http://www.dailythanthi.com/News/State/2015/11/30035636/Country-made-bombs-found-in-village-near-Kudankulam.vpf
கூடங்குளம் அருகே கடற்கரையில் புதைத்து வைத்த 159 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
ராதாபுரம்,
கூடங்குளம் அருகே கடற்கரையில் புதைத்து வைத்த 159 நாட்டு வெடிகுண்டுகளை தோண்டி எடுத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கூத்தங்குழி கிராமம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அருகே உள்ள கடற்கரை கிராமம்தான், கூத்தங்குழி. அந்த ஊரில் அவ்வப்போது இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு சம்பவங்களும் அந்த கிராமத்தில் நடந்தன. திருட்டுத்தனமாக நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று அவ்வப்போது சோதனை செய்து வருகிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாலும், அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவதாலும், நாட்டு வெடிகுண்டுகள் போன்ற பொருட்கள் பதுக்குவதை தடுக்க தீவிர நடவடிக்கைகளை அந்த பகுதியில், போலீசார் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
கடற்கரையில் பதுக்கல்
கூத்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த சாந்தகுரூஸ் (வயது 46), நாட்டு வெடிகுண்டுகளை திருட்டுத்தனமாக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மீனவரான அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவில், கூத்தங்குழி அருகே உள்ள விஜயாபதி பஸ் நிலையம் பகுதியில் சாந்தகுரூஸ் நின்றிருந்தார். அவரை வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இரவு முழுவதும் அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. அவர். கூத்தங்குழி கீழத்தெருவை அடுத்துள்ள கடற்கரை பகுதியில், படகு நிறுத்தும் இடத்துக்கு அருகே நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
159 நாட்டு வெடிகுண்டுகள்
நேற்று காலையில் கூத்தங்குழி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த கிராமத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கடற்கரை பகுதியில் தீவிர சோதனை நடந்தது.
படகு நிறுத்தும் பகுதியில் ஒரு இடத்தை தோண்டிய போது, மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இருந்த பெரிய ஐஸ் பெட்டி ஒன்றை போலீசார் வெளியே எடுத்தனர். அதில், 100 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன.
பின்னர், கடற்கரையில் மற்றொரு இடத்தில் தோண்டியபோது, அடுத்தடுத்து 3 பிளாஸ்டிக் வாளிகள் வெளியே எடுக்கப்பட்டன. அந்த வாளிகளில் மொத்தம் 59 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. கைப்பற்றப்பட்ட 159 நாட்டு வெடிகுண்டுகளும், கூத்தங்குழியில் உள்ள ஒரு இடத்துக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.
கைது
இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாந்தகுரூசை கைது செய்தனர். நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கியதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எதற்காக கடற்கரையில் நாட்டு வெடிகுண்டுகளை அவர் பதுக்கி வைத்திருந்தார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அருகே கடற்கரை பகுதியில் 159 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
No comments:
Post a Comment