விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு; By : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை | Updated at : 14 Jan 2026
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்ற போராட்டத்தில் ஈடுபட்டபோது தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்ணனின் தியாகம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம், N.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் கண்ணன். கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த இவர், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.
ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 181-ல் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதனை தமிழ அரசு செய்யாத நிலையில், இதனால் மனம் உடைந்த ஆசிரியர் கண்ணன், "எங்கள் வாழ்வாதாரத்திற்கு விடிவு பிறக்கவில்லையே" என்ற ஆதங்கத்தில் விஷம் அருந்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் ஆவேசம்
இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் அரசுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
"ஆசிரியர் கண்ணனின் மரணம் ஒரு தற்கொலை அல்ல; இது அரசின் வாக்குறுதி மீறலால் நிகழ்த்தப்பட்ட படுகொலை. 12 ஆண்டுகளாகப் பணி பாதுகாப்பு இன்றி தவிக்கும் ஆசிரியர்களைக் காக்க முதல்வர் முன்வரவில்லை. இலவசத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் அரசுக்கு, தங்களை நம்பி வாக்களித்த ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க மனம் இல்லையா?"
முக்கிய கோரிக்கைகள்
ஆசிரியர் கண்ணனின் மறைவையடுத்து, கூட்டமைப்பு சார்பில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
*நிவாரணம்: உயிரிழந்த ஆசிரியர் கண்ணன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
* அரசு வேலை: அவரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும்.
* பணி நிரந்தரம்: எஞ்சியுள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் உயிரைக் காக்க, இனியும் காலம் தாழ்த்தாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
"2,500 ரூபாய்க்காக நாங்கள் போராடவில்லை"
அரசு அறிவித்துள்ள 2,500 ரூபாய் ஊதிய உயர்வு என்பது ஆசிரியர்களின் முகத்தில் கரியைப் பூசுவது போன்றது என ஆசிரியர்கள் சாடுகின்றனர். "நாங்கள் கேட்பது பிச்சை அல்ல, எங்களின் உரிமை. வெறும் 2,500 ரூபாய் உயர்வுக்காக நாங்கள் வெயிலிலும் மழையிலும் வீதியில் இறங்கிப் போராடவில்லை. 14 ஆண்டு கால உழைப்பிற்கான அங்கீகாரத்தையும், பணி நிரந்தரத்தையுமே கோருகிறோம். இந்த அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம்," என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
மத்திய அரசு நிதி தரவில்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி ஆசிரியர்களை ஏமாற்றுவதை முதல்வர் நிறுத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேர்தல் வாக்குறுதி 181-ஐ அரசாணையாக வெளியிடக் கோரி, தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என எஸ்.செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"வஞ்சிக்கும் திமுக அரசை எதிர்த்து, விரைவில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். ஆசிரியர் கண்ணனின் மரணம் வீண் போகாது," என கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
ஆசிரியர் கண்ணனின் மறைவு தமிழக கல்வித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த ஊதியத்தில் வாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் கண்ணீருக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
No comments:
Post a Comment