Tuesday, July 13, 2021

கிறிஸ்தவ சர்ச் சொத்துக்கள் அரசாங்க அறநிலைதுறையின் கீழ் வரவேண்டும்

  கிறிஸ்தவ சபை சொத்துகளுக்கு ஆபத்து

(குறிப்பு: மேலே குறிப்பிட்ட தலைப்பில் புதுச்சேரி திரு.வில்சன் அவர்கள் எழுதிய கடிதத்தை 2009 அக்டோபர் மாதம் ஜாமக்காரனில் வெளியிட்டேன். அவர் கடிதத்தின்முடிவில் என் குறிப்பாக கிறிஸ்தவ சபைகளின் சொத்துக்கள் அரசாங்க அறநிலைதுறையின் கீழ்வந்தால் ஏற்படும் பிரச்சனைகளை விவரித்திருந்தேன். அதற்கு பதிலாக அதே சகோதரன் தன் மாற்று கருத்துக்களை எழுதியுள்ளார். அவர் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதே. ஆகவே வாசகர்கள் அறியவேண்டி அக்கடிதத்தை வெளியிடுகிறேன்).கீழே அவருடைய கடிதம்:http://www.jamakaran.com/tam/2010/february/aabaththu.htm

புதுச்சேரி -20-12-2009

மதிப்பிற்குரிய டாக்டர்.புஷ்பராஜ் அய்யா அவர்களுக்கு,

வணக்கம். தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் தங்கள் ஊழியத்தில் உங்களோடு ஒத்துழைக்கும் அத்தனை பேருக்கும் கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 2009 அக்டோபர் மாதம் வெளிவந்த ஜாமக்காரன் இதழில் நான் தமிழ்நாட்டு முதல்வர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளீர்கள். மிகுந்த நன்றி.

அதில் தங்களுடைய கருத்துக்களையும் வெளியிட்டுள்ளீர்கள். அதற்கும் நன்றி சொல்லுகிறேன். கிறிஸ்தவமத சொத்துக்களை அரசின் அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதால் சிறுபான்மையினர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள், சலுகைகளைக்கொண்டு நம் சபைகளுக்காக நல்ல காரியங்களை பயன்படுத்தும் முழுசுதந்திரத்தையும் அச்சட்டம் இழக்கச்செய்யும் என்று எழுதியிருக்கிறீர்கள். அது தவறான கருத்தாகும். ஏற்கனவே அரசாங்கத்தால் மைனாரிட்டிகளின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக உருவாக்கிய பல சட்டங்கள் ரொம்ப காலமாக நமது நாட்டில் அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் அது 1989ம் ஆண்டு கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது ஆகும். சரியான முறையில் மைனாரிட்டிக்களுக்கான சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தேசிய மைனாரிட்டி கமிஷனெல்லாம் (National Minority Commission) சிறப்பாக பணியாற்றி வருகிறது. மைனாரிட்டிகளின் உரிமைகளை பாதுகாப்பதென்பது வேறு. நமது கிறிஸ்தவ மதத்தினரின் அசையும், அசையா சொத்துக்களை அரசின் அறநிலைத்துறையின் மூலம் பாதுகாப்பது என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல – வெவ்வேறானவை ஆகும். இதனால் எந்த உரிமையையும், சுதந்திரத்தையும் நாம் இழக்கப்போவதில்லை.

இஸ்லாமிய மதத்தவரின் சொத்துக்கள் வக்ப்ஃ போர்டு மூலம் பாதுகாக்கவும் பாராமரிக்கவும் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதே! அவர்கள் எந்த உரிமையை சுதந்திரத்தை இழந்துவிட்டார்கள்? அலிகார் யூனிவர்சிட்டி, உஸ்மானியா யூனிவர்சிட்டி போன்ற பல்கலைகழகங்கள் மற்றும் பள்ளிகள் மதரஸாக்கள் கல்லூரிகளெல்லாம் தடையில்லாமல் தொடர்ந்து நடத்துகிறார்களே. எந்த உரிமையை சுதந்திரத்தை அவர்கள் இழந்துவிட்டார்கள்? எனவே குழப்பமடைய தேவை இல்லை. நீங்கள் சொல்லியிருப்பது தவறான கருத்தாகும்.

நம் டையோசிஸ்ஸில் சொத்துகளை பாராமரிக்க சட்டங்கள் இருக்கின்றன என்றும் பார்வையிட சினாட் போன்ற அமைப்புகள் இருக்கின்றன என்றும் கூறுகிறீர்கள். அப்படி இருந்தும் நம் சொத்துக்கள் கண்ணெதிரே கொள்ளையடிக்கப்படுகின்றன என்றும் நீங்கள் வேதனையுடன் எழுதியுள்ளீர்கள். அப்படியானால் இவர்கள் கிரிமினல்கள் (Criminal) என்றுதானே பொருள். சொத்துக்களை விற்று இருந்தால் வாங்கியவர்களுக்குச் அந்த சொத்து செல்லாது என்பதுதானே இன்றளவும் உள்ள நடைமுறை. CSI Trust Association என்பவர்கள் யார்? இவர்களுக்கு சொத்துக்களை விற்பதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? அப்படி ஒரு அதிகாரம் வழங்குவதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு? அது எங்கே இருந்து வந்தது? கிறிஸ்தவமத சொத்துக்கள் அனைத்தும் பொதுசொத்துக்கள் அல்லவா? விற்ற சொத்துக்களை மீட்பதற்கு சினாட் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? மக்கள் கேட்கமாட்டார்களா? எனவேதான் CSIயின் சொத்துக்கள் அரசாங்கத்தின் அறநிலைதுறையின்கீழ் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்கிறோம். இது மிகவும் அவசியமும், அவசரமுமாகும்.

இது சம்பந்தமாக சில வரலாற்று உண்மைகளை தங்கள் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன். சாணக்கியர் என்றழைக்கப்படும் கௌடில்யா (அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர்) அரசாங்க கஜானாவில் எப்பொழுதெல்லாம் பணம் காலியாகிறதோ அல்லது பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் கோயிலைக் கட்டு, கும்பாபிஷேகத்தை நடத்து என்று நமது மன்னர்களுக்கு ஆலோசனைகளைச் சொன்னார். மன்னர்களும் அவ்வாறே செய்தனர். கோவில் வருமானங்கள் அத்தனையும் மன்னர்களை சென்றடைந்தது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கொண்டதும் மன்னர்களுக்கு சென்ற கோயில் வருமானம் அத்தனையும் கிழக்கிந்திய கம்பெனிக்கு சென்றது.

1857ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்குப்பின் இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகும் இந்துகோவில் வருமானங்கள் அனைத்தும் அவர்கள் அரசாங்க கஜானாவிற்குத்தான் சென்றது. அப்போதைய கிறிஸ்தவ மிஷனரிமார் இந்து மதத்தினரின் (புறமதஸ்தர்) ஆலய வருமானத்தை பிரிட்டிஷ் அரசு (கிறிஸ்தவ அரசு) எடுத்துக்கொள்வது தவறு என்று சுட்டிக்காட்டி இந்துமத மக்களுக்காக கடும் எதிர்ப்புகளை தெரிவித்தப்படியால் பிரிட்டிஷ் அரசு இந்து ஆலய வருமானங்களை எடுத்துக்கொள்வதை நிறுத்திக்கொண்டது. அதன்பின் அந்த ஆலயங்கள் அதன் வருமானங்கள் யாவும் இந்து மதத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1916ம் ஆண்டு நீதிக்கட்சி (Justice Party) சென்னை மாகாணத்தை ஆட்சி செய்தபோது இந்து ஆலயங்களின் முறைகேடுகளைப்பற்றி புகார்கள் வந்ததின்பேரில் அரசாங்கம் அதற்கு கடிவாளம் இடவேண்டும் என்று கருதி அரசாங்கமே இந்து அறநிலைய துறையை உருவாக்கி ஆலயங்களின் எல்லா அசையும், அசையா சொத்துக்களை அரசாங்கத்தின் நேரடி பார்வையில் நிர்வகிக்க ஏற்பாடு செய்தது. அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதற்குமுன் நீதிக்கட்சி இந்து மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டது. அப்போது திருவாங்கூர்-கொச்சின் சமஸ்தானத்தில் திவானாக இருந்த திரு.சி.பி.ராமஸ்சுவாமி ஐயர் அவர்கள் ஆலயங்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தும் பாதுகாப்பாகவும் சரியான முறையில் நிர்வகிக்கப்படவேண்டுமானால் அவை அனைத்தும் அரசாங்கத்தின் இந்து அறநிலையத்துறையின்கீழ் கட்டாயம் கொண்டுவரப்படவேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்தார். அதன் பின்னரே நீதிக்கட்சி அத்துறையை உருவாக்கியது. 1920ல் இந்து அறநிலையத்துறை மசோதா நிறைவேற்றப்பட்டது. சுமார் 99 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இது வரலாறு.

இந்துக்களும், இஸ்லாமியர்களும் தங்கள் சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் அவைகள் அரசாங்கத்திடம்தான் இருக்கவேண்டும் என்று குரல் கொடுத்து அதற்கான ஏற்பாட்டை பல ஆண்டுகளுக்கு முன்னரே செய்துகொண்டார்கள். ஆனால் கிறிஸ்தவ மதத் தலைவர்கள்மட்டும் எங்களிடம் ஏராளமான கமிட்டிகளும், சட்டங்களும் வைத்திருக்கிறோம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி அரசாங்கத்தையும் கிறிஸ்தவ மக்களையும், ஏசுகிறிஸ்துவையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ மதத்திற்குமட்டும் விதி விலக்கு ஏன்? ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன்? பாதிரியார்களும், பிஷப்புகளும் பரலோகத்திலிருந்து குதித்தவர்களா? எனது கடிதத்தைத் தங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டதின்மூலம் சிலர் அரசாங்கத்தின் கதவுகளை தட்டத் துவங்கி இருக்கிறார்கள். சிலர் பதட்டமடைந்து போயிருக்கிறார்கள். ஊழலை எந்த போர்வையால் மூடலாம் என்று நினைக்கிறார்கள்.

2004ம் வருடம் டிசம்பர் 26ம் நாள் உலக மக்களின் துக்கநாள் – சுனாமி – நம் கண்முன்னே நம் காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய சோகம். ஆழிப்பேரலையால் குடும்பம் குடும்பமாக உலகம் விடியும் காலைவேளையில் ஒரு நொடிப்பொழுதில் லட்சக்கணக்கானோர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டார்களே. தாய் தந்தையரை இழந்து கணவனை – மனைவியை – குழந்தைகளை இழந்து – வீடுவாசல்களை இழந்து இன்றைக்கும் அந்த சோகத்தை தாங்கிக்கொள்ளமுடியாமல் மனநோயாளிகளாக அலைகிறார்களே அந்த அபலைகளின் நிவாரணத்திற்காக வெளிநாடுகளிலிருந்து கோடிகோடியாக அனுப்பப்பட்டதை CSI சினாட் என்ற பெயரில் ஈவு இரக்கமில்லாமல் கொள்ளை அடித்தவர்களிடம் நமது ஆலயத்தின் சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதுகிறீர்களா? வேலியே பயிரை மேய்கிறது.

அரசுத் துறையின்கீழ் வருமானால் வரவு செலவுகளை அரசாங்கம் நியமிக்கும், ஆடிட்டர்கள், ஆடிட் செய்வார்கள். சொத்துக்கள் சூரையாடப்படுவது தடுக்கப்படும். யார் வேண்டுமானாலும் சாமனியர்களானாலும் புகார் எழுப்பலாம். அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். விசாரணைகள் பாராபட்சமில்லாமல் நடைபெறும். குற்றவாளிகள் I.P.Cபடி தண்டிக்கப்படுவார்கள். உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடிக்கவேண்டியதுதானே. கண்டிக்கப்படவேண்டியவை, கண்டிக்கப்படவேண்டும். தண்டிக்கப்பட வேண்டியவை தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள்தானே தண்டிக்கப்படுவார்கள். இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும்போது நாம் ஏன் வாய்மூடி மௌனியாக இருக்கவேண்டும்.

சினாட் கோர்ட் வேண்டும் என்று டாக்டர்.ஜான் சகாயம் அவர்கள் மாடரேட்டருக்கு மனு செய்திருப்பதாக தெரிகிறிது (ஜாமக்காரன். டிசம்பர் 2009, பக்கம் 18) முழு விபரம் இல்லாதபடியால் ஒன்றும் புரியவில்லை. மாடரேட்டருக்கு ஏன் மனு எழுதவேண்டும்? கோர்ட்டுகள் அமைப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட விஷயம் அல்லவா? உச்ச நீதிமன்றம் தான் நீதிமன்றங்களை நியமிக்கும் அதிகாரம் படைத்தது. அப்படியிருக்க CSI மாடரேட்டுக்கு ஏன் மனு செய்யவேண்டும். ஒன்றும் புரியவில்லையே.

முதலாவது திருட்டு – கொள்ளை. நண்டு கொழுத்தால் வளையில் தங்குமா? பிறகு காமம் – பிறகு கொலை. அரசாங்கம் இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையானால் சிஸ்டர் அபயா (கேரளா), சில்வியா மேரி (சென்னை கொடுங்கையூர்) இவர்களின் கொலை போல பல கொலைகள் இனி ஏற்படலாம். கன்னியாஸ்திரி ஜெஸ்மி அவர்கள் ஆமென் என்ற பெயரில் எழுதிய ஒரு கன்னியாஸ்திரியின் ஆத்ம கதையைப்போல பல நூல்கள் வெளிவரலாம். முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் சிறந்த பகுத்தறிவுவாதி. எல்லா மதங்களைப்பற்றியும், மதத்தலைவர்களைப்பற்றியும் அவர் நன்கு அறிவார். எனவே கிறிஸ்தவ மதத்திற்கென்று விதிவிலக்களிக்காமல் உடனடியாக கிறிஸ்தவ மதத்திற்கும் ஒரு அறநிலைய துறையை ஏற்படுத்துவார் என்று நம்புவோம். இதைத்தவிர வேறெந்த வழியும் இனி கிடையாது. நன்றி.

இவண்

தங்கள் அன்புள்ள

B.J.வில்சன்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா