சேர மன்னன் குட்டுவன்கோதைக் காசு
உலோகம் :வெள்ளி -எடை : 2.3 கிராம் கிடைத்துள்ளன
வடிவம் : வட்டம் -அளவு :1.9
காலம் :பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு (தோராயமாக)
இவனையே பிற இலக்கியங்கள் கோதை எனக் குறிப்பிடுகின்றன. இவரைப்பற்றி நக்கீரர், பொய்கையார், ஆலத்தூர் கிழார் , மாறோக்கத்துநப்பச்சலையார், கோவூர்க் கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இம்மன்னனைப்பற்றிப் பாடப்பெறும் பாடல் வரிகளில் தான் வஞ்சியும், கரூரும் ஒன்றே என்பது தெளிவாக்கப்பெறுகிறது. மேலும், இவன் உதியஞ்சேரல் வழிவந்தவன். செங்குட்டுவனுக்குக் குட்டுவன்சேரல் என்றொரு மகன் இருந்தான். இந்தக் கோதை மார்பன் குட்டுவன் சேரலின் மகனாக இருக்கலாம் என்று மயிலை சீனி வேங்கடசாமி கருத்து தெரிவிக்கின்றார். இம்மன்னன் வஞ்சியில் முடிசூட்டிக்கொண்டதை இலக்கியத்தில் பெருநாள் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. எனவே, இவ்வளவு சிறப்புகளையும்பெற்று ஆட்சி நடத்தியுள்ள இக்கோதைமார்பனே "மாக்கோதை" என்ற நாணயத்தை வெளியிட்டிருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது. "மா" என்பது சிறப்பு கருதி இடம்பெற்ற முன்னோட்மாக இருக்கலாம். மேலும் குட்டுவன் கோதை நாணயமானது சேர அரசர்களிலேயே மிகவும் சிறப்புற ஆட்சி நடத்திய சேரன் செங்குட்டுவனால் வெளியிடப்பெற்றிருக்கலாம் எனக்கருதவும் இடமுண்டு. ஏனெனில் இலக்கியத்தில் ஓரிடத்தில் இவ்வரசன் வாய்வாட்கோதை எனக் குறிப்பிடப்பெறுகிறான். மேற்கூறப்பட்ட கருத்துகளை நோக்குகையில், இரும்பொறை எனப் பெயர் வெளியிட்ட நாணயங்கள் வேறு, "கோதை" எனப் பெயர் வெளியிட்ட நாணயங்கள் வேறு என அறிய முடிகிறது. இதனால் "மாக்கோதை" என்று பெயரிட்ட நாணயத்தையும், பெருஞ்சேரல் இரும்பொறையே வெளியிட்டுள்ளார் என்ற புலவர் இராசு அவர்களின் கருத்து மேலும் ஆராயத்தக்கதாகும்.
பார்வை 105
No comments:
Post a Comment