“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 16ம் பாகம்
முந்தைய பாகங்களின் சுருக்கம் கட்டுரையின் இறுதியில் உள்ளது.
ஒரு சமூகத்தில் ஒரு செயல் தீமையானது என்பது தெரியும்போது அதை அந்தச் சமூகத்தவரே எதிர்த்துப்போராட வேண்டும். இந்து சமூகத்தில் தீண்டாமை தீமையானது என்றபோது அதை அம்பேத்கர் எதிர்த்துப்போராடினார். ஒரு இயக்கத்தையே ஆரம்பித்து போராடினார். அதுபோலவே பலர் போராடினர். ஆனால் இஸ்லாத்தில் இந்த நிலைமை உள்ளனவா என்பது பற்றி கூறுகிறார் அம்பேத்கர்:
இஸ்லாமில் முன்னேற்றப் பார்வை இல்லை
‘‘முஸ்லீம்களிடையே இந்தத் தீமைகள் நிலவுவது வேதனை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்தக் கேடுகளை எல்லாம் வேரோடு வேரடி மண்ணோடு அடிசாய்க்கக்கூடிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் முசல்மான்களிடையே உருவாகவில்லையே என்பது இதைவிடவும் வேதனை தருவதாக இருக்கிறது.
இந்துக்களிடையேயும் சமூகத் தீமைகள், தீங்கும் இருந்துவரவே செய்கின்றன. ஆனால் இவற்றில் ஓர் ஆறுதல் அளிக்கும் அம்சம் இருக்கிறது. அது என்ன?
இந்துக்களில் சிலர் இத்தீமைகள் இருந்துவருவதை உணர்ந்துள்ளனர், தேர்ந்து தெளிந்துள்ளனர், சிலர் இவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு முன்னின்று பாடுபட்டும் வருகின்றனர். ஆனால் அதே சமயம் முஸ்லீம்களின் நிலை என்ன?
இவையெல்லாம் தீமைகள் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. இதனால் அவற்றை அகற்றுவதற்கு அவர்கள் முயல்வதில்லை; கிளர்ச்சி செய்வதில்லை. உண்மையில், தங்களது நடைமுறைப் பழக்கவழக்கங்களில் அத்தகைய மாற்றம் ஏற்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அதனைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.
குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் இஸ்லாம்
இதற்கு ஓர் எடுத்துக்காட்டை இங்கு குறிப்பிடுவது உசிதமாக இருக்கும்.
பாலிய விவாக மசோதா ஒன்று 1930ல் மத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இது ஒன்றும் புரட்சிகரமான மசோதா அல்ல. இம் மசோதாவில் மணமகளின் திருமண வயது 14 ஆகவும் மணமகனின் திருமண வயது 18 ஆகவும் உயர்த்தப்பட்டது, அவ்வளவுதான். இதையே கூட முஸ்லீம்கள் கடுமையாக எதிர்த்தனர். முஸ்லீம் சட்டத்திற்கு இது முரண்பட்டிருப்பதாக வாதிட்டனர். மசோதாவை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் அத்துடன் நிற்கவில்லை.
மசோதா சட்டமானபோது அந்தச் சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினர். ஆனால் இந்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆரம்பித்த இந்த ஒத்துழையாமை இயக்கம் அதிர்ஷ்டவசமாக வலுவடையவில்லை. காங்கிரஸ் இதே சமயம் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லீம்களின் இயக்கம் அமிழ்ந்து போய்விட்டது. எனினும் சமூக சீர்த்திருத்தங்களை முஸ்லீம்கள் எவ்வளவு வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதை அவர்களது இந்த இயக்கம் புலப்படுத்துகிறது.
முஸ்லீம்கள் இவ்வாறு சமூக சீர்திருத்தங்களை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு கேள்வி இங்கு எழக்கூடும்.
இஸ்லாம் ஏன் வளர்ச்சியை எதிர்க்கிறது ?
உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் முற்போக்கு கருத்துக்களில்லாத, மாறுதல் விரும்பாத மக்கள் என்பதே இதற்கு வழக்கமாக அளிக்கப்படும் பதிலாகும். இந்தக் கருத்து வரலாற்றுச் சான்றுகளுடன் ஒத்துப்போகிறது என்பதில் ஐயமில்லை.
ஆரம்பத்தில் அவர்களது நடவடிக்கைகள் எரிமலை வெடிப்பதுபோல் ஆவேசத்தோடு, மிகுந்த உக்கிரத்தோடு பொங்கி எழுந்தன. அவற்றின் வேகமும், வீச்சும், பரிமாணமும் உண்மையிலேயே பிரமிக்கத் தக்கவையாக இருந்தன. இதனால் விரிந்து பரந்த பல சாம்ராஜ்யங்கள் ஆங்காங்கு உருவாயின. ஆனால், இதன்பின்னர் முஸ்லீம்கள் திடீரென்று ஒரு விசித்திரமான, விளக்க முடியாத ஓர் உணர்ச்சியற்ற, மரமரப்பு நிலைக்கு உள்ளாயினர். அதிலிருந்து அவர்கள் விழித்துக் கொள்ளவே இல்லை. அவர்களது இத்தகைய மந்தத் தன்மையை, கழிமடிமையைப் பற்றி ஆராய்ந்தவர்கள் இதற்கு ஒரு காரணம் கூறுகிறார்கள்.
இஸ்லாம் ஓர் உலகமதம், அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் எல்லா நிலைமைகளுக்கும் ஏற்ற மதம் என்று அவர்கள் அடிப்படையாகக் கொண்டுள்ள கருத்தே அவர்களது இன்றைய தேக்க நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பின்வருமாறு வாதிடப்படுகிறது.
‘‘தனது மதத்தின்மீது அசையாத நம்பிக்கை கொண்ட முசல்மான் எவ்வகையிலும் முன்னேற்றம் காணவில்லை; நவீன சக்திகள் மின்னல் வேகத்தில் மாறிவரும் இந்த உலகில் அவன் இடம்பெயராது, இயங்காது, இருந்த இடத்தில் இருக்கிறான்.
தான் அடிமைப்படுத்திய இனங்களை தன் பழைய காட்டுமிராண்டித்தமான நிலையிலேயே, நாகரிகமற்ற நிலையிலேயே, வைத்திருப்பது உண்மையிலேயே இஸ்லாமின் முக்கிய அம்சங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை. அது பழக்கத்திற்குள் திணிக்கப்பட்டு செயலற்றதாக, ஊடுருவ முடியாததாக ஆக்கப்பட்டுள்ளது.
அது மாறமுடியாதது; எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும் அதன் மீது எவ்வித பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்த முடியாது. இஸ்லாமுக்கு வெளியே எத்தகைய பாதுகாப்பும் இருக்க முடியாது. அதன் சட்டத்திற்கு அப்பால் உண்மை எதுவும் இருக்கமுடியாது. அதன் ஆன்மீக போதனைக்கு வெளியே நிலைத்த நல்வாழ்வைக் காணமுடியாது என்று போதிக்கப்பட்ட முஸ்லீம் தனது நிலையைத் தவிர வேறு எந்த நிலையையும், இஸ்லாமிய சிந்தனை முறையைத் தவிர வேறு எந்த சிந்தனையையும் எண்ணிப் பார்க்க இயலாதவனாகி விடுகிறான்.
பூரணத்துவத்தின் ஒப்பில்லாத, நேர்நிகரற்ற கொடுமுடியை எட்டிவிட்டதாக உறுதியாக நம்புகிறான். உண்மையான சமயப்பற்று, உண்மையான சித்தாந்தம், உண்மையான மெய்யறிவு இவற்றின் ஏகபோக உரிமையாளன் என்று தன்னைக் கருதுகிறான்.
நிலையான மெய்ம்மையை – அது பிறவற்றுடன் ஒப்பிடக்கூடிய, மாறக்கூடிய மெய்ம்மை அன்று – மாறாக அப்பழுக்கற்ற முழுமுதல் மெய்ம்மையை தான் மட்டுமே பெற்றிருப்பதாகப் பெருமிதம் கொள்கிறான்.
புத்தியை மழுங்கடிக்கும் ஷரியா சட்டம்
முஸ்லீம்களின் சமயச் சட்டம் உலகிலுள்ள மிகப் பலதரப்பட்ட தனிமனிதர்களுடனும் சிந்தனை, உணர்வு, கருத்து, திறனாய்வு ஒற்றுமையை அழித்துவிடும் செயல் திட்டத்தைப் பெற்றிருக்கிறது.
இந்த ஏகத்துவம் மனிதனது ஆற்றலை மழுங்கடித்து, அவனைச் செயலிழக்கச் செய்கிறது என்பதை இங்கு வலியுறுத்திக் கூறியாக வேண்டும்.
இந்த ஏகத்துவம் முஸ்லீம்களுக்கு வெறுமனே போதிக்கப் படுவதில்லை, மாறாக, அணுவளவும் சகிப்புத் தன்மையற்ற உணர்வில் அது அவர்கள்மீது திணிக்கப்படுகிறது.
கர்ணகடூர கொடுமைக்கும் கொடிய வன்முறைக்கும் பெயர்போன இந்தச் சகிப்புத்தன்மையற்ற போக்கு முஸ்லீம் உலகுக்கு வெளியே எங்கும் காணப்படாத ஒன்றாகும்.
இஸ்லாமின் போதனைகளுக்கு முரண்படுகின்ற பகுத்தறிவு பூர்வமான அனைத்துச் சிந்தனைகளையும் அது அடக்கி ஒடுக்குகிறது. இது குறித்து ரேனன் கூறுவதாவது:
இஸ்லாம் என்பது ஆன்மிகம் மற்றும் உலகியலின் ஒரு கூட்டிணைப்பு; அது ஒரு தீவிர சமய சித்தாந்தத்தின் ஆட்சி.
அது மனிதகுலம் இதுவரை பூண்டிராத மிகவும் கனமான சங்கிலி…. இஸ்லாம் ஒரு சமயம் என்ற முறையில் அதற்குரிய வனப்புகளை, சிறப்புகளைப் பெற்றிருக்கிறது…
ஆனால், மனிதனது பகுத்தறிவுக்கு அது ஊறு விளைவிப்பதாகவே இருக்கிறது. எனினும், சுதந்திரச் சிந்தனையை ஏனைய சமயங்களை விட அது கடுமையாக ஒடுக்கிவிட்டது என்று கூறுவதற்கில்லை என்றாலும் இப் பணியை அது மிகவும் வலிமையோடு செய்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
அது போர் புரிந்து கைப்பற்றிய நாடுகளை பகுத்தறிவு கலாசார விதைகளை விதைக்க முடியாத வறண்ட தரிசு நிலங்களாக்கிவிட்டது.
அறிவியலும், இஸ்லாமும்
உண்மையில் ஒரு முசல்மானை ஏனையோரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது விஞ்ஞானத்திடம் அவன் கொண்டுள்ள வெறுப்பும், அத்துடன் ஆராய்ச்சி என்பதெல்லாம் வீணானது, பயனற்றது, விளையாட்டுத்தனமானது, இன்னும் சொல்லப் போனால் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று அவன் கொண்டுள்ள நம்பிக்கையும்தான்.
இயற்கை விஞ்ஞானங்களை அவன் எதிர்க்கிறான், கடவுளுக்கு எதிரான போட்டி முயற்சிகளாக அவற்றை அவன் கருதுவதே இதற்குக் காரணம். வரலாற்று விஞ்ஞானங்களை அவன் எதிர்க்கிறான்.
அவை இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைப் பற்றியதாக இருப்பதும், பண்டைய முரண்பட்ட சமயக் கருத்துகளுக்கு அவை புத்துயிரளிக்கக்கூடும் என்று அவன் அஞ்சுவதுமே இதற்குக் காரணம்’’.
ரேனன் பின்வருமாறு முடிக்கிறார்:
“விஞ்ஞானத்தை ஒரு பகையாகக் கருதுவதில் இஸ்லாம் பிடிவாதமாக இருக்கிறது. ஆனால் ஒரே பிடிவாதம் காட்டுவது ஆபத்தானது. இஸ்லாமின் கெட்ட காலமோ என்னவோ விஞ்ஞானத்தைப் பகைத்துக்கொள்வதில் அது வெற்றி கண்டிருக்கிறது. விஞ்ஞானத்தை அழிப்பதன் மூலம் அது தன்னையே அழித்துக் கொள்கிறது. உலகின் முற்றிலும் கீழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.’’
இந்துக்களை இந்திய இஸ்லாமியர் வெறுப்பது ஏன் ?
சமூக சீர்திருத்தங்களை முஸ்லீம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று நாம் முன்னர் குறிப்பிட்ட கேள்விக்கு இந்தப் பதில் தெளிவானதாக இருந்தாலும் உண்மையானதாக இருக்க முடியாது.
இது உண்மையான பதிலாக இருக்குமானால், இந்தியாவுக்கு வெளியே உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளிலும் எழுச்சியும் கிளர்ச்சியும், கொந்தளிப்பும் குமுறலும் ஏற்படட்டிருக்கிறதே இதற்கு எப்படிச் சமாதனம் கூறமுடியும்?
அதற்கெல்லாம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் விவரம் ஆராயும் உணர்வு, மாற்றம் காணவேண்டுமென்ற உணர்வு, சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமென்ற உணர்வு, சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியிருக்கிறதே இதற்கு எப்படி விளக்கம் தரமுடியும்?
உண்மையில், துருக்கியில் மேற்கொள்ளப் பட்டுள்ள சமூகச் சீர்திருத்தங்கள் மிகவும் புரட்சிகரமானவை; இந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்களின் பாதையில் இஸ்லாம் குறுக்கிடவில்லை என்றால், இந்திய முஸ்லீம்களின் பாதையில் மட்டும் அது ஏன் குறுக்கிடவேண்டும்?
இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தின் சமூக, அரசியல் தேக்கநிலைக்கு ஏதேனும் விசேடக் காரணம் இருக்க வேண்டும். அந்த விசேடக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?
இந்திய முசல்மானிடம் மாறுதல் காணும் உணர்வு இல்லாமலிருப்பதற்கு இந்தியாவில் அவன் வகிக்கும் பிரத்தியேக நிலைமையே காரணமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
இந்துக்கள் மிகப்பெரும்பான்மையினாராக இருக்கும் ஒரு சமூகச் சூழலில் வசித்து வருகிறான். அந்த இந்துச் சூழல் எப்போதும் ஓசைப்படாமல், ஆனால் உறுதியாக அவன் மீது ஆக்கிரமிப்பு நடத்தி வருகிறது. அது தன்னை முசல்மானல்லாதவனாக்குவதாக அவன் எண்ணுகிறான்.
இவ்வாறு இந்துக்கள் தன்னைப் படிப்படியாகத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவன் தீவிரமாக முனைகிறான், இஸ்லாம் சம்பந்தப் பட்ட அனைத்தையும் பேணிப்பாதுகாக்கும் உணர்வை இது அவனுக்கு ஏற்படுத்துகிறது. இது தனது சமுதாயத்துக்கு நலன் பயக்குமா, அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை அவன் சற்றும் எண்ணிப்பார்ப்பதில்லை.
இரண்டாவதாக, அரசியல் ரீதியிலும் இந்துக்களே மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சூழ்நிலையில் இந்திய முஸ்லீம்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் ஒடுக்கப்படுவோம் என்று இந்திய முஸ்லீம் உணர்கிறான். அந்த அரசியல் ஒடுக்குமுறை இந்திய முஸ்லீம்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினராக ஆக்கக்கூடும் என்று அவன் அஞ்சுகிறான்.
சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இந்துக்களால் மூழ்கடிக்கப்படக்கூடிய நிலையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென்ற அவனது இந்த உணர்வே, வெளி நாடுகளிலுள்ள தங்களது தோழர்களுடன் ஒப்பிடும்போது சமூக சீர்திருத்தம் விஷயத்தில் இந்திய முஸ்லீம்கள் பின்தங்கியிருப்பதற்குப் பிரதான காரணமாக இருக்கும் என்று என் மனத்துக்குப் படுகிறது.
சட்டமன்ற, ஸ்தல ஸ்தாபன இடங்களுக்காவும் அரசுப்பணிகளுக்காவும் இந்துக்களுக்கு எதிரான இடையறாத போராட்டத்தில் தங்கள் சக்தியையும் ஆற்றலையும் சர்வசதாவும் ஈடுபடுத்த வேண்டியுள்ள நிலைமையில் சமூகசீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கான எண்ணமோ, அவகாசமோ, சந்தர்ப்பமோ அவர்களுக்குக் கிட்டுவதில்லை.
அப்படியே காட்டினாலும், வகுப்புப் பதற்றம் உச்சநிலையை அடையும்போது தங்களது சமூக-சமய ஒற்றுமையை எவ்வகையிலேனும் பாதுகாப்பதன் மூலம் இந்துக்களதும் இந்து மதத்தினதும் அபாயத்துக்கு எதிராக தங்கள் அணிகளை ஒன்றுதிரட்டி, ஓர் ஒன்றுபட்ட முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம், வேட்கை மேலோங்கி இவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
இதே விளக்கம் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தின் அரசியல் தேக்கநிலைக்கும் பொருந்தும். முஸ்லீம் அரசியல் வாதிகள் மதச்சார்பற்ற வாழ்க்கை அம்சங்களை தங்கள் அரசியலுக்கு ஆதாரமாகக் கொள்வதில்லை. ஏனென்றால், இந்துக்களுக்கு எதிரான போராட்டத்தில் இது தங்கள் சமூகத்தைப் பலவீனப்படுத்தும் என்பது அவர்களது கருத்து.
இஸ்லாமியரின் தீயசெயல்களை இஸ்லாமியர் எதிர்ப்பதில்லை
செல்வந்தர்களிடமிருந்து நியாயம் பெறுவதற்காக ஏழை முஸ்லீம்கள் ஏழை இந்துக்களுடன் சேரமாட்டார்கள். நிலப்பிரபுவின் கொடுங்கோன்மையைத் தடுத்து நிறுத்துவதற்கு முஸ்லீம் குத்தகைக்காரர்கள் இந்து குத்தகைக்காரர்களுடன் சேரமாட்டார்கள்.
உழைப்புக்கும் மூலதனத்துக்கும் நடைபெறும் போரட்டத்தில் முஸ்லீம் தொழிலாளர்கள் இந்து தொழிலாளர்களுடன் சேர மாட்டார்கள். இது ஏன்?
இக்கேள்விக்கு மிக எளிதாகப் பதில் சொல்லி விடலாம். பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகள் நடத்தும் போராட்டத்தில் சேர்ந்தால் ஒரு முஸ்லீம் செல்வந்தரை எதிர்த்துத்தான் போராட வேண்டியிருக்கும் என்பதை ஓர் ஏழை முஸ்லீம் உணர்கிறான்.
நிலப்பிரபுவுக்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்தால் ஒரு முஸ்லீம் நிலப்பிரபுவை எதிர்த்துத் தான் போராடவேண்டும் என்று முஸ்லீம் குத்தகைக்காரன் பார்க்கிறான்.
முதலாளித்துவத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் நடத்தும் தாக்குதலில், தான் ஈடுபட்டால் ஒரு முஸ்லீம் மில் உரிமையாளருக்கு ஊறுசெய்ய நேரிடும் என்று முஸ்லீம் தொழிலாளி நினைக்கிறான். ஒரு பணக்கார முஸ்லீமுக்கு, ஒரு முஸ்லீம் நிலப்பிரபுவுக்கு ஒரு முஸ்லீம் மில் முதலாளிக்கு எவ்வகையிலும் தீங்கு இழைப்பது முஸ்லீம் சமூகம் முழுவதுக்குமே செய்யப்படும் தீங்காக ஒரு முஸ்லீம் கருகிறான்.
இந்து சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் இது முஸ்லீம்களைப் பலவீனப்படுத்தும் என்று கருதுகிறான்.
எப்போது ஜனநாயகம், எப்போது எதேச்சதிகாரம் ?
முஸ்லீம் அரசியல் எவ்விதம் நெறிபிறழ்ந்து ஏறுமாறானப் போக்கில் செல்லுகிறது என்பதை சமஸ்தானங்களில் மேற்கொள்ளப்படும் அரசியல் சீர்திருத்தங்கள் சம்பந்தமாக முஸ்லீம் தலைவர்கள் நடந்துகொள்ளும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்து சமஸ்தானமான காஷ்மீரில் பிரதிநிதித்துவ ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி முஸ்லீம்களும் அவர்களுடைய தலைவர்களும் பெரும் கிளர்ச்சி நடத்தினர்.
இதே முஸ்லீம்களும் அவர்களுடைய தலைவர்களும் இதர முஸ்லீம் சமஸ்தானங்களில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தனர். இந்த விந்தையான, விபரீதமான போக்குக்கான காரணத்தைப் புரிந்து கொள்வது மிகவும் சுலபம்.
இவை யாவற்றிலும் முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் தீர்மானமான அம்சம் இந்துக்களுடன் ஒப்பிடும் போது இது எந்த அளவுக்கு முஸ்லீம்களைப் பாதிக்கும் என்பது தான். பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைப்பது முஸ்லீம்களுக்கு அனுகூலமானது என்றால் அதை அவர்கள் கோருவார்கள், அதற்காகப் போராடுவார்கள்.
காஷ்மீர் சமஸ்தானத்தில் மன்னர் இந்து, ஆனால் பெரும்பான்மையான குடிமக்கள் முஸ்லீம்கள். காஷ்மீரில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமையவேண்டும் என்று முஸ்லீம்கள் போராடுவார்கள் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. அதாவது காஷ்மீர் பிரதிநிதித்துவ அரசாங்கம் என்பது ஆட்சி அதிகாரம் இந்து மன்னரிடமிருந்து முஸ்லீம் மக்களுக்கு மாறுவதைக் குறிக்கும். இதனாலேயே இங்கு அவர்கள் பிரதிநிதித்துவ அரசாங்கத்தைக் கோரினார்கள்.
இதர முஸ்லீம் சமஸ்தானங்களில் மன்னர் முஸ்லீம்; ஆனால் அவருடைய பெரும்பான்மையான குடிமக்கள் இந்துக்கள். இத்தகைய சமஸ்தானங்களில் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவது என்பதற்கு முஸ்லீம் மன்னரிடமிருந்து இந்து மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவது என்றே பொருள்படும். இதனால்தான் முஸ்லீம்கள் இரட்டை வேடம் போட்டார்கள்.
ஓரிடத்தில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைக்கப்படுவதை ஆதரித்தார்கள், இன்னோரிடத்தில் அதை எதிர்த்தார்கள். இதில் முஸ்லீம்களின் தலையாய நோக்கம் ஜனநாயகமல்ல.
பெரும்பான்மையினரின் கட்சியுடன் கூடிய ஜனநாயகம் இந்துக்களுக்கு எதிரான போரட்டத்தில் முஸ்லீம்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது தான் அவர்களது பிரதான அக்கறை. இது அவர்களை வலுப்படுத்துமா அல்லது பலவீனப்படுத்துமா?
ஜனநாயகம் அவர்களைப் பலவீனம் படுத்துமானால் ஜனநாயகம் அவர்களுக்கு வேண்டியதில்லை, அதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இந்துக் குடிமக்கள் மீது முஸ்லீம் மன்னருக்குள்ள பிடிதளர்வதைவிட முஸ்லீம் சமஸ்தானங்களில் சீரழிந்து போன ஊழல் ஆட்சி நீடிப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.
இந்துக்களும், இஸ்லாமியரும் ஏன் சண்டை போடுகிறார்கள்?
முஸ்லீம் சமூகத்தின் அரசியல், சமூகத் தேக்கநிலைக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும். அந்தக் காரணம் இதுதான். இந்துக்களும் முஸ்லீம்களும் என்றைக்கும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்று முஸ்லீம்கள் நினைக்கிறார்கள்.
இந்துக்கள், முஸ்லீம்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும், முஸ்லீம்கள் ஆளும் சமூகமென்ற தங்களது கடந்தகால வரலாற்று நிலையை உறுதிப்படுத்தவும் போராடுகிறார்கள் – இந்தப் போராட்டத்தில் வலிமைதான் வெற்றிபெறும்.
இந்த வலிமையைப் பெறுவதற்கு அவர்கள் தங்கள் அணிகளில் பிளவு ஏற்படுத்தக்கூடிய சகலவற்றையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் அல்லது மூட்டை கட்டி வைக்க வேண்டும்.
ஏனைய நாடுகளிலுள்ள முஸ்லீம்கள் தங்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கும்போது, இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் அவ்வாறு செய்ய மறுக்கிறார்கள்; ஏனென்றால், முன்னர் குறிப்பிட்டவர்கள் தங்கள் போட்டி சமூகங்களுடன் வகுப்புவாத மற்றும் அரசியல் சச்சரவுகளில் ஈடுபடும் நிலையிலிருந்து விடுபட்டிருப்பதும், பின்னர் குறிப்பிட்டவர்கள் அத்தகைய நிலையில் இல்லாதிருப்பதுமே இதற்குக் காரணம்.’’
என்று கூறுகிறார் அம்பேத்கர்.
இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் பற்றிய அம்பேத்கரின் இந்த எண்ணங்கள் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை’ என்ற நூலில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றன.
இந்த எண்ணங்களே அவரை ஆட்கொண்டிருந்தன. தான் எதற்கு மதம் மாறுகிறோம் என்பதைத் தெளிவாக அறிந்திருந்த அம்பேத்கர், தம் எண்ணங்களுக்கு, கொள்கைகளுக்கு எதிராக இருந்த இஸ்லாமில் மதம் மாறவில்லை.
இஸ்லாமைப் பற்றிய அம்பேத்கரின் பார்வையை மேலும் பார்ப்போம்.
முந்தைய பாகங்களின் சுருக்கம்: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம். வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம். இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மன்நோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம்.
முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 ||
நன்றி -http://www.tamilhindu.com/2011/09/why_ambedkar_converted_to_buddhism-16/