கிட்னி திருட்டு வழக்கில் தொடர்புடைய டாக்டரான தி.மு.க., முன்னாள் அமைச்சரின் மருமகன் 'எஸ்கேப்' ADDED : ஜன 05, 2026
திருச்சி: கிட்னி திருட்டு வழக்கில், மஹாராஷ்டிரா மாநில போலீசார் தேடுவதை அறிந்து, திருச்சியைச் சேர்ந்த டாக்டரான, தி.மு.க., முன்னாள் அமைச்சரின் மருமகன் தலைமறைவாகி உள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில், நெசவு கூலி தொழிலாளர்களிடம் கிட்னி திருட்டு நடந்த சம்பவம், கடந்த ஆண்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், கிட்னி திருட்டு வழக்கை விசாரித்து வந்த தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று, ஆவடி கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், கிட்னி திருட்டு வழக்கு விசாரணை முடங்கும் நிலையில் உள்ளது.
கிட்னி திருட்டு தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய புள்ளியிடம் போலீசார் விசாரணை கூட நடத்தவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோரிடமும், தமிழகத்தை சேர்ந்த கும்பல் துணையுடன் கிட்னி திருட்டு நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து, மஹாராஷ்டிரா மாநில சிறப்பு புலனாய்வு குழு போலீசார், திருச்சியில் சில நாட்களாக முகாமிட்டு விசாரணை நடத்தி உள்ளனர்.
மஹாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கூறியதாவது:
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் விவசாயி ரோஷன் குடே, 30. இவர், கந்து வட்டி கும்பலிடம், 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அக்கும்பல், ரோஷன் குடேவிடம், 70 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளது.
இதனால், அவர் புரோக்கர்கள் வாயிலாக, தன் கிட்னியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அவர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு, கம்போடியா மற்றும் திருச்சியில் உள்ள மருத்துவமனைகளில் சட்ட விரோதமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
இதில், டில்லியை சேர்ந்த டாக்டர் ரவிந்தர்பால் சிங் என்பவருக்கும், திருச்சி, தில்லை நகரில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் ராஜரத்தினத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
டாக்டர் ராஜரத்தினம், தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, வனத்துறை அமைச்சராக இருந்த, மறைந்த செல்வராஜின் மருமகன் ஆவார்.
கிட்னியை தானமாக பெறுபவர்களிடம், 50 முதல் 80 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். அவற்றில், கிட்னியை கொடுத்தவர்களுக்கு, 5 முதல் 8 லட்சம் ரூபாய் வரை மட்டும் கொடுத்து, இந்த திருட்டை நடத்தி உள்ளனர். கிட்னி திருட்டு தொடர்பாக, டாக்டர் ரவீந்தர் பால்சிங், 10 லட்சம் ரூபாயும், டாக்டர் ராஜரத்தினம், அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனை ஏற்பாடு செய்ததற்காக, 20 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.
கிட்னி திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி, ராஜரத்தினத்தை கைது செய்ய வந்தோம். இதை எப்படியோ அறிந்து கொண்ட அவர், தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment