குறளில் வாழ்க்கைத் துணைநலத்தைப் பற்றி சொல்ல வந்த 6-ஆம் அத்தியாயத்திலும் பெண் வழிச் சேரல் என்பதைப்பற்றி சொல்ல வந்த 91-வது அத்தியாயத்திலும் மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத் தன்மையையும் தாழ்ந்த தன்மையையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணக்கிடக்கின்றது. தெய்வத்தைத் தொழாமல் தன் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும், தன்னைக் கொண்டவன் என்றும் இம் மாதிரியான பல தாழ்த்தத் தகுந்த கருத்து கொண்ட வாசகங்கள் காணப்படுகின்றன.
இது விஷயத்தில் மாறுபட்ட அபிப்பிராயம் கொள்ளுவோர், மேல்கண்ட இரண்டு அத்தியாயங் களையும் 20 குறள்களையும் உரைகளைக் கவனியாமல் மூலத்தை மாத்திரம் கவனிக்கும்படி வேண்டுகிறேன். அப்படிப் பார்த்து பிறகு இந்த இரண்டு அதிகாரங்கள் அதாவது வாழ்க்கைத் துணை நல அதிகாரமும், பெண்வழிச் சேரல் அதிகாரமும் குற்றமற்றது என்பதாக யார் வந்து எவ்வளவு தூரம் வாதிப்பதானாலும் கடைசியாக, திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணா யிருந்து இக் குறள்களை எழுதியிருப்பாரானால் இம்மாதிரி கருத்துக்களை காட்டியிருப்பாரா? என்பதையாவது கவனிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.
- தோழர் பெரியார், குடி அரசு - 08.01.1928
***
இனி தமிழர்களால் சமதர்மநூல் என்று சொல்லப்படும் குறளில் தீண்டாமைக்கு இடமில்லை என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதன் உண்மைநிலை என்ன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமையால்”
என்ற குறளைக் கொண்டு பிறப்பு வித்தியாசத்தைத் திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளவில்லையென்றும் தொழில் வேற்றுமை பற்றியே உயர்வு தாழ்வு வித்தியாசம் உண்டென்றும் கூறுகின்றனர். இதுவும் தீண்டாமையை ஒரு வழியில் ஒப்புக் கொள்ளுகின்றதென்பதே நமது அபிப்பிராயமாகும். உயர்வு தாழ்வு வித்தியாசத்தைக் கற்பிப்பது பிறப்பாயிருந்தாலும் சரி அல்லது தொழிலாயிருந் தாலும் சரி, அவை மூலம்தான் தீண்டாமையும் உற்பத்தியா கின்ற தென்பதை யாரும் மறுக்க முடியாது.
அல்லாமலும் திருவள்ளுவரும் வருணாச்சிரம தர்மத்தை ஒப்புக் கொள்ளமலில்லை யென்றே சொல்லலாம்.
“மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”
என்னும் குறள்பாடல்கள் வருணாச்சிரம தருமத்தைப் போதிப்பனவேயாகும்.
“பார்ப்பான் வேதத்தை மறந்து விட்டாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவனுடைய பிறப்பிற்குரிய ஒழுக்கத்தை விட்டு விடுவானானால் கெடுவான்”.
‘அரசன் சரியாக அரசாட்சி செய்யாவிட்டால் பசுக்களின் நன்மை குறையும் ஆறுவகைத் தொழிலையுடைய பார்ப்பனர்கள் வேதத்தை மறந்து விடுவர்’
என்பனவே மேற்கூறிய குறள்களுக்கு அர்த்தம் என்பதைக் கொண்டு ஆராயும் போது திருவள்ளுவர் வருணாச்சிரம தருமத்தை ஒப்புக் கொள்ள வில்லையென்றாவது, உயர்வு தாழ்வு வித்தியாசங்களை ஒப்புக்கொள்ள வில்லை யென்றாவது, தீண்டாமைக்கு இடங்கொடுக்க வில்லையென்றாவது சொல்ல முடியுமா? ‘தமிழ் வேதம்’ ‘சமதர்ம வேதம்’ என்று சொல்லப்படும் குறளின் நிலமையே இப்படி இருக்குமானால் மற்ற நூல்களின் நிலைமையைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
- தோழர் பெரியார், குடி அரசு - 27.03.1932
***
தீண்டப்படாதவர்கள் விஷயமாகவோ, ஜாதி வித்தியாசம் விஷயமாகவோ, இந்து மத சீர்திருத்த விஷயமாகவோ இந்து மதம் என்றும் சாதி வித்தியாசம் என்றும் ஏற்பட்ட காலம் முதலே முயற்சிகள் செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன.
கபிலர், திருவள்ளுவர், ராமானுஜர் முதலாகியவர்கள் ‘தெய்வத் தன்மையில்’ இருந்து பாடுபட்டிருப்பதாய் சரித்திரம் கூறுகின்றன. புத்தர் முதலிய அரசர்கள் பாடுபட்டிருப்பதாய் ஆதாரங்கள் கூறுகின்றன.
ராம் மோகன்ராய் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமலிங்க சுவாமிகள், விவேகானந்தர் முதலிய ஞானவான்கள் முயற்சித்திருப்பதாய்ப் பிரத்தியட்ச அனுபவங்கள் கூறுகின்றன. இவர்கள் எல்லாம் இன்று பூஜிக்கப்படுகிறார்கள் என்றாலும் காரியத்தில் ஒரு பயனும் ஏற்பட்டதாகக் கூற முடியாது. மேற்கண்ட பெரியார்களுக்கு சிஷ்யர்களாக 100 பேர்களோ பதினாயிரம் பேர்களோ ஒரு லட்சம் பேர்களோ இருக்கலாம்.
அவரவர்கள் ஸ்தாபனங்களில் ஒரு சில லக்ஷம் அங்கத்தினர்கள் இருக்கலாம். மற்றப்படி காரியத்தில் நடந்ததென்ன என்று பார்த்தால் பழய நிலைமையே தான். சட்டதிட்டங்கள் மூலம், வருணாச்சிரம கூட்டங்கள் மூலம் பத்திரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
ஆகவே இவ்விஷயத்தில் ஏதாவது ஒரு காரியம் தகுந்த அளவுக்கு நடைபெற வேண்டுமானால் மேல்கண்டபடி சுவாமிகள் என்றும், அவதாரங்கள் என்றும், மகாத்மா என்றும், பூஜிக்கப்படத் தக்கவர்கள் என்றும் சொல்லி சொல்லிக் கொள்ளுபவர்களால் ஒரு காரியமும் நடைபெறாது. இவர்களை பண்டார சன்னதிகள், சங்கராச்சாரி யார்கள் என்று சொல்லப் படுபவர்களுக்கு ஒரு படி மேலாகச் சொல்லலாம். ஆனால் பொது ஜனங்களால் வெறுக்கப்படுகிறவர்களாலும் தூற்றப் படுகின்றவர்களாலும் தான் அவசியமான ஏதாவது மாறுதல்கள் காரியத்தில் நடைபெறக்கூடும்.
எனவே தோழர் அம்பத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது.
- தோழர் பெரியர் - குடி அரசு - 20.10.1935
***
திருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும் பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்மந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம் உண்மையறியாமலும், உலக மெப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதிபேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும் படியாகவோ செய்த காரியங்கள் அல்ல.
- தோழர் பெரியார், குடி அரசு - 05.04.1936
***
திருமணம் என்று சில தமிழ்ப் புலவர்கள் சொன்னாலும், திருமணத்திற்கும் இந்நிகழ்ச்சிக்கும் சம்பந்தமோ, பொருளோ இல்லை. தமிழனுக்கு மட்டுமல்ல, ஆரியனுக்கும் கிடையாது என்று சொல்வேன். விவாகம், கல்யாணம், முகூர்த்தம் என்பதெல்லாம் வேறு பொருளைக் குறிப்பிடும் சொற்களே தவிர, இந்நிகழ்ச்சியை காரியத்தைக் குறிப்பிடும் சொற்கள் அல்ல.
வாழ்க்கைத் துணை என்பதை வள்ளுவன் சொல்லி இருக்கிறானே என்பார்கள். அவன் ஆணுக்குப் பெண் அடிமை என்பதையே குறிப்பிட்டிருக்கிறான். “தற்கொண்டாற்பேணி” என்ற குறளே பெண்ணை அடிமை என்பதைக் குறிப்பிடுவதே ஆகும் என்று ஆண் - பெண் திருமண முறை தோன்றிற்றோ அன்றே ஆணுக்குப் பெண் நிரந்தரமான அடிமை என்பதும் தோன்றி விட்டது.
மணப்பாறையில் 4, 5-ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில், என் மேல் அன்பு கொண்ட சில புலவர்கள் நான் இதுபோல் பேசியதைக் கேட்டு இம்முறைக்கு இலக்கியத்தில் சான்றுகள் இருக்கின்றன என்று சொல்லி, மணமகன் காளையை அடக்கிப் பெண் கொள்ள வேண்டுமென்று ஒரு கவிதையையும் எடுத்துக் கூறினர். இன்னொன்று ஆணும், பெண்ணும் தோட்டத்தில் உலவும் போது ஒருவருக்கொருவர் பார்த்து சேர்ந்து கொள்வார்கள் என்றும் சொன்னார்கள்.
நான் கேட்டேன், பெண் என்ன காளை, புலியைப் போல அவ்வளவு முரட்டுக் குணத்தன்மை உடையதா? அதை அடக்க அவ்வளவு பலம் பொருந்தியவன் தான் தேவையா? என்று கேட்டேன். அந்தப் புலவர்கள் சிரித்துக் கொண்டார்கள். நான் இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நிகழ்ச்சியைக் குறிக்கத்தக்க வகையில் இந்த நிகழ்ச்சியை உணர்த்தக் கூடிய பொருளில் இந்நிகழ்ச்சி இப்படித்தான் செய்யப்பட வேண்டு மென்கிற முறையில் ஒரு சொல்லோ, ஆதாரமோ எதுவும் நமக்குச் சரித்திர வாயிலாகவுமில்லை - இலக்கியங்களிலும் இல்லை என்பதைத் தெளிவு படுத்தவே ஆகும்.
(19.05.1967 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 29.05.1967)
***
...தமிழனின் வாழ்வு முறைக்குக் குறள்தான் என்று சொல்வார்கள். நாம் காட்டு மனிதனாக இருந்த வரை குறள் சரி. நாட்டு மனிதனான பின், பெண்களுக்குத் தான் அதில் கற்பு நீதி சொல்லப் பட்டிருக்கிறதே தவிர, ஆண்கள் கற்பு நீதி பற்றி அதில் ஒன்றுமில்லை. குறளைத் தூக்கியெறிய வேண்டியது தான். பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வார்த்தை கூட அதில் இல்லை.
குறளில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியங்கள் யாவுமே பெண்களை அடிமைப்படுத்தக் கூடிய தாகவே இருக்கின்றன என்பதை விளக்கும்போது சின்னத்தம்பி அவர்கள் "அய்யா அவர்கள் மன்னிக்க வேண்டும் குறளில் ஆண்களுக்கும் நீதி சொல்லப் பட்டிருக்கிறது. "பிறர் இல் விழையாமை" என்ற ஓர் அதிகாரமே இருக்கிறது. பிறன் மனைவியை நினைப்பது, தீண்டுவது குற்றமென்று வள்ளுவர் ஆண்களுக்கும் சொல்லியிருக்கின்றார்" எனக் குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் அவர்கள், “அய்யா சொன்னது ரொம்ப சரி. வள்ளுவன் மற்றவன் திருமணமும் செய்து கொண்டுள்ள பெண்களை நினைப்பது, தீண்டுவது குற்றமென்று சொன்னானே தவிர, திருமணமாகாத பெண்களைத் தீண்டுவது குற்றமென்று சொல்லவில்லையே! பெண்கள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, அதாவது ஆண்களைக் கண்டால் பயந்து கொண்டும், வெட்கப்பட்டும், படிக்காத மடைச்சியாகவும், பிறர் கண்டால் அருவருப்பு அடையும்படியும் இருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, மனைவி கடவுளைத் தொழவிட்டாலும், கணவனைத் தொழுபவளாக இருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, ஆண்கள் தன் மனைவியைத் தொழ வேண்டும். மனைவி சொல்படி கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையே. அவ்வை பெண்தான். அப்படி இருந்தும், அவளே "தையல் சொல் கேளேல்" 'பெண் சொல்வதைக் கேட்காதே' என்று தான் எழுதி இருக்கிறாள்.
நான் வள்ளுவனைக் குறை கூறுகிறேன் என்று கருத வேண்டாம். அவன் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது. மனிதனெல்லாம் காட்டு மிராண்டியாக இருந்த காலம். அப்போதிருந்த நிலைமைக்குத் தக்கபடி அப்போதுள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி அவன் எழுதி இருக்கின்றான். இது அவன் குற்றமல்ல. அப்போதிருந்த நிலை அப்படிப்பட்டது. அதுவே இன்றைக்கும் என்பது தான் தவறாகும். மனிதன் 2,000-ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இன்றில்லை. தனது வசதிக்கும், வாய்ப்பிற்கும், தேவைக்கும் ஏற்ப உணவு, உடை, உறையுள் மற்ற எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டிருக்கின்றான்.
இதை மட்டும் மாற்றிக் கொள்ள மாட்டேனென்றால் இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? நீங்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மனிதன் எதில் மாறாமல் இருக்கின்றான்? நன்றாகச் சிந்தியுங்கள். உங்களுக்கு ஏதாவது தோன்றினால் எடுத்துச் சொல்லுங்கள். மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தால் எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.
(02.06.1968-அன்று நடைபெற்ற கொட்டையூர் திருமண விழாவில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 15.06.1968)
***
...திருமணம் என்பதே ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவது என்பது தான் பொருள். நீங்கள் இன்னும் பத்தாயிரக்கணக்கில் நகை போட்டாலும் அந்தப் பெண் ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென்பது, “தெய்வம் தொழா அள் கொழுநன் தொழு தெழுவாள்” என்கிறான் வள்ளுவன். நாம் கடவுளே வேண்டாமென்று சொன்னால், அப்புறம் கணவன் என்ன வெங்காயம், எதற்காக ஒரு பெண் தன் கணவனை வணங்க வேண்டும்? அவன் என்ன அவ்வளவு உயர்ந்தவனா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
(16.06.1968- அன்று பொத்தனூரில் நடைபெற்ற திருமண விழாவில் தோழர் பெரியார் உரை. 'விடுதலை', 08.07.1968)
***
நம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவன் தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். பாரதிதாசனைப் போல சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல நம் புலவர்கள் முன்வர வேண்டும். புலவர்களை வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறேன்.
ஆண்களுக்கு எந்தப் புலவனும் ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லவில்லை. அத்தனை நீதி சொன்னவனும், ஒழுக்கம் பற்றிச் சொன்னவனும் பெண்களுக்குத்தான் சொல்லி இருக்கிறான். இன்றைக்கு நாம் நினைப்பதை அவன் எப்படி நினைக்க முடியும். இன்றைய உலகம் வேறு; நேற்றிருந்த உலகம் வேறு.
பழைய வைத்தியன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், இப்போது இங்கிலீஷ் வைத்தியத்தில் பெயிலாகப் போனவனால் செய்யக் கூடியதைக் கூட அவனால் செய்ய முடியாது. பழைய வைத்தியன் முறையே மணி - மந்திரம் - அவ்டதம் என்பது. இப்போது அதெல்லாம் பயன்படுவது கிடையாது. அதுபோல இன்றைய வாழ்வுக்குப் பழைய சங்கதியைப் படிக்கவே கூடாது. எந்த நெருக்கடியான கட்டமாக இருந்தாலும் நமக்கு எதிரேயுள்ள - நம் அறிவிற்கு, சிந்தனைக்கு, நடப்பிற்கு ஏற்றதைக் கொண்டு தான் செயல்பட வேண்டுமே தவிர, முன்னோர்கள் நடந்து கொண்டார்கள், பழைய புராணம், இதிகாசம் இப்படிச் சொல்கிறது என்று பின்னோக்கியுள்ளதைப் பார்க்கக் கூடாது.
...வள்ளுவன் அப்படிச் சொன்னான்; தொல்காப்பியன் இப்படிச் சொன்னான் என்றால், அதெல்லாம் அவன் வாழ்ந்த காலத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர, இப்போதைக்கு அவை பயன்படக் கூடியதல்ல. இந்த வாழ்க்கைக்கு எவனும் வேலி போட முடியாது. நாளைக்கு எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மனிதன் மாறிக் கொள்ளத்தான் வேண்டும்.
நம் புலவர்களுக்குத் தைரியம் இல்லை. இலக்கணம் - இலக்கியத்தின் மேலேயே அவர்கள் கண் இருப்பதால் அவர்கள் எண்ணம் பழைமை யிலேயே போகிறது. பகுத்தறிவே அவர்களுக்கு ஏற்படுவது கிடையாது. பகுத்தறிவு ஏற்படும்படியான இலக்கியங்கள் - நூல்கள் எதுவும் தமிழில் கிடையாது. இருப்பதெல்லாம் மனிதனின் அறியாமை - முட்டாள்தனம் - மூடநம்பிக்கை இவற்றை வளர்ப்பவை தான். பார்ப்பான் வருகிற வரை நமக்குச் சரித்திரமே கிடையாது. இருந்ததை யெல்லாம் பார்ப்பான் கொளுத்தி விட்டான். ஒன்றிரண்டு மிஞ்சியதையும் மாற்றி விட்டான்.
புலவனென்றால் புதிய கருத்துகளைச் சொல்ல வேண்டும். பழைய குப்பைக் கூளங்களையே கிளறிக் கொண்டிருப்பது, அதற்கு விளக்கம் - உரை - பொருள் என்றெல்லாம் துருவிக் கொண்டிருப்பது பழைமையானது. இன்றைக்கு என்ன நடக்கிறது, நாளைக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சிந்தித்து அதை எடுத்துக் கூறுவதுதான் உண்மை. புலமைக்கும் புலவனுக்கும் இலட்சணமாகும்.
நாய் எலும்பைக் கடிக்குமாம். அந்த எலும்பில் சதையே இருக்காதாம். அந்த எலும்பு நாயின் எயிறில் பட்டு இரத்தம் வருமாம். அந்த இரத்தம் எலும்பிலிருந்து வருவதாகக் கருதி மேலும் கடித்து எயிறை எல்லாம் கிழித்துக் கொள்ளுமாம். அதுபோன்றுதான் நம் புலவர்கள் பழைய குப்பைகளைக் கிளறி அதன் மூலம் கிடைக்கும் பதவி எலும்பைக் கடிக்க ஆசைப்படுகின்றார்களே தவிர, உண்மை நிலையை எடுத்துச் சொல்லி சமுதாய மக்களை முன்னேற்றுவோம் - அறிவுடையவர்களாக்குவோம் என்று எவரும் பாடுபடுவது கிடையாது.
(03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை - 06.08.1968)
***
...நாம் காட்டுமிராண்டிக் காலத்தில் காட்டுமிராண்டியாக மனிதன் இருந்த போது எழுதப்பட்டதுதான் நம் இலக்கியங்களாகும். நம் புலவர்கள் பெருமைப்படும் வள்ளுவன் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறான் என்றால், பெண் கடவுளைத் தொழ வேண்டும் என்கின்றான். மற்றும் புராணங்கள் - கடவுள் கதைகள், இலக்கியங்கள் எல்லாமே பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன. இந்தத் துறையில் ஒரு மாறுதல் ஏற்பட வேண்டுமென்று சொன்னதும் அதற்காகத் தொண்டாற்றியதும் நம் சுயமரியாதை இயக்கமேயாகும்.
(09.03.1969 அன்று பூதலூரில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 17.03.1969)
***
...வள்ளுவன் மேலே எனக்குக் கோபம் வந்ததற்குக் காரணமே அவன் இல்வாழ்வு வாழ வேண்டுமென்று கூறியதில் தான்! எதற்காக அறிவுடைய மனிதனுக்கு இல்வாழ்வு? அதனால் மனிதன் அடைந்த பலன் என்ன? இல்வாழ்வு குடும்பம் என்று இப்படியே 1,000- வருஷத்திற்கு இருந்து பலன் என்ன? உன்னால் ஆனது என்ன? உன்னுடைய அறிவிற்கு என்ன பயன்? மனித ஜீவனுடைய நிலை இதுதானா?
இதற்கு மேலே போகிற அறிவு நமக்கு இல்லாதனாலே மோட்சம் தான், நரகம் தான் என்றிருப்பதாலே கோயிலைக் கட்டிக் கொண்டு போகிறான். மனிதன் என்றால் ஞானம், மோட்சம் வேண்டும் என்கின்றான். அவை என்னடா என்றால், அது உனக்கல்ல, ஞானிகளுக்கு என்கின்றான். உனக்குப் புரிந்து கொள்ள முடியாது என்கின்றான்.
குறைந்த அளவு ஒழுக்கத்தோடு, நாணயத்தோடு வாழ வேண்டுமென்றில்லையே! பெண்ணாகப் பிறந்தால் கணவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். குட்டி போட வேண்டும். தன் அறிவைப் பயன்படுத்தக் கூடாது. ஆணாகப் பிறந்தால் மனைவியை - பிள்ளைக் குட்டியைக் காப்பாற்ற வேண்டும். இதுதான் அவனுக்கு வாழ்க்கைச் சிந்தனையாக இருக்கிறது.
மதம், கடவுள், இலக்கியம், மோட்சம், இவை நம் அறிவைக் கெடுத்து விட்டன. மனித சமுதாயம் அறிவோடு வாழ வேண்டியது; சுதந்திரத்தோடு வாழ வேண்டியது; புதுவாழ்வு மலர வேண்டியது என்கின்ற எண்ணம் எவனுக்குமே தோன்றுவது கிடையாது. மனித சக்திக்கு மேல் ஒரு சக்தி இருப்பது என்பது பித்தலாட்டம். இனி இந்தக் குடும்ப வாழ்வு - இல்லற வாழ்வு என்பதைச் சட்டப்படிக் குற்றமாக்க வேண்டும்.
(23.04.1969 அன்று தஞ்சையில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 02.05.1969)
***
...நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின் றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர் களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறை யில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்து கின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்ல வில்லை. இந்த வள்ளுவர்தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லி யிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத்தான் கற்போடிருக்க வேண்டு மென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.
அந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், “சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்” என்று சொன்னேன்.
அதற்கு அவர் திருக்குறளிலிருந்து “பிறன் இல்விழையாமை” என்ற அதிகாரத்தைக் காட்டி, “வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்” என்று சொன்னார். நான் உடனே, “பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண் களிடமோ போகக்கூடாது என்று சொல்ல வில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொரு வனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்ல வில்லையே” என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
(18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை)
***
...தமிழ்நாட்டில் ஒரு வீரன் யார் என்றால் கட்டபொம்மன் என்கின்றான். அவன் கதையைப் பார்த்தால் அவன் ஒரு பெரிய கொள்ளைக்காரனாக இருந்திருக்கின்றான். அந்தக் கொள்ளைக்காரனைத் தான் வீரன் என்று சொல்ல முடிகிறதே தவிர, உண்மையான வீரன் ஒருவனைச் சொல்ல முடிய வில்லையே.
உயர்ந்த இலக்கியம் எது என்றால் திருக்குறள் என்கின்றான். திருவள்ளுவர்தான் உலகிலேயே சிறந்த அறிவாளி என்கின்றான். அந்த வள்ளுவன் என்ன சொல்கின்றான் என்றால், “பெண்கள் கணவனைத் தொழ வேண்டும்” என்கின்றான். எதற்காக ஒரு பெண் கணவனைத் தொழ வேண்டும்? மனு தர்மத்தில், எப்படி சூத்திரன் பார்ப்பானைத் தொழ வேண்டும் என்று சூத்திரனை இழிவுபடுத்து கின்றானோ அதுபோலத்தானே இதுவும் பெண்ணைக் கீழ்மைப்படுத்துவதாக இருக்கிறது? பெண்ணை விட ஆண் எதில் உயர்ந்தவன்? இன்னும் எத்தனையோ முட்டாள்தன - மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கின்றன.
இன்றைய அறிவிற்கு அது ஏற்றதில்லை. இருக்கின்ற பழைய குப்பைகளில் அது ஓரளவுக்குத் தேவலாம் என்றுதான் சொல்லலாமே தவிர, அதுதான் உயர்ந்தது என்று சொல்ல அதில் எதுவும் கிடையாது.
(07.05.1969 அன்று காவாலக்குடியில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 13.05.1969)
தொகுப்பு: தமிழ் ஓவியா, பழனி
No comments:
Post a Comment