11 ஆண்டுகள் காத்திருப்பு! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் யானைகள் மீண்டும் வருகை! மகிழ்ச்சியில் மக்கள்! By : கிஷோர் | Updated at : 10 Jan 2026
Kanchipuram Kamakshi Amman Temple: "நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து 11 ஆண்டுகள் கழித்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் யானைகள் காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ளது"
காஞ்சி காமகோடி பீடத்தின் யானைகளை, ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் யானைகள்
கோயில் நகரமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வழிபாட்டு நடைமுறைக்காக 3 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது.
சந்தியா, இந்துமதி மற்றும் ஜெயந்தி ஆகிய மூன்று யானைகள் அரசு அனுமதியுடன் பராமரிக்கப்பட்டு வந்தது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த யானைகள் பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த யானைகளாக இருந்து வந்தது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த யானைகள் கோயில் பிரம்மோற்சவ விழாவின்போது பயன்படுத்தப்பட்டது.
உயிரிழந்த யானை பாகன்
இந்த யானைகளை குணசீலன் என்பவர் பராமரித்து வந்தார். குணசீலன் 2015 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். குணசீலன் உயிரிழந்த பிறகு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த யானைகளை, அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்திற்கு யானைகளை கொண்டு செல்ல, காஞ்சிபுரம் மடம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
யானைகளை லாரி மூலமாக, அனுப்பி வைக்க முயற்சி செய்தபோது, சந்தியா என்ற யானை லாரியில் இருந்து குதித்து காஞ்சிபுரத்திலிருந்து செல்ல மறுத்தது. அதன் பிறகு சந்தியா யானையை வேடல் என்ற பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டது. அதன் பிறகு மூன்று யானைகளும் மரக்காணம் அருகே கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. அப்போது யானைகள் அனுமதி இல்லாமல் பராமரிக்கப்படுவதாக கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
திருச்சியில் காஞ்சிபுரம் யானைகள்
நீதிமன்ற உத்தரவின் படி, 2019-ஆம் ஆண்டு மூன்று யானைகளையும் திருச்சி எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு தங்களுக்கு சொந்தமான யானைகளை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைக்குமாறு காஞ்சிபுரம் காமகோடி பீடம் சார்பில் வனத்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு வனத்துறை சார்பில் தகுந்த பதில் வராததால், காஞ்சி மடம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது, காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் காப்பகத்தில் யானைகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் யானை ஆர்வலர்கள் உள்ளிட்ட குழு அந்த மையத்தில், ஆய்வு மேற்கொண்டு சில குறைகளை சுட்டிக்காட்டினர். அதனைத் தொடர்ந்து அந்த குறைகளையும் நிவர்த்தி செய்ய நீதிமன்றம் காஞ்சி மடத்திற்கு உத்தரவு தெரிவிக்கப்பட்டது
யானைகளை காஞ்சிபுரம் அனுப்ப உத்தரவு
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறையின் சிறப்பு அரசு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி மாவட்ட யானைகள் நலக்குழுவின் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார். யானைகள் பராமரிப்பதற்கு தேவையான வசதிகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று யானைகளையும் திருச்சி காப்பகத்தில் இருந்து காஞ்சி பீடம் நிர்வாகிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது என்ன ?
மூன்று யானைகளையும் காஞ்சி காமகோடி பீடத்திடம் ஒப்படைக்க வேண்டும். வனத்துறையின் வாகனத்தில் யானைகள் இடமாற்றம் செய்ய வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு யானைகளின் உடல்நலம் மனநலம் முழுமையாக சரியாகும் வரை கோனேரிக்குப்பம் மையத்திலிருந்து, வெளியே கொண்டு செல்லக்கூடாது. யானைகளின் உடல்நிலையை கண்காணிக்க கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை வனத்துறையினர் பணி அமர்த்த வேண்டும் என உத்தரவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது
யானைகள் பராமரிக்கும் கோனேரிக்குப்பம் பகுதியில் யானைகளுக்கான பூஜைகளை நடத்தலாம். மாவட்ட நலக்குழு யானைகளின் உடல்நலம் சரியாகும் வரை மாதம் ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள்
இதனைத் தொடர்ந்து யானைகள் காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள கஜசாலைக்கு அடுத்த 10 நாட்களுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் யானைகள் மீண்டும் காஞ்சிபுரம் வருவது பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment