Tuesday, May 24, 2016

2G Spectrum - Sadiq Batcha Green House Promoters MD Was killed

http://www.vikatan.com/news/coverstory/64321-man-claims-he-two-others-murdered-2g-sadiq-batcha.art

2ஜி சாதிக் பாட்சா கொலையா..?! பிரபாகரன் சொல்வது உண்மையா? - திடுக் திருப்பம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்,  தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா கைதாகி திகார் சிறையில் இருந்த நேரம் அது! 16.03. 2011.... அன்று அலைக்கற்றை போலவே கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் உயிர்! 

கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் அதிபராக இருந்த சாதிக் பாட்சா, 2ஜி ஊழல் வழக்கு விவகாரங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நபர். சி.பி.ஐ., அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு​வந்தது. 'எனக்குத் தெரிந்த விவரங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். என் மீது எந்தத் தவறும் இல்லை!’ என மீடியாக்களிடம் முழங்கினார் சாதிக். ஆனாலும், 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முக்கியமான தடயங்கள் சி.பி.ஐ-யின் கையில் சிக்கி இருப்பதால், சாதிக் அப்ரூவராக மாறுவார்’ என்ற பரபரப்பு அப்போது கிளம்பியது. இந்நிலையில் சாதிக், மார்ச் 16 ம் தேதி டெல்லி செல்ல ஃபிளைட் டிக்கெட் எடுத்து வைத்திருந்தார். அதன்படி, டெல்லிக்குக் கிளம்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார் சாதிக். இவரின் மர்ம மரணம் பற்றி விசாரித்த சி.பி.ஐ., தற்கொலை என்று கூறி ஃபைலை முடித்துவிட்டது. 

இருந்தாலும், சாதிக்கின் மர்மம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடை கிடைக்காமலேயே இருந்தது. இதைப்பற்றியெல்லாம் ஜூனியர் விகடனில் பல கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்தன. இந்த நிலையில்,  திருச்சியில் நேற்று (17.5.2016) பத்திரிகையாளர்களை சந்தித்த பிரபாகரன் என்கிற நபர்,  திடீரென்று புது குண்டை போட்டிருக்கிறார். அதாவது, 'சாதிக் பாட்ஷாவை நாங்கள் கொலை செய்தோம்' என்று அதிரடியாக சொல்லியிருக்கிறார். 

இதையடுத்து, இன்று ம.தி.மு.கழக தலைவர் வைகோ, பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "சாதிக்பாட்சா கொலை பின்னணியை விசாரிக்கவேண்டும். 2 ஜி ஊழலில் தி.மு.கழக பிரமுகர்களை காப்பாற்றவே அவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால், தற்கொலை என்று மாற்றிவிட்டனர்" என்று குறிப்பிட்டார். 

பிரபாகரனின்  திகில் பேட்டி

பிரபாகரன் தனது பேட்டியின் போது, "நான், தமிழர் நீதிகட்சியின் தலைவர் சுப.இளவரசனுக்கு உதவியாளராக இருந்தேன். அந்த நெருக்கத்தின் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு நெருக்கமானேன். அப்படிதான் எனக்கு சாதிக் அறிமுகமாக, அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுத்து வந்தேன். 2 ஜி வழக்கு சர்ச்சையாக, சிபிஐ-யில் சாதிக் உண்மையை  சொல்லிவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நான், ஆ.ராசாவின் அக்காள் மகன் பரமேஸ்குமார் ஆகியோர் சென்னை தி.நகரில் இருக்கும் சாதிக் வீட்டுக்கு சென்றோம். அப்போது அங்கு ஜாபர் சேட் எனும் நபர் இருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தைகள் வலுக்க, ஜாபர்சேட் கழுத்தை நெரிக்க, நான் கால்களை பிடிக்க, ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார் வயிற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள, சாதிக்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தோம். அதுவரை ஜாபர் சேட் போலீஸ் அதிகாரி என்பது தெரியாது. அதன்பிறகு அவரைப் பற்றி தெரியவந்தது. சிறிது நாட்களுக்கு எனக்கு கொஞ்சம் கொஞ்சம் பணம் கொடுத்தார்கள்.
அதன்பிறகு எனக்கு கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தனர். இதையெல்லாம் பலமுறை உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்த கண்ணப்பன், சிபிஐ அதிகாரிகளிடம் சொன்னேன் அதை காதில் வாங்காமல் என்னை விரட்டி விட்டார்கள். இதையெல்லாம் தெரிந்துகொண்ட பரமேஸ்குமார், எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்" என்றார் பிரபாகரன். 

பிரபாகரனை தூண்டியவர்களின் பின்னணி..

பிரபாகரன் பற்றி திருச்சி தி.மு.கழக அனுதாபிகளான போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, "கடந்த ஒரு வருடகாலமாகவே இந்த பிரபாகரன் இதே விவகாரத்தை ஊரு முழுவதும் பேசி வருகிறார். மனநிலை சரியில்லாதவர் என்றே நாங்கள் நினைக்கிறோம். சாதிக் பாட்சா மர்ம மரணம் நடந்த சமயத்தில் உளவுத்துறை தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். 2006 ம் ஆண்டு தேர்தலில் தி.மு.கழகம் ஜெயித்ததும் உளவுத்துறை தலைவராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார். தி.மு.கழக ஆட்சியில் பெரும் செல்வாக்கோடு இருந்தவர். அதனால், ஜெயலலிதாவுக்கு கடுங்கோபம். 2011-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.கழகம் ஜெயித்தது.
ஆட்சியில் அமர்ந்ததும், ஜாபர் சேட்டை ராமநாதபுரம் மண்டபத்தில் ஒரு டம்மியான போஸ்ட்டிங்கில் உட்கார வைத்தனர். அத்துடன், சஸ்பெண்ட் செய்து அங்கேயே தங்கியிருக்கவேண்டுமென்று கன்டிஷன் போட்டனர். ஜாபர் சேட்டை ஜெயிலில் போட எவ்வளவோ முயற்சிகள் நடந்தன. ஆனால், அதையெல்லாம் தடுத்துப் போராடினார் ஜாபர் சேட். சமீபத்தில் சஸ்பெண்ட் ஆர்டரை மத்திய தீர்ப்பாணையம் கேன்சல் செய்து, மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளச் சொன்னது. ஆனால், அ.தி.மு.கழக அரசு அதை ஏற்கவில்லை. கடந்த 16-ம் தேதியன்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் ரிசல்ட்.  நாளை (19.5.16) வரவிருக்கிறது. ஒருவேளை தி.மு.கழகம் ஜெயித்தால், ஜாபர் சேட்டுக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பதவி தரப்படலாம் என்கிற பேச்சு கிளம்பியுள்ளது. அவரை வரவிடக்கூடாது என்று நினைக்கும் ஜாபர் சேட்டின் எதிரிகள்தான் இந்த பிரபாகரனை தூண்டிவிட்டு, பத்திரிகையாளர்களை சந்திக்க வைத்திருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் பல உண்மைகள் வெளிவரும்" என்கிறார்கள்.

சாதிக் பாட்சா உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் என்ன கூறுகிறார்?

2011-ம் வருடம் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவராக இருந்தவர் டாக்டர்  டி கால். சுமார் 3000 உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்த அனுபவசாலி. அவர்தான் சாதிக்பாட்சாவின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்தவர். அவருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் பெரிய மோதலே நடந்தது. ஒரு கட்டத்தில், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது சவீதா மருத்துவக்கல்லூரியின் தடய அறிவியல் துறையின் தலைவராக இருக்கிறார். 

அவரை நாம் தொடர்புகொண்டு, சாதிக் பாட்சாவின் போஸ்ட் மார்ட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து கேட்டோம்...

"சாதிக் பாட்சாவின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்து, 'கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவர் உயிர் போயிருக்கிறது' என்று எழுதினேன். ஆனால், அவர் தூக்கில் தொங்கியதால்தான் இறந்தார் என்று சொல்லுவேன் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நான் அதை ஏற்கவில்லை. மூன்று சந்தேகங்களை நான் கிளப்பினேன். வேறு யாராவது கயிறால் இறுக்கியதால் அவர் இறந்திருக்கலாம். அடுத்த சந்தேகம்.. வேறு யாராவது கைகளால் கழுத்தை இறுக்கியதால் அவர் இறந்திருக்கலாம். மூன்றாவது சந்தேகம்... தூக்கில் தொங்கியதால் இறந்திருக்கலாம். 

இந்த சந்தேகங்களை எழுப்பியதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டாக்டர் டோக்ரா என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து வந்து போஸ்ட்மார்ட்டம் வீடியோ மற்றும் ஆவணங்களை பரிசீலிக்க சொன்னார்கள். அவரின் செயல்பாடுகள் எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. அவருக்கும் எனக்கும் போஸ்ட் மார்ட்டம் விஷயத்தில் கருத்து வேறுபாடு எழுந்தது. அதனால், அவர் தனது முடிவை டெல்லிக்கு போய் அறிவிப்பதாக சொல்லிவிட்டுப் போய்விட்டார். அங்கே சில டாக்டர்கள் கொண்ட டீமின் ஆலோசனைக்குப் பிறகு தூக்கில் தொங்கியதால்தான் சாதிக்பாட்சா இறந்தார் என்று சர்டிபிகேட் கொடுத்தார்கள். அதையே சி.பி.ஐ-யும் ஏற்றுக்கொண்டது. ஆனால், எனது நிலைப்பாட்டில் நான் அப்படியே இருக்கிறேன். சாதிக்பாட்சாவின் மரணம் எதனால் ஏற்பட்டது என்கிற உண்மையை கண்டுபிடிக்கவேண்டியது சி.பி.ஐ.தான்" என்று சொல்கிறார்.
 யார் இந்த பிரபாகரன்?

பிரபாகரனின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம், அய்யூர் கிராமம். அவரின் தந்தை பெயர் கருப்பசாமி. பிரபாகரனுடன் பிறந்த இரண்டு சகோதரிகளுக்கு திருமணமாகி, கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள். கருப்பசாமி, தமிழர் விடுதலை படையை நடத்தி வந்த சுப. இளவரசனுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவரின் கொள்கைகளில் ஆர்வம் கொண்ட கருப்பசாமி,  தனது மகன் பிரபாகரனையும் அந்த இயக்கத்தில் இணைத்துள்ளார்.
அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இயக்கத்தை வளர்க்க பம்பரமாக இவர் பணியாற்றியதை பார்த்த சுப. இளவரசன், பிரபாகரனை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார். அதே காலகட்டத்தில் பா.ம.கவின் முக்கிய தலைவராக குரு என்பவர் அதே பகுதியில் உருவாகி வந்ததால், குருவுக்கு 'செக்' வைக்க நினைத்த தி.மு.க மேலிடம், சுப. இளவரசனை வளர்த்துவிட்டது. அந்த தொடர்பில் ஆ.ராசா, ஆற்காடு வீராசாமி என தி.மு.க வின் முக்கிய புள்ளிகளோடு சுப.இளவரசனுக்கு நெருக்கம் அதிகமாகியது. அந்த நெருக்கத்தை பிரபாகரனும் பயன்படுத்திக் கொண்டார். யாரையும் எளிதாக பேசி வளைத்துவிடும் ஆற்றல் பிரபாகரனிடம் இருந்தால், இளவரசன் தி.மு.க புள்ளிகளை சந்திக்க செல்லும்போது, பிரபாகரனையும் அருகில் வைத்துக் கொள்வாராம். அந்த அறிமுகத்தை அழகாக பயன்படுத்திய பிரபாகரன், தி.மு.க புள்ளிகளோடு தனி டிராக்கில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அதுதான் ஆ.ராசாவுடன் இவருக்கு ஏற்பட்ட தனிபட்ட நெருக்கத்திற்கு காரணம் என்கின்றனர்.

 2010- ம் ஆண்டு, சென்னையில் இருந்த பிரபாகரன் தனது சொந்த கிராமமான அய்யூருக்கு திரும்பி வருகிறார். தனது தந்தையிடம்,  'ஒன்றரை லட்சம் பணம் வேண்டும்' என்று கேட்க,  தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னதும், “எனக்கு உள்ள பங்கான வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கிக் கொடுங்கள்” என்று அப்பாவிடம் சொல்லியுள்ளார். ஆனால் எதற்காக அந்த பணம் என்று தனது தந்தையிடம் கூற மறுத்துவிட்டார். அந்த பணத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் சென்னைக்கு சென்றவர், 2011 ம் ஆண்டு, மீண்டும் தனது கிராமத்திற்கு திரும்பி வந்தபொழுது, தனது தந்தை வேறு பெண்னை திருமணம் செய்து கொண்டு, விளந்தை என்ற கிராமத்தில் வசிப்பதாக  அவர் உறவினர்கள் சொல்லியதைக் கேட்டு கடுப்பான பிரபாகரன், அங்கிருந்து கிளம்பி திட்டக்குடியில் இருந்த தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அக்காள் கணவர் வாழை இலை மொத்த வியாபாரம் செய்து வந்ததால், அவரிடம் இலை வாங்கி ஆண்டிமடத்தில் இரண்டு ஆண்டுகள் இலை வியாபாரம் செய்து வந்துள்ளார். அதன் பின்னர்,  2013 ம் ஆண்டு, மீண்டும் சென்னை சென்றவர், அதன்பின் சொந்த ஊர் பக்கம் தலைகாட்டாமலே இருந்துள்ளார். 

இந்நிலையில்தான் நேற்று திடீரென பிரபாகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு நெருக்கமானவர்கள் “ திடீர் என மாயமாவதும், மீண்டும் திரும்பி வருவதும் பிரபாகரனுக்கு வாடிக்கைதான். ஆனால் ஊரில் தனக்கு தி.மு.கவில் உள்ள அனைவரும் நெருக்கம் என்று கெத்தாக சொல்லி திரிவான். குடித்து அடிக்கடி போதையில் உளறுவதும் அவனுக்கு வாடிக்கை.” என்கின்றனர். பிரபாகரனை விசாரணை வளையத்தில் கொண்டுவந்தால் மட்டுமே இதற்கான பதில் கிடைக்கும்.


- ஆர்.பி, ஆனந்தகுமார், திலீபன்
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

No comments:

Post a Comment

ரஜினி வேட்டையன் வெறுப்பு தூண்டும் படம்-

  மெக்காலேயை மகிமைப்படுத்துவது முதல் நீட் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் மற்றும் UPI பற்றிய அவநம்பிக்கையை விதைப்பது வரை: ‘லை பீம்’ இயக்குனரால் உர...