Saturday, October 1, 2022

பொன்னியின் செல்வன்

 பொன்னியின் செல்வன் பாகம் : 1

அரிதாக இந்த முறை திரையரங்கில் என் அருகில் 5-6 இளம் கல்லூரி யுவதிகள். படமும் கலர்புல்லாக இருக்கும் என்று நம்பினேன். கலவையான உணர்வுகளே எஞ்சின. வால் நட்சத்திரம் கதையிலும் காட்சியிலும் மேல் தொங்க சம்பவங்கள் நிகழ்வது, காட்சி இடங்கள் மாறுவது தமிழுக்கும் இந்திய சூழலுக்கும் புதியது. ஆனால் சென்ற வருடம் வெளிவந்த Don't look up படத்தின் காட்சிகள் ஒரு எரிக்கல் உருவாக்கும் கெட்ட நிமித்த உணர்வை ஏற்படுத்திவிட்டதால் எனக்கு மிக பிரமாதமாக தோன்றவில்லை. special thanks இல் வரும் கமல் பெயருக்கும் அவரின் குரல் மடல் ஆரம்பிக்கும் வேளையிலும், த்ரிஷா அறிமுகமாகும் காட்சிக்கும் அரங்கம் அதிர வரவேற்பு இருந்தது. இந்த இரு நட்சத்திரங்களின் புத்தெழுச்சியும் எனக்கு மகிழ்வையே கொடுக்கிறது.

நமக்கு அறிமுகமான கதையும் கதைக்களமும் என்பதால் என்னால் படத்தில் உடனே ஒன்ற முடிந்தது. படம் எங்கும் எனக்கு சலிக்கவில்லை. புரியாமல் போகவில்லை. அந்த வகையில் நல்ல படம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் படத்தில் உச்சம் என்பதே எங்கும் இல்லை. ஒரு உச்ச காட்சி, ஒரு மர்ம முடிச்சவிழ்ப்பு என எங்கும் இல்லை. அதாவது காட்சி மொழியில் வெளிப்படவே இல்லை.
ஆதித்த கரிகாலனின் காட்சிகள் மொத்தமும் இன்றைய இளைய தலைமுறை பார்த்து தள்ளிவிட்ட அரச படங்கள் சீரிஸ்களுக்கு அருகில் கூட வராது. மிகவும் பழைய பாணி காட்சிகள். நாயகன் குதிரையிலிருந்து இறங்கி அடித்து வெல்வது என்பது இனி யாரையும் சுவாரஸ்யப்படுத்த போவதில்லை. Game of Thrones சீரிஸில் வரும் Stannis Baratheon போன்ற பிம்பமே ஆதித்த கரிகாலனுக்கு உருவாகிறது. நல்ல உணர்வான கதையோட்டத்தில் வரும் அவரின் போர்காட்சிகள் வேகத்தடை போன்றே இருந்திருக்கும். ஆனால் அந்த கதையோட்டமும் அதி சுவாரஸ்யமாக இல்லாததால் விக்ரமின் கோட்டை காட்சிகள் பத்தோடு பதினொன்றாக தோன்றுகிறது. படத்தின் production values ஏனோ தற்போதைய பிரம்மாண்ட படங்களின் வரிசையிலும் இல்லை. ஆராய்ச்சி செய்தோம் என்று சொல்கிறார்கள். திரையில் அவை எதுவும் வெளிப்படவில்லை. இடைவேளையின் போது வரும் காட்சி ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் விக்ரமின் நடிப்பில் எந்த புதுமையும் இல்லை. சேது படத்தில் நாயகி மண்டையை பிளக்க பாறையை வைத்துக்கொண்டு வெளிப்படுத்திய நடிப்பையே மீண்டும் கொடுத்திருக்கிறார்.
வல்லவரையன் வந்தியத்தேவன் தான் கல்கியின் நாவலிலும் படத்திலும் நம்மை கதையினுள் கொண்டு செல்லும் கதாபாத்திரம். அவனது நாவன்மையும் தீர குணமும் வெகுளித்தன்மையுமே அவனை நாயகனாக்கி நம்முடன் பிணைக்கிறது. படத்தில் அது ஓரளவு வெளிப்பட்டிருக்கிறது. நந்தினி, குந்தவை மற்றும் பூங்குழலியுடன் அவரின் சரசமாடும் வசனங்களுக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு இருந்தது. அவர் அழகான பெண்களின் மேல் புகழ்ச்சி வைக்கும் இடங்களில் அருகிலுள்ள பெண் scorer..scorer..scorer என்று கிண்டல் செய்துகொண்டிருந்தாள். ஆனால் ஓரளவிற்கு மேல் படத்தை அந்த ஒற்றை கதாபாத்திரத்தால் தாங்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் அவனின் வசீகரம் குன்றிவிடுகிறது.
பொன்னியின் செல்வன் அருண்மொழிவர்மனின் அறிமுகத்திற்கு அடுத்த காட்சியில் நெற்றியில் குட்டி திலகமும் வெள்ளை அங்கவஸ்திரமும் பாதி தெரியும் வெள்ளை மேனியுடனும் ஜெயம் ரவி வரும் காட்சியில் அருகிலுள்ள கல்லூரி யுவதிகள் மனதை பறி கொடுத்துவிட்டார்கள். ஏய் செமயா இருக்காண்டி...ஆமால என்று சொல்லிவிட்டு கோரஸாக ஊ என்று கத்தினார்கள். அந்த regal look தமிழ் நாயகர்களிலேயே அவரிடம் மட்டும் வெளிப்படும் என்று அறிந்த மணிரத்னத்தின் casting முடிவு கூர்மையானது. அரவிந்த் சாமியில் ஆரம்பித்து இந்த விஷயத்தில் தமிழ் பார்வையாளர்களின் மனதை அறிந்தவர். ஜெயம் ரவி அவரால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காட்சிகளுக்கும் அது போதுமானதாக இருக்கிறது.
பூங்குழலி கதாபாத்திரம் புத்தகம் வாசிக்காதவர்களுக்கு தெளிவில்லாததாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஐஸ்வர்ய லெக்ஷ்மியின் பாத்திரத்தை யார் வேண்டுமென்றாலும் நடித்திருக்க கூடும். அலைக்கடல் பாடலில் அவள் காட்டும் ஏக்கம் யாரின் மேல் என்பதை பின்னர் தான் வெளிப்படுத்துகிறார்கள். ஆதித்த கரிகாலனின் காதலுக்கு மட்டும் மான்டேஜ் காட்சிகள் வைத்துவிட்டு இங்கு ஏன் விட்டார்கள் என்று தெரியவில்லை. படத்தில் பின்கதை என்பது கரிகாலன்-நந்தினியின் கடந்த காலத்தை படிப்படியாக வெளிப்படுத்தலுக்கு மட்டும் என்று வைத்திருந்தாலும் அதிலும் சீரான தன்மை இல்லை. மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ஓநாய் தன் கடந்த காலத்தை சொல்லும் காட்சியை எந்த பின் காட்சிகளும் காட்டாமல் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தியிருப்பது தமிழ் சினிமாவின் சாதனைகளில் ஒன்று. ஏனோ மணிரத்னத்தால் அவ்வாறு ஒரு காட்சியுமே நிறைய பின்கதைகளும் அதன் வலிகளும் சூழ்ந்த இந்த படத்தில் அமைக்கமுடியவில்லை. இத்தனைக்கும் ஓநாயாக நடித்தது மிஷ்கின் வேறொரு தொழில்முறை நடிகரல்ல ! மதுராந்த சோழனை காட்டும்போது இவர் யார் என்றும் மதுராந்த சோழனை காட்டும்போது யார் அவர் என்றும் இடைவேளை வரை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் பச்சனே. திரையில் தோன்றும் நேரம் மட்டுமல்ல சூத்திரதாரியாக படம் முழுக்க அவரின் இருப்பு வெளிப்படுகிறது. நுட்பமாகவும் தன்மையுடனும் நந்தினி மற்றும் ஊமைராணி கதாபாத்திரங்களை பிரமாதப் படுத்தியிருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
குந்தவையாக த்ரிஷா தேவைக்கேற்ப பங்களித்திருக்கிறார். அவரும் வந்தியத்தேவனும் சந்திக்கும் போது மெல்லிய காதல் வேட்கை இருவரிடமும் வெளிப்படுவது நல்ல காட்சி. ப்ரோமோக்களை விட இந்த முதல் பாகத்தில் அவரின் நேரம் குறைவு. சோபிதா துலிபாலாவின் நீள முகமும் பெரிய உதடுகளும் எனக்கு கிரக்கத்தை ஏற்படுத்துபவை. ஆனால் படத்தில் காட்சியின் முன்னணியிலே அவர் வருவதில்லை. த்ரிஷாவின் பின்னே படம் முழுக்க நின்றிருக்கிறார் என்பதால் நடிக்க பெரும் வாய்ப்பில்லை.
படத்தின் நகைச்சுவையே ஆழ்வார்கடியானை நம்பியிருக்கிறது. வந்தியத்தேவனுக்கு அவர் கொடுக்கும் கவுண்டர்கள் இன்றைய தமிழ் வழக்கிற்கு ஏற்றது போல் இருந்ததாலே வெடித்து சிரித்தனர். வானதியின் கடிதத்தை பொன்னியின் செல்வனிடம் கொடுக்கும்போது 'நீ இந்த வேலையும் பார்பியா' என்பது, இளவரசன் தலைப்பாகையை அணிந்த வந்தியத்தேவனிடம் தல பத்திரம் (மண்ட பத்திரம் ) ஆகியவைக்கே பெரும் வரவேற்பு. ஜெயராம் சிறந்த துணை நடிப்பு.
சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு அவர்களின் பெயர் மதிப்பீட்டிற்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இப்படத்தை விட அவர்கள் நன்றாக நடித்த பல படங்கள் உண்டு. கிஷோருக்கு ஆடுகளத்திற்கு பின் நல்ல செமத்தியான வேடம். நன்றாக நடித்திருக்கிறார்.
எனக்கு படத்தின் பாடல்கள் மிகவும் பிடித்திருந்தன. சோழா சோழா பாடல் விஜய்யின் புலி பட பாட்டை போல் தான் படமாக்கப்பட்டிருந்தது. பாட்டின் நடுவே கதையையும் நிகழ வைக்கும் மணிரத்னத்தின் பழக்கத்தால் பாடல்கள் முழுமையாக வெளிப்படவில்லை. தேவராளன் ஆட்டம் பாடல் சிதைக்கப்பட்டிருக்கிறது. அலைக்கடல் பாடல் குழப்பமானது. ராட்சச மாமனே பாடல் ஸ்ரேயா கோஷலின் குரலிற்காக தினம் கேட்டுக்கொண்டிருந்தேன். கிருஷ்ணனாக அந்த குறும்புத்தனத்துடன் வஞ்ச புகழ்ச்சியுடன் கம்சனை பாடும் வரிகளும் பின்னணி காட்சிகளால் விழுங்கப்பட்டிருக்கின்றன. பின்னணி இசையில் சில இடங்களில் ரஹ்மான் தன் முந்தைய படங்களின் இசையையே மாற்றி அமைத்திருக்கிறார். வந்தியத்தேவன் தஞ்சை கோட்டையில் துரத்தப்படும் காட்சி Pirates of the Carribbean படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ காட்சி போலவே படமாக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இசையும் அதையே வேறு இசை வாத்தியங்கள் மூலம் இசைக்கப்பட்டது போன்றிருந்தது. படத்தின் கடற்காட்சிகளிலும் வந்தியத்தேவனில் ஜானி டெப்பே வெளிப்படுகிறார். சோழா சோழா பாடல் பெரும் ஏமாற்றம். கரிகாலன் படைவீரர்களுடன் குடித்துவிட்டு பாடும் பாடலாக மாற்றப்பட்டதை கூட விட்டுவிடலாம். பாஜிராவ் மஸ்தானியில் அதே போன்று ரன்வீர் சிங் பாட்டு Malhari இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டால் இந்த பாடல் மிக தரங்குறைந்தது என்று புலப்படும். அதே படத்தில் காய்ச்சல் மயக்கத்தில் மிகப்பெரும் வெளியில் மஸ்தானிக்கு ஏங்கும் காட்சியும் பிரமதமானது. அதை போன்று இங்கே கரிகாலனின் நந்தினியின் மீதான ஏக்கம் அமைக்கப்படாதது நழுவிய துரதிர்ஷ்டம்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் cavernous ஆக இருந்தன. அவற்றில் பெரும் பங்கு விக்ரம் வரும் காட்சிகள். silhoutte காட்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவற்றை பின்னணியை நிறுவ பயன்படுத்தியது எடுபடவில்லை. காட்சியமைப்பும் செட் அலங்காரமும் மிக சுமார். புதுமையே இல்லை. ஒளிப்பதிவு சுமாருக்கு கீழே. சீரியல் போல் இருந்தது. நல்ல ஒரு நிகழ்காட்சி என்று ஒன்றும் இல்லை. குந்தவை வந்தியத்தேவன் சந்திக்கும் இடத்தில் காமிரா கோணம் குந்தவையை அழகாக காட்டுகிறது. பழுவேட்டரையர் சுந்தர சோழர் மற்றும் குந்தவை காட்சி சரியாக எடுக்கப்பட்டிருந்தது. இரு சந்திரர்கள் காட்சியிலும் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா மாறுபாடுகள் நன்றாக இருந்தன. இலங்கையாக காட்டப்படும் தாய்லாந்து காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் பிரம்மாண்ட பட அளவீடுகளுக்கு மோசமானவையாக இருந்தன. இறுதி கப்பல்-படகு காட்சியில் சண்டை அமைப்பாளர்களின் குறையா ஒளிப்பதிவின் குறையா எடிட்டிங்கில் பிரச்சனையா என்று தெரியவில்லை. துண்டு துண்டாக இருந்தது. ஆனால் இயக்குநராக இதன் முழு பொறுப்பு மணிரத்னத்திற்கே சாரும். அவரின் திரை வகைகளின் வரம்புகளே வெளிப்படுகின்றன. அவருக்கு இந்த பாணி காட்சிகள் புதிது என்பதால் ராஜமவுலி, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் வெற்றிபெறும் இடங்களில் சறுக்கியிருக்கிறார். கமல் இயக்கியிருந்தால் கூட அதகளப் படுத்தியிருப்பார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு அதன் மூல நாவலில் பெரிதாக வெளிப்படாத The cholas are coming என்பதையே முழக்கமாக வைத்திருக்கிறார்கள். கல்கியின் பொன்னியின் செல்வனும் நாவல் வடிவில் சுமாரானது. மணிரத்னம் சொந்தமாக ஒரு சோழர் அல்லது பிற தமிழ் வரலாற்றை மையமாக வைத்து ஒரு கதை உருவாக்கினால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். முதல் பாகம் போலல்லாது இரண்டாம் பாகம் சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள்.பொன்னியின் செல்வன் திரைப்படம் திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் துலாக்கோல்‌ பார்வையில் !

--------------------------------------------------------------
மெட்ரோ ரயில் வேலை தொடக்கம் என்று அறிவித்து, நீல தட்டிகளால் சாலையை மறித்து பள்ளம் தோண்டி, நகரவாசிகளின் பயணத்தை நரகமாக மாற்றி, இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் ஓடும்போது ''ஆஹா அதோ.. மெட்ரோ ரயில் என்று'' சிலாகித்து விட்டு, ஒரு முறை ஆசைக்கு பயணித்து விட்டு, மீண்டும் அதில் பயணிக்கலாமா என்றால், ''அய்யே.. மேலே ஏறி டிக்கெட் வாங்கி, திரும்பி வெளியே வருவதற்குள், நேரம் வீண். ! இதோ... பஸ் ஸ்டாப் இருக்கு ! இங்கே பத்து பதினைந்து நிமிஷத்துல நம்ம இடத்துக்கு போயிடலாம் ! எதுக்கு மெட்ரோ ? '' -- என்று கேட்கும் மாந்தர்கள் வசிக்கும், நாட்டில், பொன்னியின் செல்வன் என்கிற பிரம்மாண்டத்தை வெற்றிகரமாக எடுத்திருக்கிறார், மணிரத்னம்.
ஆசைதீர படத்தில் பயணித்துவிட்டு, ''நமக்கு இவ்வளவு பிரம்மாண்டம் எதற்கு ? கல்கியின் நூலே போதும்'' என்று பஸ் பயணிகளை போல, ஒதுங்கதான் தோன்றுகிறது !
இரண்டு மூன்று வருடங்களாக மெட்ரோ ரயில் பணிகள் போல, பல்வேறு விமர்சனங்களிடையே, தனது பிரம்மாண்ட பணிகளை முடித்து, படத்தை வெளியே விட்டிருக்கிறார், திரு மணிரத்னம்.
கல்கி அமைத்த தண்டவாளம்தான். ஆனால் மேலே ஓடுவது மணிரத்னத்தின் விமானம். எனவே, கல்கியின் பொன்னியின் செல்வனின் பாத்திரங்கள், ஓரு Bird's Eye View வாகத்தான் நமக்கு கிடைக்கிறது.
எம்ஜிஆர், ஜெமினி வாசன் என்று ஜாம்பவான்கள் செய்ய ஆசைப்பட்டு, இயலாமல் போனதை, சாதித்து காட்டியிருக்கிறார், மணிரத்னம். அதற்காக பாராட்டப்படவேண்டியவர்தான்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் 1950-ல் எழுதப்பட்டது. இன்றைய காலகட்டம் 2022. இந்த 72 ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் ஏன் பேசப்பட்டும் போற்றப்பட்டும் வருகிறது ?
600 ஆண்டுகளாக முகலாயர்கள், நவாப்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு, டச்சு, போர்சுகீயர்கள் என்று தொடந்து அடிமைப்பட்டு கிடந்து, 1947-ல் விடுதலை பெற்றதும், தங்களது பாரம்பரியத்தை மக்கள் தேட, தக்க தருணத்தில், பொன்னியின் செல்வனை எழுதி, வரலாறு, கலை, இலக்கியம், கோட்பாடுகள், நகைச்சுவை, வீரம்,சம்பிரதாயம், பாசம், சூழ்ச்சி என்று அனைத்தையும் காக்டெய்ல் செய்து அமர காவியமாக, கல்கி பொன்னியின் செல்வனை படைத்தார். அதனால்தான் மக்கள், இதுவரையில் பொன்னியின் செல்வனை தூக்கி பிடித்துள்ளனர். மக்கள் தேடிய பாரம்பரியம் கல்கியின் பொன்னியின் செல்வனில் கிடைத்தது. அதனாலேயே இன்று திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன் நூலில் எவையெல்லாம் நமக்கு பரவசத்தை உண்டுசெய்ததோ, அவை எதுவும், மணிரத்னத்தின் PS -- 1 படத்தில் இல்லை.
பொன்னியின் செல்வன், வரலாற்று புதினமாக இருந்தாலும், கல்கியின் பூகோள ரீதியான குறிப்புகள் நம்மை பரவசத்தில் ஆழ்த்தின. வீர நாராயண ஏரியில் குதிரையில் அறிமுகம் ஆகும் வந்தியத்தேவன், காட்டுமன்னார் கோவில், கடம்பூர், தஞ்சை பழையாறை, குழகர் கோவில், கோடியக்கரை, மாதோட்டம் என்று பயணிக்கும் போது அந்த இடங்களில் நம்மையும் பயணிக்க வைப்பார் கல்கி.
ஆனால் மணிரத்தினத்தின் படத்தில் பூகோள ரீதியாக, சோழ தேசத்து இடங்களே காட்டப்படவில்லை. பெரிய ஏரி காட்டப்படுகிறதே தவிர, அது வீராணம் ஏரி இல்லை என்பது நன்கு தெரிகிறது. கடம்பூர் மாளிகை, பழையாறை எல்லாமே, சினிமா பிரமாண்டங்களாக காட்டப்படுகின்றன.
சோழரின் வரலாற்று தலங்கள் படத்தில் காட்டப்படவில்லை. இது பயண படம் இல்லை என்று கூறி கதையை பின்பற்றி சென்றாலும், பாத்திரங்கள் எல்லாம், கொலு பொம்மைகள் மாதிரி நிற்கின்றன. இவர்தான் அநிருத்த பிரம்மராயர், இதுதான், வானதி, இதுதான் பூங்குழலி, இதுதான், வீரபாண்டியன், இதுதான் சுந்தர சோழர், இதுதான் வானவன்மாதேவி என்று Fancy Dress Competition participants
போன்று காட்டப்படுகிறார்களே தவிர, யாருக்கும் எந்த பணியும் இல்லை.
வேகமாக உயரே செல்லும் ராக்கெட் தனது உதிரி பாகங்களை உதிர்ப்பது போல, அறிமுகம் ஆன அடுத்தகணம், கதை ஓட்டத்தில் இருந்து அந்த பாத்திரங்கள் உதிர்ந்து போகின்றன.
ஓர் ஆறுதல் என்னவென்றால், சுந்தர சோழரை கல்கி படுக்கையிலேயே படுக்க வைத்திருப்பார். அவருக்கு பாரிச வாயு, கால்கள் செயல் இழந்திருக்கும். ஆனால் இதில் சுந்தர சோழர் நடக்கிறார். நடக்கிறார் ! வேறு ஒன்றும் செய்யவில்லை !
ஜெயசித்ரா-செம்பியன்மாதேவி,, குந்தவைக்கு செம்பு தூக்கும் பாத்திரம்தான். ஒரு காட்சியில் தான் இதுவையில் தோன்றியிருக்கிறார்.
குந்தள ( ராஷ்டிரகூட)போரில் தொடங்குகிறது கதை. ஸ்டார் வேல்யூ முக்கியம் என்பதால், வரலாற்றை படம் பார்க்கும் பொது நினைக்க கூடாது.
இந்த போரில் வந்தியத்தேவன், சோழர்களுக்கு ஆதரவாக போர் புரிவது போல, சினிமாவுக்காக காட்டியிருக்கிறார், மணிரத்னம் ! ஆனால் வரலாற்றுப்படி, பெரும்பாணப்பாடி வாணர்கள், இந்த் போரில் ராஷ்டிரகூடர்களுக்கு ஆதரவாக, சோழர்களை எதிர்த்துதான் போரிட்டனர். இங்கேயே வரலாறு அடிபட்டு விடுகிறது.
எனவே, வரலாற்றை அங்கேயே விட்டுவிட்டு, படத்துடன் பயணித்தால், நிச்சயம் பிரம்மாண்டம்தான்.
வந்தியத்தேவன் இயற்கையில் குறும்பு மிக்கவன். அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் கார்த்தி. அவர் இயற்கையாகவே இருந்திருந்தால், பாத்திரம் மிகவும் கனகச்சிதமாக பொருந்தி இருந்திருக்கும். ஆனால தொடர்ந்து, நந்தினி, குந்தவை, வானதி ( கிருஷ்ணா ஜெயந்தி பாட்டின் போது) , பூங்குழலி ( கப்பல் காட்சிகளில் ) என்று அவர்களிடம் ஓவராக வழியும் போது, கார்த்தியின் மிகைநடிப்பு சற்று எரிச்சலை மூட்டுகிறது. வந்தியத்தேவன் ஜொள்ளு பார்ட்டியை போல சித்தரித்திருப்பதை தவிர்த்திருக்கிலாம். வந்தியத்தேவன் தனது காரியங்களில் கருத்தாக இருந்தவன். இம்மாதிரி மனதை அலைபாய விடவில்லை.
லைக்கா நிறுவனத்தின் கோடிகள்தான் கண்ணில் தெரிகின்றனவே தவிர, படத்தில் கோடியக்கரை அறவே இல்லை. இராமாயணதிற்கு சுந்தர காண்டம் போல், கல்கியின் பொன்னியின் செல்வனின் அழகே கோடியக்கரை பயணித்தில்தானே உள்ளது. கோடியக்கரை என்று வசனத்தில் கூட பேசப்படவில்லை.
கடம்பூர் சதியாலோசனை, தேவராடன் தேவராட்டி ஆட்டம், என்று பிரம்மாண்டத்திற்கு எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அவற்றை மிக நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார், மணிரத்னம்.
ஆனால் அந்த காட்சிகளிலும் இந்த படம் Refined form of ஆயிரத்தில் ஒருவன் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
சோழர்கள், culturally and artistically மிகவும் பாரம்பரியம் மிக்கவர்கள். ஏனோ அவர்கள் நடனமாடும் காட்சிகளில் கோலிவுட் இயக்குனர்கள் அவர்களை காட்டு வாசி போல,சித்தரிக்கிறார்கள். நாதஸ்வரம், தவில் போன்ற இசைக்கருவிகளை பயன்படுத்தவில்லை என்றாலும், பரவாயில்லை. ஹே ஜும்பா ஜும்பா, என்று பின்னணி இசையெல்லாம் எதற்கு ?
இடைவேளை வரையில்தான், கல்கியை ஊறுகாய் போன்று தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று பூங்குழலி என்று வந்தியத்தேவன் கத்த, நீரின் அடியிலிருந்து அவர் வருகிறார்.
பூ முடிப்பாள் கல்கியின் பூங்குழலி!
இந்த பூங்குழலி மார்பு கச்சையை முடிந்திருப்பதே பெரிய விஷயம். நல்லவேளை ! பழுவேட்டரையர் கண்ணில் பூங்குழலி படவில்லை. இல்லையென்றால், நந்தினியை ஓரம் கட்டிவிட்டு, இன்னொரு விழுப்புண்ணை ஏற்படுத்திக்கொண்டு, பூங்குழலியின் பின்பாக போயிருப்பார். பூங்குழலியை சிலுக்கு போன்று பயன்படுத்தி கொண்டிருப்பது வருந்தத்தக்கது.
இடைவேளைக்கு பிறகு, வந்தியத்தேவன் கப்பல் பாய்மரத்தில் ஊசலாடி கொண்டே வர, அருண்மொழியும், பூங்குழலியும் அவரை காப்பாற்ற செல்ல, பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள், போரிட, இருட்டு காட்சிகளும், under water காட்சிகளும் பிரம்மாண்டமாக காட்டப்படுகின்றன. இவையெல்லாம் கல்கி புதினத்தில் இல்லை என்று பார்வையாளர்கள் மத்தியில் கிசுகிசுப்பு குரல்கள் கேட்கின்றன.
படம் பிரம்மாண்டம்தான் ! கல்கியின் எழுத்து பிரம்மாண்டத்தை, காட்சி ப்ரம்மாண்டங்களாக மாற்றி இருக்கிறார், மணிரத்தினம். இதில் மாற்று கருத்து இல்லை. பெரும்பாலான பாத்திரங்கள் ஒரே காட்சிகளில் வந்து போவது போல, கல்கியின் கதையும் அவ்வப்போது வந்து போகிறது.
திரிஷா கொண்டையின் பாரத்தை சுமந்து கொண்டு நடப்பதாலோ என்னவோ, அவரது நளின நடையில் , உடலும் தலையும் synchronise ஆகவில்லை. வசன உச்சரிப்புகள் , சர்ச் பார்க் மாணவி, செந்தமிழை பேசுவது போல உள்ளது.
கண்ணாம்பா, விஜயகுமாரி லெவலுக்கு சரித்திர தமிழ் பேசவில்லையென்றாலும், சற்றே ரம்யா கிருஷ்ணன் அளவுக்காவது முயற்சித்திருக்கலாம். செந்தமிழை சோற்றை கடித்து பற்களால் அரைத்து உண்பது போல பேச வேண்டும். நுனி நாவால் பேசினால் செந்தமிழ் எடுபடாது. இரண்டாம் பாகத்திலாவது திருத்தி கொள்ளவும்.
அருண்மொழியை காப்பாற்றி பொன்னியின் செல்வனாக்கியது கோடியக்கரை பிச்சி.
மணிரத்னத்தின் படத்தை காப்பாற்றி இருப்பது,
பாலிவுட் கரை அபிஷேக பச்சி !
சிவிகையிலிருந்து திரையை விலக்கி, அந்த சுடர்விடும் கண்கள், நம்மை காணும்போதே, பரவசப்பட்டு போகின்றனர், மக்கள். விக்ரம் ஆதரவாளர்கள், ஜெயம் ரவி ஆதரவாளர்கள், கார்த்தி ஆதரவாளர்கள், விக்ரம் பிரபு ஆதரவாளர்கள், த்ரிஷா ஆதரவாளர்கள் என்று போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் அபிமானங்கள் வரும்போது ஓலம் எழுப்புகிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா வரும் போது அனைவருமே, கூக்குரல் எழுப்பி அவரை கொண்டாடுகிறார்கள். வயது முதிர்ந்தாலும், அந்த மிடுக்கு குறையவில்லை.
அமரர் கல்கியின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். அவரது காவியம் பாழாக்கப்படவில்லை. காரணம், கல்கியின் தண்டவாளத்தை மணிரத்னம் போட்டிருக்கிறாரே தவிர, அவர் செய்திருப்பது space travel
.
கல்கியின் பொன்னியின் செல்வன் என்கிற பெயரையே மணிரத்னம் பிரயோகப்படுத்தி இருக்க வேண்டாமோ ? காரணம் , கல்கியின் பொன்னியின் செல்வனுக்கும், இந்த பொன்னியின் செல்வனுக்கும் சில இடங்களில் அறவே , தொடர்பே இல்லை. கல்கி கூறாத விஷயங்களை பிரம்மாண்டமாக எடுத்து இருக்கிறார். நந்தினியின், முத்திரை மோதிரம், வந்தியத்தேவனை, நிலவறை மூலம், தப்பிக்க வைப்பது, குந்தவை திருக்கோவலூர் சென்று மலையமானையும், ஆதித்த கரிகாலனையும் சந்திப்பது போன்றவை, மணிரத்னத்தின் கற்பனையில் உதித்த காட்சிகள். கல்கிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.
ஒரு வேளை, விக்ரம்-திரிஷா போன்ற பெரிய ஸ்டார்களிடையே combination வரவேண்டும் என்பதற்காக திணிக்கப்பட்ட காட்சிகளோ என்று தோன்றுகிறது.
படத்தில் ஒரே ஓர் இடத்தில்தான் வசனம் கைதட்டல் பெறுகிறது. அந்த கைத்தட்டலுக்கு உரியவர் ஆழ்வார்க்கடியான் ஜெயராம்.
அருண்மொழியின் மணிமுடியை வந்தியத்தேவன் அணிந்துகொண்டு, வர, ஆழ்வார்க்கடியான் அதை பார்த்து, ''சோழர் மணிமுடியை அணிந்திருக்கிறாய், வந்தியதேவா ! தலை பாத்திரம் !'' என்று கூறும்போது, கைதட்டல் தியேட்டர் கூரையை பிளக்கிறது.
வரலாறு, அமரர் கல்கி, தமிழத்தின் தொன்மை மற்றும் பாரம்பரியம், இவை பற்றியெல்லாம் சிந்திக்காமல், மணிரத்னம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் ஆகியவர்களை பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டு, படம் பார்த்தால், உண்மையிலேயே ஓர் பிரம்மாண்ட படம்.தான்!
எது எப்படி இருப்பினும், மணிரத்னம் அகில இந்திய சிறந்த இயக்குனர் பட்டியலில் முதல் இடத்தை நோக்கி நகர்ந்து சென்று விட்டார் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
மொத்தத்தில் -- பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட, ஒரு சுவையான ஸ்டார் நைட் நிகழ்ச்சி. அந்த நட்சத்திரங்களில் அமரர் கல்கியும் அடக்கம். !
பாரம்பரியம் மிக்க பொன்னியின் செல்வனை படித்துவிட்டு, -- என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே --- என்று இருப்பவர்கள் கூட, துணிவுடன் இந்த படத்தை, ஒரே ஒரு தடவை மட்டும் பார்க்கலாம். காரணம், படத்தின் முடிவில், கல்கியின் மீதுள்ள தாக்கம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்கிறதே தவிர இம்மியும் குறையவில்லை.

No comments:

Post a Comment