திருச்செந்தூர் மூலவர்
‘ திருச்செந்தூர் ‘ தலத்தில் மூலவர் K.Kandasamy நூல்களில் உள்ள செய்திகளை இங்கு தருகிறேன்.
சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் திருச்செந்தூர் குறித்து பல குறிப்புகள் உள்ளதால் , மிகப் பழமையான தலம் இது என அறியப்படுகிறது .
நமக்கு கிடைத்த முதல் கல்வெட்டு , இந்த ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள இரண்டாம் வரகுண பாண்டியனின் 13 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (பொது யுகம் 874 ஆம் ஆண்டு ) . ஸ்ரீமான் K V சுப்பிரமணிய ஐயரவர்கள் இதனை முதன் முதலில் அவரே படியெடுத்து , அந்தக் கல்வெட்டை மிக விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் . இதில் மூலஸ்தானத்தில் உள்ளவரின் திருநாமம் ‘ சுப்பிரமணிய பட்டாரகர் ‘ என்று இருக்கும் கிழக்குத் திசை நோக்கி இருக்கும் திருமேனியே ‘ மூலவர் ‘ எனக் கல்வெட்டுக் குறிப்பால் அறிகிறோம் . இவர் நின்ற் கோலத்தில் , இரு தேவியர் இல்லாமல் , நான்கு திருக்கரங்களில் ஒரு திருக்கரம் தாமரை மலர் ஏந்தி சிவபூஜை கோலத்தில் உள்ளார் . அவர் பூஜிக்கும் சிவலிங்கத் திருமேனி கருவறையின் உள்ளேயே இவருக்கு பின்புறமுள்ள சுவரில் இவருக்கு இடப்புறம் மாடக்குழி ஒன்றில் சிறிய லிங்கத் திருமேனியாக ‘ செகந்நாதர் ‘ என்ற திருநாமத்தோடு எழுந்தருளி உள்ளார் . இந்த செகந்நாதர் சிவலிங்கத் திருமேனியை வழிபடும் திருக்கோலத்தில்தான் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி உள்ளார் .
எனவே செகந்நாதர் சிவலிங்கத் திருமேனி மூலவராகவும் , ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி அவரை வழிபடும் அமைப்பில் இருந்து , இக்கால கட்டத்தில் ‘ ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி தான் மூலவர் ‘ எனக் காலபோக்கில் ஆகி விட்டது எனக் கொள்ளலாம் .
( சுத்தாத்வைத சித்தாந்த சைவர்கள் ) சைவர்களை பொறுத்தவரை இரண்டு மூர்த்தங்களும் சிவபெருமானே !
இது போக தெற்கு திசையில் , ஸ்ரீ சண்முகர் என்ற திருநாமம் தாங்கி , ஸ்ரீ வள்ளி , ஸ்ரீ தெய்வானை உடன் உள்ள ஸ்ரீ முருகப் பெருமானின் திருமேனியும் அடியார்களின் வழிபாட்டில் உள்ளது .
References :
1. EI 21 – No 17
2. “ திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு ” – ஆய்வு நூல் – ஆசிரியர் : ந கல்யாணசுந்தரம்

No comments:
Post a Comment