Friday, November 30, 2012

மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து

மீழ் பதிவு- நண்பர் கலையின் மூலப் பதிவு இங்கே



கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு முந்திய "மாண்டிய மதம்" இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது. மாண்டிய மத போதகர்களில் ஒருவரான ஜோன் (Yahya ibn Zakariyya அல்லது John the Baptist) இடமே, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய ஈராக்கை (முன்னை நாள் பாபிலோனியா) தாயகமாக கொண்டவர்கள். இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியாக கருதப்படும் அரமிய மொழியை இன்றும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். இன்றும் மாண்டிய மத வழிபாடுகள் யாவும் அந்த மொழியில் இடம்பெறுகின்றன.

அரமிய கிளை மொழியான, "மாண்டா" என்ற மொழியில் இருந்தே மாண்டியர்கள் என்ற பெயர் வந்தது. "அறிவு" என்று அர்த்தம் கொண்ட மாண்டா மொழி, அரமிய மொழியை ஒத்தது. இன்று நடைமுறையில் உள்ள, மத்திய கிழக்கு பிராந்திய மொழிகளான ஹீபுரு, அரபு, ஆகியனவும் ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இதனால் மாண்டியர்கள் யூத, அல்லது கிறிஸ்தவ மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று தவறாக கணிப்பிடப் படுகின்றனர். குறிப்பாக பண்டைய காலத்தில் நிலவிய "ஞோடிக்" (Gnostics) என்ற கிறிஸ்தவ பிரிவுடன் சேர்த்துப் பார்க்கப் படுகின்றனர். ஆயினும் மாண்டியிசம் ஒரு தனி மதம். கிரேக்கர்கள் பயன்படுத்திய ஞோடிக் என்ற சொல்லும், தமிழ் சொல்லான ஞானம், ஆங்கில சொல்லான know எல்லாம் ஒரே அடிப்படையை கொண்டவை.
   

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான தீர்க்கதரிசிகள் பலரை மாண்டிய மதத்தவர்களும் கொண்டுள்ளனர். குறிப்பாக நோவாவின் நேரடி வழித்தோன்றல்களாக தம்மை கருதிக் கொள்கின்றனர். மாண்டிய மதகுருக்கள் தலைப்பாகை கட்டி, தாடி வளர்த்திருப்பார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகத்தைக் கொண்ட பாபிலோனிய நாட்டில் இருந்த மதம் ஒன்றின் எச்சசொச்சம் அது என்று கருதப் படுகின்றது. பாபிலோனியர் காலத்தில் மதகுருக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிய வேண்டுமானால், இன்றைய மாண்டிய மதகுருவைப் பார்த்தால் போதும். அவர்களின் மதச் சடங்குகளும் பாபிலோனிய காலத்தில் இருந்து, அப்படியே மாறாமல் தொடர்கின்றன. திருக்குரானிலும் மாண்டிய மதம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இஸ்லாமியரின் புனித நூல் அவர்களை "சபியர்கள்" என்று குறிப்பிடுகின்றது. அதனால் இன்று அதற்கு "சபிய மதம்" என்று இன்னொரு பெயரும் உண்டு.

இயேசுவுக்கு ஞானஸ்நானம் அளித்த ஜோன், மாண்டியர்களின் பிரதான ஆன்மீக ஆசான்களில் ஒருவர். இருப்பினும் அவர் அந்த மத நிறுவனர் அல்ல. மாண்டியர்களின் மத வழிபாட்டில் ஞானஸ்நானம் பெறுவது முக்கியமான சடங்கு. மாண்டிய மத குருக்கள், ஓடும் ஆற்று நீரில் நிற்க வைத்து ஞானஸ்நானம் கொடுப்பார்கள். இயேசுவும் ஜோர்டான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. அநேகமாக, மாண்டிய மதத்தவர்களை பின்பற்றியே ஞானஸ்நானம் எடுக்கும் சடங்கை கிறிஸ்தவர்களும் தமது மதத்தில் சேர்த்துக் கொண்டனர். இருப்பினும் மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுக்கும் நோக்கம் வேறு. அது ஒரு மனிதன் முக்தி பேறடைவதைப் போன்றது. அதாவது மாண்டிய சித்தாந்தப்படி பொருளாயுத உலகை துறந்து, மெய்யுலகை காண்பது. இந்த அடிப்படை தத்துவம் மாண்டிய மதத்தை, கிறிஸ்தவ மதத்தில் இருந்து வேறுபடுத்துகின்றது. கிறிஸ்தவ மதமானது ஒரு மீட்பர் வரும் வரை காத்திருக்கச் சொல்கின்றது. இயேசு கிறிஸ்து ஒரு இரட்சகர் ஆவார். ஆனால் மாண்டிய மத மகான்களின் கடமை, மக்களுக்கு அறிவைப் புகட்டுவது.

Ginza Rba மாண்டிய மதத்தவர்களின் புனித நூல் ஆகும். இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலில், மாண்டியரின் வரலாறு, செய்யுள்கள், நன்மையின் தோற்றம், தீமையின் தோற்றம், போன்ற விடயங்கள் உள்ளன. அந்த நூல் இன்று வரை மாண்டா-அரமிய மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஒரேயொரு மேற்கத்திய மொழிபெயர்ப்பு ஜெர்மன் மொழியில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. மாண்டிய மதம் உலகை இரண்டு பிரிவாக பிரிக்கின்றது. நன்மை - தீமை, பொருள் - ஆன்மா, ஒளி - இருள், போன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான பிரிவுகளுக்கு இடையே சமரசம் ஏற்பட முடியாது என்று போதிக்கின்றது. அதே மாதிரியான அறிவியல் கோட்பாடுகள், "ஞோடிக் கிறிஸ்தவ" பிரிவினரிடையே காணப்பட்டது. ஆனால் மத அதிகாரத்திற்கான போரில் இன்றைய கிறிஸ்தவ மதம் வென்றதால், அந்தக் கோட்பாடு மறைந்து விட்டது. கிறிஸ்தவ மதம், மாண்டிய (அல்லது ஞோடிக்) கோட்பாட்டுடன் முற்றிலும் முரண்படுகின்றது. அது ஏழை - பணக்காரன், ஆண்டான் - அடிமை, போன்ற வர்க்க எதிரிகளும் சமரசமாக வாழ வேண்டும் எனப் போதிக்கின்றது. மேற்குலகில் பிற்காலத்தில் தோன்றிய மார்க்ஸியம் மட்டுமே அந்த வர்க்க சமரசத்தை எதிர்த்தது.
 
மாண்டிய மத உறுப்பினர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும், வன்முறையில் இறங்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பிற மதத்தவர்களின் வன்முறைக்கு இலகுவாக ஆளாகி அழிந்து வருகின்றனர். இன்றைய துருக்கி, கிரேக்க பகுதிகளில் வாழ்ந்த ஞோடிக் பிரிவினரை கிறிஸ்தவர்கள் அழித்து விட்டார்கள். அண்மைக் காலம் வரையில், ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் மட்டுமே மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக முன்னாள் பாபிலோனிய நாடான, இன்றைய ஈராக்கில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சிக் காலம் வரையில் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர், நிலைமை மோசமடைந்தது. இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள், மாண்டிய மத உறுப்பினர்களை இலக்கு வைத்துக் கொன்றார்கள். இந்தப் படுகொலைகளுக்கு சாமானிய இஸ்லாமிய மக்களின் ஆதரவும் இருந்தது. அதற்கு காரணம், காலங்காலமாக இஸ்லாமியர்கள் மாண்டிய மதத்தினரை, மத நம்பிக்கையற்றவர்கள் எனக் கருதி வந்தனர். சாதாரண இஸ்லாமிய அயல் வீட்டுக்காரன் கூட, மாண்டிய மதத்தவர் மீது வெறுப்புக் காட்டுவது வழமை. உயிரச்சம் காரணமாக, மாண்டிய மதத்தவர்கள் பெருமளவில் ஈராக்கை விட்டு வெளியேறி விட்டனர். இன்று அவர்கள் மேற்குலக நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இன்று உலகில் அழிந்து வரும் புராதன மதங்களில் மாண்டிய மதமும் ஒன்று.

  
நாம் யோவான் பற்றி உள்ள பைபிள் வசங்களை சேர்ப்போம்
மாற்கு 1:4திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
ஆனால் சிறையில் யோவான் அடைக்கப்பட்ட போது
மத்தேயு11: 2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை இயேசுவிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்.

யோவான் மிகப் பிரபலமானவர் என்பதும் மேலு தெளிவாக மன்னர் ஏரோதும் பயந்தான்.
மாற்கு 6:14  ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ' இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன ' என்றனர்.1
16 இதைக் கேட்ட ஏரோது, ' இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார் ' என்று கூறினான்.
18 ஏனெனில் யோவான் ஏரோதிடம், ' உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல ' எனச் சொல்லிவந்தார்.
20 ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.


http://pagadhu.blogspot.in/2012/11/blog-post_21.html
மேலதிக தகவல்களுக்கு

4 comments:

  1. வணக்கம் சகோ,
    நல்ல பதிவு. ஒரு புதிய மதம் உருவாகும் போது,சில ஒத்த கொள்கை உள்ள பிற மதத்தவரை ஈர்க்க தங்களின் மத புத்த்கத்தில் பிரபல் மதங்களின் இறைத் தூதர்கள் தங்கள் கொள்கைகளியே கொண்டவர், அவர் கருத்து திரிக்கப் பட்டதாக காடுவதை பல மதங்களின் தொடக்கத்தில் பார்க்க முடியும்.

    யூத மதத்தின் மேசியா என இயேசுவைக் காட்டி கிறித்த்வம் உருவானது, யோவான் இயேசுவை மேசியா என ஏற்பதாக் புதிய ஏற்பாட்டில் எழுதி மாண்டிய மத்த்தை குழப்பி ஆள் பிடிக்கிறார்.

    இஸ்லாமில் இயேசு(ஈசா), யோவான்(யாஹ்யா) மூமின் இறைத்தூதர்கள் எனக் காட்டி வேறு கதை சொல்வதும் எளிதில் அறியலாம்.

    நன்றி!!!

    ReplyDelete
  2. //மாண்டிய மத உறுப்பினர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும், வன்முறையில் இறங்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகள் உள்ளன.//
    யோவான் ஞானஸ்நானன் ஆயுதக் குழு ஏற்படுத்திய ஒரு கலகக்குழு நடத்தியுள்ளதாகப் படித்த ஞாபகம் வருகிறதே?

    தேவப்ரியா சாலமன் - கலையின் பதிவு என்று சொல்லியுள்ளீர் - உம் கருத்து என்ன?

    ReplyDelete
  3. வணக்கம் சகோ.

    முற்றிலும் புதிய செய்தி அறியத் தந்த‌மைக்கு நன்றி.

    ReplyDelete
  4. வருக நண்பர்- சார்வாகன், இனியவரே,

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    சுவிசேஷங்களில் உள்ள குறிப்புகளை முழுமையாகப் பார்த்தால் இயேசு- ஞானஸ்நானி யோவான் இருவரும் ரோமன் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போர் நடத்த முயன்றவர்களே.

    ReplyDelete