Saturday, March 5, 2022

பட்டியல் சமூக மக்களை சென்னைக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் வரலாறு!

பட்டியல் சமூக மக்களை  சென்னைக்கு வெளியே விரட்ட வேண்டும்:   திராவிட இயக்கத்தின்  விபரீத வரலாறு! 

  
https://arulgreen.blogspot.com/2013/06/Pulianthope-riots-1921.html
'தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நகரிலிருந்து பட்டியல் சமூக மக்களை வெளியே அனுப்ப வேண்டும்' என்கிற ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அப்படிப்பட்ட கோரிக்கையை முன் வைத்தவர்கள் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா? 
வரலாற்றில் பொய்யை உண்மையாக்கும் கோயபல்சுகள்தான் வாழ்கிறார்கள். உண்மை வரலாற்றின் பக்கங்களில் கரைந்து காணாமல் போய்விடுகிறது. ஈழத்திலே ஒன்றைரை லட்சம் தமிழர்கள் கொலைசெய்யப்பட்டார்கள். ஆனால், 'பயங்கரவாதிகளை இலங்கை அரசு வெற்றி கொண்டதுதான்' எதிர்கால வரலாறாக பேசப்படக் கூடும். எப்போதும் வெற்றி பெற்றவர்களின் வரலாறுதான் நிலைத்து நிற்கிறது. 
சுதந்திர இந்தியாவில் நீண்டகாலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் கட்சியாக திராவிடக் கட்சிகளே இருப்பதால் 'தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது திராவிட இயக்கம்' என்ற உண்மை மறைக்கப்பட்டுவிட்டது. திராவிட இயக்கம் சாதி ஒழிப்பு இயக்கமாகிவிட்டது. 
பின்னி மில் போராட்ட வரலாறு

சென்னையில் பின்னி மில் தொழிலாளர் போராட்டத்தை முன்னிட்டு, 1921 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் பார்ப்பனரல்லாத சாதியினருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தின் போது நீதிக்கட்சி அரசாங்கமும் அதன் தலைவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தனர்.
பக்கிங்காம் & கர்னாட்டிக் மில்ஸ்
பின்னி மில் 
ஒரு காலத்தில் சென்னை நகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது பின்னி மில் எனப்படும் பக்கிங்காம் & கர்னாட்டிக் மில்ஸ். இந்த துணி ஆலை 1878 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது (பக்கிங்காம் மில் 1978லும், கர்னாடிக் மில் 1882லும் தொடங்கப்பட்டு, இரண்டும் 1920 இல் ஒன்றாக்கப்பட்டன).
ஆர்க்காடு நவாப்பிடம் பணியாற்றுவதற்காக சென்னைக்கு வந்த ஜான் பின்னி என்பவர்தான் இந்த ஆலையைத் தொடங்கினார். தற்போது அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசாவுக்கு அருகில் உள்ள தாஜ் கன்னிமரா நட்சத்திர விடுதி இருக்கும் இடத்தில்தான் ஜான் பின்னி வசித்தார். அதன் நினைவாகவே அந்த சாலை இப்போதும் பின்னி சாலை எனப்படுகிறது.
புளியந்தோப்பு கலவரம் 1921
இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகமுக்கியத்துவம் பெற்றது பின்னி மில். இங்கு 1918இல் செல்வபதி செட்டியரால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கம் தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கம்.
பட்டாளம் ஸ்ட்ராகன்ஸ் சாலையில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் 'மெட்ராஸ் லேபர் யூனியன்' அலுவலகம், 1918 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் இங்குதான் தொடங்கப்பட்டது. அதனை தொடங்கிய செல்வகணபதி செட்டியார், ராமானுஜலு நாயுடு ஆகியோரது பெயரால்  செல்வகணபதி - ராமானுஜலு கட்டடம் என அழைக்கப்பட்டது.
1920 ஆம் ஆண்டுவாக்கில் 14000 தொழிலாளர்கள் வேலை செய்த மிகப்பெரிய தொழிற்சாலையாக இருந்த பின்னி மில் 1996 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. (இப்போது தமிழ் திரைப்படங்களின் சண்டைக் காட்சிகள் இந்த மில்லின் பாழடைந்த கட்டடங்களில் நடக்கிறது.)
திரு.வி.க தலைமையில் 1921இல் பின்னி மில்லில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டமானது இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அந்த ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் முதல் கர்னாடிக் மில்லில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. இதில் ஜூன் 20 முதல் பின்னி மில் தொழிலாளர்களும் பங்கேற்றனர்.
தொழிற்சங்கத் தலைவர் என்ற முறையில் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார். காங்கிரசு கட்சியின் ஒத்துழையாமை இயக்க தத்துவத்தின் படி போராட்டம் நடந்தது. நீதிக்கட்சித் தலைவர் நடேச முதலியார் போராட்டத்தை ஆதரித்தார் (அப்போது சென்னை மாகாண ஆளும் கட்சியாக இருந்தது நீதிக்கட்சிதான்).
திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் 
பின்னி மில்லில் பணியாற்றிய தொழிலாளர்களில் கணிசாமானோர் ஆதி திராவிட வகுப்பினராக இருந்த நிலையில், ஆங்கிலேயே அரசாங்கம் போராட்டத்தைத் தணிக்க, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான எம்.சி. ராஜா அவர்களின் உதவியைக் கோரியது. அவரும் ஆதி திராவிட வகுப்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்காமல் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
(தாழ்த்தப்பட்டோரின் தலைவராக விளங்கி வந்த எம்.சி. ராஜா சென்னை ராஜதானி சட்டசபைக் கவுன்சிலில் அரசாங்கத்தின் நியமன உறுப்பினராக இருந்தார். அவருக்கு ராவ் பகதூர் என்கிற பட்டமும் அளித்து கௌரவித்திருந்தது, பிரிட்டிஷ் அரசாங்கம்.)
எம்.சி. ராஜாவின் நண்பரான திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், எம்.சி.ராஜாவிடம் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டாம் என்று கேட்டபோது "என்னை அரசாங்கம் சார்பில் நிற்கச் செய்திருப்பது எனது சமூகம். எனது சமூகம் மிகத் தாழ்ந்த நிலைமையிலிருக்கிறது. அதை முன்னேற்ற அரசாங்கத்தின் துணை தேவையாயிருக்கிறது" என்று எம்.சி.ராஜா குறிப்பிட்டார்.
எம்.சி.ராஜா
எனினும் திரு.வி.க, "தொழில் இயக்கத்தில் சாதிப்பிணக்கை கொணர்ந்து நுழைப்பது நல்லதல்ல" என்று கூறியபோது, அதற்கு "நீங்கள் எங்களது இனத்தாரைக் கொண்டு புரட்சி செய்வித்தால் அதன் பயனை மேல்சாதியினரே அநுபவிப்பர். எனவே, தீயை தணிக்க (போராட்டத்தை தடுக்க) வேண்டுவது என் கடன்" என்று எம்.சி. ராஜா கூறியதாக திரு.வி.க குறிப்பிடுகிறார். (திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1944)
எம்.சி. ராஜா அவர்களின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்ட வகுப்பு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். இது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்களும் கிறித்தவர்களும் தொழிற்சங்கப் போராட்டத்துக்கு எதிரான நிலை எடுத்தனர். அதேநேரத்தில் தாழ்த்தப்பட்டோர் அல்லாத இந்துக்களும் இஸ்லாமியர்களும் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதாரவாக இருந்தனர்.
இந்த சூழலில் 1921 ஜூன் 28 அன்று இரவு புளியந்தோப்பு சேரி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் பெரும் மோதலாக வெடித்தது. புளியந்தோப்பு கலவரம் 1921 என்று அழைக்கப்படும் இந்த கலவரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் மற்றவர்களும் மோதிக்கொண்டனர். சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. மூன்றுபேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர் (இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருக்கலாம்). போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசின் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆறு பேரும் பார்ப்பனரல்லாத இந்துக்கள்.
புளியந்தோப்பில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சுமார் மூன்றாயிரம் பேர், அங்கிருந்து ஆங்கிலேய அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டு வியாசர்பாடி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
நீதிக்கட்சியின் விபரீத அறிக்கை
கலவரம் பாதித்த இடங்களை நீதிக் கட்சித் தலைவர்கள் பார்வையிட்டனர். சர். பிட்டி தியாகராய செட்டி, ஓ. தணிகாச்சலம் செட்டி, வி. சண்முக முதலியார் உள்ளிட்டோர் கலவரப்பகுதிகளைப் பார்வையிட்டனர்.
சர். பிட்டி தியாகராய செட்டி
நீதிக்கட்சி குழுவினர் அளித்த அறிக்கையில் கலவரத்துக்கு மற்ற எல்லா தரப்பையும் விட பட்டியல் சமூகவர்களே காரணம் என்று கூறப்பட்டது.
"சிலரின் தூண்டுதல் காரணமாக பட்டியல் சமூக பிரிவினர் பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு எதிராகவும், முகமதியர்களுக்கு எதிராகவும் திருப்பிவிடப்பட்டுள்ளனர். பட்டியல் சமூக வகுப்பினர் தமக்குத் தாமே போலியாக காயங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அரசாங்கத்திடம் உதவியும், வீடும் பெறவேண்டும் என்பதற்காக தமது வீடுகளை தாமே கொளுத்திக் கொண்டுள்ளனர்" என்று கூறியது நீதிக்கட்சி அறிக்கை.
மேலும் "பட்டியல் சமூக மக்களை அரசு முகாம்களில் வைத்து உணவு அளிப்பதை நிறுத்த வேண்டும். பட்டியல் சமூக மக்களை பின்னி மில்லுக்கு அருகில் வைக்கக் கூடாதுஅவர்களை சென்னை நகருக்கு வெளியே அனுப்ப வேண்டும். சென்னைக்கு வெளியே அவர்கள் ஒன்றாக இல்லாத வகையில் சிறு சிறு குழுக்களாக பிரித்து தொடர்வண்டிப் பாதை ஓரமாக அவர்களைக் குடியமர்த்த வேண்டும்."

"பின்னி மில் தொழிலாளர் போராட்டத்திற்கு தீர்வு காணவேண்டும். அப்படி தீர்வு கண்டாலும் பார்ப்பனரல்லாத இந்துக்களும் முகமதியர்களும் இனி பட்டியல் சமூகவர்களுடன் இணக்கமாக வாழ முடியாது. எனவே, குறிப்பிட்ட காலத்திற்கு இருபிரிவு மக்களையும் பிரித்தே வைக்க வேண்டும்" என்று கோரியது நீதிக்கட்சி.

பட்டியல் சமூக மக்களை சென்னையைவிட்டே அப்புறப்படுத்த வேண்டுமென எழுதப்பட்ட சர்.பி.டி. தியாகராயரின் அறிக்கையைத் திராவிடன் இதழ் வெளியிட்டது. இந்த அறிக்கை செய்தி செப்டம்பர் 8, 1921 தி இந்து இதழிலும் வெளியானது. நீதிக்கட்சியின் கோரிக்கையை அப்போதைய சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டமும் வழிமொழிந்தது.
சென்னை மாநகராட்சி கட்டடத்தின் முன்பு சர். பிட்டி தியாகராய செட்டியார் சிலை.
(சர். பிட்டி தியாகராய செட்டி அப்போது நீதிக்கட்சி தலைவராக இருந்தார். 1920 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்றபோது சர். பிட்டி தியாகராய செட்டியைத்தான் ஆட்சியமைக்க ஆளுநர் லார்டு  வெலிங்டன் அழைத்தார். எனினும், அவர் தனது நண்பர் கடலூர் ஏ. சுப்புராயலு ரெட்டியாரை முதலமைச்சர் ஆக்கினார். தற்போது சென்னை மாநகரின் முக்கியப் பகுதியான தி.நகர் என்பது சர். பிட்டி தியாகராய செட்டி பெயரில் அமைந்துள்ளது).
எம்.சி. ராஜாவின் எதிர்ப்பு
நீதிக்கட்சியில் ஒரு தலைவராக இருந்தவர் எம்.சி. ராஜா. ஆனாலும், நீதிக்கட்சியின் தாழ்த்தப்பட்டோர் எதிர்ப்புக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார் (கலவரத்தின் காரணமாக அவர் இராயப்பேட்டையில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு வீட்டைவிட்டு வெளியேறினார்).
"சென்னையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் உள்ளன. அவர்களை யெல்லாம் எலிகளைப் போன்று கூண்டுகளில் அடைத்து சென்னையை விட்டு வெளியேற்றிட வேண்டுமென்னும் அலோசனை அண்மையில் தெரிவிக்கப்பட்டது." என்று 12.10.1921 அன்று சென்னை சட்டப்பேரவையில் பேசிய எம்.சி.ராஜா தெரிவித்தார்.
"1921 ஆண்டு செப்டம்பரில் பார்ப்பனரல்லாத இந்துக்களின் கட்சித் தலைவரும், நம்பத்தகாதவரும் பிரபு பட்டம் பெற்றவருமான தண்டையார்பேட்டை சர். பி. தியாகராய செட்டியார் ஆலைத் தகராறில் பர்ப்பனரல்லாத இந்து தொழிலாளர்களின் சார்பாக எழுதிய கடிதத்தில் விவேகமற்ற முறையில் அரசுக்கு எழுதியுள்ளனர். ஆதிதிராவிடர் தொழிலாளர்களை சென்னையை விட்டே விரட்ட வேண்டும் என்று நீதிக்கட்சியினர் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்" என எம்.சி. ராஜா "ஒடுக்கப்பட்ட இந்துக்கள்" எனும் நூலில் இந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.
எம்.சி. ராஜா 1922-ல் தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து நீதிக்கட்சியிலிருந்து வெளியேறினார். 1923இல் கோவில்பட்டி மாநாட்டில் பேசிய எம்.சி. ராஜா, நீதிக்கட்சித் தலைவர்கள் "நண்பர்களைப் போல் நடித்து நமக்காக முதலைக் கண்ணீர் வடித்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்" என்று கண்டனம் தெரிவித்தார்.
''பார்ப்பனர்கள் மீது பார்ப்பனரல்லாதோர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அத்தனையையும் பார்ப்பனரல்லாதோர் மீது தாழ்த்தப்பட்டோரான நாங்கள் சுமத்துகிறோம்" என்று 'ஆதி திராவிடன்' இதழில் எழுதினார் எம்.சி.ராஜா. 12.04.1937 அன்று தி இந்து நாளிதழில் "எனது இனமக்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல் தனித்தே நிற்க வேண்டும் என்னும் உண்மையை நீதிக்கட்சியுடன் எனக்கேற்பட்ட அனுபவம் கற்றுத் தந்துள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
நீதிக்கட்சியில் பிள்ளைமார்கள், முதலியார்கள், ரெட்டியார்களின் ஆதிக்கம் நீடிக்கும் வரை அந்தக் கட்சியின் பார்ப்பனரல்லாதார் முழக்கம் தாழ்த்தப்பட்டோருக்கு பலன் அளிக்காது என்று 'ஆதி திராவிடன்' இதழில் எழுதினார் எம்.சி. ராஜா.
காந்தியின் கண்டனம்.
பின்னி மில் போராட்டம் குறித்து செப்டம்பர் 16, 1921 அன்று சென்னை கடற்கரையில் மகாத்மா காந்தி உரையாற்றினார். (பின்னி ஆலை வேலைநிறுத்தம்- காந்தியின் உரை) அதில்:
"உங்களிடையே பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை அறியும்பொது எனக்கு வருத்தமாக இருக்கிறது. மேலும், இந்த இரு பிரிவுகளும் இரு வேறு பார்வைகள் கொண்டவையாக இல்லாமல் இரு வேறு சாதிகளாகப் பிரிந்து நிற்கின்றன என்பது எனக்கு மேலும் துயரளிப்பதாக இருக்கிறது. நமது பஞ்சம நண்பர்களாகிய ஆதி திராவிடர்கள் ஒரு தரப்பிலும், ஏனைய அனைவருமாகிய நீங்கள் எதிர் தரப்பிலும் நிற்கிறீர்கள் என்பதை அறிகிறேன். பெரும்பான்மையினராகிய நீங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அதே வேளையில் நம் பஞ்சம சகோதர்கள் பணியில் இணைந்துள்ளனர் என்பதையும் அறிகிறேன். 
மேலும், பணியில் இணைந்துள்ள நம் சகோதரர்களை உங்களில் சிலர் நிர்பந்தம் செய்திருக்கிறீர்கள் என்பதையும் அறிகிறேன். இந்த இரு தரப்பினரிடையேயும் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன என்பதையும் அறிகிறேன். சிறுபான்மையினருக்கு எதிராக சிறிதளவும் அழுத்தம் தரக்கூடாது என்று பெரும்பான்மையினரை எச்சரிக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன்."
"தங்கள் சகோதரர்களில் ஒரே ஒருவருக்கு எதிராகவும் தாமே வன்முறையைப் பயன்படுத்துவதைவிட தொழிலாளர்களின் முனைப்பில் தொய்வு ஏற்படுத்தும் நடவடிக்கை வேறு எதுவும் கிடையாது. ஒரு சிலர் தவறான முடிவெடுக்கிறார்கள் என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும், நம்மில் தாழ்ந்தவனுக்கும், குறைவான எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கும்கூட  சுதந்திரமாக முடிவெடுத்து செயல்படுத்தும் உரிமை அளிக்கப்பட வேண்டும்."
"இந்த 3000 சகோதரர்களுக்கும் நீங்கள் எந்த இடையூறும் செய்யக் கூடாது, அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களிடம் நீங்கள் அன்பு காட்ட வேண்டும் என்றும்கூட நான் வலியுறுத்துகிறேன். எப்படியானாலும் அவர்ளை கடுஞ்சொற்களால் வையக் கூடாது. அவர்களிடம் சென்று பணியில் சேரக்கூடாது என்று வற்புறுத்தவும் வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்."
"நம்புங்கள். நீங்கள் அவர்களை நிர்பந்திக்கவில்லை என்பதை அவர்கள் உணரும்போது, தங்களுக்கு எதிராக உங்கள் மனதில் கொஞ்சமும் காழ்ப்பு இல்லை என்பதை அவர்கள் உணரும்போது, அவர்கள் தாங்களாகவே தம் சுய விருப்பத்தில் உங்களுடன் இணைவார்கள். அவர்கள் தாழ்ந்த சாதியினர் என்றும் நீங்கள் உயர் சாதியினர் என்ற எண்ணமும் உங்களுக்கு இருக்கக்கூடாது."
- என்று தாழ்த்தப்பட்டோர் அல்லாத மற்றவர்களுக்கு ஆலோசனை சொன்ன மகாத்மா காந்தி, பின்னி மில் போராட்டத்தை ஆதரித்தார்.
"உங்கள் பாதை தெளிவானதாகவும் சீராகவும் உள்ளது என்பது என் கருத்து. உங்களை இந்த நிறுவனம் மீண்டும் பணியில் அமர்த்திக் கொள்வதானால் உங்கள் அனைவரையும் திரும்பச் சேர்த்துக் கொண்டாலன்றி நீங்கள் யாரும் பணிக்குத் திரும்புவதில்லை என்று வலியுறுத்த உங்களுக்கு உரிமையும் அதிகாரமும் உண்டு." என்று கூறினார்.
எனினும், போராட்டக்காரர்கள் சரணடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 21, 1921 அன்று போராட்டம் முடிவுக்கு வந்தது.
பின்னி மில் போராட்டமும் தமிழ்நாட்டின் அந்தகால அரசியலும்
பின்னி மில் போராட்டம் பல பரிமாணங்களைக் கொண்டது.
  • தொழிலாளர் இயக்கத்தின் முதல் போராட்டமாக இது இருந்தாலும் இதனை இடதுசாரிகள் முன்னிருத்தவில்லை. காங்கிரசுக்காரரான திரு.வி.கல்யாணசுந்தர முதலியார்தான் இதனை வழிநடத்தினார்.
1918 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் தொடங்கிய செல்வகணபதி செட்டியார் நினைவு பூங்காவில் உள்ள நினைவு மணிக்கூண்டு. பட்டாளம் ஸ்ட்ராகன்ஸ் சாலையில் 1948 இல் அமைக்கப்பட்டது. 
  • தொழிலாளர் போராட்டம் என்றாலும் இது சாதிப் போராட்டமாகத்தான் நடந்தது. பார்ப்பனரல்லாத இந்துக்காளும் இஸ்லாமியர்களும் ஒரு பக்கம் இருக்க, தாழ்த்தப்பட்டவர்களும் கிறித்தவர்களும் மறுபக்கம் நின்றனர்.
  • ஓரளவுக்கு மட்டுமே அதிகாரம் படைத்த சென்னை மாகாண ஆட்சி நீதிக் கட்சியிடம் இருந்தது, நீதிக் கட்சி போராட்டத்தை ஆதரித்தது. ஆனால், உண்மையான ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள் போராட்டத்தை எதிர்த்தனர்.
  • அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்தை சார்ந்த் பி.ப்பி.வாடியா என்பவர்தான் பின்னி மில் தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தார். 1920 ஆம் ஆண்டில் அவர் ஏற்படுத்திய குழப்பங்கள்தான் போராட்டத்திற்கு வித்திட்டன. வாடியா விலகிச் சென்றதால்தான் துணைத் தலைவர்களாக இருந்த திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரும், எம்.ஏ. ஜலீல் கானும் 1921 ஆம் ஆண்டு போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்தினர் போராட்டக்காரர்களுக்கு எதிரான நிலையை எடுத்தனர்.
  • பார்ப்பனரல்லாத இந்துக்களும் இஸ்லாமியர்களும் இப்போராட்டத்தை ஆதரித்த நிலையில், பார்ப்பன சட்டசபை உறுப்பினர்கள் போராட்டத்தை எதிர்த்து அரசுக்கு ஆதரவான நிலை எடுத்தனர்.
  • எம்.சி. ராஜா அவர்கள் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும். காந்தியின் ஒத்துழையாமை கருத்துக்கு பலியாகக் கூடாது என தீவிரமாக பிரச்சாரம் செய்தார். தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக இந்துமதச் சாமியாரான சுவாமி தேசிகானந்தர் என்பவரும் பாடுபட்டார்.
  • தொழிலாளர் போராட்டம் என்றாலும், அதன் அடிப்படை காந்தியின் ஒத்துழையாமை கருத்தாக இருந்தது. போராட்டத்தை காந்தி ஆதரித்தாலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வேலைக்கு திரும்புவதை தடுக்கக் கூடாது என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மனம் திரும்பி போராட்டத்தை ஆதரிப்பார்கள் என்றும் கருதினார்.
  • நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டுள்ள கட்சி என்பதை வெளிப்படையாக அறிவிக்க நேர்ந்தது. எம்.சி. ராஜாவின் தலைமையில் தாழ்த்தப்பட்டவர்கள் நீதிக்கட்சியிலிருந்து வெளியேறவும் இந்தப் போராட்டம் முக்கிய தூண்டுகோலாக இருந்தது.
- இப்படியாக, தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இடம் பெற்றுள்ள ஒரு வரலாற்று சம்பவத்தையும் அதில் நீதிக் கட்சியின் பங்களிப்பையும் திராவிட இயக்கத்தினர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது ஏன் என்று தெரியவில்லை!

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வரலாற்றில் மிக முக்கியமாக இருப்பது நீதிக்கட்சிதான். அதன் தலைவர்களில் முதன்மையான சர். பிட்டி. தியாகராயரை திராவிட இயக்கத் தலைவர்கள் இப்போதும் போற்றி புகழ்கின்றனர்.

ஆனாலும் 'தாழ்த்தப்பட்ட மக்களை சென்னைக்கு வெளியே துரத்த வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியதை மட்டும் திராவிட இயக்கத்தினர் வெளியில் தெரியாமல் மறைப்பது ஏன்?

ஆதாரம்:

1. Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850 - 1956 (SAGE Series in Modern Indian History) by Raj Sekhar Basu, Sage Publications Pvt. Ltd, 2011

2. Politics and social conflict in South India: the Non- Brahman Movement and Tamil separatism 1916-1929, by Eugene F. Irschick, Berkeley, University of California Press, 1969

3. பெருந்தலைவர் எம்.சி. ராஜா சிந்தனைகள், முதல் தொகுதி, எழுத்து வெளியீடு, மதுரை, 2009

4. Pulianthoppu and Perambur - Madras Labour Riots, 1921 by R. Siva, Golden Research Thoughts 2013 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா