Monday, November 6, 2023

ஈவெராமசாமியார்- மணியம்மாள் திருமணம் பற்றி அண்ணாதுரையார்

 ஈவெராமசாமியார்- மணியம்மாள் திருமணம் பற்றி அண்ணாதுரையார்

 

அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம்

  செப்டம்பர் 20, 2023 https://indian7.in/?postid=691

9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை :

சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டில் தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26. அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர். பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள், இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.

திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூட சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்.

அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ” பக்தர்கள் அவதார புருஷர்களை ” பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயது ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை. பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர். காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.

பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக, சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார். பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.

அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.

தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.

ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே –

பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!

”ஏம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே. சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே! பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே,

இதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே-

என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம்

கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண! வேதனைப்படுகிறோம் தனிமையிலே! ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்?உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும்,72-26 இதை மறுக்கமுடியாதே!

இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே! இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே!ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்!கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது,பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது? பெரியாரின் உயிரைப் பாதுகாக்க,உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது!

புயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!! இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்!

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது

அண்ணா / பெரியார் / மணியம்மை

No comments:

Post a Comment

சசி தரூர்: ‘சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த அமெரிக்காவுக்கு முழு உரிமை உண்டு.

Shashi Tharoor: ‘US is entirely entitled to deport illegal Indian immigrants… I’m only unhappy they sent them in military plane’ Senior Cong...