Tuesday, October 28, 2025

பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் 1250 வீடுகள் கட்ட பிரிகேட்-மார்கன் நிறுவனத்திற்கு சட்டவிரோத சுற்றுசூழல் மற்றும் கட்டுமான அனுமதி

 

பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு சட்டவிரோத சுற்றுசூழல் மற்றும் கட்டுமான அனுமதி கொடுத்து ஊழல்!

சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1250 பன்மடங்கு குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை  சட்டவிரோதமாக வழங்கி  அந்த பகுதியில் மேலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வழிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர கட்டுமான குழுமம் துறையும் செய்துள்ளது. இந்த ஊழல் பற்றிய புகார் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறைமுதலமைச்சர்தலைமை செயலாளர்மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை என பத்து சம்பந்தப்பட்ட துறை பொது ஊழியர்களுக்கு புகார் அனுப்பியுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக அரசுகளுக்கு இடையே போடப்படும் ஒப்பந்தம் தான் ராம்சார் ஒப்பந்தம். இதன்படி 2022-ல்  ஏப்ரல் 8ம் தேதி 1247.5 ஹெக்டர் அதாவது 3080 ஏக்கர் அளவிற்கு  பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இதை பெருமையுடன் கொண்டாடியது.

இதன் பொருள் என்னவென்றால் 1247 ஹெக்டரில் ஏற்கனவே கிட்டத்தட்ட 690.65 ஹெக்டர் (1705 ஏக்கர்) நம் வனத்துறையிடம் காப்புக் காடாக உள்ளது. மீதமுள்ள 547 ஹெக்டரில் (1375 ஏக்கர்) உள்ள அரசு மற்றும் தனியார் பெயரில் உள்ள நிலங்களை மீட்டெடுப்பது அரசின் முக்கிய கடமை. மேலும் இந்திய அரசின் 2017 ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின்படி ராம்சார் நிலங்கள் நிர்வகிக்கப் பட வேண்டும். இந்த சட்டத்தின் பிரிவு 3 படி ராம்சார் நிலங்கள் ஈர நிலங்கள் ஆகும். மேலும் இந்த சட்டத்தின் பிரிவு 4 படி இந்த நிலங்களில் எந்த விதமான நிரந்தர கட்டுமானங்களும் அனுமதிக்க முடியாது.   


ஆனால் இந்த ராம்சார் பகுதிக்கு உட்பட்ட சர்வே எண்கள்  453, 495, 496, 497, 498 இல் உள்ள கிட்டத்தட்ட 14.7 ஏக்கர் நிலத்தில் 1250 அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்காக பிரிகேட் மார்கன் என்னும் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியும் கட்டுமான அனுமதியும் கோரியது.


ஜூலை 2022 அதாவது ராம்சாரில் இந்த நிலம் ஏப்ரல் 2022ல் பதிவிடப்பட்ட பிறகு,  பிரிகேட் என்டர்பிரைசஸ் லிமிடட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்பாக கோரப்படும் குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference)  அனுமதி   கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையதத்திற்கு (SEIAA – State environmental impact assessment authority) விண்ணப்பம் செய்கிறது.


SEIAA
 இந்த விண்ணப்பத்தை மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்கு (State Expert Appraisal Committee – SEAC) அனுப்புகிறது. இந்த விண்ணப்பம் வந்த உடனேயே இது ராம்சார் தளத்தின் உள்ளே உள்ளது என்று சொல்லி இந்த விண்ணப்பத்தை நிராகரித்து இருக்க வேண்டும்.

 

ஆனால் SEAC பரிந்துரைப்படி SEIAA  அனுமதியை பிப்ரவரி 2023இல்  குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference) அனுமதி கொடுக்கிறது. இதன் அடுத்த வழிமுறையான சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு பிரிகேட் நிறுவனம் ஆகஸ்ட்  2023ல் விண்ணப்பிக்கிறது.


SEAC
 செப்டம்பர் 27 2023 அன்று நடந்த தனது 411வது சந்திப்பில் இதைப்பற்றி பேசும் பொழுது இந்த இடம் பள்ளிக்கரணை ராம்சார் நிலத்திற்கு அருகில் உள்ளது என்று ஒரு பொய்யை பதிவிடுகிறது. இணையதளத்தில் உள்ள ராம்சார் மேப்பை எடுத்துப் பார்த்து இருந்தால் கூட இந்த சர்வே எண் ராம்சார் தளத்தில் உள்ளே தான் வருகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கும். மேலும் ராம்சார் ஈரநிலத்தின் லேட்டிடியூட் லாங்கிட்யூட் கேட்பதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் லேட்டிடியூட் எல்லையை மட்டும் கேட்கிறார்கள். வினாத்தாளை எழுதிவிட்டு அதற்கு ஏற்ப கேள்விகள் கேட்பது போல் கேட்டுள்ளார்கள்.


வனத்துறை இந்த நிலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து 65 மீட்டர் தொலைவில் உள்ளதாக ஒரு பொய்யான அறிக்கையை கொடுக்கிறது. ஒருவேளை ராம்சார் எல்லை வனத்துறைக்கு தெரியவில்லை என்று எடுத்துக் கொண்டாலும் இந்த நிலமானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 534/பள்ளிக்கரணை சதுப்புநிலை எல்லையில் உள்ளது அவர்களுக்கு தெரியும். இருந்தும் கூட இது 0 மீட்டரில் உள்ளது என்று சொல்லாமல் 65 மீட்டர் தொலைவில் உள்ளதாக ஒரு பொய்யான அறிக்கையை கொடுக்கிறது.


இவையெல்லாம் மீறி SEAC தன்னிச்சையாக இதை ஆய்வு செய்து இருக்க வேண்டும் குறைந்தபட்சம் ராம்சாரின் எல்லையாவது அவர்கள் மாநில ஈரநில ஆணையத்திடம் (State Wetland Authority)  யிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் மாநில ஈரநில ஆணையத்திடம் மீதும் ஒரு மிகப்பெரிய அழுத்தம் இருந்ததாக அறிகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால்சுற்றுச்சூழல், வனத்துறை, மாநில ஈரநில ஆணையம் என அனைத்திற்கும் செயலாளராக இருப்பவர் ஒரே IAS அதிகாரி.

இறுதியாக டிசம்பர் 11, 2024 அன்று நடந்த 517 ஆவது சந்திப்பில் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்கு (State Expert Appraisal Committee – SEAC) சுற்றுசூழல் அனுமதிக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. ஜனவரி 20, 2025 அன்று மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு (SEIAA) சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தை மார்கன் பிரிகேட் நிறுவனத்திடம் கொடுத்துவிடுகிறது.

மின்னல் வேகத்தில் பெருநகர சென்னை வளர்ச்சிக்குழுமம் என்று சொல்லப்படும் CMDA சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்றே நாளில் கட்டுமான அனுமதியை கொடுக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தன்னிடம் இருக்கும் ராம்சார் விவரங்களை பார்த்து இருந்தால் கூட இந்த நிலம் ராம்சார் பகுதிக்குள் வருகிறதே என்று திட்ட அனுமதியை மறுத்து இருக்க வேண்டும். ஆனால் வளர்ச்சிக்கு பதிலாக சென்னையை பல வழிகளில் அழிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கட்டுமானத்திற்கான அனுமதியை 23 ஜனவரி 2025 அன்று கொடுத்துவிடுகின்றனர்.


இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால் சென்னையில் 2024 ஆம் ஆண்டு நடந்த குளோபல் இன்வெஸ்டர் சந்திப்பில் பிரிகேட் பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் கட்டப்போகும் இந்த 1250 வீடுகளை தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் செய்யும் கிட்டத்தட்ட 2000 கோடி முதலீடு என்று முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் மற்றும்  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளனர்.


ஒரு பக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டெடுப்பேன் என்று சொல்லிவிட்டு மறுபக்கம் அதை அழிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்பிரிகேட் நிறுவனம் தற்பொழுது இந்த நிலத்தில் 1250 வீடுகள் கட்டப் போவதாகவும் ஒவ்வொரு வீடும் 1.3 கோடி முதல் 2.8 கோடி வரை உள்ளதாகவும், இப்பொழுதே 20 சதவீதம் பணம் கொடுத்து புக் செய்து கொள்ளுங்கள் என்றும் விளம்பரத்தை துவக்கி உள்ளது. கட்டுமான வேலைகளையும் துவக்கி உள்ளது.


அனைத்தும் சரியாக இருந்து சாதாரணமாக ஒரு வீட்டின் திட்ட அனுமதிக்கு சென்றாலே லஞ்சம் வாங்கும் பொது ஊழியர்கள், 2000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வீடுகளுக்கு சட்டத்தை மீறி ராம்சார் விதிகளை குப்பைத் தொட்டியில் போட்டு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான அனுமதி வழங்க சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், பெருநகர வளர்ச்சி குழுமத்துறையும் எத்தனை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருப்பார்கள்?


ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்புகளை பெரும்பாக்கம் மக்கள் ஒவ்வொரு முறையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கான காரணம் 1911 RSR படி சர்வே எண் 430 என்பது 643.9 ஏக்கர் கொண்ட பெரும்பாக்கம் காப்புக் காடாக இருந்தது. ஆனால் நாங்கள் பார்த்தது என்னவென்றால் அந்த 430 சர்வே எண் என்பது இன்று வெறும் 6 ஏக்கர் அளவில் மட்டுமே உள்ள சாலையாக உள்ளது. 1911-ல் 445 வரை தான் சர்வே எண்கள் அந்த கிராமத்தில் இருந்தது. பல பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த காப்புக்காடு சதுப்பு நிலத்தை காலி செய்வதற்காக வருவாய்த்துறை தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து 446 சர்வே எண் முதல் 54சர்வே எண் வரை புதியதாக உருவாக்கி பட்டாவாக மாற்றப்பட்டுள்ளது என்பதை பார்க்க முடிந்தது. 534 இல் உள்ள கிட்டத்தட்ட 50 ஏக்கர் மட்டுமே தற்பொழுது சதுப்பு நிலமாக அரசிடம் உள்ளது. மற்றவை முன்னாள் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் இந்நாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல உயர் அதிகாரிகளின் சொகுசு வாழ்க்கைக்கும் ரியல் எஸ்டேட் குடும்பத்திற்கும் அவர்களிடமிருந்து வாங்கிய பிரிகேட் நிறுவனம்  போன்றவர்களுக்கு சென்று விட்டது.


எனவே தான் காப்புகாடாக இருந்த இது போன்ற பகுதிகள் ராம்சார் பகுதியாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் எந்தவிதமான கட்டுமானமும் செய்யக்கூடாது என்று தெள்ளத் தெளிவாக இருந்தும் கூட அதற்கான அனுமதி வழங்கிய CMDA அன்றைய செயலர் அஞ்சல் மிஸ்ரா IAS போன்ற செயலர்களுக்கும், சுற்று சூழல் துறை ராகுல் நாத் IASSEIAA தலைவர் கிருஷ்ணகுமார் IFS (Rtd), SEAC தலைவர் தீனபந்து முன்னாள் IAS போன்றவர்கள் செய்தது பல தலைமுறைகளை பாதிக்கும் கிரிமினல் குற்றம் ஆகும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டெடுப்பேன் என்று சொல்லி அப்பட்டமாக தன்னுடைய ஆட்சியில் பள்ளிக்கரணை சதுப்பு நில ராம் சார் பகுதியில் மிகப்பெரிய கட்டிடங்கள் எழுப்பி வெள்ளத்தை உருவாக்கி அங்கு இருக்கும் மக்களை மேலும் வெள்ளத்தில் பாதிக்க செய்யும் வகையில் அந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த முதல்வர் திரு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? இப்படித்தான் மாநிலத்தில் முதலீடுகள் செய்து கொண்டிருக்கிறீர்களா என்று திரு டிஆர்பி ராஜா பதில் சொல்வாரா? CMDA சர்குலேஷன் நோட்டில் கையெழுத்து போட்ட அமைச்சர் திரு சேகர்பாபு பதில் சொல்வாராஅல்லது மாநில ஈரநில ஆணையத்திற்கு தலைவராக இருந்த அப்போதைய வனத்துறை அமைச்சர் திரு பொன்முடி பதில் சொல்வாராஅல்லது சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்த சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர்காக உள்ள திரு தங்கம் தென்னரசு தான் பதில் சொல்வாரா?? அல்லது மாநில ஈரநில ஆணையத்திற்கு துணை தலைவராக உள்ள தலைமைச் செயலர் திரு முருகானந்தம் IAS பதில் சொல்வாரா? அல்லது அன்றைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் செந்தில்குமார் IAS அல்லது இன்றைய செயலர் சுப்ரியா சாஹு IAS  தான் பதில் சொல்வாரா?

 

அறப்போர் இந்த ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்பு துறை, முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உள்ளது.


1.. 
தமிழ்நாடு அரசு. நேரடியாக பிரிகேட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும். உடனடியாக பிரிகேட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கட்டுமான அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும். கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தி நிலத்தை மீட்டு எடுக்க வேண்டும்.

 

2. லஞ்ச ஒழிப்பு துறை அறப்போர் புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை IAS அதிகாரிகளுடன் நிற்காமல் அமைச்சர் பங்குகள் உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

 

3. அரசு இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

4. ராம்சார் தளத்தின் உள்ளே 2022, ஏப்ரல் க்கு பிறகு வழங்கப்பட்ட அனைத்து கட்டுமான மற்றும் சுற்றுசூழல் அனுமதிகளையும் ரத்து செய்ய வேண்டும்.

 

5. ராம்சார் உள்ளே உள்ள நிலங்களை அரசு மீட்க வேண்டும். எந்த கட்டுமானங்களும் நடைபெறாமல் அரசு பாதுகாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Professor Bernadette Brooten- Exploring and confronting the biblical roots of sex and slavery

Exploring the links between slavery, sex and scripture Bernadette Brooten's new book takes on a once-taboo subject Photo/Mike Lovett Ber...