தூத்துக்குடி மாநாட்டில் பெரியாரின் தலைமை பேருரைக்கு இடையேயும், மாநாட்டின் முடிவிலும் பெரியார் பேசியதன் தொகுப்பாகும். இந்து குடி அரசு இதழில் 29.5.1948 அன்று வெளிவந்தது.
என்னைப் பொறுத்த வரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாக இருக்கவேண்டுமென்ற கவலை எனக்கு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா, முட்டாள்களா, பயித்தியக்காரர்களா, கெட்டிக்காரர்களா ? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.
புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக்கூடியவனாக இருக்க முடியுமே தவீர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவாகள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன்.
நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான். கழகத்தில் சேரு முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம். என்னுடன் வாதாடலாம். உங்கள் மனசாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!
ஆனால், எப்போது உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியதுதான் முறை.


No comments:
Post a Comment