தேனி பொம்மிநாயக்கன்பட்டி தலித்கள் மீது முஸ்லிம் தீண்டாமை தாக்குதல் மோதல்- இரு சமூகத்தினரையும் சந்தித்து திருமாவளவன் சமாதான பேச்சு!
பொம்மிநாயக்கன்பட்டியில் மோதலில் ஈடுபட்ட இரு சமூக பிரதிநிதிகளை திருமாவளவன் சந்தித்து பேசினார். By Hema Vandhana Published: Saturday, May 12, 2018
தேனி: தேனி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் மோதலில் ஈடுபட்ட இரு சமூகத்தினரையும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல், திருமாவளவன் நேரில் சந்தித்து சமாதானம் செய்தார்.
பெரியகுளம் அருகே உள்ள கிராமம் பொம்மிநாயக்கன்பட்டி. இங்கு கடந்த10 நாட்களுக்கு முன்பு வண்ணியம்மாள் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது. இதன்காரணமாக இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. இது 10 நாட்களாக அடங்காமல் விஸ்வரூபமெடுத்து கலவரமாக வெடித்தது.
வெடித்த கலவரம் : அதன்விளைவாக, இரு தரப்பினரும் மாறி மாறி கார், ஆட்டோ, மற்றும் இரு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இந்த கலவரத்தில் இரு தரப்பிலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலர் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
திருமாவளவன் காட்டம் : மக்களிடம் குறை கேட்டார் இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று பொம்மிநாயக்கன்பட்டி சென்றார். அவருடன் ஏராளமான நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் சென்றனர். பாதிக்கப்பட்ட தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்தார். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் நடந்த கலவரத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், ஆறுதலும் கூறினார். அதேபோல பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
சுமூக முடிவு எடுக்க அறிவுறுத்தல் இரு தரப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்த பின்னர் சம்பவம் தொடர்பாக அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக நம்பிக்கை அளித்தார். மேலும் இரு தரப்பினரும் தங்களின் உள்ளார்ந்த பிரச்சினைகளை நயமாக பேசி தங்களுக்குள் சுமூக முடிவுகளை எடுத்து கொள்ளுமாறும் திருமாவளவன் அறிவுறுத்தினார்.
மதநல்லிணக்கம் சீர்குலைகிறது : பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கலவரம் நடந்தவுடன் என்னால் உடனே வரமுடியவில்லை. ஆனால் எனது கட்சியினர் ஏராளமான உதவிகளை செய்துள்ளனர். நடந்து முடிந்த கலவரம் குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். கலவரத்தில் கைதானவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உள்ளோம். மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் நோக்கிலே சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
https://tamil.oneindia.com/news/tamilnadu/thirumavalavan-is-the-comfort-the-periyakulam-incident-319537.html?fbclid=IwY2xjawPiprdleHRuA2FlbQIxMABicmlkETFOUzBoMmJ1dVZLVE44aDRGc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHl1aWXIvNsbcNp98f9Fc49RXIiv3Vq5MJgnv4EzbXhCjNB0Mq0Goqjk8Fs9g_aem_RMv9tYwSXO0DX3Zz4XhAlg#google_vignette
No comments:
Post a Comment