ஆக ஆதிசைவர் பூஜை மல்லிகார்ஜுனர் காலத்தில் இருந்தமை தெளிவாகிறது. அதற்கு முந்தைய வீரபாண்டியன் கல்வெட்டிலும் முடிகொண்ட சோழபட்டன் என்பவர் கையெழுத்திட்டிருப்பதும் தெளிவு. ஆகவே கிடைக்கும் கல்வெட்டுக்களில் ஆதிசைவர் பூஜை நிகழ்ந்தது உய்த்துணரக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்தக் காலமொவ்வாத போலிச்செப்பேட்டை வைத்து இவ்விதம் நிர்ணயித்திருப்பது எவ்வாற்றானும் ஒவ்வாத செயல்.
இது போன்ற போலிச் செப்பேடுகள் 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி பலவுள. சென்னை அருங்காட்சியகத்திலுள்ள செப்பேடு ஒன்று காஞ்சி காமாக்ஷி கோயிலைப் பற்றியது. அன்னையின் தேர் வரும்போது யாரோ ஒரு மந்த்ரவாதி அதனைத் தடுக்க அதனைக் கம்பளத்தார் விலக்கியதாகக் கூறும் இந்தச் செப்பேடு சகவர்ஷம் 1098, கலிவர்ஷம் 4421-ஐச் சேர்ந்தது. இது போலிச்செப்பேடு.
இதனைப் போலவே சோழர் செப்பேட்டிலும் கரிகாலசோழர் காலத்து கதையைக் கூறும் செப்பேட்டின் எழுத்தமைதி 17 ஆம் நூற்றாண்டு. இது போன்ற போலிச் செப்பேடுகள். ஏராளம். இந்த ஒற்றைச் சான்றை வைத்து ஆதிசைவர்கள் பல கோயில்களைக் கைப்பற்றினர் என்று கூறுவதெல்லாம் அறியாமையின் உச்சமன்னியில் வேறில்லை.