Wednesday, May 6, 2015

அம்பேத்கர்-பறையர்களை ஒதுக்கும் பரிசுத்த கிறுத்துவம் - ம வெங்கடேசன்

பறையர்களை ஒதுக்கும் பரிசுத்த கிறுத்துவம்

குறைகளைக் களையாத மதமாற்றம்
ஒரு மோசமான ஐரோப்பியன் அடாத செயல்களில் ஈடுபட்டான் என்றால் கடவுள் பற்றும் சமயப் பற்றுமுள்ள ஐரோப்பியனோ மாட்டிறைச்சி உண்டும் மது அருந்தியும் பிராமணிய, முகமதியக் கோட்பாடுகளைப் புண்படுத்தி ஸ்தல உணர்வுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினான். இவ்வாறு கிறிஸ்தவ மதம் பரங்கியர்மதம் என்ற அவப்பெயர் பெற்றது. ஐரோப்பியர்களும் அவமரியாதையாக பரங்கியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இத்தகைய பரிசுத்தமின்மையிலிருந்தும் குறைபாடுகளிலிருந்தும் கிறித்தவ சமயப்பரப்பு அமைப்புகள் காப்பாற்றப்பட வேண்டும்; இது நியாயமானதும் மிக அவசியமானதும் பாராட்டிற்குரியதுமாகும்.
easterlywhitemansburdenஆனால் மதமாற்றம் செய்யும் உற்சாகத்தில் இந்த அளவுக்கு ரோமன் கத்தோலிக்க பிரசாரகர்கள் சென்றதும், ஒருவர் ஞானஸ்தானம் பெற ஒப்புக் கொண்டு ஏசுநாதரை ரட்சகர் என்று ஏற்றுத் தன்னைக் கிறித்தவன் என்று அழைத்துக் கொள்ள தயாரென்றால், மதம்மாறிய அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்கிறார், எப்படி வாழ்கிறார் என்பதைப் பற்றி கவலைப்படாமலிருந்ததும் மிகவும் வெட்கக்கேடானதாகும்.
மதுரை சமயப்பரப்புக் குழுவுக்குப்பின் வந்த லுத்ரன் சமயப்பரப்புக் குழுவினர் இந்த முக்கிய பிரச்சினைபற்றி என்ன கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர்?
சாதியை எதிர்க்காத சமயவெறியர்கள்
இந்தியாவில் மிகச்சிறந்த மதபோதகராக விளங்கியவரும் தம்முள் சச்சரவிட்டுக் கொண்டிருந்த அரசர்களிடையே தமது சீலத்தின் காரணமாக சமாதானம் செய்து வைத்தவராகவும் திகழ்ந்த சுவார்ட்ஸ் மதுரைக் குழுவின் கருத்தை ஆதரித்தவரல்ல. ஆனால் சாதியும் கிறித்தவ சமயமும் ஒன்றுக் கொன்று ஒத்துப்போக முடியாதவை என்பதை அவர் நம்பினாரா?
ஒரு உண்மையான கிறித்தவன் சாதியில் நம்பிக்கை வைக்க முடியாது, அதைத் தனது வாழ்க்கைத் திட்டமாகக் கைக்கொள்ள முடியாது என்பதை அறிந்திருந்தாரா?
இந்தப் பிரச்சினை பற்றி அவரது கருத்து எதுவாக இருந்தாலும், அதற்கு ஆதரவாக ஒரு பிரசாரத்தை அவர் நிச்சயம் செய்யவில்லை.
ப்ரோட்டஸ்டண்ட் பிரிவோடு சண்டை போடும் கத்தோலிக்கப் பிரிவு
புராட்டெஸ்டண்ட் சமயப்பிரச்சார அமைப்புகளின் நிலை என்ன? இந்தக் கேள்வி பற்றி அவர்கள் கண்ணோட்டம் யாது? அவர்கள் விரும்பினால் இதற்கு ஒரு சமாதானம் கூறலாம். அதாவது தாங்கள் இங்கு வந்தது பின்னால்தான் என்பதே சமாதானம். வரலாற்றின்படி பார்த்தால், களத்தில் இறங்கியதிலிருந்து 1813 வரை அவர்கள் தடுக்கப்பட்டிருந்தார்கள் என்ற அவர்களின் கூற்றில் உண்மை உண்டு. இந்தியாவில் தங்களின் பிரதேசங்களில் சமயப் பரப்பு அமைப்புகளின் பணிபற்றி கிழக்கிந்திய கம்பெனி எடுத்த நிலைதான் இதற்கு முற்றிலும் காரணமாகும்.
இந்தியாவிற்கு வந்த ஐரோப்பிய அரசுகள் முதலில் இந்தியர்களைக் கிறித்தவ மத நம்பிக்கைக்கு மாற்ற வேண்டுமென்ற தீவிரமான கண்ணோட்டம் கொண்டிருந்தன.
போர்ச்சுக்கீசியர்களைப் பற்றிக் கூற வேண்டுமாயின், கிறித்தவ சமயத்தைத் தீவிரமாக பரப்ப வேண்டும் என்பதிலும் மூடப்பழக்க வழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்தனர். கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும் சதி என்னும் கொடிய வழக்கத்தை 1510 ல் போர்ச்சுகீஸிய இந்தியாவில் அல்புகர்க் ஒழித்துக் கட்டினார். வில்லியம் பென்டிக் இந்நடவடிக்கை எடுப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே அல்புகர்க் இதனைச் செய்தார். கட்டாய மதமாற்றத்திற்குப் போர்ச்சுகல் அரசர் மூன்றாவது ஜானின் உதவியைப் பிரான்ஸிஸ் சேவியர் நாடினார். அவ்வாறே இந்த உதவி அளிக்கப்பட்டது.
புராட்டஸ்டெண்ட் போக்குடைய டச்சு அரசும் கிழக்கிந்திய தீவுகளில் சமயமாற்றப் பணியில் இத்தகைய உற்சாகத்தை வெளிப்படுத்தியது. இத்திசைவழியில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கோவில் கட்டத் தடை விதித்தனர்
டச்சுக்காரர்கள் 1643 ல் இலங்கையைக் கைப்பற்றியதிலிருந்து கிறித்தவ மதப்பிரச்சாரத்திற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோட்பாடு அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. கோவில்கள், பிர மதயாத்திரை ஸ்தலங்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. சர்க்கார், உத்தியோகங்கள் கிறித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டன. மதப்பள்ளிகளுக்கு வராமல் இருப்பது அரசாங்கக் குற்றமாக கருதப்பட்டது.
1685 ஆம் ஆண்டுக்குள் 3,20,000 சிங்களவர் இந்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து கிறிஸ்தவர்களாயினர். கம்பெனியின் கப்பலின் கேப்டன் 1614 ல் ஒரு இந்திய இளைஞனை லண்டனுக்கு அழைத்து வந்தார். அவர் மூலமாக அவரது நாட்டில் பலரை மதமாற்றம் செய்வதற்கு அவரை ஒரு கருவியாக உபயோகிக்க கம்பெனி அவரைப் படிக்க வைத்தது. பாப்லாரில் அவருக்கு ஞானஸ்நானம் செய்து வைக்கப்பட்டது.
லண்டனின் மேயரும் கம்பெனி இயக்குநர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதலாம் ஜேம்ஸ் மன்னர் அவருக்குப் பீட்டர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்; அவருக்கு ஞானஸ்நானம் செய்துவைத்த பாதிரியார் அவரை இந்தியாவில் கனிந்த `முதல் கனி’ என்று அங்கு கூடியிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஆங்கிலேயக் கம்பனியும் ஆண்டவரின் கம்பனியும்
1617ல் சூரத்தில் ஒரு முகமதியரின் மதமாற்றம் நிகழ்ந்தது. இவ்வாறாக இரு இடங்களிலும் சமயமாற்றங்களோடு கம்பெனியின் பணி துவங்கியது. `ஏசுநாதரின் போதனைகளைப் பரப்ப முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று கம்பெனி முடிவுசெய்துள்ளதால், ஒரு மதகுரு வேண்டுமென்று கேம்ப்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களுக்கு இயக்குநர்கள் மனு செய்தனர். கம்பெனியின் சுதேசிகளுக்கு நன்கு பயிற்சியளிக்க உதவுவதற்காக மதக்குருமார்களும், ஏஜெண்டுகளும் அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்றுக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும்; அவர்கள் புரொடெஸ்டெண்ட் மதத்தினராகவும் கம்பெனியின் சிப்பந்தியாகவோ, அல்லது ஏஜெண்டாகவோ இருக்க வேண்டும் என்ற விதியையும் தனது உரிமைப்பத்திரத்தில் சேர்த்துக் கொள்ள கம்பெனி சம்மதித்தது.
church_state_terrorismதிடீரென்று, 1698 க்குப்பின் கம்பெனியின் கண்ணோட்டத்தில் படிப்படியாக ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. மதமாற்றப் பணியில் போர்ச்சுக்கல் டச்சு அரசுகள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த போது கிழக்கிந்தியக் கம்பெனி வேகத்தைக் குறைத்துக் கொண்டது. அதே வருடத்தில் இந்த பிரச்சினை பற்றி இரு மாதிரியான சிந்தனைகள் கம்பெனிக்கு இருந்தன எனத் தெரிகிறது. தனது மதக்குருக்களைப் பயனளிக்கும் பிரசாரக் கருவிகளாக ஆக்குவதற்கு அவர்களும் இந்தியமொழிகளில் பயிற்சியளிக்க வேண்டியது தனது கடமையென்று ஒப்புக் கொண்ட அதேசமயம், கம்பெனிக்காக பின்வருமாறு பிரார்த்தனை செய்வதற்கும் கம்பெனி அனுமதி அளித்தது; அந்த பிரார்த்தனையின் வாசகம் வருமாறு:
“நாம் வாழ்ந்துவரும் இந்தியநாட்டினர் மத்தியில் நமது ரட்சகரின் போதனையை அணிகலனாகக் கொண்டு நாம் ஆற்றிவரும் நல்ல பணிகளைக் கருத்தில்கொண்டு, அவர்கள் நம்பக்கம் ஈர்க்கப்படுவார்களாக’’ இந்தப் பிரார்த்தனை 1750 வரை செய்யப்பட்டு வந்தது.
இந்தப் பிரார்த்தனையின் வாசகங்களைக் கூர்மையாகப் பரிசீலித்துப் பார்க்கும்போது தீவிரமாக மதமாற்றம் செய்ய வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்த கருத்தை முற்றிலுமாக கைவிடுவதை ஒப்புக் கொண்டதாக இல்லையா? கம்பெனியின் இந்த கண்ணோட்டம் வாதப்பிரதிவாதத்திற்கு உட்பட்டது. மதமாற்றம் வேண்டும் என்று கூறும் நண்பர்கள், கம்பெனி இந்தக் கண்ணோட்டத்தைக் கைவிடுமாறு நிர்ப்பந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆக்கிரமிப்பை உறுதிசெய்யவே மதமாற்றம்
1773 வது ஆண்டின் ஒழுங்குபடுத்தும் சட்டமும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய சட்டமும் `வியாபாரி என்ற பெயரில் அரசு மாறுவேடம் பூண்டு செயல்படுவதை’ முடிவுக்கு கொண்டு வந்தன; இந்தியப் பிரதேசங்களில் சர்க்காரை நடத்தி செல்வதற்கு பார்லிமெண்டின் உரிமை பெற்ற ஏஜெண்டாக கம்பெனியை ஆக்கின.
சட்டத்தின்படி கம்பெனியின் உரிமைப் பத்திரம் 20 ஆண்டுகளுக்கு மட்டும் இருக்கும்; அதன்பின் புதுப்பிக்கப்பட வேண்டுடம். 1793 ஆம் ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது; ஏனெனில், கம்பெனியின் உரிமைப்பத்திரம் அந்த ஆண்டில்தான் புதுப்பிக்கப்பட வேண்டும்.
கிறித்தவ அறிவைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர்களுடைய பணி சுலபமாகி விட்டது போல் தோன்றியது. இந்த விஷயத்திற்குப் பொறுப்பாக இருந்த வில்பெர்போர்ஸ், பாராளுமன்றத்தில் முக்கிய நபர்களின் ஆதரவைப் பெற்றுவிட்டார். அதிமேற்றிராணியார் மூரின் ஆசிகளையும் பெற்றுவிட்டார். கிழக்கு இந்தியக் கம்பெனியின் உரிமைப் பத்திரம் பற்றிய விஷயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் ஆதரவையும் பெற்றது மேலும் அதிக முக்கியத்துவமானதாகும்.
இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்நடவடிக்கையாக, உரிமைப் பத்திரத்தில் சேர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் காமன்ஸ் சபை நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் வடிவத்தில் தயாரிக்கப்பட்டன. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது:
“இந்தியாவில் பிரிட்டில் டொமினியன்களில் வாழும் பிரஜைகளின் நலனையும் மகிழ்ச்சியையும் உயர்த்துவதற்காக எல்லாவித நியாயமான, நிதானமான நடவடிக்கைகளை எடுப்பது பிரிட்டிஷ் சட்டமன்றம் விசேடப் பொறுப்புணர்ச்சியுடன் செய்ய வேண்டிய கடமை என்பதாலும், இந்த நோக்கங்களுக்காக அறிவுத்துறையிலும் மற்றும் மதம் போன்றவற்றிலும் பொதுவாக முன்னேற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்பதாலும், பின்வருமாறு சட்டமியற்றுகிறது:
மேற்சொன்ன நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்காக பள்ளி ஆசிரியர்களாகவோ, மத போதகர்களாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ பணியாற்றுவதற்கு அவ்வப்போது தேவைப்படும் எண்ணிக்கையில் பொருத்தமான, தகுதியுள்ள நபர்களை நியமித்து அனுப்பிவைக்க இயக்குர்கள் குழுவிற்கு இதன்மூலம் அதிகாரம் அளிக்கிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நபரும் நியமிக்கப்படும் முன் அல்லது அனுப்பப்படும் முன் இப்போதைக்குக் காண்டர்பரி தலைமை மதகுரு அல்லது லண்டன் பிஷப்பிடமிருந்து அல்லது கிறித்தவ ஞானத்தைப் பரப்புவதற்காக லண்டனிலும் ஸ்காட்லாந்திலுமுள்ள கழகங்களிடமிருந்து திருப்திகரமான நற்சாட்சிப் பத்திரங்கள் அல்லது நன்னடத்தை சான்றிதழ்கள் பெற்று இயக்குநர் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். கிறித்தவ ஞானத்தைப் பரப்புவதற்குப் போதுமான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா என்பதை இந்த நற்சாட்சிப் பத்திரங்கள் எடுத்துக் கூறுபவையாக இருக்கும்.
மேலும் பின்வருமாற சட்டமியற்றுகிறது:
church-stateஇந்தியாவின் சம்பந்தப்பட்ட ராஜராணி சர்க்கார்களுக்குத் தேவைப்படும் கட்டளைகள் இடும் அதிகாரம் இயக்குநர் குழுவுக்கு வழங்கப்படுகிறது; அவ்வாறு அனுப்பப்படுபவர்கள் பணியாற்ற வேண்டிய இடம் பற்றியும் அவர்கள் தங்களைக் கண்ணியமான முறையில் பேணிக்கொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது பற்றியம் ஆவன செய்யும்படி அந்த சர்க்கார்களுக்குக் கட்டளைகள் அனுப்ப வேண்டும். மேலே சொன்ன நோக்கங்களை அடைவதற்கு உசிதமான நடவடிக்கைகள் பற்றி பரிசீலித்து முடிவு எடுக்கும்படியும் ராஜதானி சர்க்கார்களுக்குக் கட்டளையிட வேண்டும்.
பிரதானமாக துண்டாஸின் ஆதரவினால் காமன்ஸ் சபை தீர்மானத்தை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டது. வில்பெர்போர்ஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரது கிழக்கு இந்திய விவகாரத்திற்குப் போல் ஆண்டவனின் அருள் எப்பொழுதும் இவ்வளவு தெள்ளத் தெளிவாக இருந்ததில்லை என்று அவர் தமது சஞ்சிகையில் எழுதினார்.
ஆண்டவனின் வியாபாரிகளை எதிர்த்த ஆதிக்க வியாபாரிகள்
ஆனால் அவரது இந்த நம்பிக்கை அவசரப்பட்டது என்பது விரைவிலேயே புலனாயிற்று. ஏனெனில், இந்த மசோதா மூன்றாம் தடவை படிக்கப்பட்டபோது, துண்டாஸ் அனுமதியோடு அந்த ஷரத்து நீக்கப்பட்டது. தமது நண்பர் கிஸ்போர்னுக்கு, வில்பெர்போர்ஸ் பின்வருமாறு எழுதினார்:
“எனது ஷரத்து தூக்கி எறியப்பட்டுவிட்டது… துண்டாஸ் இரட்டை வேடம் போட்டு விட்டார்.’’
நிலைமை இவ்விதம் எதிர்பாராதவிதமாக மாறியதற்கு கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் தூண்டுதலே காரணம். கிழக்கு இந்திய வியாபாரம் கம்பெனியின் ஏகபோகத்தில் இருந்து வந்தது; கம்பெனி இயக்குநர்களின் அனுமதி பெறாமல் இந்தியாவில் கிழக்கு இந்தியக் கம்பெனியின் கீழ் உள்ள பிரதேசத்தில் எந்த ஆங்கிலேயனும் நுழைய முடியாது; அந்தப் பிரதேசங்களில் இவ்வாறு அனுமதி இல்லாமல் நுழைபவர் வெளியேற்றப்படுவர். புதிய ஷரத்தின் விளைவு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள கம்பெனிக்கு அதிக காலம் ஆகவில்லை. இந்த ஷரத்தின்படி மத பிரசாரகர்களுக்கும் அவர்களது பிரசாரத்திற்கும் கதவு திறந்துவிட வேண்டியிருக்கும் என்பதைக் கம்பெனி அறிந்திருந்தது. இவ்விதம் சுதந்திரமாகச் செயல்பட மதப்பிரசாரகர்களை அனுமதிக்க வேண்டுமா என்பதே அப்போதைய முக்கிய கேள்வியாக இருந்தது. இயல்பாகவே, இந்த விஷயம் கடுமையான வாதப் பிரதிவாதத்திற்கான பிரச்சினையாயிற்று.
இதுபற்றி விவரம் தெரிந்து கொள்ள அக்கறைகொண்டவர்கள் அன்றைய எடின்பொரா ரெவ்யூ என்ற சஞ்சிகையைப் புரட்டிப் பார்த்துப் பயனடையலாம்.
சர்ச்சைக்குள்ளான இந்த விஷயத்தில் மூன்று தரப்பினர் சம்பந்தப்பட்டு இருந்தனர்.
முதலாவதாக கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள்; அவர்களின் பிரதான அக்கறை லாபத்தை எதிர்நோக்குவதும் தங்களின் பங்குதாரர்களின் நலனைப் பாதுகாப்பதுமே ஆகும். சர்ச்சையில் இரண்டாவது தரப்பினர் ஆங்கில மத்திய தர வர்க்கத்தினர்; கிழக்கு இந்திய வியாபாரத்தினால் அவர்கள் வாழ்ந்து வருபவர்கள். இந்தப் பிரதேசங்களில் பிரகாசமான தங்களது எதிர்கால வாழ்க்கைக்கான வாய்ப்புகளை அவர்களின் பிள்ளைகள் கண்டார்கள். மூன்றாவது தரப்பினர் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட கிறித்தவ மதப்பிரச்சாரக் கழகம்; அது அந்த ஆண்டில்தான் அமைக்கப்பட்டது.
முதல் இரண்டு தரப்பினரின் நலன்களும் ஒத்திருந்தன. ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்க அவர்கள் விரும்பினர். எனவே சமாதானமும் சச்சரவின்மையும் அவர்கள் விருப்பமாக இருந்தன. மூன்றாவது தரப்பினர் சமாதானம் பற்றி அக்கறை கொள்ளவில்லை; இந்தியரின் மூட நம்பிக்கைகளை அகற்றி அதற்குப் பதில் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதில் ஆர்வம் காட்டினர். முதலாவது தரப்பினர் ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியை ஏற்படுத்தி, மூன்றாவது தரப்புக்கு எதிராக எல்லா சக்திகளுக்கும் ஆதரவு தந்தனர். எனவே அவர்கள் வெற்றி பெற்றனர். கிறித்தவ மரப்பிரசார அமைப்பு தோற்றது. வெற்றி பெற்ற தரப்பினர் சர்ச்சையில் முன்வைத்த வாதங்கள் மிக முக்கியமானவை; சர்ச்சையின் விவரங்களைத் தெளிவுபடுத்துபவை அவையே.
காசு லாபத்தைக் காப்பாற்றச் சொல்லும் கர்த்தர்
கிறித்தவ போதனையைப் பரப்ப உடனே பிரசாரம் துவங்க வேண்டும், பல வகைகளிலும் நேரிடக் கூடிய இடர்களைத் தவிர்ப்பதற்காக நமது புனிதமான சமயப் பிரசாரத்தைச் சிறிது சிறிதாக, படிப்படியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறாகும் என்ற வாதத்திற்கு ஸ்மித் அளித்த பதில் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. அவர் கூறியது வருமாறு:
“ஏசுநாதருக்குப் பின் எத்தனை நூற்றாண்டுகளுக்கு மனித சமுதாயத்தின் பெரும் பகுதி புனித உண்மைகளை எந்த மனித முயற்சியாலும் பெறுவதற்கு எந்த சாத்தியமும் இல்லாமல் வாழ்ந்து இறந்துபோவதை ஆண்டவரின் கிருபை அனுமதித்தது என்பதை நாம் பரிசீலித்தால், உலகம் முழுவதும் விரைவாகவும் வேகமாகவும் மதமாற்றம் செய்ய வேண்டும் என்பது சர்வ வல்லமையுள்ள ரட்சகரின் திட்டமல்ல என்பது பற்றி நாம் திருப்தியடைய வேண்டும். நம்முடைய நாட்டுக் கடமைகளைக் கைவிடாமல் நம் நாட்டு மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் உலகாயத சந்தோஷத்தின் பல்வேறு பரிமாணங்களையும் மத மாற்றம் செய்யும் பொருட்டு ஆபத்துக்குள்ளாக்காமல் இருந்தால் அது கர்த்தரின் கண்களுக்கத் தவறாகப்படாது.’’
“இங்குமங்கும் அலைந்து திரிகிற குருமார்கள் சுதேசிகளைக் கலகம் செய்வதற்குத் தூண்டும முறையில் மத போதனை செய்வதை இயக்குநர்கள் அனுமதித்தால் தங்களுடைய பங்குதாரர்களுக்கோ பிரிட்டிஷ் நாட்டிற்கோ தங்கள் கடமையைச் செய்தவர்களாக மாட்டார்கள்….. அரசியல் மாற்றத்திற்குத் தீவிர உணர்ச்சியைத் தூண்டும் நிலை ஏற்படாத வகையில் உகந்த நேரத்தில் சுதேசிகளுக்கு அவர்களுடையதைவிடச் சிறந்த மதத்தைப் போதிக்க வேண்டும். நமது குடும்பங்களுக்கும் நம் நாட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகளை ஆண்டவனே நம் முன் வைத்துள்ளார். எங்கோ தொலை தூரத்திலுள்ள அன்னியர்களுக்கு அதிக நன்மைகள் புரிவதற்கு அதிக வாய்ப்பேதும் இல்லாதிருக்கும்போது அதன் பொருட்டு நமது கடமைகளைத் துறப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது.’’
சூழலுக்கேற்ப நிறம் மாறும் கிறுத்துவம்
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இவை போன்ற வாதங்கள்தான் மேலோங்கி இருந்தன. இதன் காரணமாக 1793ல் இந்த ஷரத்து நிராகரிக்கப்பட்டது. கிறிஸ்துவின் போதனை சௌகரியத்துக்கான ஒரு மதம் அல்ல; பதிலாக சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மதமாகும் என்பதைக் காமன்ஸ் சபை உறுப்பினர்களுக்கு ஞாபகப்படுத்தி, அவர்களை வில்பர்போர்ஸ் சாடினார்.
ஆனால் ஏற்கனவே எடுத்துக் காட்டியபடி,“பதினெட்டாம் நூற்றாண்டில் மதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சௌகர்யத்தின் பொருட்டு அரசும் சமுதாயமும் ஏற்றுக்கொண்ட மதம் சொந்த நாட்டில் எதார்த்தத்துடனும் விவேகத்துடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கருதினர். வெளிநாடுகளில் அதை முரட்டுத்தனமான முறையில் பரப்ப வேண்டிய தேவை இல்லை. பொதுவான சூழ்நிலை, ஏற்கனவே கூறியபடி அகஸ்டனின் ரோமாபுரி போல இருந்தது. அவையவைக்குரிய இடத்தில் இருக்கும்போது எல்லா மதங்களும் சமத்துவமானவையே என்பது அந்த ராஜதந்திரியின் கருத்து.’’
மதபோதகர்களுக்கு வழி திறந்துவிடும் முயற்சி இவ்வாறு தோல்வியடைந்தது. 1813 வரை மதபோதகருக்கு வழி அடைக்கப்பட்டே இருந்தது. அதுமட்டுமல்ல, தங்களுடைய அனுமதி பெறாமல் இந்தியாவில் இங்குமங்கும் நுழைந்த மத போதகர்களின் நடவடிக்கைகளையும் கம்பெனி சர்க்கார் உஷாராகக் கண்காணித்து வந்தது.
christianity_the_dark_force_jedai_starwars
1793ல் அனுமதி பெறாமல் டாக்டர் கேரே வந்தார். இசைவுச் சான்றிதழ் இல்லாததால் கல்கத்தாவில் நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை. எனவே கல்கத்தாவிலிருந்து 14 மைல் தொலைவில் உள்ள செராம்பூருக்குச் சென்றார் அவர். செராம்பூர் ஒரு டென்மார்க் குடியேற்றம். டச்சுக்காரர்கள் மதப்போதகர்களுக்கோ மத அமைப்பின் பிரசாரத்திற்கோ எத்தகைய தடையும் விதிக்கவில்லை. மாறாக செராம்பூர் கவர்னர் அவர்களுக்குத் தீவிரமாக உதவினார். கேரேயும் அவரது பிரசாரக்குழுவும் கம்பெனி சர்க்காரின் சந்தேகப் பார்வையில் எப்பொழுதும் இருந்துவந்தனர். 1798ல் செராம்பூர் சமயப் பிரச்சாரக்குழு நான்கு மத போதகர்களைப் பிரசாரப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தது.
அவர்கள் 1800ல் வந்து சேர்ந்தனர். கவர்னர் ஜெனரலுக்கும் இவர்களுக்குமிடையே எந்த சம்பந்தமும் இல்லை. உரிமம் பெறாமல் உற்சாகத்துடன் செயல்படும் இவர்கள் வெளிப்படையாக அங்கு தங்கி இருப்பது கம்பெனியின் கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரபுவின் கண்களை உறுத்தியது. இவர்கள் எந்த நேரமும் கிழக்கு இந்தியக் கம்பெனியின் பிரதேசத்தில் சட்ட விரோதமாக பிரவேசிக்கலாமாதலால் மேன்மை தங்கிய தாங்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று செராம்பூர் கவர்னகக்க வெல்லெஸ்லி பிரபு எழுதினார்.
அந்த மாதிரி எதுவும் தாம் செய்ய இயலாது என்று டேனிஷ் கவர்னர் பதிலளித்தார். இதேபோன்று 1806 ல் கேப்டன் வைக் இரு மதபோதகர்களைக் `கிரிட்டேரியன்’ என்ற கப்பலில் கல்கத்தாவிற்கு அழைத்து வந்தார். சர் ஜார்ஜ் பார்லோ அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்தார். இந்த இருவரும் கரை இறங்குவதைத் தடுக்க அசாதாரண நடவடிக்கையை அவர் எடுத்தார். இந்த இரு போதகர்களையும் திருப்பி அழைத்துக் கொள்ளாவிடில், அவரது தஸ்தாவேஜுகள் அங்கீகரிக்கப்பட மாட்டா என்று கேப்டனுக்கு உத்தரவிட்டார். இத்தனைக்கும் அவர்கள் இருவரும் செராம்பூர்க்குச் சென்று டென்மார்க் அரசின் பாதுகாப்பில் இருந்தனர். மதபோதகர்கள் பற்றிய இந்தக் கண்ணோட்டம் மிகவும் நியாயமற்றது மட்டுமல்ல; அது விரோதமான கண்ணோட்டமும் ஆகும்.
மல்லுக் கட்டிய பின்னரே மதிப்பு கிடைத்ததா ?
1806 ல் இந்தியச் சிப்பாய்களிடையே வேலூரில் நடந்த சிப்பாய்க் கலகம் மதப்பிரசாரத்தின் விளைவு என்று தவறாகக் கணிக்கப்பட்டது. பீதியடைந்த நிலையில் இருந்த சர் ஜார்ஜ் பர்லோ உடனே செராம்பூர் மத போதகர்களின் நடமாட்டங்கள் மீது கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை விதித்தார்:
christian_conversion_jesus_aggression_intrusion1. மதபோதகர்கள் செராம்பூரிலேயே இருக்க வேண்டும்.
2. கடைத்தெருவில் பகிரங்கமாக போதனை செய்யக்கூடாது.
3. மதம் மாறிய சுதேசிகள் செராம்பூரிலிருந்து அதன் பிரதிநிதிகளாக அனுப்பப்படவில்லையெனில் அவர்கள் பிரச்சாரம் செய்யலாம்.
இஸ்லாம் பற்றிய ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டதற்காக 1807 ல் வங்க சர்க்கார் செராம்பூர் மத அமைப்பை மிகக் கடுமையாக சாடியது. அந்தப் பிரசுரத்தில் கவனக்குறைவாக முகமது நபிகளைப் பற்றி ஆட்சேபகரமாகக் குறிப்பிட்டிருந்தது. மத போதகர்கள்பால் கம்பெனி கொண்டிருந்த பகைமை போக்கை இது மேலும் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியது.
டாக்டர் கேரே மன்னிப்புக் கோரியும் வங்க சர்க்கார் திருப்தியடையவில்லை. அவரது அச்சகத்தைச் செராம்பூரிலிருந்து கல்கத்தாவுக்கு மாற்ற வேண்டுமென்று வங்க சர்க்கார் வலியுறுத்தியது. அவர்கள் வெளியிடும் பிரசுரங்கள் மீது கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்த சர்க்காரால் முடியும் என்பதாலேயே இவ்வாறு கூறப்பட்டது. இந்த செய்தி அந்த மதக்குழுவுக்கு கவலையை அளித்தது; இந்த முயற்சி அதன் பணிகளை நிச்சயம் சீர்குலைக்கும். வழக்கம்போல், டென்மார்க் குடியிருப்பின் கவர்னர் அவர்களது உதவிக்கு வந்தார். வங்காள சர்க்கார் அச்சகத்தை நிர்ப்பந்தமாக கல்கத்தாவிற்கு எடுத்துச் சென்றால் தாம் அவர்களுக்காக போராடப் போவதாக பீதியடைந்த செராம்பூர் மதபோதகர்களுக்குத் தைரியம் கூறினார். பின்னால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு, அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் கம்பெனியின் சர்க்கார் மதபோதகர்களின் நண்பனாக இருக்கவில்லை என்பதை இது எவ்வகையிலும் மூடிமறைத்து விடவில்லை. தங்கள் நிலையை நியாயப்படுத்த அவர்கள் இவ்வாறு வாதிக்கலாம். ஆனால் 1813 ஆம் ஆண்டிற்குப் பின் சமய பரப்புக் குழுக்கள் செயல்படுவதை அனுமதித்தபோது இவர்கள் மேற்கொண்ட கண்ணோட்டம் யாது? மதம் மாறியவர்களின் சிந்தனையிலிருந்தும் வாழ்விலிருந்தும் சாதி கட்டாயம் போக வேண்டும் என்ற கொள்கையை மேற்கொண்டனரா? ஒரு புரோடெஸ்டெண்ட் போதகர் இது பற்றி தெரிவித்த கருத்து இதற்கு ஒரு சாதகமான பதிலை அளிக்கக் கூடியதாக இல்லை.
சாதி இருந்தால்தான் மதம் மாற்ற முடியும்
மத போதகர்கள் சாதியை அனுமதிக்காதது: “டாக்டர் கெய்னே 1814 ல் பின்வருமாறு எழுதினார்:
“பல சந்தர்ப்பங்களில் மதபோதகர்கள் தங்களது விரைவான அல்லது முடிவான வெற்றிக்கு மிகவும் தீங்கு விளைவிற்கும் தவறைச் செய்துள்ளனர். இந்த இந்துவைச் கிறித்தவ சமயத்திற்கு மாற்றுவதற்கு, அவர் அவசியம் தம் சாதியை இழக்கும் படியான கொள்கையை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இந்தியாவில் இது அவமரியாதையாகக் கருதப்படுகிறது. இது மதமாற்றத்திற்கு ஒரு சக்திவாய்ந்த தடங்கலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்துக்களின் அரசியல் பிரிவு அவர்களது மதக்கோட்பாடுகளின் அங்கமாக இல்லை; மிகவும் விஷயம் அறிந்தவர்கள் கூட இதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். இந்துக்களுக்குக் கிறித்தவ சமயத்தை அளிக்கும்போது அவர்களின் சாதியை வைத்துக் கொள்ள அனுமதியுங்கள்; அப்பொழுது தயக்கமின்றி கணிசமான எண்ணிக்கையில் கிறித்தவ சமயத்தைத் தழுவுவர்.’’
தனிப்பட்ட ஒருவரின் கருத்தை வைத்து மட்டும் இந்தப் பிரச்சினையில் புராட்டஸ்டெண்ட் சமயப் பரப்பு அமைப்புகளின் கண்ணோட்டம் பற்றி ஒரு முடிவுக்கு வர நான் விரும்பவில்லை.
முன்பு, அவர்களின் பணி ஆரம்பித்த காலத்தில், இந்தப் பிரச்சினை பற்றி எந்த நிலை எடுக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துக் கூறும்படி புரொடெஸ்டெண்ட் அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டன என்பதற்கு ஆதாரம் உள்ளது. அப்பொழுதுதான் அவற்றின் தேர்ந்து தெளிந்த முடிவாகக் கொள்ள முடியும். கல்கத்தா பிஷப்பாக ரெவரன்ட் ஹீபர் நியமிக்கப்பட்ட சமயத்தில்தான் இந்தப் பிரச்சினை ஆழமாக விவாதிக்கப்பட்டது.
அவர் தமது பணியில் 1823ல் சேர்ந்தார். திருச்சபை பொறுப்பில் அவர் இருந்தபொழுது இந்தியா முழுவதிலும் இலங்கையிலும் அவர் விரிவான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களிடையே சாதியைச் சகித்துக் கொள்ளலாம் என்ற பிரச்சினை பற்றி புரொடெஸ்டெண்ட் மதபோதகர்களிடையே தீவிரமான கருத்து மோதல் இருந்ததைத் தெரிந்து கொண்டார். இந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்க்க அவர் விரும்பினார். அவர் இந்தப் பணியை எவ்வாறு செய்ய முயன்றார் என்பதை ரத்தினச் சுருக்கமாக திரு.காயி குறிப்பிட்டிருக்கிறார். அது வருமாறு:
“மதப் போதகர்களிடையே சச்சரவு இருந்தது. அதைப் போக்க ஹீபர் தீவிர அக்கறை காட்டினார். வங்காளத்திலிருந்து புறப்படும் முன்பே இந்த பிரச்சினை அவர் முன் கொண்டுவரப்பட்டது. தமக்கு கிடைக்கக்கூடிய எல்லாத் தகவல்களையும் சேகரித்து பிரச்சினையைப் புரிந்து கொள்ள முயன்றார். முன்னால் செயல்பட்ட புரோட்டெஸ்டெண்ட் மதபோதகர்கள் கடைப்பிடித்த நடைமுறை பற்றி மட்டுமல்லாமல் சாதி என்ற அமைப்பின் உண்மைத்தன்மையைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினார். பிஷப் கல்லூரியில் கிறித்தவ சமயத்திற்கு மாறிய ஒருவர் இருந்தார். அவர் பெயர் கிறிஸ்டியன் டேவிட், அவர் சுவார்ட்ஸ் என்பவரின் மாணவர்; உண்மையிலேயே மிகத் திறமையானவர். தெய்வ பக்தியில் போலவே புத்திக் கூர்மையிலும் சிறந்து விளங்கியவர். தம்முடைய சந்தேகங்களுக்கு விரைவாக விடை கிடைப்பதற்கு அணுகவேண்டியவர்களுள் அவரும் ஒருவர் என்று ஹீபர் கருதினார். எனவே ஒரு கேள்விப் பட்டியலைத் தயாரித்து அந்த சுதேசி கிறித்தவரிடம் அளித்தார்; அவரிடமிருந்து பதில்களைப் பட்டியலாகப் பெற்றார்; அந்தப் பதில்கள் அருமையான ஆங்கிலத்தில் இருந்ததோடு, சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாத அளவுக்குத் துல்லியமாகவும் ஆழமாகவும் இருந்தன.
சாதி என்பது இந்து “சமூக” அமைப்புத்தான், இந்து “மதத்தின்” அமைப்பல்ல
“முதலாவதாக, சாதியின் தன்மை குறித்து : தென்னிந்தியாவின் சுதேசிகள் சாதி என்பதை இவ்வுலக வாழ்வு சம்பந்தப்பட்ட ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்கின்றனர்; மற்றபடி எந்த மத எண்ணங்களோடும் அவர்கள் அதைச் சம்பந்தப்படுத்துவதில்லை’’ என கிறிஸ்டியன் டேவிட் குறிப்பிட்டார். “உயர் சாதியிலிருந்து மதம் மாறிய சுதேசிகள் கீழ் சாதியிலிருந்து மதம் மாறியவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை; அது எந்த மதம் மத ரீதியான அல்லது மூட நம்பிக்கையில் ஏற்பட்டதல்ல, மாறாக சமூக காரணங்களால் தோன்றியவையே; உயர் சாதிக்கும் கீழ் சாதிக்கும் இடையே உள்ள சில வேறுபாடுகள் எத்தகைய உயர்வான குறிக்கோள் அடிப்படையிலும் அமைந்தவையல்ல; இந்த பாகுபாடுகள் லௌகீகக் செல்வங்களை அடைவதால் மட்டுமே தங்கமுலாம் பூசிவிட முடியாதவை என்றும் டேவிடட் கூறினார். கீழ்ச்சாதியைக் சேர்ந்தவர்கள் வழக்கமாகவே சகிக்க முடியாத முறையில் பேசுகின்றனர். அடிக்கடி முரட்டுத்தனமான அல்லது உயர்சாதியினரின் உணர்வுகளை அவமதிக்கும் ரீதியில் கண்ணியமற்ற முறையில் பேசுகின்றனர் என்பதையும் அவர் குறிப்பாக எடுத்துக்காட்டினார்.
அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் ஒழுக்கக் குறைவாகவும் சுயமரியாதைக் குறைவாகவும் இருக்கின்றனர். கல்வி அவர்களை உயர்த்தும் என்றார்; ஒரு பறையர் கல்விமானாக மாறினால் அவரை பண்டிதர் என்று அழைக்கின்றனர்; மாதா கோவிலும் அவரை மதிக்கும்; அப்பொழுது மதம் மாறிய அவரது சகோதரர்கள் அவரோடு பழகுவர்; ஆனால் உலகம் தூற்றும் என்றோ அல்லது பெருமையின் காரணமாகவோ ஒரே தட்டில் அவருடன் உணவு அருந்த மாட்டார்கள்.
ஒற்றை டம்ளர்தான், ஆனால் எச்சில் டம்ளர்
சீகன்பல்க் காலத்திலிருந்தே மாதா கோவிலில் இரண்டு தனித்தனி பிரிவுகளின் அமர்ந்து பழகிவிட்டார்கள்; கர்த்தரின் மேஜையில் தனித்தனியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வர்; ஒரே கோப்பையில் பானத்தை அருந்துவர். ஆனால் உயர்சாதியிலிருந்து மாறியவர்கள் முதலில் அருந்துவர். இவை லௌகீக விஷயங்கள் சம்பந்தமான வேறுபாடுகள் மட்டுமே என்பதற்குச் சான்றாக கிறிஸ்டியன் டேவிட் ஒன்றைக் குறிப்பிட்டார்: அதாவது தெற்கத்திய கிறித்தவ கூட்டத்தினரில், உயர்சாதியைச் சார்ந்தவரும் கீழ்ச்சாதியினரும் மரணத்திற்குப் பின் பொதுவான ஒரு இடுகாட்டில் புதைக்கப்படுகின்றனர்; சவ அடக்கம் சம்பந்தமான சடங்குகளில், `புற சமயங்களை அனுஷ்டிக்கும் தேசங்களுக்கு மாறாக, மரணம் எல்லா வேறுபாடுகளையும் சமப்படுத்தி விடுகிறது என்ற உணர்வில்’ ஒன்றாகக் கலந்து கொள்கின்றனர்.’’
christian_conversion_jesus_buddhism“கிறித்தவ சமயத்திற்குத் தடங்கலாக ஆகிவிடக்கூடிய கடுமையான விதிகளைக் கடைபிடிப்பதற்குப் பதிலாக இலேசான ஆட்சேபத்தின் மூலமும் நயந்து எடுத்துச் சொல்லி இணங்க வைப்பதன் மூலமும் அனுபவமிக்க மத போதகர்கள் தீங்கைக் குறைக்க முயன்றனர். சுவார்ட்ஸ் கீழ் சமய பரப்புக் குழுக்கள் இயங்கியபோது, தீங்கு கணிசமான அளவு குறைக்கப்பட்டது என்றார் டேவிட்.
ஆனால், கிறித்தவ சமயப் பரப்புக் கழகத்தைச் சேர்ந்த திரு.ரீனியஸ் – அவர் உண்மையான மனசாட்சிப்படி உணர்வுபூர்வமான, விசுவாசமுள்ள கிறித்தவர் – கிறித்தவர் மத ஆசிரியர்களின் கடமைகள் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார். தென்னிந்தியாவின் இளைய மதபோதகர்களைத் தன் கருத்துகளுக்கு ஆதரவாளர்களைத் திரட்டினார்; எனவே, சாதியை முற்றிலுமாக மறுப்பது – அது சமூக சம்பந்தமாக இருந்தபோதிலும் – கிறித்தவ சமயத்தில் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு அத்தியாவசிய நிபந்தனை என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அதுமட்டுமன்றி முந்தைய மதபோதகர்களுக்கு எதிராகவும் பேசினர். பிரசாரம் செய்தனர். கிறித்தவ சமயத்தின் பரிசுத்தத்தை மாசுறச் செய்யும் விஷயங்களை அனுமதித்ததற்காக அவர்கள் `ஏசுநாதரின் போதனையைக் கறைப்படுத்தியவர்கள்’ என்று கண்டனர் செய்தனர்.
இந்திய சாதி அமைப்பும் ஐரோப்பிய சாதி அமைப்பும்
இவற்றையெல்லாம் பற்றி மிகவும் வருத்தத்தோடு கிறிஸ்டியன் டேவிட் தெரிவித்தார். அவரது கருத்து அவருடைய பழைய குருவான கிறிஸ்டியன் சுவார்ட்ஸின் கோட்பாடுகளுடனும் நடைமுறையுடனும் இயல்பாகவே இசைந்து போகக் கூடியதாக இருந்தது. பிஷப்பின் இலேசான தலையீடும் அன்பான ஆலோசனையும் மிகுந்த சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் கடைப்பிடிக்கும்படி இளம் பிரசாரகர்களின் இதயங்களை ஒழுங்குபடுத்தியிருக்கும் என அவர் கருதினார்.
“அதிக அக்கறையுடனும் அதிக நேர்மையுடனும் இந்தப் பிரச்சினையை ஹீபர் தம் மனதில் அலசிப் பார்த்தார். அந்த மனிதரின் பண்பு பற்றி நாம் தெரிந்து கொண்டவை அனைத்தின்படி, முந்தைய மதபோதகர்கள் கையாண்ட சமரச நடைமுறைகளுக்குச் சாதகமான நிலையை அவர் எடுத்திருக்க வேண்டும். ஆனால் மேலும் தகவல்களை சேகரிக்கவும் ஸ்தலத்தில் விவேகமான முழுமையான முடிவு எடுப்பதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும் வரையில் தமது இறுதி முடிவை ஒத்திவைத்தார். எனவே தென் ராஜதானிக்கு அவர் விஜயம் செய்தபோது, முக்கியமான மதபோதகர்களுக்கு மேலும் தகவல் கேட்டு கடிதங்கள் எழுதினார்; கிறித்தவ ஞான கழகத்தைச் சார்ந்த ஒரு கமிட்டியை இந்த விஷயம் பற்றி மேலும் ஆய்வுகள் நடத்த நியமித்தார். அருட்திரு டி.சிரிவோகலுக்கு எழுதிய கடிதத்திலிருந்து – வழக்கமான கேள்விப் பட்டியலைவிடச் சற்று அதிகம் இருந்தாலும்- அவரது கருத்துகளின் போக்கைக் கண்டுபிடிக்க முடியும். மிகவும் ஆழமாக பரிசீலித்தபின், கடற்கரை பிரதேசங்களில் மதம் மாற்றம் செய்யப்பட்ட கிறித்தவர்களிடையே நிலவிய சாதி அமைப்பின் பிரதான அம்சங்கள் உண்மையில் கிறித்தவ நாடுகளில் நிலவும் சமுதாய விலக்கி வைக்கும் தன்மையிலிருந்து சொற்பமே வேறுபட்டு உள்ளன.
இந்தியாவுக்கு இறக்குமதியான ஐரோப்பிய சாதி அமைப்பு
ஐரோப்பாவில் சாதி என்பது போன்றது இல்லையா? அமெரிக்காவில் சாதி என்பது போன்றது இல்லையா? ஆங்கில மாதாகோவில்களில் உயர்ந்த நிலையிலுள்ளவர்களும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களும் தனியாக உட்காருவதில்லையா? நன்கு உடையணிந்த நமது உயர்சாதியினர் வழிபாட்டு மேடைக்கு முதலில் செல்வதில்லையா? உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துகிறார்களா? இவர்களின் குழந்தைகள் எல்லோரும் ஒரே பள்ளிகளுக்குச் செல்கின்றனரா? நம்மிடையே பறையர்கள் இல்லையா? பிற நாகரிக நாடுகளில் சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் ஒரு வகையான சாதி உணர்வு நிலவவில்லையா? ஸ்பானிய கிடால்கோ நைந்து போன அழுக்கான உடையில் தனது சாதியை வெளிப்படுத்துவதில்லையா? மிகச் செல்வச் செழிப்பான முலாட்டோ மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள வெள்ளையரோடு கூட்டாளியாக, தோழனாகப் பழக முடியுமா?
ஒன்றில் அது ரத்தம் என்று சொல்லப்படலாம்; வேறொன்றும் மற்ற ஒன்றாக இருக்கலாம். ஆனால் அடிப்படை அம்சங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து சொற்பமே வேறுபடும்.
கடவுள் முன்னிலையில் எல்லா மனிதர்களும் சமம் என்ற கிறித்தவக் கோட்பாடு புத்திசாலித்தனமானது; பாராட்டுதலுக்குரியது. ஆனால் மனிதர்களின் பார்வையில் எல்லோரும் சமம் அல்ல என்பதும் அதே அளவு உண்மையாகும். அவர்கள் சமமாக இருக்க வேண்டும் என்று ஒரு வேளை கடவுள் நினைக்கவில்லையோ என்னவோ! சமூக வேறுபாடுகள் எல்லா இடத்திலும் நிலவுகின்றன. தெற்கு கடலோரப் பகுதிகளில் மதமாற்றம் செய்யப்பட்டவர்களிடையே இருக்கும் வேறுபாடுகள் சமூகப் பாகுபாடுகளே என்றால், மனிதர்களில் வேறு எந்தப் பகுதியினரிடமும் இல்லாத இந்த சமத்துவம் என்ற நியதியை அமுலாக்க முயலுவதன் மூலம் நமது முயற்சிகளின் வெற்றிக்கு ஏன் ஆபத்தை உண்டாக்க வேண்டும் என்று பிஷப் வாதித்தார்.
“பிஷப் ஹீபரின் விவேகமான சிந்தனை இது. முதலிலிருந்தே அவர் சொல்லி வந்ததுபோல் இந்தியாவில் கிறித்தவ சமய லட்சியத்திற்குத் தாம் ஏதாவது சேவை செய்ய முடியுமானால் நடுவராக இருந்து கொண்டு சமரச வழியில், அதிதீவிரம் காட்டுபவர்களை நிதானப்படுத்தி பிரதான மதப் போதகராக அதிகம் நல்லது செய்ய முடியும் என்று அவர் நம்பியிருக்கலாம். ஆனால் இப்போது பழைய சீசாக்களில் புதிய ஒயினை அதிகம் ஊற்ற வேண்டாம் எனத் தீர்மானம் செய்துள்ளவர்களின் பக்கம் தமது பதவியின் செல்வாக்கைப் பயன்படுத்துவது தனக்கு வகுக்கப்பட்ட கடமை என்று அவர் நம்பினார்.’’
பள்ளிகளில் பறையர்களைச் சேர்க்காத பரிசுத்த வேதாகமத்தினர்
1841ல் இந்தியாவிற்கு வந்த மற்றொரு புராட்டெஸ்டெண்ட் மதபோதகரான அருட்திரு ராபர்ட் நோபிள் இந்தக் கருத்தை மேலும் அதிக வலுவாக வெளியிட்டார். இங்கிலாந்து கிறித்தவ சமயப் பரப்பு அமைப்பின் பணிகளுக்குப் பொறுப்பாளராக அவர் மசூலிப்பட்டணத்தில் இருந்தார். பறையர்கள், தோல் பதனிடும் தொழிலாளர், தெருச் சுத்தம் செய்யும் தோட்டிகள் ஆகியவர்களை அவர் பள்ளியில் சேர்த்துக் கொள்வதில்லை என்ற விதியைக் கடைப்பிடித்தார். கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்களிடையே சாதியைக் கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டிற்கு எதிராக தம் நிலை சரியென்று வாதிட்டர். தமது நிலையைப் பின்வருமாறு நியாயப்படுத்தினார்:
“இங்கிலாந்தில் மிகவும் தெய்வ நம்பிக்கையுள்ள கிறித்தவப் பெற்றோர்கள் தங்கள் புதல்வர்களை – புதல்விகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை – தங்களுடைய பணியாளுடனோ, அவர்கள் சமையல்காரர்களோடோ, பணிப்பெண்களோடோ கல்வி கற்பதை அனுமதிக்க மாட்டார்கள். மற்ற காரணங்களைவிட எங்கள் கிராமத்தின் பையன்களோடு திருட்டுத்தனமாக விளையாட சென்ற காரணத்திற்காகவே அடிக்கடி என் தந்தை என்னை அதிகமாகத் தண்டித்திருக்கிறார். மிகவும் நன்றாக முறைப்படுத்தப்பட்ட கிறித்தவக் குடும்பத்தில் வேலையாட்களுடன் பேசுவதையோ, சமையல் அறைக்குச் செல்வதையோ அனுமதித்ததை நான் பார்த்ததில்லை. சமையல்காரரோடோ குதிரைலாயப் பணியாளரின் குழந்தைகளோடோ பழகுவதை என் தகப்பனார் அனுமதித்ததில்லை. எனவே, ஏசுநாதரின் போதனையைக் கற்றுக் கொடுப்பதற்குமுன், பிராமணர்கள் பறையர்களோடும் தோட்டிகளோடும் அதே வகுப்பில் உட்கார வேண்டுமென்று கோருவது சரியென்று நான் நினைக்க முடியாது. அவ்வாறு கோருவது நியாயமற்றதும் கிறித்தவ தன்மையற்றதுமாகும்.’’
ஹீபர் காலத்திற்குப் பின், விவேகமும் மதப்பற்றும் கொண்ட பல கிறித்தவர்கள் அவர் மேற்கொண்ட நிலை தவறு என்று கருதியது உண்மையே. பிஷப் வில்சனும் பிந்திய காலத்தில் தனது முடிவைத் திட்டவட்டமாக மாற்றியதோடு, இந்து சமயத்தின் பிரிக்க முடியாத அம்சம் சாதி என்ற அடிப்படையில் சாதி பாகுபாடுகளை அனுமதிப்பதற்கு எதிராக தனது நிலையை அறிவித்தார். ஆனால் உண்மை என்னவெனில், அதிகாரபூர்வமானது மட்டுமின்றி புராடெஸ்டெண்ட் சமயப் பரப்பு அமைப்புகள் இந்தியாவில் இந்திய கிறித்தவ மதத்தில் சாதியின் இடம் பற்றி மேற்கொண்ட பொதுவான நிலையும் அதுதான்.
இவ்வாறாக, இந்தியாவில் கிறித்தவ சமயம் பரவுவதற்காக, அந்த மதம் சுலபமாக்கப்பட வேண்டுமென்று எல்லா சமயப் பரப்பு அமைப்புகளும் ஒத்துக் கொண்டன. இந்த விஷயத்தில், கத்தோலிக்கர்கள், லுத்ரன் பிரிவினர் அல்லது புராடெஸ்டெண்ட் பிரிவினர் ஆகியவரிடையே வேறுபாடு இருந்தது என்று தோன்றுகிறது. அந்த வித்தியாசம் அளவை பொறுத்த ஒன்றே.
கிறித்தவ மதத்திற்கு மாற்றப்பட்டவர்களிடையேயும் சாதியும், மற்றவையும் நிலைத்திருக்கின்றன என்றால் அது இந்தக் கொள்கையின் விளைவே, அதாவது கிறித்தவ சமயத்தை எளிதாக்கும் கொள்கையின் விளைவே. இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது என்றாவது ஒரு நாள் யாராவது அவர்களிடம், கிறித்தவ மதம் சாதியை நீக்கவில்லையெனில் அந்த மதம் எவ்வாறு நல்லதாக இருக்க முடியும் என்று கேட்பார்கள் என்று மதபோதகர்கள் ஒரு பொழுதும் நினைத்ததில்லை.
ஒழுங்கீனத்தை ஆதரித்த கிறுத்துவம்
கேள்வியின் இரண்டாவது பகுதியை எடுத்துக் கொள்வோம். மதம் மாறியவர்களைத் துன்பங்களிலிருந்தும் இழிவிலிருந்தும் கிறித்தவ சமயத்தால் காப்பாற்ற முடிந்ததா? தீண்டப்படாதவராக பிறந்த ஒவ்வொருவரின் துரதிர்ஷ்டமே இந்த துன்பங்களும் இழிவும். கிறித்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டபின் ஒரு தீண்டப்படாதவன் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியுமா? அவனது குழந்தைகள் பொதுப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனவா? அவன் நுழைய முடியாத உணவு விடுதிகளுக்கோ அல்லது மதுக்கடைகளுக்கோ அவன் போக முடியுமா? நாவிதன் அவனுக்குச் சவரம் செய்வானா? ஒரு சலவையாளன் அவனது உடைகளைத் துவைத்துக் கொடுப்பானா? ஒரு பஸ்ஸில் அவன் பிரயாணம் செய்ய முடியுமா? மனச்சான்றின் உறுத்தலின்றி அவன் ஒரு பொது அலுவலகத்தில் நுழைய அனுமதிக்கப்படுவானா? ஓர் இந்து அவனிடமிருந்து தண்ணீர் வாங்கி அருந்துவானா? கிராமத்தில் தீண்டப்படுபவர் வாழும் குடியிருப்புகளில் குடியிருக்க அனுமதிக்கப்படுவானா? அவனுடன் அமர்ந்து அவர்கள் உணவு அருந்துவார்களா?
இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் `இல்லை’ `முடியாது’ என்ற பதிலே கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமாயின், மதமாற்றம் தீண்டப்படாதவரின் சமூக அந்தஸ்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இந்துக்களில் பெரும்பான்மையானவர்களைப் பொறுத்தவரை, கிறித்தவனாக மாறிய பின்பும் தீண்டப்படாதவன் தீண்டப்படாதவனாகவே இருக்கிறான்.
என்ன காரணம் ?
கேள்வி என்னவெனில், மதம் மாறிய தீண்டப்படாதவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதில் கிறித்தவ சமயம் ஏன் வெற்றி பெறவில்லை? இந்தத் தோல்விக்கான காரணங்கள் யாவை? இந்தப் பிரச்சினை பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருவரும் நான் கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்வாரா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. என்ன மரியாதை கிடைத்தாலும் நான் அவற்றை எடுத்துக் கூறப்போகிறேன். நான் கூறப்போவதைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு, உணர்ந்து கொள்ளும் பொருட்டு மதம் மாறியவர்களின் அந்தஸ்தில் மாற்றம் ஏற்படுத்துவது இரண்டு முறையான மாற்றத்தின் விளைவாகவே சாத்தியம் என்பதை எடுத்துக்காட்டி என் வாதத்தைத் துவங்குகிறேன்.
இந்துக்களின் கண்ணோட்டத்தில் ஒரு மாற்றம் அவசியம் வேண்டும். இரண்டாவதாக மதம் மாறியவர்களின் மனப்போக்கில் ஒரு மாற்றம் அவசியம் இருக்க வேண்டும். அந்தஸ்து இரட்டைத் தன்மை கொண்டது. இரண்டு நபர்களுக்கிடையே உள்ள விஷயம் அது. தங்கள் பழைய நிலையிலிருந்து இருவரும் நகர்ந்தாலொழிய மாற்றம் இருக்க முடியாது. கிறித்தவ மத முன்னேற்றத்திற்குப் பொறுப்பானவர்கள் இரு பக்கத்தினரும் நகருவதற்கு என்ன செய்திருக்கிறார்கள்? இந்தக் கேள்வியைப் பரிசீலித்தால், மதம் மாற்றம் செய்யப்பட்ட தீண்டப்படாதவர்களின் அந்தஸ்தை உயர்ந்த ஏன் கிறித்தவ மதம் தவறிவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள நமக்கு உதவும்.
இந்தக் கேள்வியைப் பகுதி பகுதியாகப் பரிசீலிப்போம். இந்துக்கள் அவர்களின் நிலையிலிருந்து மாற கிறித்தவ மதம் என்ன செய்துள்ளது? அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. இது விஷயத்தில் ஏதேனும் ஒரு கருத்து ஓர் அற்புதத்தை நிகழ்த்தலாம் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும். ஒரு கருத்து, அதாகவே பணியைச் செய்யும் என்ற நம்பிக்கை பற்றி மறைந்த ஆர்க்கிலி கோமகன் தெளிவாகக் கூறியிருக்கிறார். அவர் கூறினார்:
“இம்மாதிரி சக்தி வாய்ந்ததொரு சீர்திருத்த முறை எதுவும் இல்லை. ஒரு பொய்யான அல்லது இழிவான அல்லது விஷமத்தனமாக குரூரமான அமைப்போடு ஒரு ஒவ்வாத கருத்தை முன் வைத்தால், அப்பொழுது எவ்வித சர்ச்சையோ போராட்டமோ இல்லாமல், அந்த நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் ஒரு கருத்து அலையை ஏற்படுத்தும். இவ்வாறாகத் தான், எந்த ஒரு நேரடித் தாக்குதலும் இல்லாமல் அஞ்ஞானிகள் உலகத்தின் மிகவும் பலமான, மிகவும் வியாபகமான அடிமைத்தனத்தை கிறித்தவ சமயம் ஒழித்தது.’’
slavery_christianityஒரு கருத்தின் முக்கியத்துவம் எதுவாக இருந்தாலும் ஆர்க்கிலி கோமகனின் முடிவைச் சரியென்று வரலாறு நிரூபிக்கவில்லை என்பது நிச்சயம். ரோம சாம்ராஜ்யத்தில் அடிமைத்தனம் முடிவுக்கு வந்தது கிறித்தவ மதத்தின் செல்வாக்கினாலா என்பது வாதத்திற்குரிய ஒன்றாகும். கிறித்தவ சமயம் ஓர் அமைப்பாக பல நூற்றாண்டுக்காலம் நிலை நிறுத்தப்பட்டிருந்த போதிலும் ஐரோப்பாவில் அடிமைத்தனம் தொடர்ந்து இருந்தது என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. அமெரிக்காவில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர கிறித்தவ மதம் போதுமானதாக இருக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. கிறித்தவ மதத்தால் மறுக்கப்பட்ட நீக்ரோவின் விடுதலையைப் பெற்றுத்தர ஒரு உள்நாட்டு யுத்தம் அவசியமாயிற்று.
கிறித்தவ மதத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், ஒரு கருத்தை விதைத்துவிட்டால் அது அதிசயத்தை நிகழ்த்தும் என்று நம்பியிருந்தது, கிறித்தவ மதத்தில் சேர்ந்த போதிலும், தீண்டப்படாதவன் ஏன் தீண்டப்படாதவனாகவே இருந்தான் என்பதற்கு ஒரு காரணம்.
கேள்வியின் மற்ற பாகத்தை எடுத்துக் கொள்கிறேன். தீண்டப்படாதவர்கள் முன்னேற கிறித்தவ சமயம் ஆக்கபூர்வமான உற்சாகப்படுத்தியதா? அது அவ்வாறு செய்யவில்லை என்றே நான் சொல்ல வேண்டியிருக்கிறது.
நான் பார்க்க முடிவது, தீண்டப்படாதவர்களுக்கு `நடைமுறை’ சீர்திருத்தம் பற்றி குறைவாகவும் கிறித்தவ சமூக கண்ணோட்டங்களைப் பற்றி அதிகமாகவும் கவனம் செலுத்தியது கிறித்தவ போதனை. தீண்டப்படாதவர்களை மதம் மாற்றம் செய்ய விரும்பும் கிறித்தவர்கள், கிறித்தவ சமயத்தை “ஆன்மீக’’ விஷயம் மட்டுமே என்று வலியுறுத்துகிறார்கள். மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்ற கடமை கிறித்தவர்களுக்கு உள்ளது என்று போதிப்பது மிகவும் மதிப்புள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதோடு நிறுத்திக் கொண்டு, சமூகப் பார்வையில் பிரதிபலிக்கும் ஆன்மீக வாழ்க்கை லௌகீக வாழ்க்கையோடு தொடர்புடையதல்ல என்றும் அது பற்றிக் கிறித்தவர்கள் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றும் வாதிப்பது ஒரு வெற்று சித்தாந்தத்தைப் போதிப்பதேயாகும் என்பது எனது கணிப்பு.
christianity_negros_slaveryதவறு செய்யும் ஒருவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று தினம் வேண்டிக் கொள்வது, அதைத் தொடர்ந்து தவறான செயல் செய்பவனை நல்லவன் ஆக்க நடவடிக்கை எடுடக்கவில்லை என்றால், என்ன பலனை அளிக்கும்? மதம் மாறியபின்பும் அவர்களைத் தொடரும் அநியாயத்தை அகற்ற செயல்படுவது தங்கள் கடமை என்று கிறித்தவ மத போகதர்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை. தீண்டப்படாதவர்களின் சமூக விமோசனம் பற்றி கிறித்தவ மத அமைப்புகள் செயல்படாமல் இருந்தது நிச்சயமாக துயரமானது.
அதைவிட அதிகம் துன்பம் தருவது, கிறித்தவ சமயத்திற்கு மாறிய தீண்டப்படாதோரின் செயலற்ற தன்மைதான். அது மிக மிக துயரம் அளிப்பது. மதம் மாறுவதற்குமுன், இந்துக்களால் தீண்டப்படாதவன் எவ்வாறு அவதிக்குள்ளானானோ அதேபோல் மதம் மாறியபின்பும் தொடர்ந்து அவதிப்படுகிறான். கொடுமைகளிலிருந்து விமோசனம் பெற கிறித்தவ மதத்திற்கு மாறாத தீண்டப்படாதவர்கள் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் தங்களின் சமுதாயக் கொடுமைகளைப் போக்க தீண்டப்படாத கிறித்தவர்கள் மாநாடுகளில் கூடுவதை நான் ஒருபோதும் கண்டதில்லை. அவர்களுக்குக் குறைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. அவர்களின் போராட்டத்தில் அவர்களுக்குத் தலைமை தாங்கி நடத்த படித்தவர்கள் பலர் உள்ளனர் என்பது நன்கு அறிந்த ஒன்றே. அப்படியாயின் அவர்களின் குறைகளைப் போக்குவதற்கு ஒரு இயக்கம் இல்லாதது ஏன்?
கிறித்தவத் தீண்டப்படாதவர்கள் ஏன் ஒரு இயக்கத்தை கட்டி வளர்க்கத் தவறி விட்டார்கள் என்பதற்கு மூன்று காரணங்களை நான் காண்கிறேன்.
முதலாவதாக, தங்கள் சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பம், படித்த கிறித்தவர்கள் மத்தியில் முற்றிலுமாக இல்லாதிருப்பதாகும். இதற்குக் காரணம் என்ன? கிறித்தவ சமூகத்தில் உள்ள படித்த வகுப்பினர்களுக்கும் சாமான்ய மக்களுக்குமிடையே உறவுகள் எதுவும் இல்லை என்பதே எனது கணிப்பு.
சில இடங்களில் உயர்சாதி, கீழ்ச் சாதி என்று இது பிரிந்திருக்கிறது. கிறித்தவ சமூகம் பல்வேறு பிரிவினரைக் கொண்ட சமூகம். படித்த வர்க்கம் பெரும்பாலும் தீண்டப்படுபவர்களிடமிருந்து அல்லது மேல் சாதியிடமிருந்து வந்துள்ளது. கீழ்ச் சாதி அல்லது தீண்டப்படாதவர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களிலிருந்து படித்த வர்க்கம் பிரிந்து இருப்பதால், படித்த வர்க்கத்திற்கு மற்றவர்களின் தேவைகள், துன்பம், அபிலாஷை, விருப்பங்கள், வாழ்க்கை லட்சியம் ஆகியவை பற்றிய பொறுப்பு எதுவும் இல்லை; அவர்களின் நலன் பற்றி அக்கறை காட்டுவதில்லை. எனவே தீண்டப்படாத கிறித்தவர்களுக்கு வழி நடத்தும் தலைமை இல்லை; இதனால் அவர்கள் தங்கள் குறைகளைப் போக்கத் திரண்டு எழவில்லை.
இரண்டாவது காரணம்: தீண்டப்படாத கிறித்தவர்களிடையே இயக்கம் எதுவும் இல்லையெனில், மதம் மாறியவர்களின் மனோபாவத்தில் உள்ள சில குறைபாடுகளாகும். தனது விலங்குகளை அறுத்து எறிய வேண்டும் என்ற உணர்வே முற்றிலுமாக இல்லாதது தீண்டப்படாத கிறித்தவர்கள் மனோபாவத்தை எடுத்துக் காட்டுகிறது. தீண்டப்படாத கிறித்தவர் களிடையே இத்தகைய ஆர்வம் இல்லாததன் காரணம் என்ன? இதற்கு இரு காரணங்கள் உள்ளன எனக் கருதுகிறேன். கிறித்தவர்களாக மாறிய தாழ்த்தப்பட்டவர்களின் முந்திய நிலையில் இதற்கான ஒரு காரணத்தைக் காணலாம். ஒரு தீண்டப்படாதவன் சில நலன்களுக்காக அல்லது பைபிளின் போதனைகள் அவனுக்கு பிடிப்பதால், கிறித்தவ சமயத்தில் சேர்கிறான். இந்துமத போதனைகள் பற்றி தீர்மானமான அதிருப்தி அல்லது விருப்பமின்மை காரணமாக ஒரு தீண்டப்படாதவன் கிறித்தவனாக ஆவது அபூர்வம்; இதன் விளைவு என்னவெனில் கிறித்தவ சமயம், அவனுடைய பழைய மத நம்பிக்கையின் பின் இணைப்பாக மட்டுமே ஆகிறது. அவன் இரண்டையும் போற்றுகிறான்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற முறையில் அவற்றைக் கடைப்பிடிக்கிறான்.
தீண்டப்படாத கிறித்தவர்களிடையே எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமலிருப்பதற்கு இரண்டாவது காரணம் கிறித்தவ மாதா கோவில்கள் அளிக்கும் போதனைகளே. ஒரு மனிதன் வீழ்ச்சிக்கு அவனது முந்தைய பாபம்தான் காரணம் என்றும், ஒருவன் கிறித்தவனாக மாறுகிறான் என்றால், கிறித்தவ சமயத்தில் பாபங்களுக்கு மன்னிப்பளிக்கும் வாக்குறுதி இருப்பதுதான் அதற்குக் காரணம் என்றும் கிறித்தவ மதம் போதிக்கிறது. இந்த சித்தாந்தத்திற்கு இறை நம்பிக்கை மற்றும் விவிலிய நூல் போதனை ஆகியவை அடிப்படை காரணமாக இருந்தபோதிலும், சமுதாயக் கண்கொண்டு பார்த்தால் இந்த சித்தாந்தம் நாசத்தை விளைவிக்க வல்லது என்பது தெளிவு.
தவறான போதனைகள் தரும் கிறுத்துவம்
christian_conversion_aggressionமனிதனது வீழ்ச்சிக்குக் காரணம் சாதகமற்ற சூழ்நிலையே, சுற்றச் சார்பே அன்றி மனிதனின் பாபங்கள் அல்ல என்ற சமூக இயல் நிலைக்குக் கிறித்தவ மத போதனை நேரடிச் சவாலாக உள்ளது. சமுதாய இயல் கண்ணோட்டம்தான் சரியான கண்ணோட்டம் என்பதும், கிறித்தவக் கோட்பாடு மனிதனுக்குத் தவறாக வழிகாட்டுகிறது என்பதும் மறுக்க முடியாது. அது அவனைத் தவறான பாதையில் கொண்டு விடுகிறது. தீண்டப்படாத கிறித்தவர்களுக்கு உண்மையில் நடந்தது இதுதான். தவறான சமூக, மத சுற்றுச்சார்புதான் அவனது வீழ்ச்சிக்குக் காரணம் என்று போதிப்பதற்குப் பதிலாக அவனது வீழ்ச்சிக்குக் காரணம் அவனது பாபம் என்று போதிக்கப்படுகிறது.
இதன் விளைவு என்னவெனில், மதம் மாறிய தீண்டப்படாதவன் சுற்றுச் சார்பை வெற்றி கொள்ள வேண்டுமென்று ஊக்கம் பெறுவதற்குப் பதிலாக போராடுவதில் எந்தப் பலனும் இல்லை என்ற நம்பிக்கையில் திருப்தியடைகிறான்; தனது வீழ்ச்சிக்குத் தான் செய்த பாபமல்ல. தன்னுடைய தொலைதூர மூதாதையரான ஆதாமும் ஏவாளும் செய்த பாபம்தான் காரணம் என்று கருதுகிறான். அவன் இந்துவாக இருக்கும்போது தனது வீழ்ச்சிக்குக் காரணம் தனது கருமம் என்று நினைக்கிறான். அவன் கிறித்தவனாக மாறியபின், தனது வீழ்ச்சிக்குத் தனது மூதாதையரின் பாபம் காரணம் என்று கற்றுக் கொள்கிறான். எப்படிப் பார்த்தாலும் தப்பிக்க அவனுக்கு மார்க்கம் எதுவுமில்லை. ஒருவன் மதம் மாறுவது ஒரு புதிய வாழ்க்கைக்கான தோற்றத்தையும், பழைய வாழ்க்கையைக் கண்டித்து ஒதுக்குவதையும் தானே குறிக்க வேண்டும் என்று ஒருவர் வினவலாம்.
இந்தியாவில் இந்தியக் கிறித்தவ சமூகம் ஒரு பொருட்டாக மதிக்கப்படுகிறதா? நாட்டின் விவகாரங்களைத் தீர்ப்பதில் இந்த சமூகத்திற்கு என்ன முக்கியத்துவம், என்ன செல்வாக்கு உள்ளது? உண்மையில் நாட்டிலும் சமுதாயத்திலும் அது செல்வாக்கும் முக்கியத்துவமும் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவிலேயே மிக அதிகம் கல்வி கற்ற, ஞானம் பெற்ற சமூகம் இந்த சமூகம்தான் என்பதில் சந்தேகமில்லை.
கிறித்தவர்களில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம் இந்தியாவில் வேறு சமூகங்களில் இருப்பதைவிட ஒப்புநோக்கின் அதிகம். அது மட்டுமல்ல, பல்கலைக்கழக பட்டதாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் இவர்களின் எண்ணிக்கையும் பிற சமூகத்தினரைவிட அதிகம். ஆண்கள் மட்டும் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை; பெண்களும் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு கல்வியறிவு பெற்றிருந்த போதிலும் கிறித்தவ சமூகம் இந்திய விவகாரங்களைப் பொறுத்தவரை மிகக் குறைந்த அளவே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதுபற்றி கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், எவ்வளவு ஆழமாக, பாரபட்சமற்ற முறையில் முடியுமோ அவ்வளவு ஆய்வு செய்த பின்பே நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். நான் கூறுவதை மறுப்பவர்கள் எனது முடிவு தவறு என்றோ அல்லது தவறான விவரங்களைக் கொடுத்துள்ளேன் என்றோ கூறலாம். எனது கருத்தையும் கவலையையும் பகிர்ந்து கொள்ளும் சில இந்திய கிறித்தவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. “யங் இந்தியா’’விலிருந்து இரு கடிதங்கள் எடுத்து கீழே தருகிறேன்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத கிறுத்துவர்கள்
ஒரு இந்தியக் கிறித்தவர் திரு.காந்திக்கு எழுதிய கடிதம் 1921 ஆகஸ்டு 25ம் தேதியிட்ட `யங் இந்தியா’வில் பிரசுரமாகியுள்ளது. அதில் அவர் கூறுவதாவது:
“இந்தியக் கிறித்தவர்களை இந்திய மக்களாகத் தாங்கள் கருதுவதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்; ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர் ஆகியோர் `யங் இந்தியா’வில் குறிப்பிடப்படுவதைக் கண்டிக்கிறேன்; ஆனால் கிறித்தவர்கள் விடப்பட்டிருக்கின்றனர்.
christianity_terrorism_crusadesஇந்தியக் கிறித்தவர்களாகிய நாங்களும் இந்திய மக்கள் என்றும், இந்தியாவின் சொந்த விவகாரங்களில் அக்கறை கொண்டிருப்பவர்கள் என்றும் தாங்கள் நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.’’
இந்தக் கடிதத்திற்குத் திரு.காந்தியின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கூறுகிறார்:
“இந்தக் கடிதம் எழுதிய நண்பருக்கும் மற்ற இந்திய கிறித்தவர்களுக்கும் உறுதியளிக்க விரும்புவது என்னவெனில், ஒத்துழையாமை இயக்கம் மத, இன வேறுபாடுகளை மதிப்பதில்லை. தன் அணியில் சேரும்படி அது எல்லோரையும் அழைக்கிறது. அவ்வாறே நேர்த்தும் கொள்கிறது. திலகரின் சுயராஜ்ய நிதிக்குப் பல இந்திய கிறித்தவர்கள் நிதி அளித்திருக்கிறார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் சில பிரபல இந்தியக் கிறித்தவர்கள் முன்னணியில் உள்ளார்கள். முஸ்லீம்கள், இந்துக்கள் பற்றித் தொடர்ந்து எழுதப்படுவதற்குக் காரணம், அவர்கள் இதுவரை ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருதி வந்தனர். இந்த சஞ்சிகையில் வேறு எந்த இனத்தைப் பற்றியும் குறிப்பாகச் சொல்லியிருந்தால் அதற்கு எப்பொழுதும் ஒரு காரணம் இருந்திருக்கிறது.’’
திலகர் சுயராஜ்ய நிதிக்குப் பல இந்திய கிறித்தவர்கள் நிதி அளித்திருக்கிறார்கள் என்பதும், ஒத்துழையாமை இயக்கத்தின் முன்னணியில் பல பிரபல கிறித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, கடிதம் எழுதியவர் எழுப்பிய பிரதான கேள்விக்குத் திரு.காந்தி அளித்த பதில் சரியானதல்ல, அது தவறான கருத்தை அளிக்காவிட்டாலும் இந்துக்களைத் தங்களின் எதிரிகளாகக் கருதுவதால் முஸ்லீம்கள் குறிப்பிடப்படுகிறார்கள் என்றால், சீக்கியர்கள் ஏன் குறிப்பிடப்படுகிறார்கள்? அவர்கள் இந்துக்களைத் தங்கள் எதிரிகளாக கருதவில்லை என்பது உண்மை. பின் அவர்கள் ஏன் குறிப்பிடப்படுகிறார்கள்?
சீக்கியர்கள் குறிப்பிடப்படுவது மட்டுமல்ல; அவர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுவதோடு, அவர்களின் தீவிர ஒத்துழைப்பு இல்லாமல் சுயராஜ்யத்திற்கான போராட்டத்தை நடத்திச் செல்ல முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் சீக்கியர்களின் ஒத்துழைப்பு நிபந்தனையின்றி அளிக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களின் ஒத்துழைப்புக்குப் பிரதியாகச் சீக்கியர்கள் இரு நிபந்தனைகளை முன் வைத்தனர் என்பது நன்கு அறிந்ததே.
ஒரு நிபந்தனை, தேசியக் கொடியை வடிவமைக்கும்போது சீக்கியரின் நிறம் – அது கறுப்பு என்று கூறினர் – அதில் இடம்பெற வேண்டும் என்பது. சட்டசபைகளில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதைக் காங்கிரஸ் உத்தரவாதம் செய்ய வேண்டுமென்றும் இரண்டாவது நிபந்தனை. சீக்கியர்கள் குறிப்பிடப்பட்டதோடு மட்டுமல்லாமல், திருப்தி படுத்தப்பட்டார்கள்.
ஆனால் கிறித்தவர்களைக் குறிப்பிடக் கூட இல்லை. இந்தியக் கிறித்தவர்களைக் குறிப்பிடாததற்கு இரண்டு விளக்கங்கள்தான் இருக்க முடியும்.
ஒன்று, சுயராஜ்யத்திற்கான போராட்டத்தில் அவர்கள் காங்கிரஸுடன் இல்லை அல்லது குறிப்பிடக்கூடிய அளவு அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இல்லை. சுயராஜ்யத்திற்கான போராட்டத்தில் அவர்கள் காங்கிரஸுடன் இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. `இந்தியன் சோஷியல் ரிஃபார்மர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியருக்கு ஒரு இந்தியக் கிறித்தவர் எழுதிய கடிதம் `யங் இந்தியா’வில் மறு பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. கீழே கொடுத்துள்ள அந்தக் கடிதம் சுயராஜ்யம் பற்றி இந்தியக் கிறித்தவர்களின் நிலையை வெளிப்படுத்துகிறது:
“இந்தியாவில் கி.பி. இரண்டாவது நூற்றாண்டிலேயே கிறித்தவக் குடியிருப்புகள் இருந்தன என்பதற்குத் திட்டவட்டமான ஆதாரம் எங்களிடம் உள்ளது. உண்மை அதுவாக இருக்கும்பொழுது, இஸ்லாம் மதத்தின் தோற்றத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் தாங்கள் வசித்ததாக இந்திய கிறித்தவர்கள் உரிமை கொண்டாட முடியும். அப்படியிருக்கும்போது இந்திய மண்ணில் பிறந்த வளர்ந்த, சுத்தமான இந்திய மூதாதையரைக் கொண்ட இந்தியக் கிறித்தவன் இந்த நாட்டின் புராதன வரலாற்றை அதன் கலாசாரத்தைப் போற்ற ஏன் கற்றுக் கொள்ளவில்லை?
தங்களது மத நம்பிக்கையிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருந்தாலும் அதன் மக்களைத் தனது ரத்தத்தின் ரத்தமாக, தசையின் தசையாகப் பார்க்க அவன் ஏன் கற்றுக் கொள்ளவில்லை? அவனைப்போல் இல்லாமல், சக இந்து அல்லது முகமதிய பிரஜைகள் தாய்நாட்டின் கலாசார, சமூக, அரசியல் வளர்ச்சியில் அதன் ஒவ்வொரு கட்டத்தையும் எக்காரணத்தால் உற்சாகத்துடன் வரவேற்று அதில் தங்கள் பங்கை ஆற்றினர்? வந்தே மாதரம் இந்துக்கள், முகமதியர்கள் ஆகியவர்களின் உணர்ச்சிப் பிரவாகமாக மட்டுமே ஏன் இருந்தது? ஏன் இதுவரை இந்தியக் கிறித்தவனால் அது எதற்காகப் புறக்கணிக்கப்பட்டது? தங்கள் அபிலாஷைகள்பால் இந்திய கிறித்தவனின் உணர்வு அரைகுறை மனதானது என – எதிரானதில்லை என்றாலும் – ஏன் இந்துக்களும் முகமதியர்களும் கருதுகிறார்கள்? இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் தேசிய உணர்வானது இந்திய கிறித்தவன் தான் ஒதுக்கப்பட்டு விட்டதாக, தனக்கு உதவிகரமாக இல்லாததாக, எதிர்காலத்தில் தனது பாதுகாப்பு எற்றி சந்தேகப்படத்தக்கதாக ஆகியுள்ளது ஏன்?’’
 christian_jesus_patriotism
திரு.ஜார்ஜ் ஜோசப், கே.டி.பால், டாக்டர் எஸ்.கே.தத்தா ஆகியோர் விஷயம் எப்படியாயினும், சுயராஜ்யத்திற்கான போராட்டத்தில் கிறித்தவ சமூகம் தீவிரமாகக் கலந்து கொள்வதற்கு மாறாக, அதைப் பற்றி உண்மையிலேயே பயந்து கொண்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை. இந்தியக் கிறித்தவர்களிடையே நிலவும் கண்ணோட்டத்தை இக்கடிதம் உண்மையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆகவே முகமதியர், சீக்கியரோடு ஏன் இந்தியக் கிறித்தவர் குறிப்பிடப்படவில்லை என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பிடாமல் விடப்பட்டது சுயராஜ்யத்தின் நண்பர்கள் என்பதல்ல. அவ்வாறு விடப்படுவதற்கு அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததுதான் காரணம் என்ற ஒரே முடிவுக்குத்தான் ஒருவர் வர முடியும்.
இவ்வளவு நன்றாக அறிவாற்றல் பெற்ற ஒரு சமூகம், நாட்டின் விவகாரத்தில் எந்த முக்கியத்துவமும் செல்வாக்கும் இல்லாமல் இருப்பது வருத்தமான விஷயமாகும்.
இத்தகைய நிலைக்குக் காரணங்கள் எதுவாக இருக்க முடியும்? மிகவும் தெளிவான காரணம், அதன் எண்ணிக்கை சிறிதாக இருப்பதுதான். முஸ்லீம்களைப் போலவோ அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் போலவோ பொதுவாழ்வில் ஒரு சக்தியாக கிறித்தவ சமூகம் உணரப்படாததற்குக் காரணம், அதன் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதுதான். அவர்கள் முக்கியத்துவமில்லாமல் போனதற்கு இதுவே முழுவதும் காரணம் என்று ஆகிவிடாது. இந்த நிலைக்கு வேறு சில அம்சங்களும் இருக்க வேண்டும். இங்கு இரு அம்சங்களைக் காண்கிறேன்.
மதப் போதகரின் மகுடிக்கு ஏற்ப ஆடும் கிறுத்துவர்கள்
அதில் ஒன்று: இந்தியக் கிறித்தவர்கள் தேங்கிய நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் மதப் போதகர்களின் மடிகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கல்விக்கு, அவர்களின் மருத்துவ தேவைக்கு, மத சம்பந்தமான விஷயங்களுக்கு, அவர்களின் மிகச் சொற்பமான தேவைகளுக்கு அவர்கள் சர்க்காரை எதிர்பார்ப்பதில்லை.
அவர்கள் மத அமைப்புகளையே நம்பியுள்ளனர். சர்க்காரை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இருந்தால், வெகுஜனங்களிடையே கிளர்ச்சி நடத்த, அவர்களுக்கு எடுத்துக் கூற, பயனளிக்கும் அரசியல் நடவடிக்கைக்கு அவர்களை ஒன்றுதிரட்ட வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அம்மாதிரி ஒரு ஸ்தாபனம் இல்லாவிடில் அவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பற்றி எந்த சர்க்காரும் கவலைப்படாது. நீரோட்டத்தில் அவர்கள் இல்லை; அதில் இல்லாததால், பொது வாழ்க்கை பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை; எனவே பொதுவாழ்வில் அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்த இடமும் இல்லை.
ஒற்றுமையை உருவாக்காத கிறுத்துவம்
இரண்டாவது காரணம்: இந்தியக் கிறித்தவ சமூகம் சிதறிக் கிடக்கிறது – ஐக்கியமில்லாத சமூகம் என்பதைவிட இது மிகவும் சரியான வார்த்தை. அவர்களிடம் பொதுவாக இருப்பது ஆன்மீக சக்திதான். அதைவிட்டு விட்டால் அவர்களிடம் பொதுவாக இருப்பதெல்லாம் அவர்களைத் தனித்தனியாக வைப்பதற்கு உதவுபவையே; மற்றவர்களைப் போலவே கிறித்தவர்களும் இனத்தால், மொழியால், சாதியால் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். மொழி, இனம், சாதி ஆகியவை வெறும் வேறுபாடுகளே என்று விளக்கிக் கூறி அவர்களை ஒற்றுமைப்படுத்த அவர்களின் மதம் போதுமான அளவு சக்தி வாய்ந்ததாக இருக்கவில்லை. மாறாக, அவர்களை ஒன்றுபடுத்தக்கூடிய மதம் பல்வேறு பிரிவுகளினால் ஏற்படும் வித்தியாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. விளைவு என்னவெனில், ஒரு பொதுவான லட்சியம், பொதுவான சிந்தனை ஏற்பட பொதுவான முயற்சி செய்ய முடியாத அளவு இந்தியக் கிறித்தவர்கள் மிகவும் சிதறுண்டு கிடக்கின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியக் கிறித்தவருக்கு ஒரு தமிழ் இந்து, பஞ்சாபிலுள்ள இந்தியக் கிறித்தவரைவிட மிகவும் நெருக்கமாக இருக்கிறான். அதேபோல் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த ஒரு இந்திய கிறித்தவனுக்கு, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இந்தியக் கிறித்தவரைவிட, ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த இந்து நெருக்கமாக இருக்கிறான். சுருங்கக் கூறவேண்டுமெனில், இந்தியக் கிறித்தவர் என்ற சொற்றொடர் புள்ளிவிவரத்திற்கான சொற்றொடரே. இந்தச் சொற்றொடரில் சமூக உணர்வே இல்லை. ஒரு சமுதாயம் உள்ளது என்பதை நிரூபிக்கத் தேவையான உணர்வினால் இந்தியக் கிறித்தவர்கள் இணைக்கப்பட்டிருக்கவில்லை.’’ என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
இந்த கட்டுரையில் இறுதியில், அவர் மதம் மாறிய கிறித்துவர்களில் தாழ்த்தப்பட்டவர்களே அதிகம் என்பதால் இது நண்பனின் விமர்சனம்தான் என்பதை குறிப்பிடுகிறார். ஆனால், எப்போதுமே அவர் தாழ்த்தப்பட்டவர்களை கிறித்துவ மதத்திற்கு மாற ஊக்கப்படுத்தியதில்லை. அதற்கு ஆதரவும் கொடுத்ததில்லை.
கிறுத்துவமயமான கோவாவைக் காப்பாற்றுதல்
கோவா கிறித்துவர்களின் பெரும்பான்மையான மாநிலம் என்பது அம்பேத்கருக்குத் தெரியும். எப்படியாவது கோவாவை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்ற வைத்தார்.
பம்பாயில் கொலாபாவிலுள்ள ஜெயராஜ் ஹவுஸில் 1955 ஆகஸ்ட் 21ல் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒரு முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் ‘‘கோவா இந்தியாவின் பகுதியாக வேண்டுமென்றும் போர்த்துகீசியர்கள் இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் சம்மேளனத்தின் செயற்குழு கருதுகிறது. இந்த நோக்கம் நிறைவேற மூன்று வழிகள் உள்ளன.
1) விலைக்கு வாங்குதல்
2) குத்தகைக்கு எடுத்தல் அல்லது
3) யுத்தம்
இந்த மூன்று வழிகளில் ஒன்றை அரசு ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்றால் நம்மிடம் வேறு எந்த ஆயுதம் உள்ளது என்பதை மக்களுக்குக் கூறுவது அரசின் கடமையாகும்.’’
என்ற தீர்மானம் அம்பேத்கரின் அனுமதியோடு இயற்றப்பட்டது என்பதை பார்க்கும்போது அம்பேத்கரின் தேசபக்தி பளிச்சிடுகிறது.
அம்பேத்கரின் உள்ளம் மதமாற்றத்தை நோக்கி இழுக்கப்பட்டிருந்த சமயத்தில் சீக்கியம் அவர் உள்ளத்தில் துளிர்விட்டது. அதை இறுதியில் ஒதுக்கி வைக்கும் நிலை உருவானது என்று சொல்லலாம். ஆனால் கிறித்துவத்தை அந்த அளவில் கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளத்தில் எப்போதுமே நினைத்துக்கூட பார்க்கவில்லை.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா