அசம்பளீஸ் ஆஃப் காட் (AOG) |
SIAG (South Indian Assemblies of God)யின் அரசாங்க அங்கீகார பிரச்சனை பூதாகாரமாக வெடித்து ஒரு வழியாக நீரு பூத்த நெருப்பாக மாறிய நிலையில் (SIAGயின்) தென் இந்திய அசம்பளீஸ் ஆப் காட் தங்கள் சபைகளின் தலைமை பொறுப்பு தலைவர்களை தெரிந்தெடுக்கும் கூட்டம் 2011 செப்டம்பர் 26, 27 தேதிகளில் சென்னை சிறுமலை (Little Mount) AOG சபை கட்டிடத்தில் கூடியது.பாஸ்டர்.ஆபிரகாம் அவர்கள் ஜெனரல் சூப்பிரண்டன்ட்டாக தெரிந்தெடுக்கப்பட்டார். பாஸ்டர்.ஸ்டீவ் ஜெயராஜ் அவர்கள் உதவி சூப்பிரண்டன்ட்டாகவும், பாஸ்டர்.பாபு ஜார்ஜ் அவர்கள் ஜெனரல் செக்ரட்ரியாகவும் (பொது காரியதரிசி), பாஸ்டர்.அப்துல் கரீம் அவர்கள் பொருளாளராகவும் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்.
இதில் பாஸ்டர்.பாபு ஜார்ஜ் (கேரளா) அவர்கள்தான் ஓணம், மகாவீர் ஜெயந்தி இவைகளுக்கு இந்து மதத்தினருக்காக வாழ்த்து அட்டை தயாரித்து அனுப்பி அவரவர்களின் தெய்வம் அவர்களை ஆசீர்வதிப்பார்களாக என்ற அர்த்தத்தில் ஆசீர்வாத வாழ்த்து அட்டைகளை அனுப்பியதை 2011 சூன் மாத ஜாமக்காரனில் புகைப்பட ஆதாரத்தோடு வாசகர்கள் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட நவீன உபதேசம் கொண்ட அந்நியபாஷை பேசும் பாஸ்டர்.பாபு ஜார்ஜ் (கேரளா) அவர்கள்தான் இன்று தென்னிந்திய அசம்பளீஸ் ஆப் காட் சபைகளின் பொது காரியதரிசியாவார்.
இப்படிப்பட்டவர்களை AOG சபை தெரிந்தெடுத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மனைவியை விவாகரத்து செய்த பெங்களுர் பாஸ்டர். பால் தங்கையா அவர்களுக்கு அவரின் இந்த சாட்சியில்லா செயலுக்கு பரிசாக தென்னிந்திய அசம்பளீஸ் ஆப் காட் சபைகளின் பெரும் பதவியை அவருக்கு கொடுத்து கவுரவித்த சபையினர்தான் AOG சபைகளின் பொறுப்பாளர்கள் ஆவர். ஆகவே இவர்களுக்கு ஆவிக்குரிய தகுதி என்பது ஊழிய தலைமைக்கு அவசியமில்லை என்றாகிவிட்டது. என்றாலும் SIAGயின் மிக முக்கிய பொறுப்புள்ள பதவியான பொது காரியதரிசி பதவியை இவருக்கு AG சபைகள் அளித்தது. பெரும்பாலான கேரளா, தமிழ்நாட்டு AG சபை விசுவாசிகளால் ஜீரணிக்க முடியவில்லை.
சுனாமி பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளயடித்த CSI சினாட் பிஷப்மார், மாடரேட்டர், செயலர் ஆகியவர்களைவிட மிகத்தாழ்ந்த நிலையை நோக்கி AG சபைகள் போய் கொண்டிருக்கிறது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? நல்ல ஆவிக்குரிய சபையான AG சபைக்கு தகுதியிழந்தவர்களுக்கு கொடுக்கப்படும் இப்படிப்பட்ட பதவி உயர்வுகள் ஆரோக்கியமனதல்ல. சந்தோஷத்துடன் இதை இங்கு எழுதவில்லை. மனவேதனையுடன் இதை குறிப்பிடுகிறேன்.
சரி விஷயத்துக்கு வருவோம். SIAGயின் தலைவர்கள் தெரிந்தெடுப்பு சடங்குகள் முடிந்ததும் இக்கூட்டத்தில் இரண்டுபேர் விசேஷ பிரசங்கம் செய்தனர். 1). முன்னாள் AOGயின் சூப்பிரண்டென்டண்ட்A(Bishop) பாஸ்டர்.ராஜாமணி (மதுரை), 2). பாஸ்டர்.டி.மோகன் AOG (சென்னை)ஆகியவர்கள் பிரசங்கித்தனர்.
SIAG சபைகள் இத்தனை காலம் தமிழ் பாஸ்டர்களின் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்தது. அநேக ஆண்டுகளுக்குப்பிறகு SI-AOG அரசாங்க பதிவு பற்றிய குளறுப்படி பிரச்சனைகளும், தமிழ் AOG சபைகளின் பாஸ்டர்கள் பலர் தலைமை பொறுப்பாளர்களால் சிறுமைப்படுத்தப்பட்டதின் விளைவால் அவர்களுக்குள் ஏற்பட்ட மனவேதனைதான் இந்த தேர்தலில் பிரதான தலைமையை மாற்றி அமைத்து புது இளைய தலைமுறையினரை தலைமை ஸ்தானத்தில் கொண்டு வரவைத்தது என்கிறார்கள்.
இந்த தேர்தலில் ஆரம்ப கட்டத்தில் பாஸ்டர்.V.T.ஆபிரகாம் அவர்களுக்குத்தான் தலைவராகும் சாதகமான அலை உருவானது.
கேரளத்தில் நடப்பதைப்போல் இரண்டு பெரும்தலைவர்களை சார்ந்து இரண்டுவித குரூப்புகளின் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையின்படி பாஸ்டர்.P.S.பிலிப் அவர்களை தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று முந்தின ராத்திரிவரை பேசி முடிவு செய்திருந்தார்கள். அன்று இரவு என்ன பேச்சு நடந்ததோ! யார் தலையிட்டார்களோ தெரியவில்லை! மறுநாள் காலையில் திடீரென்று பாஸ்டர்.P.S.பிலிப் அவர்கள் தானாகவே வாபஸ் வாங்கிக்கொண்டார். முன்னாள் தலைவரான பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் தொடக்கத்திலிருந்தே தான் எந்த பதவியிலும் நிற்கபோவதில்லை என அறிவித்துவிட்டார்.
மனுதாக்கல் செய்ததில் பாஸ்டர்.வி.டி.ஆபிரகாம் அவர்கள் முதலாவதாகவும், பாஸ்டர். டி.ஜே.சாமுவேல் அவர்கள் இரண்டாவதாகவும் மனுதாக்கல் செய்திருந்தார்கள். இரண்டவதாக டி.ஜே.சாமுவேல் அவர்கள் மனு சமர்பித்ததால் தானாகவே அவர் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். தெரிந்தெடுப்பில் ஜெயிக்கவேண்டுமானால் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும். அதனால்தான் இரண்டாம் ரவுண்டில் பாஸ்டர்.வி.டி.ஆபிரகாம் ஜெயிக்கமுடிந்தது. இவர்களுக்கு எதிராக நின்றவர்கள் திருச்சி பாஸ்டர்.அருள் அவர்களும், பாஸ்டர்.ஸ்டீவ் ஜெயராஜ் அவர்களும் ஆவர். கமிட்டி அங்கத்தினராக ஜி.பீட்டர் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார்.
பாஸ்டர்.ஸ்டீவ் ஜெயராஜ், பாஸ்டர்.அப்துல் கரீம் ஆகியவர்களை இம்முறை தெரிந்தெடுத்தது ஒரு ஆறுதலை தருகிறது. SIAGக்கு இளைய தலைமுறையினர் புதிய தலைவர்களாக அமையட்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் இவர்களை ஜெயிக்க வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தென்-இந்தியாவில் மொத்தம் 5521 அசம்பளீஸ் ஆப் காட் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்ட சபைகள் உண்டு. இந்த சபைகளில் அங்கீகரிக்கப்பட்ட சபை அங்கத்தினர்கள் மொத்தம் 6,51,777 பேர்கள் உண்டு என்று ஒரு செய்தி கூறுகிறது. அதோடு 6 கோடிகள் காணிக்கை பண வரவு-செலவுகள் உண்டு என்றும் அறியப்படுகிறது.
SIAG சபைகளுக்கு புதிதாக தெரிந்தெடுக்கப்பட்ட நான்கு முக்கிய தலைவர்களுக்கும், AGசபைகளில் உள்ள ஜாமக்காரன் வாசகர்கள் சார்பில் எமது வாழ்த்துக்கள்.
மேலே எழுதப்பட்ட விஷயங்கள் யாவும் நாம் கேள்விப்பட்ட AOG செய்திகளாகும்.
புதிதாக தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் செய்யவேண்டிய முக்கிய பணிகளாவன: கடந்தகால AGசபை தலைவர்களால் ஒதுக்கப்பட்ட, அலட்சியப்படுத்தப்பட்ட, நீக்கிவைக்கப்பட்ட பாஸ்டர்களை தனித்தனியாக சந்தித்து பேசுவது நல்லது. காரணம் அவர்களும், சில AOG சபை விசுவாசிகளும் இருதயத்தில் காயப்பட்டவர்கள் ஆவர். அவர்களின் காயங்களை, மன உளைச்சல்களை மாற்ற முயற்சிப்பது நல்லது. கடந்தகால அவர்களின் செயல்கள், வெளியிட்ட துண்டுபிரதிகள் ஆகிய குற்றசாட்டுகளையெல்லாம் பெரிதுப்படுத்தாமல், அவர்களை மன்னித்து அரவணைத்து சென்றால் AGசபைகள் இன்னும் நல்லமுறையில் வளரவும், கடந்தகால AG சபையில் படிந்த கறைகள் துடைக்கப் பட்டு அதன்மூலம் ஆண்டவரின் நாமம் மகிமைப்படவும் உதவும்.
|
கடைசியாக AOG சபைகளுக்கு ஜாமக்காரனின் ஆலோசனை: |
AOG சபையின் அங்கத்தினானாக சேரவேண்டுமானால் அல்லது வேதாகம கல்லூரியில் பயில வேண்டுமானால் அதற்கு அடிப்படை உபதேசங்களில் ஒன்றான அந்நியபாஷை அடையாளத்தை AOGசபையின் சட்டமாக வைத்துள்ளார்கள். இப்படி பாஷையை சட்டங்களில் ஒன்றாக வைக்காமல் இருந்தால் சபை மக்களுக்கும், பாஸ்டர்மார்களுக்கும் உள்ளத்தில் அல்லது வெளியில் காட்டாத குற்ற உணர்வு அவர்களுக்குள் இல்லாமல் இருக்க உதவும். அதன்மூலம் மாயமால ஆவிக்குரிய ஜீவியத்தை களையமுடியும் என்பது அடியேனின் தாழ்மையான ஆலோசனையாகும். இப்படி எழுதுவதால் நான்பரிசுத்த ஆவியானவருக்கு எதிரியல்ல!வேதம் நமக்கு போதிப்பதைப்போல் அந்நியபாஷையை வரமாக அங்கீகரித்தால் சபைக்கு நல்லது.அந்நியபாஷையை பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கு அடையாளமாக உபதேசித்தால் நிச்சயமாகபிசாசு ஒளியின் தூதன் வேஷம் தரித்து சபைக்குள்ளும், பாஸ்டர்மார்களுக்கும் நீக்கமற நிறைந்து நிற்பான். போலி விசுவாசிகள், போலி பாஸ்டர்கள் AOG சபைகளில் பெருகிவிடுவார்கள். ஜாக்கிரதை! |
No comments:
Post a Comment