யூடியூப்-ஆல் பறிபோன உயிர்- வீடியோ பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவி பலி!
மதுரையில், யூடியூபில் பார்த்த உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவரின் ஆலோசனை இன்றி, யூடிப் வீடியோவை நம்பி மாணவி உயிரிழந்த சம்பவம் வலைதளத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது. “வயிறு வலிக்குது அப்பா… ரத்தம் வருது அப்பா… என்னைய விட்டுடாத அப்பா… காப்பாத்து அப்பா…” என தந்தையை கட்டிப் பிடித்து கதறிய அந்த மாணவியின் கடைசி நிமிடங்கள் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மதுரை மாவட்டம் செல்லூர் மீனாம்பாள்புரம் காமராஜர் குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (51) – விஜயலெட்சுமி தம்பதியினர் தங்களது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்து உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வரும் வேல்முருகன், தனது மகளை மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் படிக்க வைத்துள்ளார்.உடல் பருமன் குறைக்க எடுத்த தவறான முடிவு
கலையரசி உடல் பருமன் இருப்பதாக கூறி , அதை குறைக்க வேண்டும் என அவ்வப்போது தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். ஆனால் பெற்றோர், அது காலப்போக்கில் சரியாகிவிடும் என அவரை சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் “இணைவோம் இயற்கையுடன்” என்ற யூடியூப் சேனலில் இருந்து , “உடலின் கொழுப்பை கரைய வைத்து உடல் எடையை குறைக்கும் வெங்காரம்” என்ற தலைப்பில் வெளியான வீடியோவை கலையரசி பார்த்துள்ளார். இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி மதுரை கீழமாசி வீதி தேர்முட்டி அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் இருந்து ‘வெங்காரம்’ என்ற நாட்டு மருந்தை வாங்கி வந்துள்ளார்.உடல்நிலை மோசமடைந்து மரணம்
யூடியூபில் கூறியபடி வெங்காரத்தை எடுத்துக் கொண்ட சில நேரத்தில் கலையரசிக்கு கடும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தாயார் விஜயலெட்சுமி அவரை மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று உள்ளனர். மாலை வீடு திரும்பிய பிறகும் கலையரசிக்கு மீண்டும் வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து உள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.வஅதன் பின்னர், கலையரசி கடும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கில் ரத்தம் வருவதாக கூறி, தனது தந்தையை கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார்.அதீத வயிற்றுப்போக்கு
இரவு 11 மணி அளவில் மீண்டும் வாந்தி மற்றும் அதீத வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், அவரை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கலையரசி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
காவல்துறை விசாரணை
பின்னர் கலையரசியின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, செல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணீர் மல்க பேசிய தந்தை வேல்முருகன், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை “என் மகள் உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவாள். யூடியூப் பார்த்து வெங்காரம் வாங்கி சாப்பிடப் போவதாக சொன்னபோது, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது என கூறினேன். ஆனாலும் உடலை குறைக்க வேண்டும் என்ற ஆசையில் அவள் அதை சாப்பிட்டாள். என் மகளைப் போல யாரும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதுபோல் செய்ய வேண்டாம்” என உருக்கமாக கேட்டுக் கொண்டார்.
விழிப்புணர்வு தேவை
மாணவியின் உறவினர்கள் கூறுகையில், “இதேபோன்று யூடியூப் வீடியோக்களை நம்பி யாரும் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. இது போன்ற விஷயங்களில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் வரும் உடல் எடை குறைப்பு ஆலோசனைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தி உள்ளது.
No comments:
Post a Comment