Wednesday, December 31, 2025

ஸ்ரீரங்கம் கோவில் - திமுக உள்ளூர் புள்ளி கட்டுப்பாட்டில், பல ஊழல்கள், பக்தர்கள் படும் பாடு

                             

பெருமாளே  காப்பாத்து...

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் மிகப்பெரிய விழா மார்கழி மாதத்தில் நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு...

அதில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து இந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் என்னுடைய கட்டுரை...

இந்தக் கோயிலில் அந்தந்த காலகட்டத்தில் யாராவது ஒரு அரசியல் பிரமுகர் எல்லோரையும் விரட்டி, மிரட்டி கோயிலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர், அழகிரியின் ஆதரவாளர் வெங்கடாசலம், கோயிலின் செயல் அலுவலர் கோபாலகிருஷ்ணனை இணை ஆணையர் சிவராம் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் சட்டையை கோர்த்து அடிக்கப் போய் விட்டார். உயரிய பொறுப்பில் பணி புரியும் ஒரு அரசு அதிகாரி இந்த அசிங்கத்தை, அவமானத்தை துடைத்து தூக்கி போட்டுவிட்டு 'அங்கே பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்; இதையும் அவரே பார்த்துக் கொள்ளட்டும்' என்று சொல்லிவிட்டு தன்னுடைய வேலையை பார்க்கிறார். இத்தனைக்கும் நேர்மையான அதிகாரி என்கிற தகுதியோடு பணிபுரிபவர் இவர்.

அதற்குப் பிறகு முன்னாள் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ, அதிமுகவின் அரசு தலைமை கொறடா, 40 வருடங்களாக ஸ்ரீரங்கத்தில் பொதுவாழ்வில் இருக்கும் மனோகர் கோயிலுக்கு வந்த போது வெகு நேரம் காத்து நிற்கவைக்கப்பட்டார். இவர் வந்தவுடன் பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் இல்லை. ஆனால் யார் நிறுத்தப்படுகிறார்கள் யார் அனுப்பப்படுகிறார்கள் இதில் யாருடைய முடிவு செயல்படுத்தப்படுகிறது என்பதில்தான் விஷயம் இருக்கிறது. 

'ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் ஒருவரின் வீட்டு வாசலில் சாக்கடை அடைத்துக் கொண்டால் கூட பிரதமர் அலுவலகத்துக்கு போன் போகும், மெயில் பறக்கும், நடவடிக்கை உடனே இருக்கும்' என்று வேடிக்கையாக சொல்வார்கள். இது வேடிக்கையாக சொல்லப்பட்டாலும் அந்த அளவுக்கு தொடர்பு கொள்ளும், அந்த அளவுக்கு தன் உரிமை குறித்த கல்வி அறிவும் சட்டம் குறித்த தெளிவும் அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களோடு தொடர்பும் ஸ்ரீரங்கத்து மக்களுக்கு உண்டு என்பதுதான் அர்த்தம். 

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இத்தனை அபத்தங்கள் நடந்தும் அது குறித்து செய்தி எழுத களத்தில் நான் முயற்சி செய்தபோது எனக்கு பேட்டிதர யாரும் தயாராக இல்லை. (ஒருவேளை "என்னை தொடர்பு கொண்டால் நான் பேட்டி தந்திருப்பேன்..." என்று இனிமேல் யாராவது சொன்னால் அதை தலைவணங்கி ஏற்க காத்திருக்கிறேன்) 

அந்நிய படையெடுப்புகளின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள், பெருமாளின் பக்தர்கள் கூடி அதனை எதிர்கொண்டு எதிரிகளின் வாளுக்கு தங்கள் உடலைக் கொடுத்து பெருமாளை காப்பாற்றினார்கள். அதன் பிறகு பெருமாளை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக அலைந்து திரிந்து காப்பாற்றி மீண்டும் எதிரிகளின் கொட்டம் அடங்கிய பிறகு பெருமாளை கொண்டு வந்து ஸ்ரீரங்கத்தில் சேர்த்தார்கள். அந்த அளவுக்கு பெருமாள் மீது அன்பும் காதலும் பக்தியும் கொண்டவர்கள். அதற்காக எதையும் தியாகம் செய்ய துணிந்தவர்கள் என்கிற வரலாறு ஸ்ரீரங்கத்து மண்ணுக்கு உண்டு. அத்தகைய வீரம் கொண்டவர்கள் இன்று எங்கே போனார்கள்? 
எப்போது பார்த்தாலும் விதிகள் மீறப்படுகிறது, ஆகமங்கள் அழிக்கப்படுகிறது என்று பேச்சு மட்டும் கிளம்புகிறது. நடவடிக்கை ஏதும் இல்லையே ஏன் என்கிற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை...

சில மாதங்களுக்கு முன் உற்சவத்தின் போது பெருமாள், தான்பயணிக்க வேண்டிய பாதையை விட்டு மாறி ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு வரை கொண்டு செல்லப்பட்டார் என்கிற சர்ச்சை கிளம்பியது. அப்போதும் அதை எதில் எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை. 

இது ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயம். இதற்கு என சில வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அதைப் பின்பற்றியே ஆக வேண்டும்; மீறப்பட்டால் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். இல்லை கோயிலுக்குள் வகுத்து வைக்கப்பட்ட விதிகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டால் விட்டு விடுங்கள்...

"பெருமாளுக்கு பிரசாதமாக படைக்கப்படும் வடை, தேன்குழல், அப்பம், அதிரசம், அரவணை, சில்வரப்பம் இது எல்லாவற்றிலும் சுத்தமான நெய்யை பயன்படுத்த வேண்டும். ஆனால் இப்போது நெய் போனது டால்டா வந்தது; டால்டா போய் ரிஃபைண்ட் ஆயில் வந்து, இப்போது பாமாயிலில் செய்கிறார்கள். திருப்பதி போல் பெரிய பிரச்சனை வந்து பெருமாளுக்கு படைக்கப்படும் பிரசாதங்களை பரிசோதனை செய்தால் பெரிய பூகம்பம் வெளிவரும்" என்று என்னிடம் போன் பண்ணி புலம்பினார் ஒரு பக்தர்.

"பள்ளிகொண்ட பெருமாளை காணவரும் பக்தர்கள் அவரது பாதங்களை கண்டு வணங்குவதே முறை. ஆனால் நடுவிலேயே தடுப்பு கட்டி, அவர் பாதத்தையும் முழுமையாக பார்க்க முடியாமல் செய்துள்ளது கோயில் நிர்வாகம்" என்று புலம்பினார் இன்னொரு பக்தர்.

இப்படி ஒரு செய்தியை எழுதிவிட்டு கோயிலுக்கு போனால் அங்கே தேவை இல்லாத சச்சரவுகள் ஏற்படும் என்பதால் நான் போவதில்லை. இந்த பகல் பத்து ராப்பத்து காலங்களில் நடக்கும் உற்சவத்துக்கு தன்னை நல்லபடியாக அழைத்துச் செல்வதில்லை என்பது என் இல்லத்தரசி மகாலட்சுமியின் வருத்தம். "எல்லா வேலைகளிலும் ஆக்குபேஷனல் ஹசார்ட் (Occupational Hazard) என்று ஒன்று உண்டு. அதுதான் இது. நீ பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இருக்கும் இடத்திலிருந்து இறைவனை வேண்டிக்கொள்" என்று சொல்லிவிட்டேன்.

குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் இந்த செய்தி வெளியான தினத்தன்று சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த இந்து அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் காரில் உடன்பயணித்து வந்த திமுகவின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து ஸ்ரீதரின் ஆய்வில் முழுமையாக இருந்து விளக்கி சொன்ன காட்சிகளை ராம்குமார் தரப்பினரே வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். 

ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் ராம்குமாருக்கும் அலுவல் ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் அரசின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி எப்படி இந்த அங்கீகாரத்தை தருகிறார் ?
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் ஆசிர்வாதம் தான் இதற்கு காரணம் என்பதே ஸ்ரீரங்கத்து பெரியவர்களின் புலம்பலாக இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால் அங்கேயே எல்லா விதிகளும் மீறப்படுகின்றன. 
பெருமாள் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது...
ஷானு, 28.12.2025. 9842455580.   நன்றி Shanu Journalist







No comments:

Post a Comment

ஈரோட்டில் இந்து பொது மயானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும் தமிழர்- மக்கள்

இந்து பொது  ம யானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும்  தமிழர்  மக்கள் - ஈரோட்டில் என்ன பிரச்னை?  கட்டுரை தகவல் எழு...