Friday, June 2, 2017

கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா

கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா

“பறவைகளுக்குக் கூடு உண்டு, விலங்குகளுக்கு குகைகள் உண்டு, மனித குமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை” - மத்தேயு 8:20

இணையத்தில் வேறு எதற்காகவோ மேய்ந்துகொண்டிருக்கையில் நல்ல மேய்ப்பருடைய சாம்ராஜ்ய விரிவாக்கத் திட்டங்கள் பற்றிய பல விவரணங்களில் தடுக்கி விழ நேர்ந்தது. அனேகமாக எல்லா உலகளாவிய மதப்பிரசார, மதமாற்றத் திட்டங்கள் பற்றிய வலைத்தளங்களிலும் உலகத்தை கிறிஸ்தவ மயமாக்கி ஆக்கிரமித்தல் என்ற தங்கள் ஆதிக்க உள்நோக்கத்தை எந்த வித தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தெளிவாகவே சொல்லிவிடுகிறார்கள். பாசாங்கு செய்யும் தெருவோர கிறிஸ்தவ பஜனைக்காரர்கள், சுவிசேஷக் கூச்சல்காரர்கள் இவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களது எஜமானர்களின் வெளிப்படையான போக்கைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஜோஷுவா ப்ராஜெக்ட் (Joshua Project) எனப்படும் இத்தகைய ஒரு திட்டத்தின் வலைத்தளத்தில் உலகெங்கும் உள்ள “சென்றடையாத மக்களுக்கு” (unreached peoples) இவர்கள் நற்செய்தியைக் கொண்டு சென்று “முடிக்கப் படாத பணியை முடிப்போம்” என்று அறைகூவுகிறார்கள். முகப்பிலேயே பாரத வரைபடம் “வரைபடங்கள், புள்ளிவிவரங்கள், மேலும்” என்கிறது. குண்டு வைத்தல் (planting a bomb) என்பதற்கு ஈடாக சர்ச் வைத்தல் (Church Planting) என்ற சொல்லாடலை சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தேசவாரியாக, மொழிவாரியாக உலகெங்கும் உள்ள மக்கள் குழுக்களின் பட்டியல், அதில் ஒவ்வொரு குழுவினரின் மக்கள் தொகை, அதில் எத்தனை சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள், எத்தனை சதவீதம் மதப்பிரசாரகர்கள் (evangelicals) என்ற விவரங்கள். இந்தியாவைப் பொறுத்த வரையில் மக்கள் குழுக்கள் என்பதில் சாதிகள் வருகின்றன. மொழிவாரியாக “தமிழ்” என்று தேடி பட்டியலிட்டால் [1] அடவியார், அத்தப்பு சிங்கா, ஆதி ஆந்திரா, ஆதி திராவிடா என்று ஆரம்பித்து விடுகிறது. முன்னேற்ற அளவு (progress scale) என்பதில் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை சதவீதம் மேய்ப்பரின் ஆடுகளாக மாறியிருக்கிறார்கள் என்று காண்பிக்க சிவப்பு, பச்சை, நீலம் என்று வண்ணக் குறியீடுகள் வேறு!

மகா கீழ்த்தரமான, பிளவுபடுத்தும் சாதி அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளிடமோ அல்லது வாக்காளர்களின் சாதி எண்ணிக்கையையே முக்கிய அளவீடாக வைத்து “அறிவியல் பூர்வமாக” தேர்தல் கணிப்புகள் கூறும் பிரணய் ராய் குழுவிடமோ கூட இந்த அளவு நேர்த்தியாக சாதிப் பட்டியல் போடும் அளவுக்கு எண்ணமோ, வசதியோ இருக்காது என்று தோன்றுகிறது. சாதீயத்தை வேரோடு ஒழித்து, சமத்துவத்தை நிலைநாட்டும் கர்த்தரின் சாம்ராஜ்யம் புல்லரிக்க வைக்கிறது.

சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் சேல்ஸ் குழுக்கள் பொறாமைப் படும் அளவுக்கு திட்டம் தீட்டுகிறார்களே என்று யோசித்துக் கொண்டே இருக்கும்போது, கண்ணில் பட்டது மதமாற்ற பிரசாரகர்களுக்கான “உலக மதமாற்ற நிலவரம்” என்னும் ஒரு பயிற்சிக் கையேடு [2]. அதில் 12-வது பக்கத்தில் உள்ள ஒரு படம் இதோ:




“உலகின் எல்லை வரை நற்செய்தி”
‘கோக்’கால் ஆன உலகம்:
10% கோக் ரசிகர்கள் (ஏசுவின் உண்மையான அடியாள்கள்)
20% கோக் அருந்துபவர்கள் (பொதுவான கிறிஸ்தவர்கள்)
40% கோக் அருந்தாதவர்கள் (நற்செய்தி செல்லும் இடங்களில் இருந்து, ஆனாலும் மனம் திருந்தாதவர்கள்)
30% கோக் தெரியாதவர்கள் (நற்செய்தி இன்னும் சென்று சேராதவர்கள்)

இது ஒரு உதாரணம் மட்டும் அல்ல. தங்கள் போற்றுதலுக்குரிய தேவகுமாரனின் செய்தியின் மதிப்பு என்ன, அதை எப்படி மார்க்கெட் செய்யவேண்டும் என்ற இவர்களது எண்ண ஓட்டத்தையும் இது துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. இதே பயிற்சிக் கையேட்டில் (பக்கம் 22), சீனாவில் கிறிஸ்தவம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். 1948-ல் 1 மில்லியனுக்கும் குறைவாக கிறிஸ்தவர்கள் இருந்த சீனாவில் இன்று 90 மில்லியன் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களாம். ஒவ்வொரு நாளும் 24,000 புதிய சீன கிறிஸ்தவ விசுவாசிகள் தேறுகிறார்களாம். இன்றைய கணக்குப் படி வட அமெரிக்காவை விட அதிகம் கிறிஸ்தவர்கள் சீனாவில் இருக்கிறார்களாம். “தி இந்து” என்று பெயர் வைத்துக் கொண்டு, இந்துப் பண்பாட்டிற்கும், சமுதாயத்திற்கும் குழிபறிக்கும் வேலை செய்யும், மாவோவை ஆராதிக்கும் மவுண்டுரோடு புரட்சியாளர்கள், கம்யூனிசத்தைக் கரைத்துத் தள்ளும் இந்த ஆபிரகாமின் ‘அபின்’ மழை பற்றி ஏன் ஒன்றுமே சொல்வதில்லை?




லாவோட்சுவும், கன்பியூஷியசும், பௌத்தமும் வளர்த்த பழைய ஞான வயலில் கோகோ கோலாவைப் பொழிந்து நிமிடத்தில் அதைக் காலி செய்து விடலாம். என்னே தேவனின் மகிமை!

இன்னொரு வலைத்தளத்தில் கர்நாடகத்தின் லிங்காயத் எனப்படும் வீரசைவ சமூகத்திற்குள் மதமாற்றம் செய்வதற்காக அனுப்பப்பட்ட பிரசாரகர்கள் “எவ்வளவோ வருடம் ஊழியம் செய்தாலும் இந்த சமூகத்தில் ஒரு பயலும் கர்த்தரின் நற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாத பாவிகளாக இருக்கிறார்களே” என்று புலம்பித் தீர்க்கிறார்கள். முதலீட்டுக்குத் தக்க லாபம் இல்லை என்றால் எப்படி நடத்துவது வியாபாரம்? நியாயம் தானே? ஆனால் உலகளாவிய மனித நேயத்தையும், சிவ பக்தியையும் போதித்து, சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய மாபெரும் சீர்திருத்த வாதியான பசவேஸ்வரர் நிறுவிய இந்து சமயப் பிரிவினைச் சேர்ந்த இந்த சமூகத்தினருக்கு ஏசுவின் இரத்தத்தாலோ, அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாலோ என்ன பிரயோஜனம் என்று ஏன் இந்த வியாபாரிகள் நினைப்பதில்லை? ஒரு அமைதியான, முன்னேற்றம் விழையும், ஆன்மிகத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கு உள்ளே நுழைந்து அதைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கமே அருவருக்கத் தக்கதாக இல்லையா? வன்முறையையும், வெறுப்பையும், கைக்கொள்ளாத இத்தகைய சமூகங்களில் இருந்து இந்த மதப்பிரசாரகர்கள் பாடம் அல்லவா கற்றுக் கொள்ள வேண்டும்?

இப்படிப் பட்டியல் இடுவதே உலகின் பல தேசங்களில் வாழும் பலவித மக்கள் குழுக்களை இழித்து, அவமதிப்பதும், அவர்களது கலாசாரத்தின், மதத்தின் மீதான நேரடி தாக்குதலும் ஆகும். இதை இந்த கிறிஸ்தவ மதமாற்றக் குழுக்களும், இவர்களது ஏஜெண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலும் செயல்படும் மதப்பிரசார வெறியர்கள் கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கிறார்களா?




பொட்டு வைத்த இந்துப் பெண்கள், தலைப்பாகை கட்டிய இந்துக்கள், சீக்கியர்கள், தொப்பி வைத்த முஸ்லீம்கள், அரபு ஷேக்குகள், மொட்டையர்கள், வெள்ளைய பொதுப் புத்தியில் “காட்டுமிராண்டிகளான” கறுப்பு, பழுப்பு என்று பலவண்ண இந்துக்கள் இவர்கள் அனைவரும் நீண்டு விரியும் ஏசு கிறிஸ்துவின் கைகளுக்குள் போவது போன்று பிரமாதமான சித்திரம் வரைந்து அதை பெங்களூர், சென்னை போன்ற நகரங்களின் சந்திகளில் பெரிய அளவில் விளம்பரப் பலகைகள் வைக்கிறார்களே, என்ன திமிர், என்ன ஆணவம், மற்ற மதங்களின், கலாசாரங்களின் மீது என்ன ஒரு இளக்காரம் இருக்க வேண்டும் இப்படி செய்வதற்கு? நீண்ட அந்தக் கரங்கள் எங்கள் கலாசாரத்தையும், சமயத்தையும், சமுதாயத்தையும் அழிக்க வரும் விஷக் கொடுக்குகள் என்று நாங்கள் கருதுவதில் என்ன தவறு? சிலுவை மாலை போட்ட மனிதர்கள் கூட்டம் அதை அறுத்தெறிந்து விநாயகர் முன் நின்று தொழுவது போல நான் படம் வரைந்து, அதை வீதிதோறும் நிறுத்தினால், சகித்துக் கொள்வார்களா இந்த வெறியர்கள்?




உலகின் வளரும் நாடுகளில் எல்லாம் கோகா கோலா என்பது எதேச்சாதிகாரத்தின், பொருளாதார ஆக்கிரமிப்பின், ஊடுருவலின் சின்னமாகவே கருதப் பட்டு வருகிறது. ஒன்றுக்கும் உபயோகமில்லாத, உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒரு சமாசாரத்தை எப்படி பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம் விற்றுத் தள்ளுவது என்பதற்கும் கோகோ கோலா ஒரு சிறந்த உதாரணம். கோலாவின் அரித்துத் தின்னும் அமிலத் தன்மை வெகு பிரசித்தம் - ‘கோக்’கை ஊற்றி அமெரிக்க காவல்துறையினர் ரத்தக்கறைகளைக் கூட கழுவுவார்கள் என்று செய்திகள் உண்டு. மேலும் கவனித்தீர்களானால் எந்த கோகா கோலா விளம்பரங்களிலும் அந்த பானத்தில் என்ன இருக்கிறது, அது எப்படி நன்மை செய்யும் என்பது பற்றிய மெஸேஜ் எதுவும் இருக்காது, ஆனால் கோக் குடிப்பது தான் பிறவிப் பயன், இந்த பானத்தைப் பருகாதவன் எல்லாம் மனிதனே இல்லை, இளநீர் குடிப்பவன் காட்டான் கோக் குடிப்பவன் நாகரீகமானவன் என்பது மாதிரி மெஸேஜ்கள் தான் இருக்கும்.

இத்தகைய சமூக-அழிப்பு மதப்பிரசாரத் திட்டங்களை வர்ணிக்கும் “இந்தியாவை வன்புணர்தல்” (The Rape of India) என்ற தனது கட்டுரையில் [4] டேவிட் கோஸ்டின்சுக் (David Kostinchuk) கூறுகிறார் - “மதமாற்றப் பிரசாரகர்கள் இந்தியாவில் தங்களது இறுதி கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகையில் ஏற்படும் விளைவுகள் பரபரப்பானவையாகவும், வருத்தம் தரக் கூடியவையாகவும் இருக்கும். மதப்பிரசாரத்திற்கு எதிரான பெருவாரியான எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் செய்தித் தாள்களில் பார்க்கலாம். மதப்பிரசாரகர்கள் அரசியல்வாதிகளிடமும், சமூக உரிமை குழுக்களிடமும், மேற்கத்திய செய்தி ஊடகங்களிலும் கூக்குரல் இடுவார்கள்

இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரிசாவின் பழங்குடி வனவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் பின்னணியில் நடந்த கலவரம் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. “இந்து வெறிக் கும்பல்களால்” 14 “சர்ச்சுகளும் ஜெபக்கூடங்களும்” (உச்சியில் சிலுவைகள் சொருகிய உடைந்து விழும் ஓலைக் குடிசைகள்) எரிக்கப் படுவதாக அமெரிக்க [5], பிரிட்டிஷ் [6] ஊடக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மதமாற்ற பிரசாரத்தை (கிறிஸ்தவ மதத்தையே அல்ல) எதிர்த்து இயக்கம் நடத்திய 80 வயது முதியவரான, எளிய வனவாசி சமூகத்தைச் சேர்ந்த துறவி சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி [7] என்ற “இந்து பழைமைவாத தலைவர்” (Hindu conservative leader) தாக்கப் பட்டது இதற்குக் காரணம் என்று அவை அறிவிக்கின்றன. பழங்குடியினர், மலைச்சாதியினர் இந்துக்களே அல்ல, அவர்கள் “மிருக வழிபாட்டாளர்கள்” (animists) என்று சூடம் அணைத்து சத்தியம் செய்யும் இந்த ஊடகங்களின் அகராதியில், அதே மலைவாசி, பழங்குடியினர் அக்கிரமம் தாங்காமல் பொங்கியெழுந்து ஆக்கிரமிப்பு தலங்களை எரிக்கும்போது “இந்து வெறிக்கும்பல்கள்” ஆகிவிடுகிறார்கள். என்னவொரு கருத்து நேர்மை!

தன் கட்டுரையின் இறுதியில் டேவிட் கேட்கிறார் - “மதமாற்ற பிரசாரகர்களும் அவர்களது பணியாளர்களும் பல நாடுகளிலும் அங்கிருக்கும் சமூகங்கள், கலாசாரம், மதம் மற்றும் மக்களின் குடும்பங்களில் குழப்பம் விளைவிக்க உரிமை உள்ளதா? அல்லது, மக்கள் தங்கள் சமூகம், கலாசாரம், மதம் மீது தொடரப்படும் தாக்குதலை எதிர்த்து போராட உரிமை உள்ளதா?” 

“தலைசாய்க்க இடமில்லாத” மனிதகுமாரனுக்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment