கோயில்களில் தரிசன கட்டண உயர்வு: வழிகாட்டுதல்களை உருவாக்க அரசுக்கு ஐகோர்ட் அவகாசம் Updated on: 21 Jan 2026
மதுரை: தமிழக கோயில்களில் தரிசனக் கட்டண உயர்வு தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்க, அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இடைநிறுத்த தரிசனம் மற்றும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் தரிசனங்களுக்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகள், பக்தர்களிடம் ஆட்சேபனை கோராமல் செயல்படுத்தப் படுகின்றன.
இது தொடர்பான அறிவிப்புகளை கோயில் வளாகத்தில் பக்தர்கள் அதிகம் செல்லாத இடங்களில் ஒட்டுகின்றனர். ஏதேனும் ஒரு நாளிதழில் விளம்பரம் செய்கின்றனர். இதனால் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களால் உரிய காலத்தில் ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியாமல் போகிறது.
பின்னர் ஆட்சேபனைகள் வரவில்லை என்று அறநிலையத் துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, கட்டண உயர்வை அமல்படுத்துகின்றனர். கோயிலுக்கு வரும் போதுதான் கட்டணம் உயர்த்தப்பட்ட விவரம் பக்தர்களுக்கு தெரியவருகிறது. தமிழக கோயில்களுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். எனவே, கட்டணத்தை உயர்த்தும்போது அந்த பக்தர்களிடமும் கருத்து கேட்க வேண்டியது அவசியம். இதனால், கட்டண உயர்வு அறிவிப்பு தொடர்பாக மாவட்டத்துக்குள் மட்டும் விளம்பரம் செய்வதுசரியான நடவடிக்கை அல்ல.
மேலும், பல்வேறு கோயில்களிலும் ஒரு மணி நேர நிறுத்த தரிசனம் அமல்படுத்தப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு அதிக பக்தர்களை சென்றடையும் வகையில் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும், தமிழகம் முழுவதும் தெரியும் வகையில் நாளிதழ்களில் விளம்பரம் செய்யவும், கோயில் வளாகத்தில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கவும், ஆட்சேபனைகளை தெரிவிக்க 30 நாட்கள் காலஅவகாசம் அளிக்கவும், ஆட்சேபனை கடிதங்கள், கோயில் நிர்வாக முடிவு, ஆணையரின் அனுமதி ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட கட்டண உயர்வு நடவடிக்கையின்போது, கோயில் நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “புதிய வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டு, அறிவிக்கப்படும். அதற்கு அவகாசம் தேவை” என்று கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, விசாரணையை பிப். 23-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
https://www.hindutamil.in/news/tamilnadu/deadline-to-develop-guidelines-for-darshan-fees-in-temples
No comments:
Post a Comment