Monday, November 24, 2025

புதிய தொழிலாளர் பாதுகாப்பு -எளிமையான சட்டங்கள்

புதிய தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தம்: ஓராண்டு வேலை செய்தாலே பணிக்கொடை பெறலாம்

தொழிலாளர் சட்டங்களை எளிமையாகவும் சீராகவும் செயல்படுத்தும் வகையில் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது

Posted On: 21 NOV 2025 3:00PM by PIB Chennai 

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 ஆகியவை இன்று (21.11.2025) முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு  சட்டங்களாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் விதிகள் தொடர்பான ஒழுங்குமுறை விதிகளை நவீனமயமாக்குவது தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்துவது, தொழிலாளர்களின் பணியிடச் சூழலை சீரமைப்பது போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த நான்கு புதியச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியாவிற்கான தொழிலாளர் சீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எதிர்காலத்திற்கு உகந்த வகையில், இந்தச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவோ அல்லது சுதந்திரம் அடைந்த பின்னர் அதாவது (1930-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை) இயற்றப்பட்டவையாக இருந்தன.  அப்போது இருந்த நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் உலக அளவிலான தொழிலாளர்கள் சூழல் அமைப்புகள் வேறுபட்டு இருந்தன.

நாட்டின் நடைமுறையில் இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் சிக்கல் நிறைந்ததாகவும், பல்வேறு சட்டங்களாக சிதறுண்டதாகவும் தற்போதைய காலத்திற்கு  பொருந்தாத வகையிலும் இருந்ததால், அவை எளிமைப்படுத்தப்பட்டு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நான்கு சட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192463

https://www.youtube.com/watch?v=mqazc56lnso


 பணிக்கொடையைப் பெற ஓராண்டு வேலை செய்தாலே போதும் என்று புதிய தொழிலாளர் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் கடந்த 1930 - 1950 காலகட்டத்தில் வரையறுக்கப்பட்டன. இதன்படி 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக ஊதிய விதி-2019, தொழில் துறை தொடர்பு விதி-2020, சமூகப் பாதுகாப்பு விதி-2020, பணிப் பாதுகாப்பு-2020 ஆகிய 4 புதிய சட்டங்கள் கடந்த 21-ம் தேதி அமல்படுத்தப்பட்டன. இந்த புதிய சட்டங்களில் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பழைய சட்டங்களின்படி ஒரு நிறுவனத்தில் ஓர் ஊழியர் 5 ஆண்டுகள் வேலை செய்தால் மட்டுமே பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெற முடியும். ஆனால், புதிய சட்ட விதிகளின்படி ஓராண்டு வேலை செய்தாலே கண்டிப்பாக பணிக்கொடை வழங்க வேண்டும்.

பணிக்காலத்தின்போது ஓர் ஊழியர் உயிரிழந்தால் அவரது வாரிசுதாரருக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். புதிய சட்டங்களில் பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் தனது ஊழியருக்கு 30 நாட்களுக்குள் பணிக்கொடை வழங்க வேண்டும். ஒரு மாத அவகாசத்தை தாண்டினால் 10 சதவீத ஆண்டு வட்டியுடன் பணிக்கொடையை வழங்க வேண்டும்.

புதிய சட்ட விதிகளின்படி, நிரந்தர ஊழியர்களைப்போல, ஒப்பந்த ஊழியர்களுக்கும் விடுப்பு, மருத்துவ வசதி, இபிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

பழைய சட்ட விதிகளின்படி, ஊழியரின் சம்பளத்தில் 30 சதவீதம் மட்டுமே அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. புதிய சட்ட விதிகளின்படி இது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இபிஎஃப் பிடித்தம் அதிகரிக்கும். இதன்காரணமாக, தொழிலாளர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் குறையும். ஆனால், பணி ஓய்வுக் காலத்தில் இபிஎஃப், பணிக்கொடை அதிகமாக கிடைக்கும்.

நியமனக் கடிதம், உடல் பரிசோதனை கட்டாயம்: புதிய விதிகளின்படி அனைத்து தொழிலாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக நியமனக் கடிதம் வழங்கப்பட வேண்டும். பணி நேரத்தை தாண்டி கூடுதல் நேரம் பணியாற்றினால் இரு மடங்கு சம்பளம் வழங்க வேண்டும். 40 வயதை தாண்டிய தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை நடத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் சம்பளத்தை வழங்க வேண்டும்.

பணிநிமித்தமான பயணம் அல்லது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு வரும் வழியில் ஊழியர் விபத்தில் சிக்கினால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்கள் இரவுப் பணியில் ஈடுபடலாம். அதேநேரம் அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பெண்களுக்கு சமவாய்ப்பு, சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

வீடுகளுக்கு உணவு உள்ளிட்டவற்றை விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்காக (சோமோடோ, ஸ்விக்கி, பிங்கிட்), அந்தந்த நிறுவன உரிமையாளர்கள், சிறப்பு நல நிதியங்களை அமைக்க வேண்டும். அவரவர் நிறுவன வருவாயில் 1.2 சதவீதத்தை நல நிதியங்களுக்கு வழங்க வேண்டும். ஆபத்தான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 100 சதவீத சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Poli passport