Wednesday, November 4, 2015

மேரி மக்தலீன் - ஜெயமோகன்

 இருவர் (மேரி மக்தலீன்)

http://www.jeyamohan.in/5434#.VjoupdIrLIV
1
மேரி மக்தலீன் குறித்து தேவாலயங்கள் வழியாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவளைப்பற்றி மதகுருக்கள் மேடையில் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அவளைப்பற்றிச் சொன்னவர் ஒரு மதகுரு. எங்களூரின் கத்தோலிக்க தேவாலயத்தில் அவர் சிறிதுகாலம் பணியாற்றினார். அந்த ஆலயத்தின் அத்தனை மதச்சடங்குகளுக்கும் அப்பால் நிற்பவராக தோன்றினார் அவர். கீழே லௌகீக லாபங்களுக்காக காணிக்கைகளுடன் வந்திருக்கும் மக்களுக்கு மேலே வானைத்தொட எழுந்து நிற்கும் சிலுவையின் தூரமும் தனிமையும் அவருக்கிருந்தது.
அவர் பெயரை எழுதி அந்த தனிமையைக் கலைக்க விரும்பவில்லை என்றாலும் என்னுடைய ‘பூமியின் முத்திரைகள்’ என்ற குறுநாவலில் அவரது சித்திரத்தை உருவாக்கி எனக்காக நிரந்தரப்படுத்திக்கொண்டேன். அவரது அறைக்கு சிலசமயம் நான் செல்வதுண்டு. பைபிள் எப்போதும் அவரது மேஜைமேலிருக்கும் என்றாலும் அதை அவர் வாசித்து நான் கண்டதில்லை. பஷீர், தகழி, தேவ், காரூர் என இலக்கியநூல்கள் மட்டும்தான் இருக்கும். வாஷ்பேசினில் நீர் நிறைத்து பிராந்திப்புட்டியைப் போட்டிருப்பார். துணியாலான சாய்வுநாற்காலியில் வெள்ளை பனியனுடன் அமர்ந்து படித்துக்கொண்டே இருப்பார்.
தகழியின் ‘பதிதபங்கஜம்’ என்ற நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர் தன்னிச்சையாக மேரி மக்தலீனைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். அவள் கிறிஸ்துவின் தோழி என்றார். அந்தக்கூற்று எனக்கு முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவள் விபச்சாரி அல்லவா என்றேன். ”அதைப்பற்றி என்ன? அவள் கிறிஸ்துவின் தோழி. கிறிஸ்துவை அவள்தான் கடைசிக்கணம் வரை பின் தொடர்ந்து வந்தாள்.. அவள் உயிர்த்தெழுவதைப் பார்க்கும் வரம் அவளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது” என்றார்.
”மேரி மக்தலீன் அவனை நிழல்போலப் பின்தொடர்ந்தாள். அவன் செல்லுமிடங்களில் எல்லாம் அவளும் சென்றாள். அவன் சொன்ன சொற்களை எல்லாம் அவளும் கேட்டாள். அவனைச் சிலுவையில் அறையும்போதும் கூட இருந்தாள். அவன் விண்ணகம் செல்லும்போது அவனைக் கண்டாள்” என்றார் அவர்.
”கிறிஸ்துவைப் பின்தொடர்வது எளிய விஷயமல்ல. அது உடைகளில் தீ பற்றும் அனுபவம் போன்றது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவளைத்தவிர பிறரால் அவனுடைய உக்கிரத்தை தாங்க முடியவில்லை. அதற்குக் காரணம் அவளுடைய காதல். அளவிலாத காதலால் மேரி கிறிஸ்துவின் தெய்வீகத்தை முழுக்க தானும் உள்வாங்கிக் கொண்டாள். காதலின் சுயசமர்ப்பணம் எத்தனை மகத்தானது என்பதற்கு அவளே ஆதாரம். உலகம் முழுக்க ஞானியரையும் தெய்வமகன்களையும் காதல்கொண்ட பெண்களன்றி பிற எவருமே கடைசிவரை பின்தொடர்ந்துசென்றதில்லை…”
நான் பின்பு பலமுறை அவரது சொற்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கல்லூரி நாட்களில் கிறிஸ்துவை பார்க்கும்போது அவருக்கு ஒரு தோழி இருந்திருக்கிறாள் என்ற எண்ணமே இன்னும் நெருக்கமானவராக அவரை ஆக்கியது.  அவருடன் தனிமையில் இருந்தால் முகம் பார்த்துப் புன்னகை செய்ய முடியும் என்பது போல. பின்னர் நிகாஸ் கஸந்த் ஸகீஸின் ‘கிறிஸ்துவின் கடைசி சபலம்’ நாவலில் மேரி மக்தலீனை மிக நெருங்கிக் கண்டறிந்தேன். அவள் வழியாக புதிய ஒரு கிறிஸ்துவை உணர்ந்தேன்.
கிறிஸ்துவின் வாழ்க்கையின் இருபெண்களுக்கும் மேரி என்றே பொதுப்பெயர் என்பது என்னை பலசமயம் விசித்திரமான முறையில் ஆழ்ந்துபோகச் செய்திருக்கிறது. அதில் மர்மமான ஏதோ ஒன்று இருப்பது போல. எங்களூரில் மக்தலீனாவுக்குச் சிலைகள் இல்லை. அவள் ஓவியங்களை நான் கண்டதில்லை. ஆகவே இளமையான மேரியின் முகமே மக்தலீனாவின் முகமென என் நெஞ்சில் வடிவம் கொண்டது. இன்று இரு முகங்களும் மனத்தில் ஒன்றுபோலத்தான் தெரிகின்றன. ஒருவரை விலக்கி இன்னொருவரை எண்ண முடிவதில்லை. கஸந்த் ஸகீஸின் மகத்தான நாவல் உண்மையில் இருபெண்களுக்கும் ஒரு தேவமகனுக்கும் இடையேயான உறவின் கதை.
மேரி மக்தலீன் கிறிஸ்துவின் சீடர்களில் முதலாமிடத்தில் இருப்பவள் என்று நூல்கள் சொல்கின்றன. எல்லா கிறித்தவ குழுக்களிலும் அவள் புனிதவதிதான். ஆனால் அவளுடைய இடம் கிறித்தவம் ஒருமைவடிவம் கொள்ளும்தோறும் குறைந்தது. ஆதிக்கிறித்தவத்தில் கிறிஸ்துவின் தோழியாக, அவர் சொற்களை முற்றுணர்ந்த முதல் ஞானியாக அவள் வழிபடப்பட்டாள். அன்று கிறித்தவம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே மதமாக இருக்கவில்லை. கிறிஸ்துவின் சொற்கள் ஒற்றை அர்த்தத்தில் முறைப்படுத்தப்படவுமில்லை. ஏன் கிறிஸ்து ஞானியாக கருதப்பட்டாரே ஒழிய கடவுளின் ஒரே குமாரராக எண்ணப்படவில்லை.
ஞானவாத கிறித்தவம் என்று சொல்லப்பட்ட அந்த மரபுகள் கிபி 388 முதல் கத்தோலிக்க அதிபர் பாப்பரசரின் ஆணைப்படி கடுமையான ஒடுக்குதலுக்கு ஆளாகி கிட்டத்தட்ட பூமியின் மீதிருந்தே ஒடுக்கப்பட்டன. பைபிளின் பல பகுதிகள் புறனடையாகக் கருதப்பட்டு விலக்கப்பட்டு புதிய ஏற்பாடு உருவாகி வந்தபோது மக்தலீன் வெறும் ஒரு பெயராக பைபிளில் உருவம் கொண்டாள். நான்கு மைய நற்செய்திகளிலும் மேரி மக்தலீன் குறித்து ஒரு சில வரிகளே உள்ளன.
ஆனால் ஞானவாத கிறித்தவத்தில் மேரி பேரொளியுடன் திகழும் ஞானவதி. அவளுடைய சொற்களே உண்மையில் கிறிஸ்துவின் ஞானத்தைப் பதிவுசெய்தன. மேரி மக்தலீன் எழுதிய நற்செய்தி கிபி மூன்றாம் நூற்றாண்டுவரைக்கூட புழக்கத்தில் இருந்திருக்கிறது. 1896ல் செங்கடல் தாள்கள் என்று சொல்லப்படும் பாப்பிரஸ் ஆவணங்கள் கிடைத்தன.  அவற்றில் ஒன்று மேரி எழுதிய நற்செய்தி. அதன்பின்னர் 1945 ல் எகிப்தில் நாக் ஹமாதி என்ற இடத்தில் புதைபொருட்களாக தாமஸின் நற்செய்தி உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன. இவை கிபி இரண்டு,மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் மிகச்சிதிலமடைந்த வகையில் ஓரளவே கிடைக்கின்றன
இந்த அழிக்கப்பட்ட பைபிள் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று சரிவரப் பொருந்திப்போகின்றன. இவை கிறிஸ்துவை மாபெரும் ஞானகுருவாக எண்ணிய ஒரு கிறிஸ்தவ மரபு இருந்திருப்பதற்கான சான்றுகள். இந்த நற்செய்திகளில் வரும் கிறிஸ்து மண்ணில் செய்யும் நன்மைகளுக்கு விண்ணில் ஊதியம் அளிக்கும் கடவுள் அல்ல. விண்ணகத்தில் மீட்பு உள்ளது என்று சொல்லும் மதநிறுவனரும் அல்ல. வாழ்வாங்கு வாழ்ந்தால் மண்ணிலேயே  இறைவனின் உலகம் அமையும் என்று சொல்லக்கூடிய புரட்சியாளர்.  அந்த விண்ணகத்தை மண்ணில் அமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு என்று சொன்னவர்
ஒருபோதும்  எந்த ஓர் அமைப்பாலும் உள்ளிழுத்துக்கொள்ள முடியாத உக்கிரத்துடன் இருக்கிறார் ஞானவாத கிறிஸ்து. அமைப்புகளும் அரசுகளும் வைக்கோல்போர்கள், அவர் அனல். அவரை கடவுளாக்கி, எதிர்பார்ப்புகளை வானுக்குத் திருப்பி, நம்பிக்கையை உரிமைக்கான வாளாக ஆக்குவதற்குப் பதில் கீழ்ப்படிதலுக்கான பத்திரமாக ஆக்கி , கான்ஸ்தண்டீனின் ரோமப்பேரரசு இன்றைய கிறிஸ்தவத்தை உருவாக்கியது. கிறிஸ்துவின் அணையாத கனலை ஆவணமாக்கிய மேரி மக்தலீன் பின்னகர்ந்தாள். பின்னர் கிறிஸ்து இறைமகனாக, மானுடர் அண்டமுடியாத தூய வடிவமாக ஆனபோது மக்தலீன் விபச்சாரியானாள். வரலாற்றில் தன் சொற்களுடன் புதைந்து மறைந்தாள்.
கிறிஸ்துவின் ஞானத்தை ‘பிரபஞ்சத்தின் பெண்மைஞானம்’ என்று சொல்லலாம். கிருஷ்ணனின், புத்தரின் மெய்ஞானம் பிரபஞ்சத்தை ஞானத்தால் வென்று மூடும் ஆண்மைத்தன்மை கொண்டது. வீரியத்தால் வேகத்தால் ஆனது. மூளைத்திட்பம் கொண்டவர்களால் மட்டுமே அணுகத்தக்கது. கண்ணனின் சொற்களில் வீரமே முதல் விழுமியம். அனைத்தும் தொடங்குவது அங்கிருந்தே. அச்சமின்மையே ஞானத்தின் ஆரம்பம் என்றார் புத்தர். புறத்துக்கும் அகத்துக்கும் அஞ்சாமை. ஒருபோதும் பின்னகராத விழிப்புணர்வு. ஆகவேதான் அவர் அஜிதர் எனப்பட்டார்.
நேர் மாறாக கிறிஸ்துவின் மெய்ஞானம் கீழ்ப்படிதலை முதல் விழுமியமாக வைக்கிறது. மகத்துவத்திற்கு முன்னால் அகங்காரத்தை கழற்றி வைத்து மண்டியிடும் எளிமையில் இருந்து ஆரம்பிக்கிறது அது. களங்கமின்மையையும் கருணையையும் ஆயுதங்களாக கொண்டது. மனம் கனியும் வல்லமை கொண்ட எவருக்கும் உரியது அது. பாவத்திற்கு அஞ்சுதலை, துயரங்களைப் பொறுத்துக்கொள்ளுதலை முன்வைக்கிறது. அது பெண்மைத்தன்மை கொண்ட ஞானம்
ஆகவேதான் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் கடவுளின் மனையாட்டிகளாக தங்களை நிறுத்திக்கொண்டார்கள். சகித்துக்கொள்ளுதல் மூலம் அடையும் வெற்றியில், கசப்புகளை உள் வாங்குவதன் மூலம் அடையும் இனிமையில் , சோதனைகள் மூலம் பெறும் தூய்மையில் நம்பிக்கை கொண்டார்கள். உலகமெங்கும் ஆறுதல் அளிக்கும் சொற்களுடன், இளைப்பாற்றும் தோள்களுடன். கண்ணீர் படர்ந்த பிரார்த்தனைகளுடன் அவன் செய்தியைக் கொண்டு சென்றார்கள்.
அவன் வாழ்ந்தபோது அச்செய்தியை பெண்மனம் புரிந்துகொண்ட அளவுக்கு வேறெவராவது புரிந்துகொண்டிருப்பார்களா என்ன? மேரி மக்தலீன் மீது பிற சீடர்கள் காழ்ப்பு கொண்டிருந்தார்கள் என்று ஞானவாத நூல்கள் குறிப்பிடுகின்றன. அவளை கிறிஸ்து நெருங்கிய அளவுக்கு பிறரை நெருங்கவில்லை. ஏனென்றால் அவர்கள் ஆண் மகன்கள். அவரோ அவர்களிடம் திரும்பவும் குழந்தைகளாகும்படி அறிவுறுத்தினார்.
‘மிக அழகான விண்மீனை விட அழகானவள்’ என்று வேர்ட்ஸ்வர்த் கன்னிமரியைச் சொன்னார். எளிய யூதகுலப்பெண், வெயிலிலும் மணற்புயலிலும் அடிபட்டவள், எப்படி பேரழகுடன் இருந்திருக்க முடியும்? தன் தவத்தாலும் பொறுமையாலும் மனுக்குலத்துக்கு அவள் அளித்த பெரும் தியாகத்தாலும் அந்த பேரழகை அவள் பெற்றாள். கவிஞனின் கண்கள் மட்டுமே தொட்டெழுப்பும் அழகு அது.
கிறித்தவ நூல்களில் மரியன்னை மீண்டும் மீண்டும் நட்சத்திரமாக உருவகிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கடல்களின் விண்மீன் என்று அவளைச் சொன்னார்கள். வழிகாட்டும் விண்மீன் என கடற்பயணங்களில் அடையாளம் கண்டார்கள். கிறித்தவ மரபின் தொடக்கத்தில் மரியன்னை கிறிஸ்துவை அவரது ஞானத்துடன் பெற்றுக்கொண்ட தூயவளாக வழிபடப்பட்டிருந்தாள். பின்னர் அவளுடைய இடம் மெல்ல மெல்ல பைபிளில் குறைந்தது.  புதிய ஏற்பாட்டு பைபிளில் இருந்து நாம் பெறுவது மேரியின் வெறும் ஒரு கோட்டுச்சித்திரம் மட்டுமே
ஆனால் கிறித்தவத்தைப் பின்பற்றிய கோடிக்கணக்கானவர்களில் அவள் நிலைமாறா விண்மீன் என நின்றமையால் பின்னர் திருச்சபை அவளை அங்கீகரித்தது. மனிதகுமாரனைக் கையில் ஏந்திய அன்னை உலகமெங்கும் வழிபடு சின்னமாக ஆனாள். ஒருவேளை உலகில் மிக அதிகமான பேர் வழிபடுவது கிறிஸ்துவை விட அன்னையைத்தான் என்று தோன்றுகிறது.
ஆரம்பகால பைபிளில் மரியன்னை எந்த வகையில் இருந்தாள் என்பதற்கான தடையங்கள் குர் ஆனில் உள்ளன. குர் ஆனின் பத்தொன்பதாம் அத்தியாயத்தில் ஈசா நபியின் பிறப்பை வருணிக்கும் போது பெண்களுக்கு முதல்வி என மரியத்தை நபியின் சொற்கள் சிறப்பிக்கின்றன. இறைபக்தியால் தன்னுடைய குடும்பத்தைவிட்டு நோன்பு நோற்றபடி தனித்து வசிக்கும் மரியத்தை இறைவனின் தூதனாகிய மலக்கு வந்து சந்திக்கிறது. இறைமகன் பிறக்கப்போவதை அறிவிக்கிறது. தான் கன்னி என்று மரியம் சொல்கிறாள். கன்னியின் வயிற்றிலேயே அவன் பிறப்பான் என்று மலக்கு சொல்லி விலகுகிறது.
மரியம் மக்களிடமிருந்து ஏளனத்தையும் வசைகளையும் எதிர்கொள்ள நேர்கிறது என்று குர் ஆன் சித்தரிக்கிறது. அப்போது நிலைமாறாத விசுவாசத்துடன் ‘எனக்கு வேதம் அருளப்பட்டுள்ளது’ என்று அவள் சொல்கிறாள். சமூகம் அளித்த வசைகளையும் ஒதுக்குதலையும் அரசின் வேட்டையையும் தன் கண்ணீர் நனைந்த பிரார்த்தனையால் அவள் வென்று தாண்டிச்செல்கிறாள்.
ஜெருசலேம் தேவாலயத்திற்கு மகனுடன் செல்லும் மேரியிடமிருந்து குழந்தையை வாங்கி முத்தமிட்டு இறைவனின் பெருங்கருணையை வாழ்த்திய சிமியோன் தீர்க்கதரிசி சொன்னார் ‘ …மரியமே உன் இதயம் வழியாக ஒரு வாள் துளைத்துச் செல்லும்’  குரூரமான சொற்கள். ஆனால் அந்தக்குழந்தை பிறந்ததுமே அன்னைக்கு உள்ளூரத் தெரிந்திருக்கும், அதுதான் அந்த பொன்னாலான வாள் என்று. அந்த கணத்தை நோக்கி அவள் வாழ்நாள் முழுக்கச் சென்றுகொண்டிருந்தாள்.
கிறிஸ்துவுக்காக மேரி அலைந்துகொண்டே இருந்தாள். கர்ப்பிணியாக இருந்தபோது பெத்லகேமுக்குச் சென்றாள். பிறகு எகிப்துக்கு தப்பி ஓடினாள். வேட்டையாடிய எரோது மன்னன் இறந்தபின்னர் அவள் மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பிவந்தாள். பிறகு கலீலியில் நசரேத்துக்குச் செல்கிறாள். பின்னர் ஏசு சென்ற இடங்களுக்குச் சென்றாள். கல்வாரிமலை வரை அப்பயணம் நீடித்தது.
கிறிஸ்துவின் வாழ்க்கை முழுக்க அவரை மரியத்தின் பிரக்ஞை பின் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. ஒரு கணம்கூட அவனை விட்டு அவள் ஆத்மா விலகியிருக்காது. பைபிளின் குறைவான சொற்களிலேயே மீண்டும் மீண்டும் தன் மகனிடம் வந்துசேரும் அன்னையை நாம் காண்கிறோம். ஜெருசலேம் நகரில் தேவாலயத்தில் மதபண்டிதர்கள் நடுவே விவாதித்துக்கொண்டிருந்த குழந்தை ஏசுவைக் கண்டு அச்சமும் பீதியும் கொண்டு அவள் சொன்னாள் ”நானும் உன் தந்தையும் உன்னை பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்தோம்”
மேரிக்கு அவன் பிறக்கும்முன்னரே அவன் யார் என சொல்லப்பட்டுவிட்டது. ஆனாலும் அவள் தாயாகவே இருந்தாள். தாயின் பெரும்பிரியத்தால் அவனை மூடிக்கொண்டாள். அந்தப்பிரியமே அவன் யாரென அவளுக்குக் காட்டாமல் மறைத்தது. அவனுக்கு சித்தப்பிரமை என்று சொல்லிக்கேட்டபோது கடுந்துயர் கொண்டாள்.
அந்த தாய்ப்பாசத்தில் மூடிய கண்களுடன்தான் அவள் தன் சீடர் நடுவே இருந்த அவனைத் தேடிச் சென்றாள். அவள் பிரியம் வெறும் தாய்ப்பாசமா என்று அறிய விரும்பிய கிறிஸ்துவே ”என் உறவினர்கள் என் சொற்களை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே”  என்று அவளை நிராகரித்தார். நீ என்னை உன் மகன் என எண்ணியிருந்தால் அந்த மகன் இறந்து விட்டான் என உணர்வாயாக என்று அவளிடம் அவர் சொல்லியிருக்கலாம். ஒவ்வொரு கணமும் சிலுவையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கிறிஸ்து இறைவனுக்கு மட்டுமே மகன். மனிதகுலத்துக்கு முழுக்க சொந்தமானவன். தன் மார்புகளின் மீது அவரை அணைத்துக்கொள்ள மரியத்திற்கு உரிமை இல்லை.
அதை மரியம் உணர்ந்திருப்பாள் என்றே பைபிளைக் கொண்டு ஊகிக்க முடிகிறது. அவளும் கடைசிக்கணம் வரை இறைமகனை பின் தொடர்ந்து சென்றாள். சிலுவைப்பாட்டின் இறுதிக்கணம் வரை அவளும் இருந்தாள். அவளுக்காக தயாராகி இருந்த அந்த வாள் அவள் ஆத்மாவில் பாய்ந்தது. அவளை துயரத்தின் சிகர நுனிகள் வழியாக அவளை தூயவளாக்கி மானுடத்தின் அன்னையாக்கியது.
அவனுடைய தூய உடலை தன் கைகளில் பெற்றுக்கொண்டாள். கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்குப் பின்னர் சீடர்கள் நடத்திய பிரார்த்தனைகளில் மரியம் கலந்துகொண்டாள் என்று பைபிள் சொல்கிறது. கல்வாரியில் அவன் தியாகம் முழுமை பெற்றபின்னர் அவள் அவனை முழுதுணர்ந்திருக்கலாம்.
ஜார்ஜ் ஹென்றி டவார்ட் எழுதிய கன்னி மேரியின் ஆயிரம் முகங்கள்  [ The thousand faces of the Virgin Mary, George Henry Tavard] என்ற நூல் ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் கிடைத்தது எனக்கு. அதை பத்திபத்தியாக ஒருவருடம் முழுக்க வாசித்தேன். ஒரு மனப்பிம்பமாக அதை இன்று நினைவுகூர்கிறேன். கிறிஸ்து உலகமெங்கும் சென்றபோது கூடவே மேரியும் பெருகிக்கொண்டே இருக்கிறாள். தமிழ்நாட்டிலேயே எத்தனை அன்னைகள். நமது கடற்கரை வழியாகச் சென்றால் ஐந்து கிலோமீட்டருக்கு மேரியின் ஒரு முகம் தெரிகிறது.கிறிஸ்து ஓர் ஆடிபோல, அவள் அதில் பிரதிபலித்துப்பெருகுகிறாள்.
இரு பெண்கள். ஒரு சுடருக்கு இருபக்கமும் பொத்திக்கொண்டிருக்கும் இரு கைகளைப்போல. பேரழகு கொண்ட ஒரு பறவையின் இரு சிறகுகளைப்போல. இரண்டு மேரிகள். நான் கற்பனைசெய்வதுண்டு, மேரி தன் மகனை நோக்கிச் சென்று அவனை தன்னுடன் அழைக்கும்போது அவன் காலடியில் மேரி மக்தலீன் இருந்திருப்பாளா என.  இருந்திருந்தால் அன்னையில் இல்லாத தோழியில் இருந்த எது அவளை மேலும் அருகே கொண்டுசென்றது?
அதற்காகத்தான் மேரி மக்தலீன் மனம் திரும்பிய பாவி என்று சொல்லப்பட்டிருக்கிறதா? பாவிகளுக்கும் துயரம் கொண்டவர்களுக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் மட்டுமே புரியும் செய்தியைத்தான் அவன் சொன்னான் என்பதா? அன்னையின் பேரன்பு உணராத ஒன்றை கண்ணீர் நிறைந்த காதல் புரிந்துகொண்டதா என்ன?
மேரி மக்தலீன் எழுதிய நற்செய்தியில் பீட்டர் சினத்துடன் ஆண்ட்ரூவிடம் கேட்கிறார்”அவர் நம்மிடம் பொதுவாகப் பேசாமல் ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசினார் என்பது உண்மையா? இனி நாம் அவளை நோக்கிச் சென்று அவள் வாயிலிருந்து ஞானமொழிகளைக் கேட்க வேண்டுமா? எங்களை விட்டுவிட்டு அவர் அவளையா தேர்ந்தெடுத்தார்?”
கண்ணீர் விட்டு மேரி மக்தலீன் சொன்னாள் ”பீட்டர் என் சகோதரனே நீ என்ன நினைக்கிறாய்? என் இதயத்தால் நான் இந்த அளவுக்கு சிந்திக்க முடியுமா? அல்லது என் மீட்பரைப்பற்றி நான் பொய் சொல்வேனா?”
பீட்டரை லெவி சமாதானம்செய்கிறார். ”பீட்டர் நீ எப்போதுமே சினம் கொண்டவனாக இருக்கிறாய். இந்தப்பெண்ணை எதிரியைப்போல  நீ நடத்துகிறாய். நம்முடைய மீட்பர் அவளே தகுதியானவள் என்று எண்ணினால் அதை மறுக்க நீ யார்?”
பீட்டர் உருவாக்கிய திருச்சபையை ஏசுவின் மணவாட்டி என்று சொல்லும் ஒரு மரபு உண்டு. அந்த ஒரே ஒரு தோழிக்கு நிகராகவா அத்தனை பெரிய அமைப்பை அவர் உருவாக்கினார் என்று தோன்றுகிறது
ஏசு உயிர்த்தெழுந்ததைக் கண்டு மகிழ்ந்து பிறருக்குச் சொல்ல ஓடும் மேரி மக்தலீன் முன்னால் திடீரென்று ஏசு தோன்றி அவர்களை வாழ்த்தினார். அவள் அவரை நோக்கி ஓடி அவரது காலடிகளைப்பற்றிக் கொண்டு பணிந்து நின்றாள் என்கிறது பைபிள். என்றும் தன் ஆத்மா அறிந்திருந்த ஓர் உண்மையை அப்போது மேரி மக்தலீன் தன் கைகளாலும் உணர்ந்திருப்பாள்.
நெடுந்தூரத்துக்கு அப்பால் இளமையின் ஒளிமிக்க நாட்களில் நான் குன்னத்துக்கல் அச்சனின் முகத்தையும் கண்களையும் காண்கிறேன். அவர் என்ன சொன்னார் என்று இப்போது புரிகிறது. தோழியாக ஆகும்போது அன்னையும், அன்னையாக மாறும்போது தோழியும் கண்டுகொள்ளும் அழியாத மெய்மை ஒன்று உண்டு.
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Dec 4, 2009

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா