Monday, June 12, 2023

அளுந்தூர் குளத்திற்குள் 2.60 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆக்கிரமித்து திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி சீல்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ஜெரிக்கே உடல் ஊனமுற்றோர் பயிற்சி பள்ளி மற்றும் செயின்ட் மேரி தொடக்கப்பள்ளி ஆகிய 3 கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளை தேவராஜ் என்பவரும், பாதிரியார் அன்பரசு என்பவரும் தாளாளராக இருந்து நிர்வகித்து வருகிறார்கள். இந்த 3 கல்வி நிறுவனங்களும் அளுந்தூர் குளத்திற்குள் சுமார் 2.60 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் குளத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை அகற்றும் ஆட்சியரின் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் செந்தில் என்பவர் மதுரை நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள இப்பள்ளியை மூட உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் இந்த 3 பள்ளிகளை மூடுவதற்கு ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் காலி செய்து கொள்வதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரை இடத்தை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

புதிய கல்வி ஆண்டில் இன்று பள்ளி தொடங்கிய நிலையில் மாணவர்களின் நலன் கருதி ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் 3 பள்ளிகளையும் ஸ்ரீரங்கம் தாசில்தார் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன் (தனியார் பள்ளிகள்) முன்னிலையில் வருவாய் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் நேற்று நண்பகல் மூடி சீல் வைத்தனர்.

இதற்கிடையே மாணவ, மாணவிகளும், அவர்களுடைய பெற்றோர்களும் திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, செவல்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மீண்டும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தினர்.

No comments:

Post a Comment