தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த ஆய்வறிக்கை
கடந்த மழைவெள்ளத்தின் போது சென்னையில் மாட்டிக் கொண்ட வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்த கட்டுரையொன்றை உயிர்மையில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரைக்கான தரவுகளுக்காக, அரசு அதிகாரிகள் சிலரிடம் மழைவெள்ளத்தால் செத்துப் போன வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த கணக்கு எதுவும் இருக்கிறதா என்று கேட்ட போது, அவர் உடனடியாக உதட்டைப் பிதுக்கினார்.
இத்தனைக்கும் அரசுத் தரப்பில் சுமார் நானூறு பேர் இறந்ததாக அப்போது கணக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நானூறு பேரில் ஒருத்தர் கூடவா வடமாநிலத் தொழிலாளர்களாக இல்லை என்கிற கேள்வியை அவர் கண்டும் காணாமல் கடந்து போனார். ஆனால் யதார்த்தம் வேறுமாதிரியாக இருந்ததை நண்பர்கள் உறுதி செய்தார்கள்.
கோட்டூர்புரத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின் மூன்று பிணங்கள் மிதந்து போனதைத் தான் நேரில் பார்த்ததாக நண்பர் ஒருத்தர் சொன்னார். அன்றிலிருந்து அவர்கள் தமிழ்நாட்டில் எப்படி வாழ்கிறார்கள் என்பதை சுற்றியலைந்து பார்த்து அதை விரிவாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தபடியே இருந்தது.
நியூஸ் 18 தமிழ் செய்தித் தொலைக்காட்சிக்காக உள்ளூர் அகதிகள் என்கிற தலைப்பில் அவர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றைப் படம்பிடிக்க வாய்ப்பும் வந்தது. அது எனக்கு ஒரு திறப்பாக இருந்தது. நாவலாசிரியனாக ஒருநாள் இது எனக்குச் சொத்தாகவும் இருக்கக்கூடும். ஆனால் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் கரம் மசாலா தூவி இந்தக் கட்டுரையை ஒரு பானிபூரியாகப் படைக்க விரும்பவில்லை.
நேரில் கண்ட நிஜத்தை அப்படியே பதிவு செய்வதுதான் என்னுடைய நோக்கம். இதில் உள்ள உண்மைகளை முன்னே பின்னே பொருத்தி ஒரு கட்டுரையாக நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் கோபித்துக் கொள்ளவா போகிறீர்கள்?
அந்த ஆவணப்படத்திற்கான பயணம் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் உயிர்மை வெளியீடான பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற மொழிபெயர்ப்பு நாவலைப் படித்து முடித்திருந்தேன். அந்த நாவல் தந்த அதிர்வோடுதான் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கிற வடமாநிலத் தொழிலாளர்களைத் தேடிப் போனோம்.
பார்த்த காட்சிகளையெல்லாம் அப்படியே எழுதினால் ஆயிரம் ஆடுஜீவிதங்களை எழுதலாம் என்றுதான் தோன்றுகிறது. அத்தனையும் ரத்தம் படிந்த கண்ணீர்க் கதைகள். அந்தக் கதைகளைச் சம்பந்தப்பட்ட யாரும் வெளியில் சொல்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் பேசுகிற துயர மொழிகளைக் கேட்பதற்கான காதுகள் இங்கு தயாராகயில்லை.
தங்களுக்குள் புதைத்துக் கொள்கிறார்கள். உண்மையை அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமெனில், வடமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு கிளம்பி வருவது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சிக்கு ஒப்பானதுதான். அதைவிடக் கொடுமை என்னவெனில், அவர்களது பூர்வீக இடத்தில் வாழவே வழியில்லை என்பதால்தான் கனவுகளோடு இங்கே கிளம்பி வருகிறார்கள்.
அப்படித்தான் ஜார்கண்டிலிருந்து குன்னூருக்குக் கிளம்பி வந்திருக்கிறார் பகவான். எங்களுக்கும் அவருக்கும் புரிந்த எளியவர்களுக்கான மொழியில் அவரோடு பேசிய போது இங்கே என்ன வேலை என்பது குறித்து அந்த நிமிடம் வரை அவருக்கு எதுவும் தெரியாது. ஜார்கண்டிலுள்ள அவருடைய சின்ன ஊரில் வாழ்வதற்கான நம்பிக்கையை அவர் தொலைத்து விட்டார்.
தூரத்தில் ஒரு வெளிச்சம் இருப்பதாகச் சொல்லி, அங்குள்ள புரோக்கர் ஒருவர் பகவானை குன்னூருக்கு அழைத்து வந்திருக்கிறார். அந்த வெளிச்சத்தை நம்பிய விட்டில் பூச்சியாய் அவர் வந்தது மட்டுமில்லை… தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் கையோடு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.
அவர் வந்திறங்கி இருக்கிற குன்னூரில் இருக்கிற பச்சையும் பசுமையும் போல அவர் வாழ்விலும் வசந்தம் வந்துவிடும் என்கிற நம்பிக்கை அவருடைய முகத்திலும் அவருடைய மனைவியின் முகத்திலும் தெரிகிறது. ஆனால் யாதார்த்தம் என்னவென்று அவருக்குத் தெரியாது. அதைச் சொல்லி அவரை நாங்கள் பயமுறுத்தவும் விரும்பவில்லை.
காலம் அவருக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். ஒருநாள் அவர் தமிழகத்திற்கு வந்திறங்கியது குறித்துச் சிந்தித்து ஆளில்லாத வெற்று நிலத்தில் காறி உமிழ்வார். அதைப் பார்ப்பதற்கு அங்கு யாரும் இருக்க மாட்டோம். கடவுள் இருக்கிறார் என பகவான் நம்புவார்.
ஜார்கண்டிலிருந்து பகவானைப் போல யதார்த்தம் தெரியாமல், இன்னும் பலர் வடக்கிலிருந்தும் வட கிழக்கிலிருந்தும் புற்றீசல் போல தெற்கு நோக்கி கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள். ஓர்
அதிகாலை நேரத்தில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலோ கோவை ரயில் நிலையத்திலோ நின்று பார்த்தாலே இவர்கள் சாரை சாரையாக வந்து குவியும் காட்சிகள் காணக் கிடைக்கும். பகவானைப் போல மூட்டை முடிச்சுகளோடு சேர்த்து குழந்தைகளையும் சேர்த்து இழுத்தபடி குறைந்தது மூவாயிரம் பேராவது தினம்தோறும் வந்திறங்குகிறார்கள்.
அப்போதும் மனைவிகள்தான் மூட்டை தூக்குகிறார்கள். ஜார்கண்ட், பீகார், அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்கம், ஒடிஸா, மேகாலயா, மணிப்பூர், நாகாலந்து உத்தரப் பிரதேசம், போன்ற பிரதேசங்களில் இருந்து பிழைப்பிற்காக தெற்கு நோக்கிக் கிளம்பி வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கிப்பெருகியபடி இருக்கிறது.
அதிலும் குறிப்பாகத் தமிழகம் நோக்கி வரும் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இரண்டு மடங்காகப் பெருகியிருக்கிறது. அரசுத் தரப்பில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேர் தமிழகத்தில் குவிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் இருபது இலட்சம் பேருக்கு மேல் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து சாரை சாரையாக மக்கள் வடக்கு நோக்கி சாலைப் பணிகள் போன்ற வேலைக்காக இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள்.
மும்பை போன்ற நகரங்களுக்கு அப்போது போனவர்களுக்குத் தெரியும். அங்கு நடக்கும் சாலைப் பணிகளில் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் இடம்பெற்று இருந்தார்கள். இப்போது வடக்கிலிருந்து தெற்காக அந்த இடப்பெயர்வு நடக்கிறது. ஒரு வரலாறு திரும்புவதைப் போல என இந்த இடப் பெயர்வை வர்ணிக்கலாம்.
சுதந்திரத்தின் போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும் நடந்த இடப்பெயர்வை வரலாற்றின் மிகப் பெரிய மனித இடப்பெயர்வாகச் சொல்வார்கள். தற்போது நடந்து வருவதும் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒன்றுதான். இதை ஒற்றைச் சொல்லால் குறிப்பிடலாம் என்றால், எப்படிக் குறிப்பிடுவது? உள்ளூர் அகதிகள். ஆம்… இவர்களை இப்படித்தான் அழைக்க வேண்டியிருக்கிறது.
தெற்கில் இருக்கிற ஹைதராபாத், பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கும் பிழைப்பு நிமித்தமாக அதிகமாகக் கிளம்பி வருகிறார்கள். மற்ற இரண்டு நகரங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் இவர்களின் எண்ணிக்கை அதிகம். தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, குன்னூர் என பரவலாக எல்லா ஊர்களிலும் எல்லாத் தொழில்களிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் குவிந்துள்ளனர்.
இப்படி வருபவர்களில் 27 சதவிகிதம் பேர் உற்பத்தித் துறைகளிலும் 14 சதவிகிதம் பேர் பின்னலாடைத் தொழிற்சாலைகளிலும் 12 சதவிகிதம் பேர் கட்டுமானத் துறையிலும் பணிபுரிகிறார்கள். இப்படி வருபவர்களில் பெரும்பாலும், பல்வேறு தொழிற்சாலைகளில் அடிநிலை வேலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.
சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் கிளம்பி வரும் இவர்கள் தங்கள் கைப்பைகளுக்குள் கனவுகளைப் புதைத்து எடுத்து வருகிறார்கள். ஒரே இந்தியாதானே என்கிற நம்பிக்கைதான் அவர்களை குறுக்கும் நெடுக்குமாய் பயணிக்க வைக்கிறது. பறவைகளுக்கு எதற்கு பாஸ்போர்ட் என்று ஒரு பாடல் உண்டு.
அதைப்போல வாழ வழியில்லாத ஏழைகளுக்கு எல்லைக் கோடுகள் கிடையாது. எங்கு சோறுண்டோ, எங்கு வாழ்வுண்டோ அங்கு அவர்கள் பெட்டி படுக்கையுடன் கிளம்பிப் போகிறார்கள். தங்களுக்கு உரிய நியாயம் போகிற இடங்களில் வழங்கப்படும் என்ற தீவிர நம்பிக்கையையும் உடன் சுமந்தே அவர்கள் இடம்பெயர்கிறார்கள்.
ஆரம்பத்தில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் தொழில்நுட்பத்திற்காகத்தான் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்திற்குள் வந்தார்கள். இங்கு வேலை வாய்ப்பு இருப்பதை அறிந்து கொண்ட பிறகு அவர்கள் பிறரையும் அழைத்து வர ஆரம்பித்தார்கள். இரண்டாயிரம் ஆண்டிற்குப் பிறகு, தொழில் வளர்ச்சி அபரிமிதமாகப் பெருக ஆரம்பித்த போது, தமிழகத்தில் நிலவும் தொழிலாளர் தட்டுப்பாட்டை ஈடுகட்ட இங்கு குவிய ஆரம்பித்தார்கள்.
ஏன் தமிழகத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை? அடிமட்ட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மேல்மட்ட வேலைகளுக்கு பெருமளவில் நகர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கட்டுமானத் தொழிலுக்காக மட்டுமே கிளம்பி வந்த இவர்கள் தற்போது தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய வருகின்றனர். விவசாயத் தொழிலிலும்கூட ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஹோட்டல்கள், டீக்கடைகள், சலூன் கடைகள், விபச்சாரத் தொழில் என இவர்கள் இல்லாத இடமே இல்லை.
கோவையில் விபச்சாரத் தொழிலில் இருந்த அந்தப் பெண் அசாமில் இருந்து கிளம்பி வந்திருக்கிறார். அவருக்கு அங்கே குடும்பம் இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டுமெனில் என்னுடைய தோள்பட்டை உயரம்தான் இருந்தார். உண்மையான வயதென்ன என்று கேட்ட போது, இருபத்தேழு என்றார். ஆனால் பதினைந்து வயதுப் பெண்ணைப் போல இருந்தார். புரோக்கர்கள் சின்னப் பெண் என்று சொல்லி ஏமாற்றி கைமாற்றி விடுகின்றனர். உண்மை தெரிந்த சில கஸ்டமர்கள் அடிக்கவும் செய்திருக்கிறார்கள் என்று சொன்னார்.
ஒருநாள் இரவிற்கு இவர்களை வைத்து பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் புரோக்கர்கள் கொடுப்பதென்னவோ, வெறும் ஆயிரம் ரூபாய்தான். அதற்கே ஒரு இரவில் மூன்று ஷிப்ட் பார்க்க வேண்டுமாம். அவருடைய கனவெல்லாம், திருமணம் செய்வதற்காகப் பணம் சேர்க்க வேண்டும். ஊரில் உள்ள வீட்டை எடுத்துக் கட்ட வேண்டும்.
அண்ணன் தம்பி என்று யாரும் அந்தப் பெண்ணிற்கு இல்லையென்பதால், அவர் கிளம்பி வந்திருக்கிறார். அவருடைய அண்ணனோ தம்பியோ கிளம்பி வந்திருந்தால், அவர்கள் வேறு மாதிரியான கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதும் அந்தப் பெண்ணிற்குத் தெரிந்தே இருக்கிறது.
ஏனெனில் அவர் அப்படித் துயரமுறும் அவர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பொருளாதர ரீதியாகத் தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்கிறார். இங்கு வந்துதான் அந்த இளைஞர் பழக்கமானார் என அவர் சொல்லும் போது முகம் பிரகாசமானது. துயரத்தின் வாசலில்கூட வீணை மீட்டி வரும் வசந்தம் அது.
அந்தப் பெண்ணினுடைய காதலரின் வாழ்வு அவரைப் போலவான பிறரை ஒப்பிடுகையில், மெச்சத்தகுந்ததாகவே இருக்கிறது. பல்வேறு வேலைகளைக் கடுமையாகச் செய்து நாளொன்றிற்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். நாள் தவறாமல் வேலைக்கு சென்று விடுகிறார். ’என்னுடைய ஊரில் எனக்கு இந்த மாதிரி வருமானம் கிடைக்கவில்லை. அதனால் இங்கு வந்தேன்’ என்கிறார். அவர் தங்கியிருப்பது ஒரு சிறிய புறாக் கூண்டில். அந்தப் புறாக் கூண்டில் அவருடைய ஜோடியான மணிப்புறாவை தங்க வைக்க மணிப்புறாவைக் குத்தகைக்கு எடுத்திருக்கிற புரோக்கர்கள் அனுமதிக்கவில்லை.
இருவருக்கும் அதில் வருத்தங்கள் ஏதும் இல்லை. விரைவில் சொந்த மண்ணில் நிலை கொண்டுவிடலாம் என்கிற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழ்நாட்டில் சம்பாதித்து செலவுகள் போக மிஞ்சும் பணத்தை ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர். குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்ததும், அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு மொத்தமாக ஊருக்குப் போய்விடுவேன் என்கிறார் அந்த இளைஞர்.
இந்த இணையரைப் போல லட்சக்கணக்கானோர் நம்பிக்கையோடு தமிழகத்தின் பெரும் நகரங்களிலும் இரண்டாம் மட்ட நகரங்கள் எங்கும் வலம் வருகின்றனர். ஆனால் எல்லோருக்கும் துயரங்களைத் தாண்டி இந்த மகிழ்ச்சி வாய்த்திருக்கிறதா? எல்லோரும் இத்தகைய திருப்தியான மனநிலையில் இருக்கிறார்களா? இல்லை என்பது என்னுடைய பதில் மட்டுமல்ல.
கட்டுமானத் துறையில் ஓரளவு பணம் சம்பாதித்தாலும் வாழும் முறையில் அவர்கள் படும் சங்கடங்கள் சொல்லி மாளாது. இந்தத் துறையில் அவர்கள் படும் துயரங்களைச் சொல்வதற்கு முன்னால், இந்தத் துறைக்கு ஏன் அதிகமாக அழைத்து வரப்படுகிறார்கள்? இந்தத் துறை சார்ந்த முன்னோடி ஒருவரிடம் இருந்து கேட்டு வாங்கிய பதிலைச் சொல்கிறேன். “தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது.
கட்டுமானத் தொழிலாளர்களின் இரண்டாம் தலைமுறை இந்தத் தொழிலைப் பார்க்கவும் விரும்பவில்லை. அதைமீறி வருபவர்களும் எட்டுமாடி பத்துமாடி கட்டிடங்களில் ஏறி வேலை பார்க்க முடியாத உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். டாஸ்மாக் குடியால் இரண்டாவது மாடிக்குப் போவதற்கு முன்பே அவர்கள் கால்கள் நடுங்கத் துவங்கி விடுகின்றன. வட மாநிலத் தொழிலாளர்களை விட்டால் இந்தத் தொழிலுக்கு கதிமோட்சமே கிடையாது. வருபவர்களில் கணிசமானவர்கள் கட்டுமானத் தொழிலில்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள்” என்றார் அவர்.
ஆபத்பாந்தவர்களாக வந்த இவர்களை இந்தத் துறை எப்படி நடத்துகிறது? கட்டுமானத் துறையில் வழங்கப்படும் குடியிருப்புகளை, குடியிருப்புகள் என்றே சொல்ல முடியாது. அவை, மனிதர்கள் வாழவே தகுதி இல்லாதவையாக இருக்கின்றன. மலங்காட்டிற்குள்தான் பெரும்பாலும் இவர்களுடைய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குடியிருப்பு என்றால் வேறு எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்? தலைக்கு மேல் ஒரு ஆஸ்பெட்டாஸ் கூரை. ஒரு மஞ்சள் பல்ப். அவ்வளவுதான். மழைபெய்தால் அதிலும் ஒழுகும்.
தங்களுக்கு இப்படி ஒர் அநியாயம் இழைக்கப்படுகிறது என்பதைக்கூட அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை.
முறையான கழிப்பிட வசதிகள் இல்லை. பெண்களுக்குக் குளிக்கும் வசதிகூட கிடையாது. நான் சென்ற ஓர் இடத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில்தான் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். முழு உடையில் குளிக்க வேண்டிய நிர்பந்தம் அந்தப் பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் இதுகுறித்து இவர்களால் எந்த எதிர்க் குரலையும் எழுப்ப இயலாது. ஒரு அமைப்பாகவும் திரள முடியாது.
தொழில்சங்கங்களே தேடிவந்தாலும் பயத்தால் அதில் பங்கெடுக்கவே முடியாது. ஏனெனில் அடுத்த நிமிடத்தில் வேலையை விட்டு அனுப்பப்படுவார்கள். நம்மிடம் பேசும் போதுகூட மெல்ல பயந்தபடியேதான் பேசுகிறார்கள். குடியிருப்புகளில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதைவிட இவர்களை மிரட்டிப் பணம் பறிப்பவர்களின் தொல்லையும் அதிகம்.
அந்தப் பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்பவர்களும் அதிகம். குறைந்த விலையில் கிடைக்கும் உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து வயிற்றுப்பாட்டைத் தீர்த்துக் கொள்கின்றனர். அழுகிய காய்கறிகளை வாங்கி வந்து அழுகல் பக்கத்தை வெட்டிவிட்டு மீதம் உள்ளதை பயன்படுத்துகின்றனர். இருபது ரூபாய்க்கு சல்லிசான விலையில் மீன் கிடைத்தால் அவர்களைப் பொறுத்தவரை அது பெருவிருந்து.
ஓர் இரவில் எனக்கான விருந்தை அப்படி இவர்கள் தயார் செய்து கொடுத்தார்கள். என்னுடைய பிறந்தநாளுக்கு முந்தைய தினத்திற்கான உணவாக அது அமைந்ததில் பேரதிர்ஷ்டம் என்பதாக உணர்ந்தேன். இன்று நள்ளிரவு என்னுடைய பிறந்தநாள் என்று சொன்னவுடன் மகிழ்ந்து போனார்கள். ஊரற்ற இன்னொருத்தன் தங்களது விருந்தாளியாக வந்ததைத் தற்காலிக மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டார்கள்.
உழைத்து களைத்த ஒரு முழுமையான நாளிற்குப் பிறகு வரும் இரவுகளை இப்படியான எதிர்பாராத தற்காலிக மகிழ்ச்சியைத் துணைக்கழைத்துக் கொண்டுதான் கொண்டாடுகின்றனர். அந்த நாளின் துயரத்தை இரவின் இருளோடு பேசிச் சிரித்து கடந்து செல்ல முயற்சிக்கின்றனர். பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் என்பதைப்போல, தாங்கள் மனிதர்களாகக் கூட நடத்தப்படாத துயரத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி கவலைகளோடு இருக்கும் தங்கள் குடும்பத்தினரிடம் கவலைகளை மறைத்துக்கொண்டு உரையாடுகிறார்கள். பொய்யாகவேனும் நம்பிக்கையான வார்த்தைகளை குடும்பத்தினரிடம் விதைக்கிறார்கள். இந்தக் காட்சியைப் பார்த்த போது எனக்கு உடனடியாக ஆடுஜீவிதம் நாவல்தான் நினைவிற்கு வந்தது.
உணவிற்கே திண்டாடும் நிலை ஏன் இவர்களுக்கு வருகிறது என்கிற கேள்வியைக் கேட்டால், பல இடங்களில் இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. கோவையில் சம்பளம் தரவில்லை என்பதற்காக கலெக்டர் அலுவலகத்தின் வாயிலில் அழுது புரண்டு ஒப்பாரி வைத்த இளைஞர்களை காவல்துறையினர் அடித்து விரட்டினார்கள் என்ற செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.
அந்த இளைஞர்களைச் சந்தித்த போது, அவர்கள் அது குறித்து எந்தச் சலனத்தையும் எழுப்பாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்கள் வாய் ஒரு நாயைப் போலக் கட்டப்பட்டிருந்தது. ஒப்பீட்டளவில் தேயிலைத் தோட்டங்களில் குறைவாக இருந்தாலும் இவர்களுக்கு முறையான ஊதியம் கிடைத்துவிடுகிறது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க அமைப்புகள் வலுவாக இருப்பதால், அது சார்ந்த போராட்டங்கள் இவர்களது வாழ்விலும் ஊதிய விஷயத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஆனாலும் தமிழ்த் தொழிலாளர்களை ஒப்பிடுகையில் இவர்களுக்கு பணி நேரம் அதிகம். ஊதியமும் குறைவு.
தமிழகத்திலேயே சென்னைக்கு நிகராக வடமாநிலத் தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் இடம் திருப்பூரும் கோவையும். மொத்த எண்ணிக்கையில் 51.3 சதவீதம் பேர் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது.
வடமாநிலத் தொழிலாளர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினை பணிபுரியும் இடங்களில் ஏற்படும் விபத்துதுகள். விபத்து ஏற்படும் சமயங்களில் தங்களுக்குப் போதிய இழப்பீடுகளோ மருத்துவ வசதிகளோ வழங்கப்படுவதில்லை என்பது இவர்களது முக்கியமான முறையிடல்.
இந்த முறையிடல்களில் உண்மைகள் மட்டுமே இருக்கின்றன. திருப்பூரில் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் ஆறு பேர் கருகிச் செத்த போது, அந்நிறுவனம் வெறும் பத்தாயிரம் ரூபாயை மட்டுமே அவர்களது உறவினர்களுக்குக் கொடுத்திருக்கிறது. மேலேயிருந்து கீழே விழுந்து பலமான அடிபட்டவர் ஒருத்தருக்கு வெறும் ஐயாயிரம் ரூபாயை மட்டும் கொடுத்து அன்ரிசர்வ்டு பெட்டியில் ஏற்றி அனுப்பியிருக்கிறார்கள்.
இடம்பெயரும் தொழிலாளர் நலச் சட்டங்களை பெரிய நிறுவனங்கள் தவிர்த்த பிற நிறுவனங்கள் முறையாக பின்பற்றுவதில்லை என்பதை வலியோடு இவர்களின் நலன் நாடும் அமைப்புகள் பதிவு செய்கிறார்கள். திருப்பூர் பின்னலாடைத் தொழில், கோவை மற்றும் சென்னை கட்டுமானத் தொழில், அரசு மெட்ரோ ரயில் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள் அனைத்தும் இவர்களை நம்பியே நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் சட்டங்களை நிலைநாட்ட வேண்டிய அரசாங்கக் கட்டுமானத் திட்டங்களில்கூட இவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படுவதில்லை. நான் போய்ப் பார்த்த அரசு கட்டுமானக் குடியிருப்பில் பன்றிகளைக்கூட குடியமர்த்த முடியாது, கோபத்தில் கொத்திக் கிழித்து விடும். செத்துப் போன குழந்தைகளை அந்தக் குடியிருப்பிற்குள்ளேயே புதைத்திருக்கின்றனர் எனச் சிலரும் சொல்கிறார்கள். காவல்துறைக்குத் தகவலாகக் கூடச் சொல்லவில்லையாம். அவர்களுக்காகப் பணிபுரியும் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் கேட்டால், அது சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் என உறுதிப்படுத்துகிறார்கள்.
சென்னையில் நடந்த மௌலிவாக்கம் கட்டட விபத்தில்கூட பல வடமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குரோம்பேட்டை மெட்ரோ திட்டத்தில் பணிபுரிந்த வடமாநிலத் தொழிலாளர்களில் பத்திற்கு மேற்பட்டவர்கள் ஒரே நாளில் விபத்தில் மரணமடைந்தனர். திருவள்ளூர் பக்கத்தில் சுவர் இடிந்து ஒரே நாளில் இருபது பேருக்கும் மேல் செத்துப் போனார்கள்.
இதெல்லாம் வெளியில் தெரிந்தவை. இந்தத் தொழிலாளர்களை நேரில் பார்த்த போது அவர்கள் சொன்ன கணக்கையெல்லாம் சித்திரகுப்தன் மாதிரி எழுதத் துவங்கினால் அவை ஆயிரக்கணக்கைத் தொடும். இவற்றை எல்லாம் கவனித்து ஒழுங்கு செய்ய வேண்டிய அரசாங்கம் கண்களை மூடிக் கொண்டிருப்பதாக இவர்களது நலனிற்காக இயங்கும் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
இடம்பெயரும் தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்ற போதிய சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவை பின்பற்றப்படவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. வட மாநிலத் தொழிலாளர்கள் முறைப்படி பதிவு செய்யப்படாததால் இவர்களுக்கான இழப்பீடுகள் கிடைப்பதில்லை. அதுதான் மேலே சொன்ன பல விபத்துகளிலும் நடந்தது. அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி 10 லட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் இருந்தாலும், பல்வேறு நிறுவனங்களின் வழியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே.
பல இடங்களில் இவர்கள் புரோக்கர்களின் கட்டுப்பாட்டிலேயே கைகழுவி விடப்படுகின்றனர். இவர்களது ஊதியத்தில் பத்து சதவிகிதத்தை புரோக்கர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
நிறுவனங்கள் புரோக்கர்களின் தலையில் பொறுப்பைக் கட்டிவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கின்றன.
வட மாநிலங்களில் இருந்து வந்து குவியும் பெண் தொழிலாளர்களின் நிலை இன்னும் பரிதாபம். அவர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளாவதை நேரில் சந்தித்த போது கதை கதையாகச் சொன்னார்கள். அவர்கள் வீட்டு ஆண்களுக்கே இங்கே மதிப்பில்லாத போது, பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் இந்தச் சமூகத்தில் வேறு எதை எதிர்பார்த்துவிட முடியும்?
இன்னொருபுறம் இவர்களின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள், கல்விக்கு என்ன செய்கிறார்கள் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. குன்னூரில் மட்டும் ஜார்கண்டிலிருந்து அவரது வார்த்தையிலேயே சொல்ல வேண்டுமெனில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கு கிளம்பி வந்த ஆசிரியை ஒருத்தர் அங்குள்ள குழந்தைகளுக்குப் பாடம் நடத்துகிறார்.
அந்த எஸ்டேட் நிர்வாகம் அதை முறையாக அனுமதிக்கிறது. ஆனால் அதைத் தவிர பிற இடங்களில் படிப்பே இல்லை. அடிமாடுகளாக இன்னொரு தலைமுறையும் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான பதிலைச் சொல்ல வேண்டிய அரசு இந்த விஷயத்தில் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகளைப் புதைப்பதையே கண்டு கொள்ளாத அரசு கல்வியையா கண்டுகொள்ளப் போகிறது?
வட மாநிலத் தொழிலாளர்கள் வேலைக்காக தமிழ்நாட்டில் குவிவதால், உள்ளூர்த் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக அரசியல் ரீதியில் புதிய முழக்கம் ஒன்று தமிழ்த் தேசியர்கள் சிலரால் முன் வைக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பறிபோகிறது என்ற கோணத்தைப் போல, பாதுகாப்பு என்ற அம்சத்தில் இன்னொரு கோணமும் முன்வைக்கப்படுகிறது.
அதற்கு உதாரணமாக மென்பொருள் பணியாளர் உமாமகேஸ்வரி கொலை, பேங்க் கொள்ளை சம்பவம் போன்றவற்றையெல்லாம் துணைக்கழைத்துச் சொல்லி, இவர்கள் வருவதைத் தடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் அவர்கள் வருவதற்கு முன்பு இங்கு எந்தக் குற்றங்களும் நிகழவில்லையாம். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்ததாம்.
ஒரு பெருவாரியான ஜனத்திரளின் நடுவே சில கருப்பு ஆடுகளும் இருக்கத்தான் செய்யும். அவர்களை ஒழுங்காக முறைப்படுத்தி பதிவு செய்தால், அவர்கள் ஏன் அப்படி இருக்கப் போகிறார்கள்? தாங்கள் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வை அந்தப் பதிவு செய்யும் நடைமுறையே தந்துவிடுமே? அதைச் செய்யாமல் அவர்களை வெளியேற்றுவதில் மட்டுமே குறியாக இருப்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் இவர்களை வெளியேற்றினால் தமிழகத் தொழில்துறை ஸ்தம்பித்து விடும். அதுதான் நிதர்சனம்.
இந்தியா என்பது ஒரே தேசம் என்கிறார்கள். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. நம்பி வந்தவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தரவேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது. இன்றைய தேதியில் உலகை உலுக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சினை அகதிகளின் இடப்பெயர்வு.
உலகம் முழுக்க அவர்கள் நிம்மதியான வாழ்வுக்காக கருணையைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் கேட்பதெல்லாம் தலைக்கு மேல் ஒரு கூரை. வயிற்றுக்குச் சோறு. அதைக்கூடக் கொடுக்க மனமில்லாமல், நடுவழியில் அவர்கள் மரித்துப் போகும் செய்திகள் நாள்தோறும் வந்தபடியே இருக்கின்றன. கடற்கரையில் செத்து மிதந்த பாலகனின் படம் நினைவில் இருக்கிறதுதானே?
அகதிகளாக இருக்கும் இவர்களை உள்ளூர் குடிமக்களாக மாற்ற வேண்டிய கடமை அரசிற்கும் இவர்களால் ஆதாயமடையும் நிறுவனங்களுக்கும் இருக்கின்றன. அவர்களின் சொந்த இடத்தில் வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால்தான் தமிழகம் நோக்கி வருகிறார்கள். கிளம்பும்போது அவர்கள் தாங்கள் செல்லப் போகும் நிலத்தில் உள்ள மனிதர்கள் குறித்து எப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பார்கள்? நிச்சயம் இரக்கமான மனிதர்களாகத்தான் நினைத்திருப்பார்கள். தங்களது வாழ்க்கையை வளப்படுத்தப் போகும் தேவதூதர்களாகத்தான் கற்பனை செய்திருப்பார்கள்.
கருணையை வழங்குவார்கள் என்று நம்பிதான் அவர்கள் கிளம்பி வந்திருப்பார்கள். அப்படித்தான் பகவானும் ஜார்கண்டிலிருந்து கிளம்பி வந்திருக்கிறார். அவருக்கு முன் கிளம்பி வந்தவர்களின் நிலை குறித்து அவருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும். ஆனாலும் அதையும் மீறி அவர் எதற்காக வந்திருக்கிறார்? வயிற்றுப் பாட்டை தீர்க்க வேண்டும்; வாழ வேண்டும். அவருடைய குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்கிற கனவு அவரை ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்தை நோக்கி உந்தித் தள்ளியிருக்கிறது.
நாம் இந்த நிலத்தின் பூர்வீகக் குடிகளாகவே இருக்கலாம். ஆனால் நம்பி வந்தவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டிய கடமையிலிருந்து நாம் விலகிவிடவே கூடாது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நாமும் வயிற்றுப் பாட்டிற்காக தமிழகத்தில் இருந்து வடக்கு நோக்கிக் கிளம்பிப் போனவர்கள்தான். இன்னும் சொல்லப் போனால், தமிழர்களும் இதைப் போல அகதிகளாக வெளிநாடுகளுக்குப் பெருவாரியாகச் செல்பவர்கள்தான். சி.டி.எஸ் (Center for development studies thiruvanathapuram) அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வில் தமிழ்நாட்டில் பத்து வீடுகளுக்கு ஒரு வீட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தமிழர்கள் வேலைக்குச் செல்வதாகத் தெரிய வந்திருக்கிறது. அப்படி இப்போதும் வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் லட்சக்கணக்கான தமிழர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அங்கே எதுவும் இல்லை என்று புலம்பும் நாம், நம்மை நம்பி வந்தவர்களை எப்படி நடத்திக் கொண்டிருக்கிறோம்? திரைகடல் ஓடி திரவியம் தேடுவது ஏதோ ஓர் இனத்துக்கு மட்டும் சொந்தமல்ல. வாழ்வில் வயிற்றுக்கான பொருளியல் தேவை எல்லோரையும் எட்டுத் திசைகளிலும் ஓட வைக்கிறது. யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று ஒட்டுமொத்த உலக மனிதர்களையும் தன் சொந்தங்களாக அறிவித்த தமிழ் நிலத்தில் இப்போது வட நாட்டு சொந்தங்கள் உழைக்க வந்துள்ளனர்.
அவர்களை கௌரவமாக நடத்துவதும், சக மனிதர்களுக்கு உரிய மதிப்பை வழங்குவதும் அடிப்படை கடமை. அதைத்தான் பகவான் போன்றவர்கள் நம்மிடம் எதிர் பார்க்கிறார்கள். கருணையுள்ள ஒரு நிலமாக தமிழகத்தை வரலாற்றில் பதிவு செய்வோம்.

No comments:
Post a Comment