Tuesday, March 1, 2016

ஏசு கிறிஸ்து தமிழரா?

ஏசு கிறிஸ்து தமிழரா?


First Published : 28 February 2016 11:34 AM IST 

அண்மையில் சில ஆங்கில ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாயிருந்தது. ‘ஏசு கிறிஸ்து ஒரு தமிழ் ஹிந்து’ என ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான கணேஷ் தமோதர் சாவர்க்கர் கூறுகிறார் என்பதே அது. விரைவில் இது தமிழ்நாட்டு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்தச் செய்தியை ஊதிப் பெருக்கி ஒரு சர்ச்சையாக மாற்ற முயற்சி செய்தது ‘மிட்-டே’ பத்திரிகை


 
பின்னர், ஆர்.எஸ்.எஸ். தன்னை இந்த நிலைப்பாட்டிலிருந்து தூரப்படுத்திக்கொண்டதாகக் கூறியது. தலைப்பை கவனிக்கவும்: ‘ஏசு தமிழ் பிராம்மணர்? ஆர்.எஸ்.எஸ். பாபுராவ் சாவர்க்கரிடமிருந்து தன்னை வேறுபடுத்துகிறது. கிறிஸ்தவ சமுதாயமும் சமூக ஊடகங்களும் எதிர்வினையாற்றுகின்றன’ (Tam-Brahm Jesus? RSS distances itself from Babarao Savarkar; Christian community and social media reacts) இந்தத் தலைப்பு கொடுக்கப்பட்ட ‘செய்தி’யின் உள்ளே எதிர்வினைகள். தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர், ‘இப்படிப்பட்ட நூல் வெளியிடப்படுவது இன்றைய அரசியல் சூழலின் விளைவு’ என்கிறார். மும்பை கத்தோலிக்க சபா என்கிற அமைப்பின் முன்னாள் தலைவர் ‘இது ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீய திட்டம்’ என்கிறார்.
‘இந்தியா டுடே’ பத்திரிகை தளம், தலைப்பிலேயே கேலியை வெளிப்படுத்துகிறது: ‘ஆர்.எஸ்.எஸ். நிறுவனரின் புத்தகம் ஏசு கிறிஸ்து ஒரு தமிழ் ஹிந்து என்கிறது. ஐயையோ’. உள்ளே தேவையே இல்லாமல் பிரதமர் மோதியின் பெயர் இழுக்கப்படுகிறது. ‘இந்தியாவுக்கு வந்து ஏசு யோகா படித்தார் என நூல் சொல்கிறது. அப்படி ஒருவரிடம்தான் மோடியும் யோகா படித்திருப்பாரோ!
சரி இப்படியெல்லாம் சொல்லவைக்கும் இந்த நூலை எழுதியவர் யார்? இதற்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸூக்கும் என்ன தொடர்பு?
ஆர்.எஸ்.எஸ் நிறுவனரா?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர் டாக்டர். கேசவ பலராம் ஹெட்கேவார். அப்போது அவர் ஆலோசனைகளை நடத்திய முக்கியமான இந்துத்துவ தலைவர்களில் ஒருவரே கணேஷ் தாமோதர் சாவர்க்கர். இவர், வீர சாவர்க்கரின் சகோதரர். அந்தமானில் கைதியாக இருந்தவர்.
கணேஷ் தாமோதர் சாவர்க்கர் (பாபுராவ்)
ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகரான டாக்டர். ஹெட்கேவாருக்கு, பொதுவாக பெரிய மத ஈடுபாடுகள் இருந்ததில்லை. அவர் அப்படிப்பட்ட தர்க்கங்களில் ஈடுபட்டதும் இல்லை. அவரது முக்கியமான நோக்கம், இந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியாவை வலிமையாக்குவது மட்டும்தான். அப்படி ஒருங்கிணைந்த இந்து அமைப்பு, இந்தியாவின் எல்லாத் துறைகளுக்கும் சக்திக் கேந்திரமாக இருக்கும் என டாக்டர். ஹெட்கேவார் கருதினார். பாபுராவ் சாவர்க்கரும் சரி, வீர சாவர்க்கரும் சரி, ஹெட்கேவாரின் இந்த நிலைப்பாட்டை விரும்பவில்லை. ஹிந்து மகா சபையின் ஒருங்கிணைந்த இயக்கமாக ஆர்.எஸ்.எஸ். இருக்க வேண்டுமென வீர சாவர்க்கர் விரும்பினார். டாக்டர். ஹெட்கேவார் அதை மறுத்துவிட்டார். பாபுராவ் சாவர்க்கர், ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம் எனப் பெயரிட வேண்டும் எனக் கூறியதையும் டாக்டர். ஹெட்கேவார் மறுத்துவிட்டார்.
ஹெட்கேவாரை பொறுத்த வரையில் இந்தியாவில் ’ராஷ்ட்ரம்’ (தேசம்) என்பதும் ஹிந்து தன்மையும் ஒன்றே. வெளிநாட்டில் வேண்டுமென்றால் ‘ஹிந்து’ என்கிற பெயரை ஒரு இயக்கம் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் ஹிந்து என்பதை தனித்தன்மை கொண்ட பெயராக பயன்படுத்த கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் ஹெட்கேவார்.
 
டாக்டர். ஹெட்கேவாருக்கு ‘ஹிந்து’ என்பது தனி அடையாளம் அல்ல.
எனவே, ஹெட்கேவார் அவரது இயக்கம் ஆகியவை அவருக்கே உரிய தனித்தன்மையான சிந்தனையில் உருவானவை. அதை உருவாக்கும் ஆலோசனையில் அன்றைய ஹிந்துத்துவ பெருந்தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர், பாபுராவ் சாவர்க்கர் அவ்வளவே.
‘கிறிஸ்துவின் பரிச்சயம்’ - நூல்
பாபுராவ் சாவர்க்கர் எழுதிய ‘கிறிஸ்துவின் பரிச்சயம்’, 1946-ல் பாபுராவின் மரணத்துக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இந்த நூல், 2016-ல் மீண்டும் வெளியிடப்படுகிறது. இந்த நூல், ஏசு ஒரு தமிழர் என்றும், விஸ்வகர்ம பிராம்மண வகுப்பை சார்ந்தவர் என்றும் சொல்கிறது. அவர் இந்தியாவில் வந்து யோக முறைகளைக் கற்றார் என்றும், அவர் சிலுவையில் மரிக்கவில்லை என்றும் சொல்கிறது. அவர் காஷ்மீரில் வந்து இறந்தார் என்றும், அவர் சிவனை வழிபட்டிருக்கலாம் என்றும் சொல்கிறது.
இன்றைக்கு இவை நகைப்புக்கும் கிண்டலுக்கும் உரியவையாக இருக்கலாம். ஆனால், நூல் எழுதப்பட்ட காலகட்டத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். காலனிய காலகட்டத்தில், ஏசுவின் வாழ்க்கை ஒரு வரலாற்று உண்மையாகவே கருதப்பட்டது. இந்தியப் புராணங்கள் வெறும் கற்பனையாகவும் வரலாற்று அடிப்படை அற்றவையாகவும் கருதப்பட்டன. இன்னும் ஒரு படி மேலே போய், இந்தியப் புராணங்களே கிறிஸ்தவ தாக்கத்தினால் எழுந்தவை என்றும் சொல்லப்பட்டன. வெறும் மத போதகர்கள் மட்டுமல்லாமல், மேற்கத்திய அறிவுலகில் முக்கிய ஆளுமைகளாக விளங்கியவர்கள்கூட இத்தகைய கோட்பாடுகளை முன்வைக்கத் தயங்கவில்லை. உதாரணமாக, கிறிஸ்தவ தாக்கத்தால் பகவத் கீதை ஏற்பட்டது என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது. அதேபோல, கிறிஸ்தவ தாக்கத்தால் திருக்குறள் ஏற்பட்டதாக இருக்கலாம் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. இவை தவிர, நோவாவின் சந்ததிகளே எல்லாப் பண்பாடுகளையும் உருவாக்கினார்கள் என்கிற கோட்பாடும் வரலாற்று உண்மையாகப் பரப்பப்பட்டது.
சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட நூலில் ஒரு பக்கம்
வில்லியம் ஜோன்ஸ், சம்ஸ்கிருதத்துக்கும் பண்டைய கிரேக்க லத்தீன் மொழிகளுக்குமான ஒற்றுமையைக் கண்டுபிடித்தவர். ஆனால், எல்லாம் விவிலிய உண்மைகளின் வக்கரித்துப்போன பதிவுகளே இந்தியப் புராணங்கள் என அவர் எழுதினார். ஜான் பென்ட்லே (John Bentley) என்பவர், 1825-ல் இந்து வானவியல் குறித்த ஒரு நூலை எழுதினார். இதில், கிருஷ்ணன் என்கிற பெயர் உட்பட அனைத்துமே, கிறிஸ்தவ மதம் இந்தியாவில் பரவாமல் இருக்க, பிற்காலங்களில் பிராமணர்கள் உருவாக்கிய கதை என எழுதினார். ஆனால், கிறிஸ்துவின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே இந்தியாவில் கிருஷ்ண வழிபாடு நிலவியது பின்னர் நிரூபிக்கப்பட்டது. (2013-ல், பென்ட்லேயின் இந்நூல், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. எவரும் அதை விமரிசிக்கவில்லை. காரணம், அந்நூல் மீண்டும் வெளியிடப்படுவது வரலாற்றுப்பதிவாகவே அன்றி, அதிலுள்ள விஷயங்கள் உண்மை என்பதால் அல்ல என்பதை எவரும் அறிவர்). ஆனால், காலனிய காலகட்டத்தில் வரலாற்று உருவாக்கம், அகழ்வாராய்ச்சி அனைத்துமே விவிலியத்தை உண்மை வரலாறாகவும், இந்தியப் புராணங்களைக் கற்பனைகளாகவும் கருதிய ஒரு அடிப்படையில் இருந்து செயல்பட்டன.
இத்தகைய சூழலில் மற்றொரு போக்கும் இருந்தது.
காஷ்மீரில் ஏசு எனும் நம்பிக்கை
ஏசு கிறிஸ்து கிழக்கத்திய ஞானிகளைப்போல ஒரு ஞானி. அவர் தமது சிறு வயதில் எங்கே சென்றார், என்ன செய்தார் என்பது குறித்து எதுவும் கிறிஸ்தவ விவிலியத்தில் காணப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில் அவர் இந்தியாவுக்கு வந்தார். இங்கே யோக முறைகளையும், பௌத்த வேதாந்த மரபுகளையும் படித்தார். பின்னர், பாலஸ்தீனத்துக்குச் சென்று அவற்றைப் போதித்தார். அவர் எதிர்க்கப்பட்டார். அவரை சிலுவையில் அறைந்தார்கள். ஆனால், மூலிகைகளாலோ அல்லது யோகத் திறமைகளிலாலோ அவர் மடியவில்லை. அவர் இந்தியா வந்தார். காஷ்மீரில் அவர் வாழ்ந்து சமாதியானார். அவரது சமாதி இன்னும் காஷ்மீரில் உள்ளது.
நிகோலஸ் ரோயிரிச்
இவ்வாறு கூறியவர்கள், பொதுவாக பிரம்ம ஞான சபை தாக்கம் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் மட்டும் அல்ல. இது பெரும்பாலான படித்த இந்துக்களாலும், மேற்கத்தியர் பலராலும் பரவலாக நம்பப்பட்டது. விவேகானந்தரின் குருபாயான சுவாமி அபேதானந்தர், ரஷிய ஓவியர் நிகோலஸ் ரோயிரிச், பரமஹம்ஸ யோகானந்தா, ரஜனீஷ் (ஓஷோ) ஆகியோர், ஏசு கிறிஸ்து திபெத்தில் அல்லது ஹிமாலயத்தில் வந்து பயின்றார் என்பதை நம்பியவர்கள். அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியவர்கள்.
 
தத்துவ அறிஞரான டாக்டர். ராதாகிருஷ்ணன், ஏசு இந்திய மத மரபுகளின் தாக்கம் கொண்டவர் என்று கருதினார். ஈஸின் (Essene) என்கிற யூத மறைஞானக் குழு, வேதாந்த பௌத்த மரபுகளால் தாக்கம் பெற்ற குழு என்றும், ஏசு அதன் உறுப்பினர் என்றும், அதன் மூலம் அவர் ஞானத்தை அடைந்தார் என்றும் அவர் கருதினார். பாபுராவ் சாவர்க்கரும், தமது நூலில் ஈஸின் மறைஞானக் குழு குறித்து குறிப்பிடுகிறார்.
இன்றைக்கும் இத்தகைய நம்பிக்கைகள் உள்ளன. காமிக்ஸ் புத்தகங்களில் ஆரம்பித்து பயணக் கட்டுரை புத்தகங்கள், ஆராய்ச்சி என முன்வைக்கப்படும் நூல்கள் என இந்தச் சித்தரிப்பு தொடரத்தான் செய்கிறது. ஏசு இந்தியாவுக்கு வந்தார், காஷ்மீரில் அவர் சமாதி இருக்கிறது என்கிற நம்பிக்கையை அஹ்மதியா பிரிவைச் சார்ந்த இஸ்லாமியர்களும் பிரசாரம் செய்கின்றனர். 1980-களில், இந்தியப் பத்திரிகைகளில் முதன்மையாக இருந்த ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’, ‘மிர்ரர்’ போன்றவற்றிலும், ‘ஏசு காஷ்மீர் வந்தாரா?’ ‘உண்மையிலேயே ஏசு வாழ்ந்தாரா?’ என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
 
2007-ல் வெளியான ‘Man from earth’ திரைப்படம், ஏசு உண்மையில் இந்திய மத போதனைகளை இஸ்ரேலில் போதித்தவர் என்கிற கருத்தை முன்வைக்கிறது. 2014-ல் வெளியான லயன் காமிக்ஸ் ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல!’ இது, ஏசு திபெத்திய லாமாக்களுடன் பயின்று, ஸ்ரீநகரில் கல்லறையில் இருக்கிறார் என்கிற கருத்தை முன்வைக்கிறது.
 
இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான், பாபுராவ் சாவர்க்கரின் நூல் குறித்து இப்போது பேச வேண்டும்.
‘விஸ்வகர்ம பிராம்மணர்கள்’ – ‘தமிழ் பிராம்மணர்கள்’
இன்னொரு விநோதத்தை இந்தப் பத்திரிகைச் செய்திகளில் பார்க்க முடிந்தது. எப்படியாவது ‘பிராம்மணிய’தன்மையை பாபுராவ் சாவர்க்கரின் எழுத்துகளில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ‘ஏசு தமிழ் பிராம்மணர்’ என அவரது புத்தகம் சொல்வதாகத் தலைப்பு கொடுத்தவர்கள், ஏசு ‘விஸ்வகர்ம பிராம்மணர்’ என பாபுராவ் சொன்னதை மறந்துவிட்டார்கள். கொஞ்சம் இது குறித்த வரலாறு தெரிந்திருந்தாலும், இதிலுள்ள ஒரு முக்கிய அம்சம் புரிந்திருக்கும்.
விஸ்வ பிராம்மணர்கள் அல்லது விஸ்வகர்ம பிராம்மணர்கள் என்பவர்கள், பொதுவாக இரும்பு, கல், மரம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட இதர உலோகங்கள் ஆகியவற்றால் பொருட்களை உருவாக்கும் கைவினைஞர்கள். வேதங்களிலும் புரோகிதத்திலும் அதிகாரம் உடையவர்கள். இது பிரிட்டிஷ் காலகட்டத்தில் ஆச்சாரவாத பிராம்மணர்களுடன் மோதலை ஏற்படுத்தியது. வேதங்களிலும் புரோகிதம் செய்யவும் விஸ்வகர்மா வகுப்பினருக்கு உரிமை கிடையாது என வழக்குகள் தொடரப்பட்டன. சித்தூர் அதாலத் வழக்கு மிகப் பிரபலமானது. இப்போது பாபுராவ் சாவர்க்கர் கூறுவதை இந்த நிலைப்பாடுகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
 
பாபுராவ் சாவர்க்கர், விஸ்வகர்ம கைவினைஞர்கள் வகுப்பினருக்கு பண்டைக்காலம் முதல் வேதயக்ஞ அதிகாரங்கள் இருந்தன என்கிற நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பது விளங்கும். ஏசு குறித்து பாபுராவ் எழுதியது தவறாக இருக்கலாம். ஆனால், இந்தியச் சமுதாயச் சூழலில் அவரது பார்வை முற்போக்கு சிந்தனை கொண்டதாக இருந்திருக்கிறது.
இந்துத்துவ சிந்தனையும் ஏசு கிறிஸ்துவும்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பொறுத்தவரையில், டாக்டர். ஹெட்கேவாருக்கு மத ரீதியிலான, இறையியல் ரீதியிலான விஷயங்களில் பெரிய அக்கறை எதுவும் இல்லை என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரான ‘குருஜி’ கோல்வல்கர் ஆன்மிக அழுத்தம் உடையவர்.
குருஜி கோல்வல்கர்
விவேகானந்தரின் குருபாயான சுவாமி அகண்டானந்தரிடம் தீட்சை பெற்றவர். பைபிள் குறித்து இவருக்கு நன்றாகவே பரிச்சயம் உண்டு. ஏசுவை ‘சிறந்த ஞானி’ என்றும், தொடக்க கால ரோமானிய எதிர்ப்பை மீறி கிறிஸ்தவம் வளர்ந்ததற்குக் காரணம் ‘ஏசுவின் ஆன்ம ஆற்றல்’ என்றும் அவர் கருதினார். அதே நேரத்தில், 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவம் யூத வெறுப்பை ஊட்டி வளர்த்தது என்றும் கருதுகிறார். ஒட்டுமொத்தத்தில், ஏசு குறித்த கோல்வல்கரின் பார்வை நேர்மறையானது என்றே சொல்லலாம்.
தாணுலிங்க நாடார்
ஆர்.எஸ்.எஸ்., கிறிஸ்தவ அமைப்புகள் செய்யும் கட்டாய மதமாற்றங்களைக் கடுமையாக எதிர்க்கின்றபோதிலும், ஏசுவைத் தாக்குவதில்லை; தாக்கியதில்லை. தமிழ்நாட்டில் இந்து முன்னணியின் தலைவராக இருந்த தாணுலிங்க நாடார் அவர்களின் நூற்றாண்டு விழா அண்மையில் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தீவிரமாக எதிர்த்தவர் தாணுலிங்க நாடார் அவர்கள். விஜயபாரதம் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இந்திய சர்ச்சுக்கும் ஏசு கிறிஸ்துவுக்கும் என்ன சம்பந்தம்?’ எனக் கடுமையாக அவர் கேட்டார். ஏசு கிறிஸ்து, கிறிஸ்தவ அமைப்புகள் ஈடுபடும் மதமாற்றங்களை ஏற்கமாட்டார் என்பது அவரது கருத்து.
சீதாராம் கோயல்
ஆனால், எல்லா இந்துத்துவர்களும் இதே பார்வை கொண்டிருக்கிறார்கள் எனக் கூற முடியாது. இந்துத்துவ சிந்தனையாளரான சீதாராம் கோயல், ஏசுவை ‘ஆதிக்கத்தின் கருவி’ எனக் கருதுகிறார்.
சிந்தனை, பண்பாடு, இறையியல் தளங்களில் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் ஒரு கருவியாகவே, வரலாறு முழுக்க ஏசு பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும், பாகனிய பண்பாடுகளை ஒழிக்க ஒரு கருவியாக ஏசு பயன்படுத்தப்படுவதால், அவரை வரலாற்று அடிப்படையில் நிராகரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கருதுகிறார். ஆனால், இதே தொனியை சீதாராம் கோயலின் வழிகாட்டியான ராம் ஸ்வரூப் அவர்களிடம் முழுமையாகக் காண முடியவில்லை.
கோயல், அடிப்படையில் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர். ஆனால், ராம் ஸ்வரூப் அக-ஆராய்ச்சியாளர். எனவே, அவரது ஆர்வம் எப்படி ஏசு கிறிஸ்துவின் தாக்கம் ஆன்மிகப் பரிணாமப் பாதையில் உள்ளது என்பதே. எனவே, ஏசு ஆன்மிக அனுபவத்தை அடைந்தவராக இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார். பொதுவாக, பிற ஆபிரகாமிய மத இறைவாக்கினரில் மிகுந்து காணப்படும் ஏக இறை - பல தெய்வ சர்ச்சைகள், உண்மையான தேவன் - பொய்யான தேவன் போன்ற பிளவுகள், ஏசுவின் அடிப்படை போதனைகளில் காணப்படவில்லை என்றும், அவரது ஆன்மிகம் பொதுவாக ஒரு அகத்தன்மையை நோக்கி மதத்தைத் திருப்பும் ஒரு முயற்சியாக இருந்தது என்றும் கூறுகிறார். ஆனால், ‘அப்போஸ்தலரின் நடபடிகள்’-ல் (Acts) இந்தப் பிளவுகள் முக்கியத்துவம் அடைவதையும், பின்னர் தொடர்ந்து கிறிஸ்தவம் அரசியல் தன்மை கொண்ட ஓரிறை இயக்கமாக மாறியதையும் கூறுகிறார்.
ராம் ஸ்வரூப்
ஆர்.எஸ்.எஸ்., சீதாராம் கோயலின் நிலைப்பாட்டை கைக்கொள்ளவில்லை. இன்றைக்கு இணைய இந்துத்துவர்களிடையே கோயல் முக்கியத்துவம் அடைந்திருக்கிறார். ஆனால், ஏசுவின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட எந்த விமரிசனத்தையும் வைப்பதிலிருந்து ஆர்.எஸ்.எஸ். விலகியே இருக்கிறது. அத்துடன், கிறிஸ்தவர்களிடம் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டபடியே உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஐந்தாவது அகில இந்தியத் தலைவர் சுதர்ஸன், இந்தியக் கிறிஸ்தவ இறையியலாளரான ஜோசப் புலகுன்னலுடன், இந்தியக் கிறிஸ்தவம் குறித்த கலந்துரையாடல் கருத்தரங்கில் கலந்துகொண்டார். உபநிடத ரிஷிகளின் ‘அனைத்து மக்களும் நன்மை அடைந்து வாழ்க’ எனும் ஞானத்தையும், ஏசு போதித்த அமைதியையும் கொண்ட ஒரு இந்தியக் கிறிஸ்தவம் முக்கியத்துவம் கொண்டது என அக்கலந்துரையாடலின் முடிவில் அவர்கள் தம் அறிக்கையில் கூறினர்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஸன். ஆர்.எஸ்.எஸ். - கிறிஸ்தவ கலந்துரையாடல்
ஆக, ஏசுவை ஒற்றைத்தன்மையுடன் இந்துத்துவம் அணுகவில்லை. அவர்களின் அணுகலில் பன்மைத்தன்மை உண்டு. அனைத்து இந்துத்துவர்களும் ஒன்றுபடும் இடம் என்பது கட்டாய/மோசடி மதமாற்றங்கள், மதமாற்றத்தை உத்தேசித்து இந்தியாவில் சமூகப் பிரிவினைகளை ஏற்படுத்தும் அந்நியச் செயல்திட்டங்கள் ஆகியவற்றை எதிர்ப்பது என்பதுதான்.
‘இந்தியா ஒரு கிறிஸ்தவ தேசம்?’
இந்நிலையில், நாம் கேட்க வேண்டிய மற்றொரு முக்கியக் கேள்வி ஒன்று உள்ளது. பாபுராவ் சாவர்க்கரின் நூல் 1940-களில் எழுதப்பட்டது. அதற்கு, ஏசுவை மட்டம் தட்டும் நோக்கமோ அல்லது கிறிஸ்தவர்களை இந்துக்களாக மதமாற்றம் செய்யும் நோக்கமோ இல்லை. அதை வெளியிடுவது ஒரு ஒற்றை அமைப்பு. அவ்வளவுதான்.
ஆனால், இந்துக்களை மதமாற்றும் நோக்கத்துடன், காலாவதியாகிப்போன இனரீதியிலான கோட்பாடுகள் அடிப்படையில், இந்து மதமே கிறிஸ்தவத்திலிருந்து வந்ததாகவும், இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு என்பதாகவும் ஒரு நூல் வெளியிடப்படுகிறது. அந்த நூல் ஏதோ உதிரியாக வெளியிடப்பட்ட நூல் அல்ல. அந்த நூலுக்குச் சான்றுப் பத்திரங்கள், கிறிஸ்தவ சபைகளின் அதி உயர் பதவிகளிலும் அதிகார பீடங்களிலும் உள்ளவர்களால் வழங்கப்படுகிறது.
அன்று சென்னையில் ஆயராக இருந்தவர் (இன்று தருமபுரி மாவட்ட ஆயர்) லாரன்ஸ் பயஸ், இந்த நூலுக்குப் பாராட்டுரை வழங்குகிறார்: ‘திராவிடக் கிறிஸ்தவமே இந்து மதம்’ என அவர் கூறுகிறார். எஸ்ரா சற்குணம், இந்திய எவாஞ்சலிக்கல் சபையின் பிஷப். அரசியல் செல்வாக்கும் கொண்டவர். இந்தியா ஒரு கிறிஸ்தவ தேசம் என இளம் தலைமுறையினருக்கு உரக்கச் சொல்லும் இந்த நூலை அவர் ஆசிர்வதிக்கிறார். ஜான் சாமுவேல், ‘ஆசிய ஆராய்ச்சி அமைப்பு’ என்கிற மையத்தை நடத்தி வருகிறார். இதன் நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசிடமிருந்து உதவிகளையும் பெறுகிறார். அவர், இந்த நூல் விவிலியம் கூறும் ‘கடுகு விதை’ போன்றதென்றும், இது மிகவும் சாத்தியங்கள் கொண்ட ஒன்று என்றும் கூறுகிறார்.
 
இந்த நூல், வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்ட ஒரு இனவாத கட்டுமானத்தைக் கொண்டு இந்திய வரலாற்றையும் சமயத்தையும் திரிக்கிறது. ஹெராஸ் பாதிரியார், சிந்து சமவெளிப் பண்பாடு ஹாமிட்டிக் எனக் கூறுகிறார் என்பதை ஆதாரமாகக் காட்டுகிறது. ஹாமிட்டிக் என்பது, ஹாமின் வழித்தோன்றல்கள் என்பதாகும். விவிலிய நம்பிக்கையின்படி, ஹாம் என்பவன் நோவாவால் அவன் சந்ததிகள் அடிமைகளாகும்படி சபிக்கப்பட்டவன். காலனியப் பார்வையில், ஹாமிட்டிக் மக்கள் அடிமைகளாக இருக்கவே தகுதியானவர்கள். இன்று இந்தக் கோட்பாடுகள் மானுடவியலாளர்களால் மறுக்கப்பட்டுவிட்டன. ஆரியர் என்கிற இனமே காலனியவாதிகளால் உருவாக்கப்பட்டது. ஆரியன் என்கிற பதம், ஒரு இனத்தின் பெயராக இந்திய மரபில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த நூல் ஆரிய-திவிட இனவாதத்தை மட்டுமல்லாமல், விவிலிய அடிப்படைவாதத்தையும் வரலாறு என்கிற பெயரில் முன்வைக்கிறது.
பாபுராவ் சாவர்க்கரின் புத்தகம் போலல்லாமல், இந்த நூல் வெளிப்படையாக ‘இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு’ என்கிற நோக்கத்தை நோக்கிச் செல்லும் ஒரு கையேடாகத் தன்னை பிரகடனப்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நூல் குறித்து ஒரு முணுமுணுப்பைக்கூட நாம் ஊடகங்களில் காண இயலவில்லை.
புனித தாமஸும் – இந்தியாவும்
மாறாக, புனித தாமஸ் இந்தியா வந்து மதப்பிரசாரம் செய்ததாகவும், அவர் இங்கு இந்துக்களால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலே கூறப்பட்ட நூலான ‘இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு’ மட்டுமல்ல, மிகப்பெரிய அளவிலான கிறிஸ்தவப் பிரசார நூல்கள், புனித தாமஸ் கொண்டுவந்த கிறிஸ்தவமே பின்னர் இந்துமதமாகிவிட்டது எனக் கூறிப் பிரசாரம் செய்கின்றனர்.
 
இதற்கு ஆதாரமாக, அவர்கள் ‘புனித தாமஸ்’ தம் கையால் செதுக்கியதாகக் கூறப்படும் ஒரு சிலுவையை முன்வைக்கிறார்கள். ஆனால், சிலுவையைக் கிறிஸ்தவம் தம் சின்னமாக ஏற்றுக்கொண்டதே, ஏசு வாழ்ந்ததாகக் கருதப்படும் காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தாம். எனவே, உண்மை என்ன என அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன், ‘மதப் புனிதப் பொருட்களின்’ (relics) உண்மைத்தன்மையை ஆராய்ச்சி செய்யும் ஒரு இதழியலாளரை, இக்கட்டுரையாளன் தொடர்பு கொண்டான்.
 
நினா பெர்லைக் (Nina Burleigh) எழுதிய ‘Unholy Business - A True Tale of Faith, Greed and Forgery in the Holy Land’, 2008-ல் வெளியாகியிருந்தது. ஜெருசலேமில் மையம் கொண்ட விவிலிய அடிப்படையிலான ‘புனிதப் பொருட்களை’ உருவாக்கும் ஒரு பெரிய மத வர்த்தகத்தை அவர் வெளிக்கொண்டு வந்திருந்தார். அவருக்கு, 2010-ல் இக்கட்டுரையாளன் ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். தாமஸ் தம் கையால் செதுக்கியதாகச் சொல்லப்படும் சிலுவை அவர் செதுக்கியதாக இருக்குமா? தாமஸ் தமது கையால் செதுக்கியதாகச் சொல்லப்படும் சிலுவையின் புகைப்படமும் அக்கேள்வியுடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்தது. இக்கேள்வியையும் புகைப்படத்தையும், நினா மற்றொரு நிபுணருக்கு அனுப்பினார்.
ஜோசப் ஸியாஸ்
ஜோசப் ஸியாஸ், இஸ்ரேலிய அரசின் பழம் பொருட்கள் துறையில் இருந்தவர். ஏசு கிறிஸ்துவின் வரலாறு குறித்த ஆராய்ச்சியில் உலகப் புகழ் பெற்றவர். தொல்மானுடவியலாளர். அவருக்குத்தான், இக்கட்டுரையாளனின் கேள்வியையும் புகைப்படத்தையும் நினா அனுப்பியிருந்தார். ஜோவிடமிருந்து பதில் வந்தது.
ஷாலோம். இந்தச் சிலுவைக் கதை முழுக்க முழுக்க மோசடியாகத்தான் இருக்கமுடியும். சிலுவை, கிறிஸ்தவ வழிபாட்டுச் சின்னமானது மூன்றாம் நூற்றாண்டில்தான்.
இப்படிப் புனித மதச் சின்னங்களை எல்லா மதங்களும் உருவாக்குகின்றன. அவற்றுடன் தொடர்புடைய கதைகளையும் உருவாக்குகின்றன. ஆனால், அவற்றை வரலாறாக ‘உண்மைப்படுத்தி’ பிற மதத்தினரை இழிவு செய்யும்போது, அவை கேள்விக்குரியவை ஆகின்றன. அவை பிறரைப் பழிக்காத மத நம்பிக்கைகளாக இருக்கும்போது, அவற்றைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை அப்படிச் சீண்டுவது பண்பாடற்ற செயலும்கூட.
புனித தாமஸின் நற்செய்தி
அதே சமயம், தாமஸுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு ஒன்று உண்டு என எவ்வித உள்நோக்கமும் இல்லாத ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஞான நற்செய்தி நூல்கள் (Gnostic Gospels) என அழைக்கப்படும் ஆதி கிறிஸ்தவ கால தோல் சுருளேடுகள், இருபதாம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று, ‘புனித தாமஸின் நற்செய்தி’ எனும் நூல். நிறுவன கிறிஸ்தவம், ரோம சாம்ராஜ்ஜிய ஆதரவுடன் எழுந்த பின்னர், ஒடுக்கப்பட்ட சமயக் குழுக்களுள் இந்த ஞான (Gnostic) கிறிஸ்தவ குழுக்களும் அடங்குவர். அவர்களின் மறைநூல்களில் முக்கியமானதாக, தாமஸின் நற்செய்தி கருதப்படுகிறது.
 
எலைன் பேகல்ஸ், இந்த ஞான நற்செய்தி மறைகள் குறித்து ஆராய்ச்சி செய்தவர். அவர் தமது நூலில், தாமஸின் நற்செய்தி நூல் குறித்து பின்வருமாறு கூறுகிறார்:
ஆச்சாரவாத யூதர்களும் கிறிஸ்தவர்களும், படைப்புக்கும் படைத்த இறைவனுக்கும் இடையே கடக்கமுடியாத ஒரு வேறுபாடு இருப்பதாகக் கருதினர். ஆனால், ஞான நற்செய்திகளில் சில இதை மறுத்து குரல் எழுப்பின. அக அறிதலை அவை முன்வைத்தன. ஆத்மாவும் இறையும் ஒருமைத்தன்மை கொண்டவை எனக் கூறின. மேலும் இந்த நூல்களில், பாவத்திலிருந்து மீட்பு என்பதைவிட, அஞ்ஞானம் அல்லது மாயையிலிருந்து ஞானமடைதல் குறித்து ஏசு பேசுகிறார். சீடன் ஞானமடையும்போது, ஏசு அதற்குப் பிறகு குருவாக இருப்பதில்லை. மாறாக, சீடனுடன் ஐக்கியமாகிவிடுகிறார். இத்தகைய கோட்பாடுகள், ஆத்ம-இறை ஐக்கியம், மாயையிலிருந்து விடுபட்டு ஞானமடைதல் ஆகியவை, மேற்கத்தியத்தன்மையைவிட ஒரு கிழக்கத்திய மரபைக் காட்டவில்லையா?... தாமஸ், இந்தியாவுக்குச் சென்றார் என்பது தாமஸின் நற்செய்தியில் இந்திய மரபின் தாக்கம் இருந்தது என்பதைக் கூறுவதற்காகச் சொல்லப்பட்டதா?
இந்திய மரபில், எந்த இடத்திலும் தாமஸோ அல்லது கிறிஸ்தவமோ நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடப்படவில்லை. ஆனால், கிறிஸ்தவ சபையின் தொடக்க பிதாமகர்கள், ஞானத்துவ கிறிஸ்தவ மரபுகளில் ‘பிராம்மண’ மறைகளின் தாக்கம் இருந்ததைக் கூறியிருக்கிறார்கள். புனித ஹிப்போலைட்டஸ், ஞானவாத (Gnostic) கிறிஸ்தவம் பிராம்மண தப்பிதங்கள் (heresies) போல்வன எனக் கூறுகிறார். பிராம்மண தப்பிதங்கள் என்ன என்பதையும் அவர் விவரிக்கிறார்:
பிராம்மணர்கள் எளிய வாழ்க்கை வாழ்பவர்கள். அதனால், சத்தியத்தை தாம் அடைய முடியுமென்று நினைக்கிறவர்கள். … அவர்கள் கடவுள் ஒளிமயமானவர் எனச் சொல்கின்றனர். ஆனால், அது நம் கண்ணால் காணும் ஒளியன்று. சூரிய ஒளியோ நெருப்பின் ஒளியோ அல்ல. அவர்கள், கடவுள் நாத ரூபமானவர் எனச் சொல்கின்றனர். ஆனால், அது நம் புலனுணர்வுகளால் கேட்கும் ஒளிகள் அல்ல. அவை, அறிவின் மூலம் இயற்கையின் ரகசியங்களை ஞானியர் அறிந்திடும் ஒலி.
ஆனால், இவை தப்பிதங்கள் என்றும், இவையே ஞானத்துவ கிறிஸ்தவத்தில் சொல்லப்படுவதாகவும் அவர் கூறுகிறார். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிப்போலைட்டஸ், இந்தப் பிராம்மணர்கள், தாஸபெனா (Tazabena) நதித் தீரத்தில் வாழ்ந்தவர்கள்; அந்நதி நீரை அருந்தி வாழ்ந்தவர்கள் எனக் கூறுகிறார். தாஸபெனா என்பது தாமிரபருணியாக இருக்க வாய்ப்புள்ளது.
எதுவானாலும், மத மாச்சரியங்களையும் மதமாற்ற நோக்கங்களையும் கடந்து, ஹிந்து - கிறிஸ்தவ நல்லிணக்கம் என்பதை நோக்கிச் செல்பவர்கள், இறுதியில் வேதாந்த-பௌத்த மரபுகளை நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு நிலை, ஆதி காலம் தொட்டே ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. மீண்டும் மீண்டும், பாரத மரபு எல்லா மதங்களையும் அரவணைத்துச் செல்லவே முயற்சி செய்கிறது. எல்லா மத இறைவர்களும், இங்கே பிரம்மம் எனும் அடிப்படையில் ஒருமை கொள்ள முடியும். சுவாமி விவேகானந்தர் கூறினார்: “சகிப்புத்தன்மையல்ல; ஏற்புத்தன்மையே இந்தியாவின் குரல்”.
பாபுராவ் சாவர்க்கர், அன்றைக்கு அவருக்கு இருந்த தரவுகளின் அடிப்படையில் அதற்கான முயற்சியைச் செய்தார். தரவுகள் தவறாக இருக்கலாம். அவர் வந்தடைந்த முடிவுகள், இன்றைக்கு நகைப்புக்குரியதாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றைத் தாண்டி அவரது நோக்கம், கிறிஸ்தவத்தையோ அல்லது கிறிஸ்துவையோ இழிவுபடுத்துவதோ அல்லது கிறிஸ்தவர்களை இந்துகளாக மதம் மாற்றுவதோ இல்லை. அவர் விரும்பியது, மதமாற்றம் இல்லாத நல்லிணக்கத்தை.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா