Thursday, January 28, 2016

இடதுசாரி அறிவுஜீவி(?) பவர் புரோக்கர்கள் - சகிப்புத்தன்மை இன்மை -ஜெயமோகன்

சகிப்புத்தன்மையின்மை!

ஜெயமோகன்- December 1, 2015 https://www.jeyamohan.in/81384/#.VlzuP9IrLIW

என் வாழ்க்கையில் அதிகாரம் என்றால் என்ன என்று நான் கண்கூடாக அறிந்தது 1994 இல் சம்ஸ்கிருதி சம்மான் விருதுக்காக டெல்லி சென்று அங்கே இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் இரண்டு நாள் தங்கியிருந்த போது தான். அதற்கு முன்னரே இரு அமைச்சகங்களில் எனக்கு அறிமுகமுண்டு, செய்தித் தொடர்பு துறை மற்றும் கலாச்சாரத்துறை. ஆனால் அதிகாரம் தங்கத் தாம்பாளத்தில் பரிமாறப்பட்டிருப்பதை அங்கேதான் பார்த்தேன்.

பெரிய வளாகத்தினுள் அமைதியான சொகுசான பங்களா. புல்வெளிகள். உயர்தர உணவுகள். குடிவகைகள். ஓசையின்றி வெண்புகைபோல நடமாடும் பரிசாரகர்கள்.மேலுதடு அசையாமல் பேசப்படும் வெண்ணை ஆங்கிலம். நாசூக்காக கூந்தல் திருத்தும் உதட்டுச்சாயப் பெண்களின் நிரந்தரமாக வளைந்த புருவங்கள். ஓசையே இல்லாமல் ஆனால் சைகைகளும் முக பாவனைகளும் உரக்க ஒலிக்க கைவிரித்து கட்டித் தழுவி அளிக்கப்படும் வரவேற்புகள்.

அதன்பின் நான் பல நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆனால் இந்தியா இண்டர்நேஷனல் செண்டரின் அந்த ஆடம்பரத்தையும் சொகுசையும் எங்கும் கண்டதில்லை. இந்தியாவில் கலைகளையும், சுதந்திர சிந்தனையையும் வளர்க்கும் பொருட்டு இந்திய அரசின் நிதியுதவியால் உருவான சுதந்திர அமைப்பு அது. அப்போது டாக்டர் கரன்சிங் அதன் தலைவராக இருந்தார் என நினைவு. அவரை அங்கே மாலையில் பார்த்தேன்.

நான் ஆங்கில இதழ்களில் அதுவரை வாசித்தறிந்த அத்தனை முக்கியமான அறிவுஜீவிகளையும் அங்கே பார்த்தேன். யூ.ஆர். அனந்தமூர்த்தி கிட்டத்தட்ட நான்காண்டு காலமாக அங்கே நிரந்தரமாக தங்கியிருந்தார். கிரீஷ் கர்நாட் சிலநாட்களாக தங்கியிருந்தார். பிரீதிஷ் நந்தி போன்ற இதழாளர்கள் மகரந்த் பரஞ்ச்பே போன்ற சிந்தனையாளர்கள். ஷோபா டே போன்ற எழுத்தாளர்கள். எங்குபார்த்தாலும் பெரிய தலைகள்.

அன்று நான் மலைத்துப் போனது உண்மை.கிரிஷ் கர்நாடை கண்டு அருண்மொழி ஓடிப்போய் அறிமுகம் செய்து கொண்டு குதூகலித்தாள். நயன்தாரா ஷெகல் தினமும் அங்கே மதுவருந்த வருவதுண்டு, அன்றும் பார்த்தேன். அன்று என்னுடன் சம்ஸ்கிருதி சம்மான் வாங்கிய இருவர், ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அனாமிகா ஹக்ஸர் அங்கே வழக்கமாக வருபவர்கள் என்பதை கண்டேன்

முரட்டு கல்கத்தா ஜிப்பாவும் கோலாப்பூர் சப்பலும் அணிந்தவர்கள். குட்டிக் கண்ணாடி போட்டவர்கள். காதி புடவை கட்டி தூவெண் நரை படரவிட்ட பெண்கள். ஒருவர் கபிலா வாத்ஸ்யாயன் என்றார்கள். பபுல் ஜெயகர் வருவார் என்றார்கள். எங்கே பார்த்தாலும் இலக்கியப் பேச்சுக்கள். கலை விவாதங்கள்.
Ve.sa
அந்த ஆடம்பரம் என்னை அச்சுறுத்தியது, உயர் அறிவுஜீவித்தனம் அன்னியமாக்கியது. மறுநாள் என்னைக் கண்ட வெங்கட் சாமிநாதன் அதை உடனே ஊகித்துக் கொண்டார். ‘யோவ் இதிலே முக்காவாசிப்பேர் சரியான காக்காக் கூட்டம். டெல்லியோட அதிகாரமையங்களை அண்டிப் பொழைக்கிற ஸ்நாப்ஸ். பலபேர் வெறும் பவர் புரோக்கர்கள். நீ மதிக்கிற மாதிரி உண்மையான ஆர்ட்டிஸ்ட் ஒண்ணு ரெண்டு இருக்கலாம். அவனும் இங்க இருந்திட்டிருக்கமாட்டான். ஒடீருவான்”

“இவங்கதான் அத்தனை கல்ச்சுரல் விஷயங்களையும் தீர்மானிக்கிறாங்க. உலகத்தில உள்ள அத்தனை விஷயங்களப் பத்தியும் ஒருமணிநேரம் அழகான ஆங்கிலத்திலே சரியான ஜார்கன் எல்லாம் போட்டு பேசமுடியும். ஆனா அறுபத்தி ஒண்ணாம் நிமிஷம் முதல் சாயம்போக ஆரம்பிச்சிரும். ஒரெளவும் தெரியாது. பெரும்பாலும் பழைய பெருங்காய டப்பா” வெங்கட் சாமிநாதன் சொன்னார்

“அத்தனைபேரும் ஆளுக்கு நாலஞ்சு டிரஸ்ட் வச்சிருப்பாங்க. செர்வீஸ் ஆர்கனைசேஷன் , கல்ச்சுரல் ஆர்கனைசேஷன்னு இருக்கும். கான்ஃபரன்ஸிலே இருந்து கான்ஃபரன்ஸுக்கு பறந்திட்டிருப்பாங்க. கவர்மெண்ட் பங்களாவில ஒரே ஒரு முறை ஒரு நிகழ்ச்சிக்காக தங்க எடம் குடுத்தாப்போரும், கெளப்பவே முடியாது. டெல்லியிலே மட்டும் எப்டியும் அஞ்சாயிரம் பங்களாக்களை ஆக்ரமிச்சு வச்சிட்டிருக்குது இந்தக் கூட்டம்” சாமிநாதன் சொன்னார் “இதே மாதிரி இன்னொரு அதிகார மையம் இருக்கு ஜே.என்.யூ. அங்கியும் இதே கதைதான்”

கவர்மெண்ட் இவங்களை கெளப்பிவிடமுடியாதா?” என்றேன். “பொதுவா கவர்ன்மெண்ட் அப்டி நினைக்கிறதில்லை. ஏன்னா இந்தக் கூட்டம் நேரு காலம் முதலே வந்து ஒட்டிக்கிட்டது. ஒருத்தரை ஒருத்தர் சப்போர்ட் பண்ணுவாங்க. அப்பப்ப சில ஐ.ஏ.எஸ் காரங்க முயற்சி பண்ணினாலும் அங்க போய் இங்கபோய் காலை கைப்பிடிச்சு கெஞ்சி கூத்தாடி தப்பிச்சிருவாங்க”

“அதோட இன்னொண்ணும் இருக்கு” என வெங்கட் சாமிநாதன் சொன்னார். “இவங்க வெறும் ஒட்டுண்ணிகள் மட்டும் இல்ல. இவங்களுக்கே பெரிய பவர் ஒண்ணு உண்டு. பெரும்பாலானவங்க முற்போக்கு இடதுசாரி ஆளுங்க. பாத்தேல்ல?’ நான் வியந்து “ஆமா” என்றேன்.

உலகம் முழுக்க செமினார்கள் வழியா அறியப்பட்டவங்க. இந்தியாவிலே எது நடந்தாலும் உலகப் பத்திரிகைக்காரங்க இவங்ககிட்டதான் கேப்பாங்க. காங்கிரஸ் கவர்மெண்டுக்கு ஒரு லெஃப்டிஸ்ட் முகமூடிய உண்டுபண்ணி குடுக்கிறதே இவங்கதான். அப்டிப்பாத்தா இவங்களுக்கு செலவழிக்கிற தொகை ரொம்ப கம்மி” என்றார் வெ.சா “இவங்க இந்தியா மேலே உக்காந்திட்டிருக்கிற வேதாளங்க. யாராலயும் எதுவும் செய்யமுடியாது. இந்தியாவில எது சிந்தனை எது கலைன்னு தீர்மானிக்கிறவங்க”

நான் பலமுறை இந்தியா இண்டர்நேஷனல் செண்டருக்கும் அதைப்போல டெல்லியில் உள்ள நாலைந்து கலாச்சார மையங்களுக்கும் சென்றிருக்கிறேன். மலையாள இதழாளர்களுடன். அவர்களுக்கு வதந்தி பொறுக்கிச் செய்தியாக்க உகந்த இடங்கள் இவை. அந்திக்குப்பின் மது தலைக்கு ஏறும் போது ரகசியங்களே இல்லை

ஆனால் இவர்கள் எழுதித்தள்ளும் ஆங்கில நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகளை அரிய ஞானச்செல்வங்களாக கருதி அவற்றின் அடிப்படையில் அரசியல் பண்பாட்டு விவாதங்கள் செய்பவர்கள் மேல் எப்போதுமே ஒரு பரிதாபம் எனக்குண்டு. உண்மையான அரசியலை ஒருபோதும் அவர்கள் அறிவதில்லை. எளிய பற்று நிலைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுத்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.

முன்பு இதைப்பற்றி எழுதியபோது ஃபர்கா தத் ஒரு பவர் புரோக்கர் அன்றி வேறல்ல என எழுதினேன். என் நண்பர்களே எப்படி அப்படி ஒரு முற்போக்குப் போராளியைப்பற்றி எழுதலாம் என என்னிடம் சண்டையிட்டனர். நல்லவேளை சில நாட்களிலேயே அந்தம்மாள் டாட்டாவிடம் பேசிய தரகு வேலையின் விவகாரங்கள் நீரா ராடியா டேப் வழியாக வெளிவந்தன.

[என்னாயிற்று அந்த வழக்கு என எவருக்கேனும் தெரியுமா? ஃபர்கா தத்தை அவரது முற்போக்கு பீடத்திலிருந்து ஒரு மாதம் கூட கீழிறக்க அந்த அப்பட்டமான வெளிப்படுத்தல்களால் இயலவில்லை. டெல்லியின் வல்லமை அப்படிப்பட்டது]

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக அந்த அதிகார வளையம் மீது கை வைக்கப்பட்டிருக்கிறது. கீழ்மட்டத்தில் இதற்கான எச்சரிக்கைகள் ஆறுமாதமாக அனுப்பப் பட்டிருக்கின்றன. சென்ற வாரம் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் சகிப்புத்தன்மை சடாரெனக் குறைந்து அறிவுஜீவிகள் கொந்தளித்தெழுந்ததன் உள்விவகாரம் இதுதான் போலும்.
JatinDas

உதாரணமாக நடிகை நந்திதா தாஸின் தந்தை ஓவியர் ஜதீன் தாஸ் டெல்லியின் மிக மிக முக்கியமான பகுதியில் அரசு பங்களாவை பல ஆண்டுக்காலமாக இலவசமாக பயன்படுத்திவருகிறார். அவரை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது அரசு. நந்திதா தாஸ் சகிப்புத்தன்மை குறைந்துவருவதாக கொந்தளித்து நாளிதழ்களில் எழுதுவதும் தொலைக்காட்சிகளில் பேசுவதும் வேறெதற்காக? சகிப்புத்தன்மைக்கான தற்கொலைப் படைப் போராட்டம் மேலும் வலுப்பெறவே வாய்ப்பு

மோடி தவறான இடத்தில் கையை வைத்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன். உலக மீடியாவில் இந்தியாவை சீரழிக்க இவர்களால் முடியும். இங்கு ரத்த ஆறு ஓடுவதாக ஒரு சித்திரத்தை மிக எளிதாக உருவாக்குவார்கள். தொழில்துறைத் தயக்கங்களை உருவாக்கவும் சுற்றுலாத் துறையை அழிக்கவும் இவர்களால் முடியும். இவர்களுக்கு இந்தியாவில் இன்று மாற்றே இல்லை என்பதே உண்மை. இவர்களை சகித்துக்கொள்வதே இன்று இந்தியாவுக்கு இன்றியமையாதது. மோதியின் சகிப்பின்மை ஆபத்து.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...