கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நேற்று நடந்த நேர்காணலில், 'ஈ.வெ.ரா. பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்' என, அறநிலையத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியது ஆன்மிகவாதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் புகழ் பெற்றது. சைவ சமயக்குறவர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடப்பட்ட புகழ் பெற்ற ஸ்தலம். இக்கோவிலில் இளநிலை எழுத்தர் இருவருக்கும், பதிவறை எழுத்தர் ஒருவருக்கும், சீட்டு விற்பனையாளர் ஒருவர், இரு துாய்மைப்பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்து வருகிறது.
நேற்று நடந்த நேர்காணலில், 375 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் கோவில் உதவி கமிஷனர் மற்றும் அதே அந்தஸ்திலுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கேள்விகளை கேட்டனர்.
அப்போது, 'ஈ.வெ.ரா. பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்? ஈ.வெ.ரா.வின் பொன்மொழிகளில் உங்களை கவர்ந்தது எது? திராவிட மாடல் அரசு, தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு செய்த பணிகள் என்ன?' போன்ற கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் பங்கேற்ற பலரும் தடுமாறினர். நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'ஆன்மிகத்துக்கும், ஈ.வெ.ரா.வுக்கும் என்ன சம்மந்தம்? கடவுள் இல்லை என்று சொன்னவரை பற்றி, வேலை தேடி வருவோரிடம் கேள்வி எழுப்பினால் எப்படி? கோவில் சம்மந்தமாகவோ, சைவ சமயம் சார்ந்த அல்லது ஆன்மிகம் சார்ந்த கேள்வி எழுப்பினால், நாங்கள் பதில் சொல்லியிருப்போம்' என்றனர்.
No comments:
Post a Comment