Saturday, January 31, 2026

தென்காசிமாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள திருமலாபுரத்தில் 8 அடி நீள ஈட்டி சங்க இலக்கிய காலத்திற்கு முன்பானதா?

திருமலாபுரத்தில் கிடைத்த 8 அடி நீள ஈட்டி - 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என கணிப்பு Written by Kalaiyarasi Sundharam 27 Jan 2026 

தமிழகத்தின் திருமலாபுரத்தில் இந்தியாவின் மிக நீளமான 8 அடி இரும்பு ஈட்டி கண்டெடுக்கப்பட்டது, தமிழர்களின் 5000 ஆண்டுக்கால இரும்புத் தொழில்நுட்ப மேன்மையை உலகிற்குப் பறை சாற்றுகிறது.

தமிழகத்தின் தொன்மைக்கும், தமிழர்களின் வீரத்திற்கும் மற்றுமொரு சான்றாகத் தூத்துக்குடி மாவட்டம் திருமலாபுரத்தில் பிரம்மாண்டமான இரும்பு ஈட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், தமிழகத்தின் இரும்புக்காலம் கி.மு. 3345-ஆம் ஆண்டைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த 8 அடி நீள ஈட்டி இந்தியத் தொல்லியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

திருமலாபுரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது, ஒரு முதுமக்கள் தாழிக்கு அருகில் இரண்டு இரும்பு ஈட்டிகள் 'X' வடிவில் குறுக்காக வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒன்று 8 அடி நீளமும், மற்றொன்று 6.5 அடி நீளமும் கொண்டவை. இந்தியாவில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட இரும்புக்காலக் கருவிகளிலேயே இதுதான் மிக நீளமானது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஈட்டியின் ஒரு முனை சற்று உருண்டையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனைப் போர்க்களத்தில் வீரர்கள் எளிதாகக் கையாண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், அந்தத் தாழிக்குள் தங்கப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பு குறித்து வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் விபா திரிபாதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கூறுகையில், "பண்டைய கால வீரர்கள் கால்நடைகளையும் செல்வத்தையும் எதிரிகளிடமிருந்து காக்க இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம். பொதுவாக கங்கைச் சமவெளி போன்ற பகுதிகளில் மண்ணின் ஈரப்பதம் காரணமாக இரும்பு விரைவில் துருப்பிடித்துச் சிதைந்துவிடும். ஆனால், தமிழகத்தின் மண் வளம் இரும்புப் பொருட்கள் நீண்ட காலம் சிதையாமல் இருக்கப் பேருதவியாக உள்ளது," எனத் தெரிவித்தார்.

அதேசமயம், தக்காணக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஆர்.கே. மொஹந்தி, இந்த பிரம்மாண்ட ஈட்டி ஒருவேளை போருக்காக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட சமூக அந்தஸ்து கொண்ட தலைவருக்காகச் சிறப்பாகச் செய்யப்பட்டு, அவர் மறைவுக்குப் பின் அவருடன் புதைக்கப்பட்ட சடங்குப் பொருளாகவும் இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். இரும்பை உருக்க 1,200°C முதல் 1,500°C வரையிலான மிக அதிக வெப்பம் தேவைப்படும் நிலையில், 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியது உலகையே வியக்க வைத்துள்ளது.

தமிழகத்தில் கி.மு. 3000 முதல் கி.மு. 2500 காலகட்டத்திலேயே இரும்புப் பயன்பாடு புழக்கத்தில் இருந்ததற்கான அசைக்க முடியாத சான்றாக இது அமைந்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியை உலக அளவில் நிலைநிறுத்த, ஐஐடி காந்திநகர் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத் தொல்லியல் துறை விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் உலோகத் தொழில் நுட்பம் குறித்த புதிய உண்மைகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   https://tamil.indianexpress.com/tamilnadu/indias-longest-iron-age-spear-unearthed-in-tamil-nadu-11032866

தென்காசிமாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள திருமலாபுரத்தில் 5000 ஆண்டுகள் பழமையான வேல்களை அகழ்ந்தெடுத்திருக்கிறார்கள் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர்.

https://www.facebook.com/photo/?fbid=33785725397707976&set=pcb.33784842177796298

ஈமத்தாழியொன்றின் அருகே பெருக்கல்குறி வடிவில் நிறுத்தப்பட்டிருந்த இந்த வேல்களில் ஒன்றின் நீளம் 8 அடியாம்! மற்றொன்றின் நீளம் 6.5 அடி. இதுவரை கிடைத்திருக்கும் வேல்களிலேயே மிகவும் நீளமானவையாகவும், சிதைவற்றவையாகவும் இருப்பன இந்த வேல்களே என்கிறார்கள்.
இந்த வேல்களில் ஒன்றின் முனை மழுங்கலாகச் செய்யப்பட்டிருப்பதைக் கொண்டு, ஈமச்சடங்கின் நிமித்தமாகச் செய்யப்பட்ட வேலாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
'வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
.....
.....
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' என்கிறது புறநானூறு.
எந்தக் கடமை தவறாத கொல்லன் வடித்த வேல்களோ இவை!
கடமை தவறாது களிறு எறிந்து பெயர்ந்த எந்த மாவீரனின் ஈமத்தாழியோ இது!!

No comments:

Post a Comment