சுவடு பதிப்பக ஆசிரியர் மன்சூர் உள்ளிட்ட 6 பேர் ஊபா சட்டத்தில் கைது: முதல்வருக்கு தெரிந்து தான் நடக்கிறதா?
சென்னையில் ‘சுவடு’ இதழின் ஆசிரியர் திரு.மன்சூர் (எ) அகமது மன்சூர், அவரது மகன்கள் Dr. ஹமீது உசேன், மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் ‘ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அகமது அலி, முகமது மவுரிஸ், காதர் நவாஸ் ஷெரிப் என மேலும் 3 பேரும் ஊபாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், சனநாயக தேர்தல் முறைக்கு எதிராகவும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது குறித்து பிரச்சாரம் செய்ததாகவும், கூட்டங்கள் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு குறித்த விவரங்களை சைபர் கிரைம் போலீசாரிடம் #NIA கேட்டு பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையால் சொல்லப்படும் ’Dr. Hameed Hussain’ என்ற பெயரிலான யூடியூப் பக்கத்தை இன்றளவும் நம்மால் பார்க்க முடிகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட பக்கத்தில் Dr. ஹமீது உசேன் பேசும் மொத்தம் 33 வீடியோக்கள் உள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய மார்க்கம் பற்றிய உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும், சில வீடியோக்களில் சனநாயகம், தேர்தல் முறை, உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி முறை, நடப்பு அரசியல் நிலவரம் குறித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளது தெரியவருகிறது.
குறிப்பிட்ட சில வீடியோக்களை பார்க்கும்போது, இந்திய சமூக கட்டமைப்பை - அரசியல் எதார்த்தத்தை சகோதரர் ஹமீது உசேன் நன்கு உணர்ந்திருந்தாலும், அதனை மாற்றுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நியாயமான அரசியல் நடவடிக்கைக்கான தீர்வாக, மிகக்குறுகிய ஆன்மீக - அரசியல் பார்வையை வலியுறுத்தும் வறட்டு தத்துவத்தை கொண்டிருப்பது நமக்கு தெளிவாகிறது.
ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் (HuT) என்ற சர்வதேச அமைப்பின் உறுப்பினர்களாக
‘சுவடு’ மன்சூரும் அவரது மகன்களும் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த அமைப்பானது 1952ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் தொடங்கப்பட்டது. அது நாடுகளின் எல்லைகளை கடந்து உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியை (Islamic State/ Caliphate) வலியுறுத்தும் இறையியல் - அரசியல் கோட்பாட்டை முன்வைக்கிறது.
குறிப்பிட்ட இந்த அமைப்பானது ரஷ்யா, ஜெர்மனி, எகிப்து மற்றும் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2020ஆம் ஆண்டு முதலே இந்த அமைப்பின் கருத்துகளை பரப்பியதாக இளைஞர்கள் பலர் என்.ஐ.ஏவால் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Dr. ஹமீது உசேனின் தந்தையான சுவடு மன்சூர் சிறு பத்திரிகை, பதிப்பக தளங்களில் செயல்பட்டு வருபவர். 2007 முதல் 2012 வரை ’சுவடு’ என்ற பெயரில் மாத இதழை நடந்தி வந்துள்ளார். பின்னர் 2020ஆம் ஆண்டிலிருந்து அதே பெயரில் மின்னதழையும், வலைதளத்தையும் நடத்தி வருகிறார்.
சுவடு மன்சூரின் பத்திரிகை - பதிப்பக பணிகள் அவரது உறுதியான பெரியாரிய - அம்பேத்கரிய கொள்கை நிலைப்பாட்டை விளக்குகின்றன. அதற்கு சுவடு பதிப்பகம் மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்களே சாட்சியாக உள்ளன.
அவற்றுள் சில: 1.பெரியாரின் பெண் ஏன் அடிமை ஆனாள்?, 2.பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார், 3.பெரியார்:
தமிழ்த் தேசிய தந்தை 4.பெரியாரும் மறைமலையடிகளும், 5.இந்து மதம்: ஒரு பார்ப்பனிய மோசடி, 6.இடஒதுக்கீடு:
இந்திய அரசியலமைப்பும் அம்பேத்கர் சிந்தனைகளும், 7.திராவிட சுவடுகள்: திராவிட இனத்தின் விடிவெள்ளிகள்: பெரியார் - அண்ணா, 8.வஞ்சிக்கப்படும் பொதுக்கல்வி
9.கலைஞர் அந்தாதி, 10.தளபதி விருத்தம்.
இவையெல்லாம் சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகள் தான்.
இன்றளவும் சுவடு மன்சூர் முன்னெடுத்த அனைத்து செயல்பாடுகளும் பொதுத்தளத்தில் பார்வைக்கு உள்ளன. ரகசிய கூட்டம் நடத்த பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் Modern Essential Education Trust (MEET) அமைப்பின் அரங்கத்தில் நடத்தப்பட்ட கூட்டங்கள்: ஈத்மிலன் பெருநாள் சந்திப்பில் பேசப்பட்ட தலைப்புகள் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் - மார்க்சியமும் இஸ்லாமும் - தமிழ்த்தேசியமும் இஸ்லாமும், பெரியாரியலும் இஸ்லாமும், இஸ்லாமும் முஸ்லீம்களும், பொது சிவில் சட்டம் தேவையா? - ஆய்வரங்கம், மணிப்பூர் நடப்பது என்ன? - கருத்தரங்கு போன்றவை தான்.
Dr. ஹமீது உசேனின் கருத்துகளில் இறையியல் கோட்பாடு என்பது விடுதலைச்சிறுத்தைகள் முன்வைக்கும் அரசியல் கோட்பாட்டுக்கு முரணானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஊபா போன்ற கறுப்பு சட்டங்களை முழுவதும் திரும்பப்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பொடாவில் தொடர் கைதுகள் நடக்கும்போது, அது குறித்து பேச எல்லோரும் அஞ்சியபோதே, நாட்டிலேயே முதன்முறையாக பொடா எதிர்ப்பு கூட்டமைப்பை அமைத்தவர் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
நேரடியாக எந்த வன்முறை நிகழ்வுக்கோ அல்லது வன்முறைக்கு வித்திடும் பதற்ற சூழ்நிலைக்கோ Dr. ஹமீது உசேனின் செயல்பாடுகள் காரணமாக இருந்ததாக இதுவரை எங்கும் தகவல் இல்லை. அவரது தந்தையின் செயல்பாடுகளும் சனநாயக கட்டமைப்புக்குள் தான் இதுவரை அமைந்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்படாத ஒரு இயக்கத்துக்கு ஆதரவாக இருந்ததாக சொல்லி இஸ்லாமிய இளைஞர்கள் நாடெங்கும் கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்து ராஷ்டிரம் அமைப்போம், இது இந்துக்களின் நாடு என்றும், புரட்சியாளர் அம்பேத்கரின் சமய சார்பற்ற அரசியல் சட்டத்தை (Secular Constitution) ஏற்க மாட்டோம், சனாதன தர்மத்தை நிறுவுவோம் என்றெல்லாம் பேசியும், அதற்கு ஆயுத பயிற்சியும் எடுத்துவரும் சங்க பரிவார கூட்டத்தின் செயல்பாடுகள் பயங்கரவாதமாக கருதப்படாதா? அவை இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்காதா?
பொடாவை எதிர்த்த போது, “அடுத்த கைது தொல்.திருமாவளவன் தான்”என்று மிரட்டினார்கள். ஆனாலும் அஞ்சாது சிறுத்தைகள் களமாடினோம். பொடா தான் காணாமல் போனது.
இப்போது ஊபா எனும் கொடுஞ்சட்டத்தை வைத்து அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். பொடா போல ஊபாவும் ஒரு நாள் காணாமல் போகும். அதற்கு விடுதலைச்சிறுத்தைகள் போன்ற சனநாயக சக்திகள் தொடர்ந்து செயல்படும்.
சனநாயக ரீதியாக செயல்பட்டு வந்த சுவடு மன்சூர் உள்ளிட்ட 6 பேர் மீதான ஊபா வழக்கை தமிழ்நாடு காவல்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். திராவிட கோட்பாட்டோடு பதிப்பகம் நடத்தி, சனாதன பயங்கரவாதத்தை எதிர்க்கும் இவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானதாகும். இந்த கைது நடவடிக்கை முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா எனும் கேள்வியும் எழுகிறது.
இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிற பிரிவுகளில் வழக்கை மாற்றி உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். என்.ஐ.ஏ.விடம் இந்த வழக்கை ஒப்படைக்க கூடாது.
ஆகவே, தமிழ்நாடு முதல்வர் மாண்பைமிகு
@mkstalin
அவர்கள் உடனடியாக திரு.மன்சூர் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வன்னி அரசு
29.05.24
No comments:
Post a Comment