Friday, May 31, 2024

ஜெயலலிதா உறுதியான ஹிந்து தான்

சென்னை: "ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவவாதி தான்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்று சொல்வதற்கான காரணங்களையும் ஆதாரங்களுடன் அண்ணாமலை அடுக்கியுள்ளார்.

சென்னையில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று நீங்கள் கூறியதற்கு அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே.." என்று நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது:


இப்போதும் சொல்கிறேன்.. ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவவாதி தான். அதிமுக நண்பர்கள் யாருக்காவது இதில் சந்தேகம் இருந்தால், 1995-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா, இந்துத்துவா பற்றி கொடுத்த தீர்ப்பை போய் படிக்க சொல்லுங்க. இந்துத்துவா என்றால் என்ன என்பதுதான் அன்றைக்கு நடந்த வழக்கு. ஒரு தலைவர் தேர்தல் களத்தில் இந்துத்துவா என்ற வார்த்தையை பயன்படுத்தினால், அது மதப் பிரச்சாமா இல்லையா? இந்துத்துவா என்றால் ஒரு மதமா? இந்துத்துவா என்றால் இந்துவா? இப்படி பல கேள்விகளை உச்ச நீதிமன்றம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது.

அப்பொழுது உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்குகிறது. அதில், "இந்துத்துவா என்பது மதம் சார்ந்தது கிடையாது. அது ஒரு வாழ்வியல் முறை. இந்த மண்ணின் கலாச்சாரம்" என்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் 2013-இல் மேல்முறையீடு செய்கிறார்கள். ஆனால், அந்த தீர்ப்பை ஆராய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனால், 1995-இல் இந்துத்துவா பற்றி உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புதான் இன்றைக்கும் பைபிளாகவும், கீதையாகவும் இருக்கிறது. அதை வைத்துதான் நான் பேச முடியும்.
 
இனி ஜெயலலிதாவை பற்றி சொல்றேன் கேளுங்க. 1984 ஜூலை மாதம் 26-ம் தேதி அன்று ராஜ்ய சபா எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா பேசுகிறார். அப்போது அவர், காஷ்மீரில் 370-வது சட்டத்தை நீக்க வேண்டும் என்று அவர் பேசி இருக்கிறார். அது மட்டுமா? 1992-இல் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜெயலலிதா கூறியதை இங்கு நான் சொல்கிறேன் கேளுங்கள். கரசேவை என்பது தவறான வார்த்தை கிடையாது. பாபர் மசூதியில் நடந்த கரசேவையை காரணம் காட்டி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சிக கலைக்கப்பட்டதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன் என்று பேசியவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்தான்.. காரணத்தை சொல்றேன் கொஞ்சம் கேளுங்க.. பொங்கிய தமிழிசை செளந்தரராஜன்

1993-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக அதிமுக தொண்டர்கள் கையெழுத்து இயக்கும் நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன் நிறைவு விழா சென்னையில் நடந்த போது, எல்.கே. அத்வானி அதில் கலந்து கொள்கிறார். 2003-இல் ஒரு பிரஸ் மீட்டில் ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லும் ஜெயலலிதா, ராமர் கோயிலை இந்தியாவில் கட்டவில்லை என்றால், பாகிஸ்தானிலா கட்ட முடியும்?" என்று கேட்கிறார். ஆனால், இன்றைக்கு அதிமுக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள். எனக்கு மூட்டு வலி இருக்கிறது.. அதனால் ராமர் கோயிலுக்கு வர முடியவில்லை என்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா இருந்திருந்தால், முதல் ஆளாக ராமர் கோயிலுக்கு சென்றிருப்பார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
ஜே. ஜாக்சன் சிங்
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...