எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு -10 ஆயிரம் ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்தது வட மாநிலங்கள் பாதிப்பு செய்திப்பிரிவு Updated on: 26 Nov 2025 https://www.hindutamil.in/news/world/ethiopia-volcano-erupts-affecting-northern-states https://www.youtube.com/watch?v=IhZI3e50cTk
புதுடெல்லி: எத்தியோப்பியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்து சிதறிய எரிமலையால், இந்தியாவின் வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் உள்ள ‘எய்லி குப்பி’ என்ற எரிமலை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை எத்தியோப்பிய நேரப்படி காலை 8.30 மணிக்கு திடீரென வெடித்துச் சிதறத் தொடங்கியது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் குபுகுபுவென வானில் பல மீட்டர் உயரத்துக்கு பரவியது. அத்துடன் லாவா பிழம்பும் வெளியேறத் தொடங்கியது. இதனால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறினர். எத்தியோப்பியா அரசும் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபபாவில் இருந்து 800 கி.மீ. தொலைவில், வடகிழக்குப் பகுதியில் எரித்திரியா நாட்டின் எல்லையில் இந்த எரிமலை அமைந்துள்ளது. அதனால், எரிமலை வெடித்ததும் அதன் சாம்பல் செங்கடல் மற்றும் அண்டை நாடுகளான ஏமன், ஓமன் வழியாக இந்தியாவின் வடக்குப் பகுதி, பாகிஸ்தானின் வடக்குப் பகுதி வரை பரவியது. ஓமன் வழியாக அரபிக் கடல் வான் வழியில் பயணித்து வடக்கு இந்தியப் பகுதிகளுக்கு இந்த சாம்பல் பரவியுள்ளது. எரிமலை உள்ள பகுதிக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுமார் 4,000 கி.மீ. தூரம் உள்ளது. இவ்வளவு தூரத்தை கடந்து இந்தியாவில் பரவியுள்ளது, எரிமலை வெடிப்பின் வீரியத்தைக் காட்டுவதாக உள்ளது.
இதனால் அடர்த்தியான சாம்பல் நிறைந்த மேகக் கூட்டங்கள் இந்தியப் பகுதிகளுக்கு நேற்று முந்தினம் இரவு 10 மணி அளவில் படரத் தொடங்கியதாக ‘இண்டியா மெட் ஸ்கை வெதர்’ அமைப்பு கூறியுள்ளது. எரிமலை சாம்பல் முதலில் குஜராத் வான்வெளியில் படர்ந்தது. அதன் பிறகு ராஜஸ்தான், வடமேற்கு மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குப் பரவியது. மேலும், இமாலய பிராந்தியத்துக்கும் எரிமலை சாம்பல் பரவியது. இந்த பாதிப்பு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
எரிமலை சாம்பல் 15 ஆயிரம் அடி முதல் 25 ஆயிரம் அடி வரை உயரம் வரை வெளியேறி உள்ளது. சில பகுதிகளில் 45 ஆயிரம் அடி உயரம் வரை கூட பரவியுள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல், தூசியில் சல்பர் டைஆக்சைடு, கண்ணாடி துகள்கள், கற்கள் போன்றவையும் கலந்துள்ளன. இவற்றால் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி - என்சிஆர், பஞ்சாப், உ.பி.யின் சில பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறாக வானத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது. விமானப் போக்குவரத்தும் தாமதமாகி உள்ளன.
இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் டவுலவுஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எய்லி குப்பி எரிமலை மிகத் தீவிரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதில் இருந்து வெளியேறிய அடர்த்தியான சாம்பல் மற்றும் தூசி 14 கி.மீ. தூரத்துக்கு பரவி உள்ளது. மேலும், 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வடக்கு இந்தியாவை நோக்கிச் சென்றது. தற்போது எரிமலை கக்குவது நின்றாலும், அதன் சாம்பல் இந்தியா வடக்குப் பகுதிகளுக்கு பரவி வருகிறது’’ என்று தெரிவித்தது.
எனினும், எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் வானில் 25 ஆயிரம் முதல் 25 ஆயிரம் அடி உயரத்தில் படர்ந்துள்ளதால், இந்தியாவில் காற்றின் தன்மை பெரிதாக பாதிக்காது. எரிமலை சாம்பலின் துகள்கள் குறைந்த அளவில் தரையில் விழலாம். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனினும், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எரிமலை சாம்பல் படர்ந்துள்ள வழித்தடங்களில் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படலாம். எனவே, அந்த வழித்தடங்களில் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க விமான நிறுவனங்களுக்கு சிவில் ஏவியேஷன் டைரக்டரேட் ஜெனரல் அறிவுறுத்தி உள்ளார். மேலும், விமான நிலையங்களில் உள்ள ஓடு பாதைகள், டாக்ஸி வழிகளை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆகாசா ஏர், இண்டிகோ, கேஎல்எம் ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை கடந்த திங்கட்கிழமை ரத்து செய்தன. மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புகை குண்டு வெடித்தது போல்… எய்லி குப்பி எரிமலைக்கு அருகில் உள்ள கிராமம் அபடெரா. இங்குள்ள மக்கள் எரிமலை வெடித்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கிராம மக்கள் கூறும்போது, ‘‘எரிமலை கக்கிய கரும்புகை வானில் அடர்த்தியாக பரவியது. நிலநடுக்கம்
போன்ற அதிர்வு ஏற்பட்டது. கதவுகள், ஜன்னல்கள் அதிர்ந்தன. சில வினாடிகளில் வானம் இருண்டுவிட்டது. ஏதோ புகை குண்டு அல்லது சாம்பல் குண்டு வெடித்தது போல் மளமளவென உயரத்தில் படர்ந்தது’’ என்று அதிர்ச்சியுடன் கூறினர்.
உள்ளூர் நிர்வாக அதிகாரி முகமது சையத் கூறும்போது, ‘‘எரிமலை வெடிப்பால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. எனினும், சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. எய்லி குப்பி எரிமலை வெடித்ததற்கான வரலாற்று சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை’’ என்றார்.
டெல்லி காற்றின் தரம்: எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலையில் சாம்பல் இந்தியா
வின் வடக்குப் பகுதிகளில் பரவியதால், டெல்லி காற்றின் தரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில், எரிமலை சாம்பல் வான் பரப்பின் மிக உயரத்தில் உள்ளது. இது சீனாவை நோக்கி நகர்ந்து செல்லும்.
செவ்வாய்க்கிழமை (நேற்று) இரவுக்குள் இந்த சாம்பல் படலம் இந்தியப் பகுதிகளை விட்டு அகன்றுவிடும். எரிமலை சாம்பலால் பொருட்கள் பார்வையில் படாமல் மூடியிருந்தாலும், மேகமூட்டம் போல் காணப்பட்டாலும் டெல்லியில் காற்றின் தரம் பாதிக்கப்படவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எம்.மகாபத்ரா கூறினார்.
சென்னையில் விமான சேவை: எரிமலை வெடிப்பால் இந்தியாவில் சென்னை, மும்பையில் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மும்பைக்கு நேற்று காலை 7.15 மணிக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் தாமதமாக பகல் 11 மணிக்கு சென்றது. காலை 9.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
அதோடு, சென்னை - லண்டன், லண்டன் - சென்னை விமான சேவையில் மூன்று மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment