வன்முறையை தூண்டும் வகையில் வலைதளத்தில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்திப்பிரிவு Updated on: 22 Nov 2025,

சென்னை: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அதை விமர்சிக்கும் விதமாக தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, எக்ஸ் வலைதளத்தில், ‘இலங்கை, நேபாளம்போல தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும்’ என்று பதி விட்டார். 
நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது, ஆதவ் அர்ஜுனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தவெக வழக்கறிஞர் எஸ். அறிவழகன் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஆதவ் அர்ஜுனாவின் வலை தளப் பதிவு, வெறுப்பு பேச்சு என்ற வரையறைக்குள் வராது.
அது கரூர் சம்பவம் தொடர்பான கோபத்தின் வெளிப்பாடு. தனது பதிவை 34 நிமிடங்களில் அவரே முன்வந்து நீக்கிவிட்டார். இதனால் எங்கும் புரட்சி வெடிக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு கெடவில்லை. ஆனால், போலீஸார் அரசியல் உள்நோக்கத்துடன் 18 மணி நேரம் கழித்தே அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதை ரத்து செய்ய வேண்டும்’’என்றனர். அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் கேஎம்டி. முகிலன் வாதிடும்போது, ‘‘வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டதால்தான் ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. மனுதாரரின் பதிவை லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் கோர முடியாது ’’என்றனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவு: ஆதவ் அர்ஜூனாவின் எக்ஸ் வலைதளப்பதிவு வன்முறையையோ, வெறுப்பையோ தூண்டும் வகையில் இல்லை. மாறாக, அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இதற்காக இளைஞர்கள் போராடக்கூடும் என எச்சரிக்கை செய்யும் விதமாகத்தான் இருந்துள்ளது.
7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வழக்குகளில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அதன் பிறகே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதால் ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment