விஷயம் ஒரு சவகுழி தோண்டபட்டது என்பதோடு மேல் நாட்டு ஊடகங்கள் முடித்து கொள்கின்றன, ஆனால் நடந்தது ஒரு இன அழிப்பு மற்றும் மதமாற்ற கொடுமை
கனடா பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு: இனப் படுகொலை என குற்றச்சாட்டு
கனடா பழங்குடியின பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த குழந்தைகள் இனப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பழங்குடியின தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
கடந்த 15-ம் நூற்றாண்டின் இறுதியில் கனடாவில் ஐரோப்பியர்கள் கால்பதித்தனர். ஆரம்பத்தில் பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்த அந்த நாடு கடந்த 1763-ம்ஆண்டில் பிரிட்டன் கட்டுப்பாட்டில் வந்தது.1982-ல் கனடா தனிநாடாக உதயமானது. தற்போது வரை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தே கனடாவின் ராணியாகவும் இருக்கிறார்.
ஐரோப்பியர்கள் கனடாவில் குடியேறியபோது அங்கு இனுவிட், மெயிரி உள்ளிட்ட பல்வேறு பழங்குடி மக்கள் வசித்துவந்தனர். அவர்கள் செவ்விந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். ஐரோப்பியர்களின் குடியேற்றத்துக்கு கனடாவின் பூர்வகுடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மக்களை ஐரோப்பியர்கள் இனப் படுகொலை செய்தனர். லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில்பூர்வகுடி குழந்தைகளுக்காக விடுதியுடன்கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டன. கடந்த 1863 முதல் 1998 ஆண்டு வரையிலான காலத்தில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு உறைவிட பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது ஏராளமான குழந்தைகள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கனடாவின் பழங்குடியின பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கம்லூப்ஸ் நகரில் கடந்த 1890 முதல் 1969 வரை பழங்குடியின குழந்தைகளுக்காக உறைவிடப் பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த 1969-ம்ஆண்டில் கனடா அரசு, பள்ளி நிர்வாகத்தை தனது பொறுப்பில் எடுத்தது. கடந்த 1978-ல்பள்ளி மூடப்பட்டது.
கனடா பழங்குடியின அமைப்பு சார்பில் கம்லூப்ஸ் பள்ளியில் அண்மையில் ரேடார் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பூமிக்கடியில் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரேடாரில் இதுவரை 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து உள்ளூர் பழங்குடியின தலைவர் லிசா கூறும்போது, "ரேடாரில்மட்டுமே எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை தோண்டி எடுத்துஆய்வு செய்ய வேண்டும். 3 வயது குழந்தையின் எலும்பு கூடும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளி வளாகத்தில் வேறு எங்கேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.
கனடா முழுவதும் சுமார் 130-க்கும் மேற்பட்ட பழங்குடியின உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இந்த பள்ளிகளின் செயல்பாடு குறித்து விமர்சனம் எழுந்ததால் கடந்த 2008-ல் கனடா அரசுபழங்குடி உறைவிட பள்ளி நடைமுறையை முழுமையாக ஒழித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2017-ல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, "கனடா பழங்குடியின உறைவிட பள்ளி நடைமுறைக்காக கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கம்லூப்ஸ் பள்ளியில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டிருப்பது இதயத்தை உடைக்கிறது. நமது நாட்டின் இருண்ட காலத்தை வேதனையுடன் நினைவுபடுத்துகிறது. இந்த செய்தியால் வேதனையில் ஆழ்ந்திருக்கும் அனைவரின் சோகத்தில் நானும் பங்கு எடுக்கிறேன். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பழங்குடியின மக்களின் பிராந்திய தலைவர் டெரி கூறும்போது, "பழங்குடி உறைவிட பள்ளிகளில் படித்த குழந்தைகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். எங்களது தாய் மொழியை அழித்து பிரெஞ்சு, ஆங்கிலத்தை திணித்தனர். நாட்டில் முதல்முறையாக மிக அதிக எண்ணிக்கையில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை தோண்டியெடுத்து மரபணு பரிசோதனை நடத்த வேண்டும். இதைஇனப்படுகொலை என்றே குற்றம் சாட்டுகிறோம். இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இப்போது உயிரோடு இருக்கவாய்ப்பில்லை. எனினும் கனடா அரசுமுழுமையாக விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
பழங்குடி அமைப்பின் தேசிய தலைவர்ரோஸ்னே கேஸ்மிர் கூறும்போது, "கனடா உறைவிட பள்ளிகளில் பயின்றகுழந்தைகளுக்கு முறையான உணவுவழங்கப்படவில்லை. பள்ளி நிர்வாகங்களின் கொடுமை, தொற்று நோய்களால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு குழந்தைகளை கொலை செய்து புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100 இடங்களை கண்டறிந்துள்ளோம். இதில் கம்லூப்ஸ் பள்ளியில் மட்டும் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்துள்ளோம். நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எங்கள் சமுதாய குழந்தைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். அந்த இடங்களை தேடி கண்டுபிடித்து ஆய்வு செய்வோம்" என்றார்.
இதுவரை 4,100 குழந்தைகள் மாயம்
ஓட்டாவா: கனடாவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் கமிஷன் (டிஆர்சி) என்ற அமைப்பு, கத்தோலிக்க தேவாலய நிர்வாகங்கள் நடத்திய பழங்குடி உறைவிட பள்ளிகள் குறித்து சுமார் 6 ஆண்டுகள் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கனடாவில் சுமார் 150 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பழங்குடியின உறைவிட பள்ளிகளில் எத்தனை மாணவ, மாணவியர் உயிரிழந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பல குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். எங்களது ஆய்வின்படி சுமார் 4,100 பேர் மாயமாகி உள்ளதாக கணக்கிட்டுள்ளோம். அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின தலைவர்கள் கூறும்போது, "உறைவிட பள்ளிகளில் கல்வி பயின்ற சுமார் 6,000 பேர் உயிரிழந்திருக்கலாம். அவர்களின் இறப்பை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மறைத்துள்ளன. அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கம்லூப்ஸ் பள்ளியில் 52 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நாங்கள் 215 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறிந்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment