கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தின் தாக்கம் வலுவானது. உலக வரலாறே கிறிஸ்துவுக்கு முன்- பின் என்றுதான் பகுக்கப்பட்டு விவரிக்கப்படுகிறது.
தேவமைந்தன் ஏசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமல்லாம், ஏசு போதித்தது போல அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் மதப் பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தத்தால் திகிலடைவர். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு இடையிலான ஆதிக்கப் போட்டியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல கோடி. கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவர்களும், அதை விமர்சித்த அறிவாளிகளும், கிறிஸ்தவத்தைத் தழுவ மறுத்த பழங்குடியினரும் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் பல. அதை பிற்காலத்தில் வாடிகன் தலைமையே பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரியிருக்கிறது.
இந்தப் பின்னணியில் கிறிஸ்தவத்தை பைபிள் ஆதாரங்களுடன் கடுமையாக விமர்சனத்துக்குள்ளாக்கும் நூல்கள் பல ஏற்கெனவே மேற்கத்திய நாடுகளில் எழுதப்பட்டுள்ளன. ஆயினும், தமிழில் விரிவான நூல் இந்தத் துறையில் வரவில்லை. எந்த ஒரு மதமும் அதன் மீதான விமர்சனத்தால்தான் மெருகேறுகிறது. அந்த வாய்ப்பு கிறிஸ்தவத்துக்கு தமிழ் மொழியில் இதுவரை அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கியிருக்கிறது, உமரி காசிவேலு எழுதியுள்ள இந்த நூல்.
நூலாசிரியரின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது. பரிசுத்த தாகமத்திலிருந்தே மேற்கோள்கள் காட்டுவதில் தொடங்கி, பலநூறு நூல்களிலிருந்து கருத்துகளை உள்வாங்கி இந்த நூலை எழுதியிருக்கிறார்.
கிறிஸ்தவத்தின் உலகத் தோற்றக் கோட்பாடு, செமிட்டிக் மதங்களின் தாயகமான பாலஸ்தீனத்தின் வரலாறு, உலக நாடுகளில் கிறிஸ்தவம் பரவிய விதம், இந்தியாவில் கிறிஸ்தவத்தின் செல்வாக்கு, பிரிவினைவாதத்தை வளர்க்கும் மத குருமார்கள், பைபிள்களின் உருவாக்கம் எனப் பல அம்சங்களில் கிறிஸ்தவத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார் ஆசிரியர். இந்நூல் ஆய்வு நூல் அல்லவெனினும், அதற்கான முழுத் தகுதிகளும் கொண்டதாக உள்ளது.

***

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்… உளகளாவிய தாக்கமும்:

உமரி காசிவேலு
520 பக்கங்கள், விலை: ரூ. 350.
வர்ஷன் பிரசுரம்,
33, ரங்கன் தெரு, தி.நகர், சென்னை- 600017.  
தொலைபேசி: 044- 2436 1141.