காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத் தேர் திருவிழா: மு.க.ஸ்டாலின் வருகைக்காக நிறுத்தம்?
https://tamil.indianexpress.com/tamilnadu/kanchipuram-car-festival-stopped-due-to-mk-stalin-visit-hindu-munnani-blamed-11026206
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு தங்கத்தோ் செய்ய வேண்டும் என்பது பக்தா்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதற்காக ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு ரூ. 30 கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் வெள்ளோட்டம் நடைபெற்றது. டிசம்பா் 7-ஆம் தேதி தங்கத் தோ் அறக்கட்டளையினரால் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மறுநாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், வரும் 25-ஆம் தேதி சூரிய ஜெயந்தி நாளன்று தங்கத்தோ் திருவிழா நடைபெற அனுமதியளிக்க வேண்டும் என அறக்கட்டளையினா் ஆலய நிா்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆலய நிா்வாகமும் ஒப்புக் கொண்டதையடுத்து, தேரோட்டம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திடீரென அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கத் தேரோட்டத்திற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருப்பது பக்தா்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
வரும் 25-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வர உள்ளதால் தேரோட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அறநிலையத்துறையின் செயலுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தங்கத்தேர் திருத்தேரோட்டம் முதலமைச்சர் வருகைக்காக நிறுத்தம்???
கோவில் திருவிழாவை கட்சி நிகழ்ச்சி போல் அவர்களின் வசதிக்கேற்ப மாற்றுவதா?
ரத சப்தமி தினத்தை முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் தங்கத்தேர் தேரோட்டமானது நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை தற்போது வரை இத்திருவிழாவிற்கு அனுமதி வழங்கவில்லை என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் அன்றைய தினம் தமிழக முதல்வர் அப்பகுதிக்கு வர இருப்பதால்தான் தேரோட்டத்திற்கான அனுமதி வழங்க மறுக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலின் வெள்ளித்தேர் வெள்ளோட்டமானதும் திராவிட மாடல் அரசின் அமைச்சர்கள் வருகைக்காக பலமுறை தேதி தள்ளி வைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. திருக்கோவிலின் திருவிழாவை கட்சி நிகழ்ச்சி போல் கட்சிக்காரர்களின் வருகைக்காக மாற்றி அமைப்பது என்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். இந்து சமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் உடனடியாக இதில் நடவடிக்கை எடுத்து உரிய தேதிகளில் திருத்தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி, தமிழக அரசினை வலியுறுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment