங்கத்தில் உள்ளவர்களும் ஆதிக்கம் செலுத்துவதற்காகவே அவை தேசியமயமாக்கப்பட்டன என்ற கருத்து நிலவியது. இதை மெய்ப்பிப்பது போன்று நடந்ததுதான் நகர்வாலா ஊழல் என்பது.
1971ஆம் ஆண்டு மே மாதம் 24ந்தேதி புதுடெல்லி நாடாளுமன்ற சாலையிலுள்ள ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவின் தலைமை கேஷியர் வேத் பிரகாஷ் மல்ஹோத்ராவிற்கு போனில் ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசியது ஒரு பெண்ணின் குரல். அது இந்திரா காந்தியின் குரலைப்போன்றே இருந்தது. மல்ஹோத்ரா போனில் பேசியவர் இந்திரா காந்தி என்றே நம்பினார்.
அந்தப் பெண்குரல் சொன்னது: "சகோதரா... பங்களாதேஷில் நடக்கவுள்ள ஒரு ரகசியமான பணிக்கு 60 லட்ச ரூபாய் உடனடியாக தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யவேண்டும். நான் ஒரு நம்பகமான ஆசாமியை அனுப்புவேன். அவன் வங்கிக்கு வெளியே சற்று தூரத்தில் காத்திருப்பான். அவன் உன்னிடம் "பங்களாதேஷ்கா பாபு" என்று சங்கேதக் குறியீடாக ( code language) சொல்லுவான். அவன் அப்படிச் சொன்னால் நான் அனுப்பிய ஆசாமி என்று அர்த்தம். நீ அவனிடம் "பார்- அட்- லா" என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் அவன் நீ மேற்படி என்ன செய்யவேண்டும் என்று சொல்வான். அவனிடம் 60 லட்ச ரூபாயை கொடுத்துவிடு. பணத்திற்கான ரசீதை பிரதமர் அலுவலகத்திலிருந்து பிறகு பெற்றுக்கொள் ".
பிரதமர்தான் ஆணையிட்டார் என்று உறுதியாக நம்பிய மல்ஹோத்ரா தனக்குக்கீழ் வேலைசெய்த கேஷியரிடம் 60 லட்ச ரூபாயை ஒரு பெரிய பெட்டியில் அடுக்கிக் கட்டும்படி பணித்தார். அவரும் அவ்வாறே செய்தார். இரண்டு வேலையாட்கள் பணப்பெட்டியை வங்கிக்குச் சொந்தமான காரில் ஏற்றினர். மல்ஹோத்ரா காரில் ஏறிக்கொண்டார். அவரே டிரைவ் செய்தார். சற்று தூரம் சென்றபின் உயரமான, சிவப்பான ஓர் ஆசாமி காரை கையசைத்து நிறுத்தினார். அவர்தான் ருஸ்டம் ஷோரப் நகர்வாலா. அவர் சாதாரண மனிதரல்ல. பிரிட்டிஷ் ராணுவத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்த்தவர். உளவுத்துறை ( Intelligence Wing)யில் பணியாற்றியவர். அவர் "பங்களாதேஷ்கா பாபு" என்று மல்ஹோத்ராவிடம் கூறினார். புரிந்துகொண்ட மல்ஹோத்ரா பதிலுக்கு "பார்- அட்- லா" என்று சொன்னார். அவர் நகர்வாலாவை காரில் ஏற்றிக்கொண்டார். கார் சர்தார் படேல் சாலையும், பஞ்சசீல சாலையும் சந்திக்கும் இடம்வரை சென்றபோது நகர்வாலா காரை நிறுத்தச் சொன்னார். மல்ஹோத்ராவும் அவ்வாறே செய்தார். நகர்வாலா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டார். அவர் மல்ஹோத்ராவிடம் " நீங்கள் பிரதமர் பங்களாவுக்குச் செனறு ரசீதை பெற்றுக்கொள்ளுங்கள் " என்று கூறினார்.
மல்ஹோத்ரா காரை ஓட்டிக்கொண்டு பிரதமரின் இல்லத்திற்கு சென்றார். அங்கே பிரதமர் இல்லை. அங்கிருந்த சிலர் பிரதமர் நாடாளுமன்ற இல்லத்தில் (Parliament House) இருப்பார் என்று கூறினர். மல்ஹோத்ரா அங்கேயும் சென்று பார்த்தார். அங்கேயும் பிரதமர் இல்லை. உடனே மல்ஹோத்ரா பிரதமர் அலுவலகம் சென்று அங்கிருந்த பிரதமரின் தனிச்செயலாளரான திரு P.N.ஹக்சரை அணுகி தான் கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டார். அதற்கு ஹக்சர் "ரசீதா ? எதற்கு ?" என்று கேட்டார். நடுங்கிப்போன மல்ஹோத்ரா நடந்ததைக் கூறினார். ஹக்சர் "மல்ஹோத்ரா அவர்களே.. பிரதமர் அவ்வாறு உங்களிடம் ஏதும் கூறவில்லை. நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள்.. நீங்கள் நேராக போலீஸிடம் சென்று புகார் அளியுங்கள்" என்று அறிவுரை கூறினார். படபடத்துப்போன மல்ஹோத்ரா நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார்.
இதற்கிடையில் நகர்வாலா ஒரு டாக்ஸியில் பணப்பெட்டியை ஏற்றிக்கொண்டு நேராக Defence Colonyக்குச் சென்றார். அங்கு இறங்கி வேறு ஒரு டாக்ஸியைப் பிடித்து பணப்பெட்டியுடன் ராஜிந்தர் நகருக்குச் சென்றார். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் சூட்கேஸ் ஒன்றை கடன்வாங்கிக்கொண்டு பணப்பெட்டியுடன் நிக்கல்சன் ரோடு சென்றார். பிறகு ரூட்டை மாற்றி Defence Colonyக்கு வந்து நண்பர் ஒருவர் வீட்டில் பணப்பெட்டியை இறக்கினார். பின்னர் நகர்வாலா பார்சி தர்மசாலாவில் உள்ள தனது அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.
மல்ஹோத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் உடனே விசாரணையைத் துவக்கியது. பிரதமர் சம்பத்தப்பட்ட விஷயம் என்பதால் மின்னல் வேகத்தில் விசாரணை நடந்தது. D.K.காஷ்யப் என்ற போலீஸ் உயரதிகாரியின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அவருக்கு உதவ ஹரிதேவ், A. K.கோஷ் என்ற இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த துப்பு துலக்குவதற்கு "ஆபரேஷன் தூஃபான்" என்று பெயரிடப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்குள் நகர்வாலாவையும், பணப்பெட்டியையும் ஏற்றிச்சென்ற டாக்ஸி டிரைவரை போலீசார் பிடித்துவிட்டனர். அவர் நகர்வாலா எங்கெல்லாம் சென்றார் என்று கூறிவிட்டார். இதற்குள் வங்கி மோசடி செய்தி டில்லி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. நகர்வாலா Defence Colony யில் யார் வீட்டில் பணப்பெட்டியை இறக்கினாரோ, அவர் தன் வீட்டில் பெட்டி இருக்கிறது என்று போலீஸுக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து பணப்பெட்டியை கைப்பற்றினர். அதில் முழுப்பணமும் இருந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் பார்சி தர்மசாலாவுக்குச் சென்று நகர்வாலாவை கைது செய்தனர். எல்லாம் பத்து மணி நேரத்திற்குள் நடந்துவிட்டது.
இரண்டு நாட்களுக்குப்பிறகு நகர்வாலா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை பத்து நிமிடங்களே நீடித்தது. அது நீதிபதி அறையில் ரகசியமாக விசாரிக்கப்பட்டது. வழக்கறிஞர்களோ, பார்வையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. நகர்வாலா தனக்கு அந்த சமயத்தில் தோன்றிய திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதாகவும், தொலைபேசியில் பெண்குரலில் இந்திரா காந்தி போல் பேசியது தான் தான் என்றும் ஒப்புக்கொண்டதாகவும் நீதிபதி கூறி உடனேயே தீர்ப்பை வாசித்தார். நகர்வாலாவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு நகர்வாலா செஷன்ஸ் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாற்று சரியான முறையில் விசாரிக்கப்படவில்லை என்றும், வழக்கை மறுவிசாரணை ( Retrial ) செய்யவேண்டும் என்றும் மனுவில் கூறினார். வழக்கை செஷன்ஸ் நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். ஆனால் நகர்வாலா தனக்கு தண்டனை வழங்கிய நீதிபதியே இந்த வழக்கை மறுவிசாரணை செய்யக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். இதை நிராகரித்த செஷன்ஸ் நீதிபதி நகர்வாலாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
அடுத்த மாதம் நகர்வாலா செஷன்ஸ் நீதிமன்றத்தில் வேறு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமை கேஷியர் மல்ஹோத்ராவை கோர்ட்டில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் கோர்ட்டார் அவரது வேண்டுகோளின்மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இந்த வழக்கை துப்புதுலக்கிய போலீஸ் அதிகாரி காஷ்யப் தனது தேன்நிலவிற்காக நவம்பர் 20, 1971 இல் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சிறையில் வாழ்நாளைக் கழித்த நகர்வாலா உடல்நலம் குன்றி திகார் சிறை மருத்துவமனையில் 1972 பிப்ரவரி மாதம் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு டெல்லியில் உள்ள G.B.Pant மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மார்ச் 2ந் தேதி 1972 அன்று நகர்வாலா மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்துடன் இந்த ஊழல் வழக்கும் முடிவுக்கு வந்தது.
இருந்தாலும் இந்த வழக்கில் விடை கிடைக்காத சில மர்மங்கள் இன்றுவரை நீடிக்கின்றன.
காசோலையோ, அடமானமோ இல்லாமல், மல்ஹோத்ரா எப்படி 60 லட்ச ரூபாயை நகர்வாலாவிடம் அளித்தார் ? இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் பல தடவை பிரதமர் அலுவலகத்திலிருந்து மல்ஹோத்ராவிற்கு பணம் அனுப்பும்படி உத்தரவு வந்து அவர் கொடுத்துள்ளதாக சில வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை ? மல்ஹோத்ரா போனில் பேசியது இந்திரா காந்திதான் என்று எப்படி உணர்ந்தார் ?
ஆண் ஆன நகர்வாலாவால் எப்படி பெண் குரலில் இந்திரா காந்தி போல் பேசமுடிந்தது ? கோர்ட்டில் நீதிபதி நகர்வாலாவை ஏன் தன் அறையில் கூப்பிட்டு விசாரித்தார். வழக்கறிஞர்கள் ஏன் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை ? வழக்கை அவசர அவசரமாக விசாரித்து உடனேயே தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன ?
போலீஸ் அதிகாரி காஷ்யப் மர்மமான முறையில் கார் விபத்தில் இறந்ததுபற்றி ஏன் முறையான விசாரணை நடத்தப்படவில்லை ?
நகர்வாலா மரணத்திலும் மர்மம் உள்ளது என்று பலர் கூறினர். அதுபற்றி விரிவான விசாரணை ஏன் நடத்தப்படவில்லை ? நகர்வாலா இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பிரதமரின் தூதுவராக சென்றுள்ளார் என்று சிலர் கூறினர். இது உண்மையா ?
ஆக மொத்தம் இந்த சம்பவம் இன்றுவரை தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.
ஆதாரம் : இந்தியா டுடே ( ஆங்கிலம்) ஏப்ரல் 30, 1977.

No comments:

Post a Comment

தமிழகத்தில் S.I.R. வரைவு வாக்காளர் பட்டியல் 97.37 லட்சம் பேர் நீக்கம்

 தமிழகத்தில் S.I.R. வரைவு வாக்காளர் பட்டியல் 97.37 லட்சம் பேர் நீக்கம் “நீக்கப்பட்ட ஒரு கோடி பேரில் சுமார் 27 லட்சம் பேர் இறந்து போனவர்கள்”,...