பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வைரல்: கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட் 21 Jan 2026
பெங்களூரு: கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவ் (58) தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கர்நாடக மகளிர் ஆணையம், அவர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியது. பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து ராமச்சந்திர ராவ், மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவை சந்தித்து விளக்கம் அளித்தார். மேலும் அவர், ‘‘எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், ஏஐ மூலம் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பெலகாவியில் பணியில் இருந்தபோது இந்த வீடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டு, ஆபாசமாக மாற்றப்பட்டுள்ளது'' என்றார்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறையில் நடக்கும் ஒழுங்கீனங்களை சகித்துக்கொள்ள முடியாது'' என்றார்.
ரன்யா ராவின் தந்தை: சஸ்பெண்ட் ஆகியுள்ள கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் 1993-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சிக்கமகளூருவை சேர்ந்த இவரது மகளும் நடிகையுமான ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். மைசூரு மாநகர காவல் ஆணையராக இருந்த போது, துப்பாக்கி கடத்திய வழக்கில் ராமச்சந்திர ராவ் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment