2009- ஆகஸ்ட், 26-ல் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆட்சி மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் குழு ஹிந்தியை ஆட்சி மொழியாகப் பரவலாக்கும் நோக்கில் 117 பரிந்துரைகளை சமர்ப்பித்தது.
அவற்றில் முக்கியமான சில:
• மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் புதிதாகப் பணி நியமனம் பெறும் நபர்களுக்கு ஹிந்தி தெரியாவிட்டால் பணியில் சேர்ந்த உடனே ஹிந்தி கற்றுக் கொள்ளும் பயிற்சிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
• மத்திய அமைச்சகங்களிலும் அரசுத் துறைகளிலும் ஹிந்தி மூலமான பரிமாற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
• 11 அமைச்சகங்கள் / துறைகளில் 50%க்கு மேலான பணிகள் கணினிமூலம் நடக்கின்றன. வெளியுறவுத்துறை மற்றும் விஞ்ஞான தொழில் நுட்பத்துறையில் கணினிப் பயன்பாடு 20%க்கும் குறைவாகவே இருக்கிறது. எனவே அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளுக்கு இரு மொழி கணினி வசதிகள் உடனே செய்துதரப்படவேண்டும். கணினியில் பயிற்சி பெறும் பணியாளர்கள் ஹிந்தியிலும் தேர்ச்சி பெறும் வகையில் இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படவேண்டும்.
• ஒவ்வொரு அலுவலகத்தில் இருக்கும் மூத்த அதிகாரிகள் தம் கீழ் பணிபுரிபவர்கள் ஹிந்தியில் செய்யும் பணிகளை மாதக் கடைசி வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். அடுத்த மாதம் எவ்வளவு அதிகப் பணிகள் ஹிந்தியைப் பயன்படுத்திச் செய்து முடிக்கவேண்டும் என்று இலக்குகள் நிர்ணயிக்கவேண்டும்.
• ஹிந்தி பயிற்றுவித்தல் தொடர்பாக ஏதேனும் காலியிடங்கள் இருந்தால் உடனே பணியாளர் நியமிக்கப்பட்டாகவேண்டும்.
• உயர் அதிகாரிகள் ஏதேனும் அலுவலகத்துக்குப் பரிசோதனைகளுக்குச் சென்றால் ஆட்சி மொழி தொடர்பான பரிசோதனையையும் செய்தாகவேண்டும். அந்த அலுவலகத்தில் ஹிந்தியில் அரசுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக மூத்த அதிகாரி என்னென்ன இலக்குகளை நிர்ணயித்திருக்கிறார்; பணியாளர்கள் அவற்றில் எவ்வளவு நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதைப் பரிசோதிக்கவேண்டும்.
• ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஹிந்தி பயன்பாடு எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்துவரவேண்டும்.
• அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் ஆட்சி மொழி அமலாக்கத்துக்காக ஹிந்திக்கான (கற்றுக் கொடுப்பதற்கான) பதவியில் ஒருவர் நியமிக்கப்பட்டாகவேண்டும்.
• ஹிந்தி கணினி பயன்பாட்டுக்கான பொதுவான எழுத்துரு உருவாக்கப்படவேண்டும். அனைத்து மென்பொருள்களிலும் அதை உள்ளீடு செய்தாகவேண்டும். அடிப்படை ஆதாரமான விசைப்பலகையும் இணைக்கப்பட்டாகவேண்டும்.
• மனித வள மேம்பாட்டுத்துறை தன் படிப்புகளில் ஹிந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கவேண்டும். முதல் கட்டமாக சி.பி.எஸ்.ஈ பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டாகவேண்டும்.
• அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி மையங்களில் ஹிந்தி கற்றுக் கொடுக்கும் திட்டத்தை அமலாக்க மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முயற்சி எடுக்கவேண்டும்.
• ஹிந்தி துறைகள் இல்லாமலிருக்கும் பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி மையங்களின் பட்டியலை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயாரிக்கவேண்டும். அங்கெல்லாம் ஹிந்தி துறை ஆரம்பிக்கப்பட்டு ஹிந்தி வழியிலான கல்வியும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
• ஹிந்தி பேசாத மாநிலங்களில் இருக்கும் உயர் கல்வி மையங்கள், பல்கலைக்கழகங்களில் இருக்கும் மாணவர்களுக்கு ஹிந்தியில் தேர்வுகள் எழுதவும் / நேர்முகத் தேர்வுகளில் ஹிந்தியில் பதில் சொல்லவும் வாய்ப்பு அளிக்கவேண்டும்.
• ஹிந்தி பயிற்சி மையங்களுக்கு தற்போது தரப்படும் நிதி உதவி மிக மிகக் குறைவாக இருக்கிறது. மனித வள மேம்பாட்டுத்துறை இந்த நிதி உதவியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
• ஹிந்தி கற்றுக் கொடுப்பதற்கான புத்தகங்கள், தொழில்நுட்பப் பாடங்கள் எல்லாம் ஹிந்தி பண்டிட்களைக் கொண்டு தயாரிக்கப்படவேண்டும். அப்போதுதான் அவற்றில் பிழைகள் இல்லாமலிருக்கும்.
• பள்ளிகள், பட்டப்படிப்புகள், முதுகலைக் கல்வி போன்றவற்றில் ஆங்கிலம் அளவுக்கு ஹிந்தியில் பாட புத்தகங்கள் இல்லை. அவற்றை எளிய ஹிந்தியில் உடனே உருவாக்கவேண்டும். அப்போதுதான் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு இணையாக ஹிந்தி வழி மாணவர்கள் போட்டியிட்டு முன்னேறமுடியும்.
• பல்வேறு விஞ்ஞான நூல்கள் எளிய ஹிந்தி மொழியில் எழுதப்பட்டாகவேண்டும்.
• தொழில்நுடப் பாட நூல்கள் உருவாக்க ஹிந்தி எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களை உடனே நியமிக்கவேண்டும். அயல்நாட்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் ஹிந்தி கற்றுத் தரவும் இவர்களைப் பயன்படுத்தலாம்.
• தொழில்நுட்ப விஷயங்கள், கலைச்சொற்கள் ஆகியவற்றில் நடைமுறைப் பயன்பாட்டுக்காக ஆங்கில வார்த்தைகளை ஹிந்தியில் அப்படியே பயன்படுத்தவும் செய்யலாம்.
• நாட்டின் அனைத்துக் கல்வி மையங்களிலும் அடிப்படை ஹிந்தி கற்றுத்தரவேண்டும்.
• மத்திய அரசுப் பணிகளில் இருப்பவர்கள் எழுதும் தேர்வுகளில் ஹிந்தியில் எழுதும் வாய்ப்பு உருவாக்கித் தரப்படவேண்டும்.
• அனைத்து வேலைகளுக்கும் குறைந்தபட்ச ஹிந்தி அறிவு இருக்கவேண்டும் என்று வரையறுக்கவேண்டும்.
• பத்தாம் வகுப்புவரை ஹிந்தி கட்டாயப் பாடமாக இருந்தாகவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும்.
• மத்திய அரசின் எந்தவொரு விளம்பரமாக இருந்தாலும் 50% ஹிந்தியில்தான் செய்யப்படவேண்டும். எஞ்சிய 50% மட்டுமே ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியில் செய்யப்படவேண்டும்.
• முடிந்தவரை ஹிந்தியிலும் பிராந்திய மொழியிலும் மட்டுமே விளம்பரங்களை வெளியிடுவது நல்லது.
• ஹிந்தி விளம்பரங்கள் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் பெரிய அளவில் கொடுக்கப்படவேண்டும். ஆங்கில செய்தித் தாள்களில் சிறிய அளவில் நடு அல்லது கடைசி பக்கங்களில் இடம்பெறச் செய்யவேண்டும்.
• விஞ்ஞான தொழில் நுட்ப மையங்கள் தமது நூலக நிதியில் 50% ஹிந்தி புத்தகங்களை வாங்கப் பயன்படுத்தவேண்டும். நூலக நிதி வரையறுக்கப்படாத அலுவலகங்களில் அந்த அலுவலகத்தின் செலவுத் தொகையில் ஒரு சதவிகிதம் ஹிந்தி நூல்கள் வாங்குவதற்காகவே செலவிடப்படவேண்டும்.
• ஹிந்தியில் சுயமாக நூல்கள் எழுத ஊக்குவிக்கவேண்டும். இதற்கான பரிசுத் தொகைகள் அதிகரிக்கப்படவேண்டும்.
• பல்வேறு அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தமது எழுத்துத் திறமையால் ஹிந்தி இலக்கியத்துக்கு வளம் சேர்த்துவருகிறார்கள். அவர்களுக்கு ஊக்கமும் பதவி உயர்வும் தந்து கெளரவிக்கவேண்டும்.
• ‘அற்புதமான மொழி பெயர்ப்புத் திட்டம்’ என்ற பெயரில் நல்ல ஆங்கில நூல்களை ஹிந்தியில் மொழிபெயர்க்க ஊக்கமளிக்கவேண்டும்.
• மத்திய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்களில் ஹிந்தி புத்தக கிளப்கள் அமைக்கவேண்டும்.
• ஏர் இந்தியா வெளியிடும் கால அட்டவணை இரு மொழியில் வெளியிடப்படவேண்டும்.
• ஒவ்வொரு அலுவலகமும் தமக்குள்ளான தனி சுற்றுக்கு பல நூல்களை ஹிந்தியில் எழுதி வெளியிடவேண்டும். பிராந்திய மொழியில் எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த மொழிகளிலும் தனிச் சுற்றுக்கான நூல்களை எழுதி வெளியிட ஊக்குவிக்கவேண்டும்.
• அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியுடன் சேர்த்து ஹிந்தியிலும் அறிவிப்புகள் செய்யப்படவேண்டும்.
• ரயில்வே துறை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தனது வலைதளத்தை நடத்தவேண்டும்.
• பயணச் சீட்டுகளில் இரு மொழிகளில் விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கவேண்டும்.
• ரயில்வே துறையின் விளம்பரங்கள், பதாகைகள், அனைத்தும் ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி/ஆங்கிலம் என இரு மொழிகளில் இருக்கவேண்டும்.
• பாஸ்போர்ட், விசா தொடர்பான தகவல்கள் ஹிந்தியிலும் இடம்பெறவேண்டும்.
• அயலகத் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தேசிய மொழிப் பயிற்சி தந்தாகவேண்டும்.
• அனைத்து விமானப் பயணிகளுக்கும் ஹிந்தி பத்திரிகைகள் எளிதில் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.
• ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்கள், அறிவிப்பாளர்களுக்கு நேபாளி, ஃபிரெஞ்சு மற்றும் பிற அந்நிய மொழி பணியாளர்களுக்குத் தரும் அதே சம்பளம் தரவேண்டும்.
• அனைத்து தூர்தர்ஷன் கிளைகள் மற்றும் வானொலி நிலையங்களில் ஹிந்தியில் ஒலி/ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு நேரம் என்பதை வரையறுத்தாகவேண்டும்.
• அனைத்து திரைப்பட விழாக்களிலும் காட்சிப்படுத்தப்படும் திரைப்படங்களுக்கு ஹிந்தியில் சப்டைட்டில்கள் இடம்பெறச் செய்தாகவேண்டும். இதனால் நல்ல திரைப்படங்களை ஹிந்தி மூலம் கண்டுகளிக்க வாய்ப்பு கிடைக்கும்.
• தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரிக்கும் பிராந்திய மொழிப் படங்களுக்கு ஹிந்தி சப் டைட்டில்கள் இடம்பெற வழி செய்யவேண்டும். மேலும் அந்தப் படங்களின் திரைக்கதையை ஹிந்தியில் அச்சிட்டு சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கொடுக்கவேண்டும்.
• ஹிந்தி சுருக்கெழுத்தர்களுக்கு ஆங்கில வினாத்தாள் கட்டாயம் என்ற நிலையை மாற்றவேண்டும்.
• ஆங்கில மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஹிந்தி அல்லது பிராந்திய மொழிக் கல்வியைக் கொடுக்காத கல்வி மையங்களுக்கு அரசு அங்கீகாரம் கொடுக்கக்கூடாது.
• மத்திய அரசுப் பணிகளில் சேரவிரும்புபவர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப ஏதேனும் ஒரு ஹிந்தி தேர்வு எழுத வழிவகை செய்யவேண்டும்.
• ஏதேனும் அரசு அலுவலகம் அல்லது அமைச்சகம் ஆட்சிமொழி சட்டத்தை மீறி நடந்தால் தண்டனை தர வழிவகை செய்யவேண்டும்.
• அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்கள், அரசுப் பணிகளில் இணைந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஹிந்தி செய்தித்தாள்கள், பத்திரிகைகள் கட்டாயம் வாங்கியாகவேண்டும். ஆங்கில செய்தித்தாள்கள், பத்திரிகைகளைவிட ஹிந்தி பத்திரிகைகள், செய்தித்தாள்கள் அதிகம் வாங்கவைக்கவேண்டும்.
• அனைத்து நிறுவனங்களின் பொருட்களின் விவரங்கள் ஹிந்தியில் இடம்பெறச் செய்யவேண்டும்.
ப.சிதம்பரத்துக்குப் பின்பாட்டுப் பாடியது அப்போதைய முத்துவேல் கருணாநிதி.


No comments:
Post a Comment