Sunday, October 25, 2026

ஐரோப்பிய இத்தாலியில் எமர்ஜென்சி மற்றும் கலவரம் தடுக்க ராணுவத்திற்கு முழு அதிகாரம்!

இத்தாலியின் புதிய பாதுகாப்புச் சட்ட வரைவு (DDL Sicurezza): முக்கியப் பிரிவுகளும் விவாதங்களும்

இத்தாலிய நாடாளுமன்றத்தில் தீவிர விவாதங்களை உருவாக்கியுள்ள இந்தச் சட்ட வரைவு, பொது ஒழுங்கு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் கடுமையான மாற்றங்களை முன்மொழிகிறது:

  • சாலை மற்றும் ரயில் மறியல்களுக்குக் குற்றவியல் தண்டனை: முன்பு சாலை மறியல் அல்லது போக்குவரத்துத் தடைகள் நிர்வாக ரீதியான அபராதங்களாக (Administrative fines) மட்டுமே கையாளப்பட்டு வந்தன. இச்சட்டம் பொது சாலைகள், பாலங்கள் அல்லது ரயில் பாதைகளை மறித்துப் போராட்டம் நடத்துவதைக் குற்றவியல் குற்றமாக (Criminal offence) மாற்றி, அதிகபட்சமாக சிறைத் தண்டனை விதிக்கும் வழிகளை உருவாக்குகிறது.

  • பெரிய உள்கட்டமைப்புத் திட்டப் போராட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகள்: 'TAV' அதிவிரைவு ரயில் திட்டம், பாலங்கள் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது அல்லது அப்பகுதிகளில் பொதுப் பணிகளைத் தடுப்பது கடுமையான குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  • அரசின் கட்டுப்பாட்டு மையங்களில் அமைதியின்மை: குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மையங்கள் (CPR) மற்றும் சிறைச்சாலைகளில் எதிர்ப்புகள், தள்ளுமுள்ளு அல்லது ஒத்துழையாமை நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்குத் தண்டனையை அதிகரிக்கப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கான விதிவிலக்கு நீக்கம்: முந்தைய சட்டப்படி சிறைத் தண்டனை பெற்ற கர்ப்பிணிப் பெண்கள் அல்லது ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்குச் சிறைத் தண்டனையை ஒத்திவைக்கும் கட்டாய நடைமுறை இருந்தது. இந்தச் சீர்திருத்தம் நீதிபதிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அத்தகையோரையும் சிறையில் அடைக்க அனுமதிக்கும் வகையில் தளர்த்துகிறது.

  • காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான கவசம்: பணியில் இருக்கும் காவலர்கள் அல்லது பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்துவது அல்லது தாக்குவது போன்ற செயல்களுக்குத் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், பணியின் போது தற்காப்புக்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களுக்கான கூடுதல் விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.

2. 'கராபினியேரி' (Arma dei Carabinieri): இரட்டை அதிகார அமைப்பு மற்றும் பணி வரம்புகள்

இத்தாலியின் பாதுகாப்பு அமைப்பில் 'கராபினியேரி' மிகவும் தனித்துவமான வரலாற்றைக் கொண்ட ஒரு படையாக விளங்குகிறது:

  • ராணுவமும் காவல்துறையும் இணைந்த கட்டமைப்பு (Gendarmerie):

    • கராபினியேரி என்பது இத்தாலிய ஆயுதப்படைகளின் (Armed Forces) நான்கு பிரிவுகளில் ஒன்றாகும்.

    • எனவே, இது நிர்வாக ரீதியாக பாதுகாப்பு அமைச்சகத்தின் (Ministry of Defence) கீழும், அன்றாட உள்நாட்டுச் சட்டம்-ஒழுங்கு, பொதுப் பாதுகாப்புப் பணிகளுக்காக உள்துறை அமைச்சகத்தின் (Ministry of the Interior) கீழும் இயங்கும் இரட்டைப் பொறுப்பைக் கொண்டுள்ளது.

  • அதிகார வரம்புகள்:

    • பொதுக் காவல்துறைப் பணிகள் (Polizia di Stato-வுக்கு இணையாக): குற்றத் தடுப்பு, விசாரணை, ரோந்து, கைது நடவடிக்கைகள் மற்றும் பொது ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவற்றை நாடு முழுவதும், குறிப்பாகச் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இவர்களே முன்னின்று மேற்கொள்கின்றனர்.

    • ராணுவப் பாதுகாப்புப் பணிகள்: இத்தாலிய ராணுவத் தளங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஐக்கிய நாடுகள் சபை (UN) அல்லது நேட்டோ (NATO) அமைதி காக்கும் பணிகளில் ராணுவக் காவல்துறையாகப் (Military Police) பணியாற்றுகின்றனர்.

    • சிறப்புப் பிரிவுகள்: இத்தாலியின் பழங்கால கலைப் பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் சிறப்புப் பிரிவு (TPC - Tutela Patrimonio Culturale) மற்றும் சுற்றுச்சூழல், வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவுகள் (Forestali) கராபினியேரி அமைப்பின் கீழ் இயங்குகின்றன.

வலதுசாரி அரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் கிறித்தவ மற்றும் சிறுபான்மையினர் , இது மதப்பற்றா, சகமனித வெறுப்பா ?

இசுரேலை ஆதரிக்கும் சில கிறித்தவ இயக்கங்களையும், நடிகர் விஜய்யைத் தங்கள் அரசியல் மீட்பராகப் பார்க்கும் சில கிறித்தவ ஆதரவாளர்களையும் பார்க்கும்போது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. இவர்கள் உண்மையில் கிறித்தவத்தையும் கிறித்தவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கிறார்களா? அல்லது தங்களுக்குள் வளர்த்துக்கொண்டிருக்கும் திராவிட சமூகநீதி அரசியல் வெறுப்புக்கு தங்கள் மதத்தின் பெயரில் நியாயம் தேடுகிறார்களா?
உண்மையில் இந்த வலதுசாரி ஆதரவு அரசியலின் ஒரு முக்கியமான பகுதி, மதப்பற்றை விடவும் அடையாள அரசியலாலும், பிற சமூகங்களின் மீதான அதாவது சகதனிதர்களின் மீது வெறுப்பாலும், கண்மூடித்தனமான அரசியல் விசுவாசத்தாலும்தான் இயக்கப்படுகிறது.
இது உண்மையில் அனைவருக்கும் பொருந்தும் என்று நான் சொல்லவில்லை.
சில புரோட்டஸ்டன்ட் , பெந்தேகோஸ்ட் கிறித்தவத்தின் ஒரு பகுதியினர் இசுரேல் என்றாலே விவிலியத்தில் வரும் புனித பூமி, யூதர்கள் என்றாலே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள், இசுரேலின் வெற்றி என்றாலே கடவுளின் திட்டம் என்று நம்புகிறார்கள்.
ஆனால் இசுரேல் ஒரு யூத தேசிய அரசாகத் தன்னை வரையறுத்துக்கொள்கிறது. யூத மதமும் கிறித்தவமும் ஒன்றல்ல. இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத யூத மதத்தின் அடிப்படைக் கொள்கைகளும், இயேசுவை மையமாகக் கொண்ட கிறித்தவ நம்பிக்கைகளும் வேறுபடுகின்றன. ஆனால் இந்த கிறித்தவர்கள் யூதமதத்தையும் கிறித்தவ மதத்தையும் கலந்து பூசிக்கொள்கிறார்கள்.
கிறித்தவ சியோனிசத்தை ஆதரிக்கும் சில இயக்கங்களின் இறுதிக்கால நம்பிக்கைகளில்கூட, யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வது தொடர்பான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
உண்மையில் இசுரேலின் பாதுகாப்பை ஆதரிப்பது வேறு, அதன் பாசிச அரசாங்கம் செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்துவது வேறு. சக மனிதர்களான யூதர்களின் பாதுகாப்பை மதிப்பது வேறு பாலஸ்தீன மக்களின் உயிரையும் உரிமைகளையும் புறக்கணிப்பது வேறு.
உங்கள் கிறித்தவம் அன்பைப் போதிக்கிறது என்று கூறிக்கொண்டே, பாலஸ்தீனக் குழந்தைகளின் துயரத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது எந்த வகையான மனிதநேயம்?
ஒரு யூதக் குழந்தையின் உயிருக்கு இருக்கும் மதிப்பே ஒரு பாலஸ்தீனக் குழந்தையின் உயிருக்கும் இருக்க வேண்டும். மதம், இனம், தேசியம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித உயிர்களின் மதிப்பை வேறுபடுத்தத் தொடங்கினால், அங்கே உங்கள் மனிதநேயம் பல்லிளிக்கிறது ,
இன்று வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புனிதபூமியில் நடக்கும் ரத்தகளறியின் பின்னணி இதுதான்.
இப்போது தமிழக அரசியலுக்கு வருவோம்.இந்த ஜோசப் விஜய்!
இந்த பெயர் மட்டும் அவரைச் சிறுபான்மையினரின் பாதுகாவலராக மாற்றிவிடுமா?
நடிகர் விஜய்யை ஆதரிக்கும் சிலர், அவருடைய கிறித்தவப் பெயரையும் குடும்பப் பின்னணியையும் சிறுபான்மையினருக்கு ஆதரவான அரசியலுக்கான அடையாளமாகப் பார்க்கிறார்கள்.ஆனால், ஒரு மனிதரின் பெயர் அவருடைய அரசியல் கொள்கைக்கான சான்றா?
ஒருவர் கிறித்தவப் பெயரைக் கொண்டிருப்பதால் அவர் கிறித்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பார் என்று எப்படி சொல்ல முடியும்? அதேபோல், ஒரு தலைவர் இந்துப் பெயரைக் கொண்டிருப்பதால் அவர் இந்துக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுவார் என்று முடிவெடுக்க முடியுமா?
அரசியலில் பெயர் முக்கியமல்ல. கொள்கைதான் முக்கியம். மத அடையாளம் முக்கியமல்ல. செயல்பாடுதான் முக்கியம்.
விஜய் மதச்சார்பற்ற சமூகநீதியை நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பதுதான் உண்மையான சோதனை.
சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படும்போது அவர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்? சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக என்ன செய்கிறார்? மதவெறிக்கும் பெரும்பான்மைவாதத்திற்கும் எதிராக அவரது அரசியல் எங்கே நிற்கிறது? அவருடைய கட்சியின் கொள்கைகளும் செயல்பாடுகளும் அவர் கூறும் மதச்சார்பின்மையுடன் பொருந்துகின்றனவா?
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தொடர்பான அச்சங்கள், மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறைகள், மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற முக்கியமான பிரச்சினைகளில், இதுவரை விஜய் குரல் கொடுக்கவில்லை கொடுக்கபோவதுமில்லை.
இதற்கு பதில் தேடாமல், அவர் நம்ம மதத்தைச் சேர்ந்தவர்; எனவே அவர் நமக்காக நிற்பார் என்று நம்புவது அரசியல் பகுத்தறிவா அல்லது சினிமா மயக்கமா?
ஒரு கிறித்தவப் பெயர் கொண்ட அரசியல்வாதி, கிறித்தவர்களின் உரிமைகளுக்கான உத்தரவாதம் அல்ல. அதேபோல், எந்த மதத்தைச் சேர்ந்தவராக அல்லது மதநம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், அவருடைய அரசியல் செயல்பாடுகள்தான் அவர் யாருடைய உரிமைகளுக்காக நிற்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டும்.
விஜய் உண்மையில் ஆர்.எஸ்.எஸ். அரசியலின் நிழல் முதலமைச்சர்தான் . ஆமா ஆமா !
ஒரு கட்சி தன்னை மதச்சார்பற்றது என்று அறிவித்துவிட்டால் மட்டும் போதாது. மதச்சார்பின்மை என்பது மேடையில் சொல்லப்படும் வார்த்தை அல்ல. சிறுபான்மையினரின் உரிமைகள் சோதிக்கப்படும் நேரத்தில் வெளிப்படும் அரசியல் நிலைப்பாடுதான் அதன் உண்மையான அளவுகோல்.
தங்களைச் சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் பலர், சிறுபான்மையினரின் அரசியல் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய பெரும்பான்மைவாத அரசியலுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறார்கள். தங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் கொள்கைகளைக் காட்டிலும், தங்களுக்குப் பிடித்த தலைவரின் மீதான விசுவாசத்திற்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
இது உண்மையில் ஒரு முரண்பாடு.
தனது பெயரில் கிறித்தவ அடையாளம் இருப்பதால் ஒருவர் சிறுபான்மையினரின் பாதுகாவலராகிவிட மாட்டார்; தனது கட்சியின் பெயரில் சமூகநீதி இருப்பதால் அது சமூகநீதிக்கான உத்தரவாதமாகிவிடவும் மாட்டாது.
இந்த ஆதரவுகளின் பின்னால் இருப்பது உண்மையில் சக மனிதர்களின் மீதான வெறுப்பு
சிலருடைய அரசியல் ஆதரவை இயக்குவது, அவர்கள் ஆதரிக்கும் தலைவர் அல்லது நாடு என்ன செய்கிறது என்பதைக் காட்டிலும், அவர்கள் வெறுக்கும் மற்றவர்கள் யார் என்பதுதான்.
அவர்களுடைய அரசியல் மனநிலை இப்படித்தான் செயல்படுகிறது, எனக்குப் பிடித்தவர்கள் தவறு செய்தாலும் நான் ஆதரிப்பேன். எனக்குப் பிடிக்காதவர்கள் சரியாகச் செய்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
இந்த மனநிலைதான் அரசியலைச் சிந்தனையின் தளத்திலிருந்து வெறுப்பின் தளத்திற்கு இழுத்துச் செல்கிறது.
ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களை எதிரிகளாகக் கருதுவது, ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களின் துயரத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது, ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவை எதிர்க்கிறார்கள் என்பதற்காக மற்றவர்களின் உரிமைகளை மறுப்பது.
கிறித்தவ வலதுசாரி இயக்கங்களில், இசுரேல் ஆதரவு என்பது யூதர்களின் மீதான வரலாற்று ஈர்ப்பு மட்டுமல்லாமல், இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலுடனும் இணைந்தது . அதேபோல், தமிழக அரசியலில் சிலருடைய தலைமை ஆதரவு என்பதும் அதுதான்.
ஒரு அரசியல் இயக்கம் தனது ஆதரவாளர்களிடம் மனிதநேயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, மற்றொரு சமூகத்தின் மீதான வெறுப்பை வளர்த்தால் அதுதான் பாசிசம் ! அதாவது விஜய்யின் பாயாசம்.
மனிதர்களின் துயரத்தைப் பார்த்து இரக்கம் கொள்வதற்குப் பதிலாக, அந்த மனிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதலில் விசாரிக்கும் மனநிலை உருவாகும்போது, மனிதநேயம் ஏற்கெனவே தோற்கத் தொடங்கிவிட்டது.
இங்கே வலதுசாரி அரசியலின் தந்திரம் உங்களுடைய அச்சத்தைப் பயன்படுத்தி உங்களையே கட்டுப்படுத்துவது!
வலதுசாரி அரசியலின் சில வடிவங்களில், மதம், தேசியம், இனம் ஆகியவை மக்களை ஒன்றிணைக்கும் அடையாளங்களாக மட்டுமல்லாமல், அவர்களை மற்றவர்களுக்கு எதிராகத் திரட்டும் கருவிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
உங்கள் மதம் ஆபத்தில் இருக்கிறது!
உங்கள் கலாசாரம் அழிக்கப்படுகிறது!
உங்கள் மக்களை மற்றவர்கள் ஏமாற்றுகிறார்கள்!
உங்கள் மாடுகளை அபகரித்து கொள்வார்கள்!
உங்கள் தாலியை பறித்துக்கொள்வர்கள்!
இத்தகைய முழக்கங்கள் மக்களிடம் அச்சத்தை உருவாக்குகின்றன. அச்சம் கோபமாக மாறுகிறது. கோபம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது திருப்பப்படுகிறது. இறுதியில், அந்தச் சமூகத்திற்கான அடிப்படை உரிமைகளைக் குறைப்பதுகூட நியாயமானது என்று சிலர் நம்பத் தொடங்குகிறார்கள்.
இப்படித்தான் இசுரேல்–பாலஸ்தீன விவகாரத்தில், யூதர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் பயன்படுத்தி பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் புறக்கணிக்கும் அணுகுமுறையை உருவாக்குகிறார்கள்.
அதுபோல இந்திய அரசியலில், இந்து மதத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் அல்லது கிறித்தவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
அதுவே தமிழக அரசியலில், ஒரு குறிப்பிட்ட தலைவரின் மீது உருவாகும் ரசிகர் விசுவாசம், அவரது அரசியல் கொள்கைகளை விமர்சிக்க முடியாத மனநிலையாக மாறி ஒரு பரவச நிலைக்கு கொண்டு செல்கிறது.
இவை அனைத்தும் ஒரே நிகழ்வு அல்ல. இதில் ஒரு பொதுவான ஆபத்து இருக்கிறது, மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மருத்துவம், சாதிய ஒடுக்குமுறை போன்ற பிரச்சினைகளை விவாதிப்பதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் சந்தேகிக்கவும் வெறுக்கவும் தொடங்குகிறார்கள்.
இந்த சூழலில் அரசியல் தலைவர்கள் தங்களுடைய உண்மையான கொள்கைகளுக்கான கேள்விகளிலிருந்து எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும்.
கிறித்தவத்தின் பெயரால் இசுரேலை , விஜய்யை ஆதரிப்பவர்களிடம் நான் கேட்க விரும்புவது இதுதான்,
நீங்கள் உண்மையில் மனிதர்களை நேசிக்கிறீர்களா அல்லது உங்கள் மத நம்பிக்கை, கதாநாயக வழிபாட்டில் பொருந்துவதாக நீங்கள் கருதும் அரசியல் சக்திகளையே நேசிக்கிறீர்களா?
ஜோசப் விஜய்யின் கிறித்தவப் பெயரைக் கொண்டிருப்பது உங்கள் அரசியல் ஆதரவுக்குப் போதுமான காரணமா? அல்லது அவர் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் கொள்கைகளைக் கொண்டிருக்கிறாரா என்பதையும் ஆராய்வீர்களா?
உங்களுக்குப் பிடித்த தலைவர் தவறு செய்தால் அவரை விமர்சிப்பீர்களா? உங்களுக்குப் பிடித்த நாடு அநீதி செய்தால் அதை எதிர்ப்பீர்களா? உங்கள் மதத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு மதத்தைச் சேர்ந்தவரின் உரிமையை மறுத்தால் அவருக்கு எதிராகப் பேசுவீர்களா?
ஒரு மனிதர் கிறித்தவராக இருப்பது அவரது தனிப்பட்ட நம்பிக்கை. அதற்காக அவரை மதிக்கலாம். ஆனால், அந்த மத அடையாளத்தை அரசியல் விசுவாசத்திற்கான கட்டாயக் காரணமாக மாற்ற முடியாது.
அதேபோல், இசுரேல் ஒரு யூத தேசிய அரசாக இருப்பதால் அதன் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், அதற்காகப் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மறுக்க வேண்டிய அவசியமில்லை.
மதப்பற்று மனிதநேயத்தை அழிக்கத் தொடங்கும்போது, அந்த மதப்பற்றையே நாம் கேள்வி கேட்க வேண்டும்.
விஜய்யின் ஒரு கிறித்தவப் பெயரை மட்டுமே வைத்து சிறுபான்மையினரின் பாதுகாவலராகக் கருதுவதையும், அவரது அரசியலை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வதையும் நான் எதிர்க்கிறேன்.
வலதுசாரி அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் மனித வெறுப்பாளர்கள் என்று நான் சொல்லவில்லை ஆனால், மத அல்லது இன அடையாளத்தின் பெயரில் சகமனிதர்களை எதிரிகளாகச் சித்தரித்து, அவர்களின் உரிமைகளைப் புறக்கணிக்கும் அரசியலைத்தான் நான் எதிர்க்கிறேன்.
எனக்கு முக்கியமானது எந்த மதம் வெல்கிறது என்பதல்ல; எந்த மனிதனும் தனது மதத்தின் காரணமாகவோ, மதமின்மையின் காரணமாகவோ, இனத்தின் காரணமாகவோ, பிறப்பின் காரணமாகவோ உரிமைகளை இழக்கக் கூடாது என்பதுதான்.
ஒரு யூதனின் உயிரும் மதிப்புடையது. ஒரு பாலஸ்தீனனின் உயிரும் மதிப்புடையது. ஒரு கிறித்தவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு முஸ்லிமின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு இந்துவின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு நாத்திகரின் கருத்துரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவற்றில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து மற்றவற்றைப் புறக்கணிக்கும் மனிதநேயம், உண்மையான மனிதநேயம் அல்ல.
எனவே, இசுரேல் ஆதரவு என்ற பெயரிலோ, கிறித்தவ அடையாளம் என்ற பெயரிலோ, விஜய் ஆதரவு என்ற பெயரிலோ, எந்த அரசியல் சக்திக்கும் ஆதரவு தரக்கூடாது. மாறாக மனித உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஆதரவு தரவேண்டும்.
மனிதனைவிட உயர்ந்ததாக எந்த மதமும் இல்லை, மனித உரிமைகளைவிட உயர்ந்ததாக எந்த அரசியல் தலைவரும் இல்லை.

No comments:

Post a Comment

Christian Prostitution - Converting Vedas